Friday, October 8, 2021

ஹதீஸ் எண் 37 ما يصيب المسلم من نصب

فعن أبي سعيد وأبي هريرة -رضي الله عنهما- عن النبي قال: ما يصيب المسلم من نَصَب، ولا وَصَب، ولا هم، ولا حزن، ولا أذى، ولا غم، حتى الشوكة يشاكها إلا كفر الله بها من خطاياه

ஒரு முஸ்லிமுக்கு சிரமம் நோய் கவலை துக்கம் நோவினை கடுமையான மன உளைச்சல் மற்றும் அவனுடைய காலில் குத்தி விடும் முள்ளின் வேதனை உட்பட அனைத்திற்கும் அல்லாஹ் அவனது குற்றங்களை மன்னிக்கிறான். (புகாரி ; 5641)

இந்த ஹதீஸின் மூலம் அடியார்கள் மீது அல்லாஹ் கொண்டிருக்கிற அன்பையும் அடியார்களுக்கு அல்லாஹ் செய்திருக்கிற உபகாரத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது. தன் அடியார்கள் செய்யக்கூடிய பாவங்களை மன்னிப்பதற்கு அவர்களிடத்தில் தவ்பாவை மட்டும் எதிர்பார்க்க வில்லை.அதாவது தவ்பா செய்தால் தான் மன்னிப்பேன் என்று அல்லாஹ் கூற வில்லை. மாறாக அவர்கள் செய்யக்கூடிய நன்மையான காரியங்களை கொண்டும் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.

الصلوات الخمس، والجمعة إلى الجمعة، ورمضان إلى رمضان، كفارات لما بينهما

ஐவேளைத் தொழுகைகளை ஒருவர் தொழுதால் அந்தத் தொழுகைகளுக்கு இடையில் ஏற்பட்ட குற்றங்களுக்கு அத்தொழுகை பரிகாரமாக ஆகி விடுகிறது. ஜும்ஆவுடைய தொழுகை அவ்விரு தொழுகைகளுக்கு இடையில் ஏற்பட்ட குற்றங்களுக்கு பரிகாரமாக அமைந்து விடுகிறது. இரண்டு ரமலான்கள் அவைகளுக்கு இடையில் ஏற்பட்ட குற்றங்களுக்கு பரிகாரமாக அமைந்து விடுகிறது.

இப்படி ஒருவர் செய்யக்கூடிய அமல்களின் காரணமாக பாவங்கள் அழிகிறது. அதேபோன்று ஒருவருக்கு ஏற்படக்கூடிய கஷ்டம், சிரமம், களைப்பு மனக்கவலைகள் போன்றவற்றைக் கொண்டும் பாவங்கள் அழிக்கப்படுகிறது.

இந்த ஹதீஸின் முதல் வார்த்தையாக களைப்பு என்று நபியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஒரு மனிதருக்கு சோர்வு என்பது வணக்க வழிபாடுகளிலும் ஏற்படலாம். தன் சொந்த காரியங்களுக்காகவும் ஏற்படலாம். ஹதீஸில் நபியவர்கள் வணக்கத்தால் ஏற்படும் சோர்வு என்று குறிப்பிட வில்லை. எனவே ஒரு மனிதனுக்கு ஏற்படும் எந்த சோர்வாக இருந்தாலும் அதன் மூலம் பாவங்கள் அழிகிறது என்று தெரிகிறது. அதே போன்று முள் குத்துவதால் கூட பாவங்கள் அளிக்கப்படுவதாக ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள்.

வாழ்க்கையில் சிரமம் கவலை முள் குத்துவது நோவினை இதுவெல்லாம் மனித வாழ்வில் ஏற்படக்கூடிய எதார்த்தமான நிகழ்வுகள். மனித வாழ்வில் எதார்த்தமாக நடைபெறுகின்ற விஷயங்களைக் கொண்டு கூட பாவங்கள் அளிக்கப்படுகிறது என்ற செய்தியிலிருந்து அடியார்கள் மீது அல்லாஹ் கொண்டிருக்கிற அன்பையும் உபகாரத்தையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த ஹதீஸின் கருத்தை ஒருவர் உள்வாங்கிக் கொண்டால் அவருக்கு வாழ்க்கையில் அவர் சந்திக்கிற எந்த பிரச்சனைகளும் பிரச்சனைகளாக தெரியாது. எந்தக் கஷ்டமும் கஷ்டங்களாக தெரியாது. ஒரு கஷ்டம் வரும் போது என் பாவத்தை அழிப்பதற்குத் தான் இதை அல்லாஹ் கொடுத்திருக்கிறான் என்று உணர்ந்து கொண்டால் அந்த கஷ்டம் மறைந்து போய் விடும். மனக்கவலைகளால் பாதிக்கப்படுகின்ற பொழுது என் பாவங்களை அழிப்பதற்குத் தான் இந்த கவலைகளை அல்லாஹ் கொடுத்திருக்கிறான் என்று உணரும் போது அந்த கவலைகள் இல்லாமல் போய் விடுகிறது. எனவே ஒரு முஸ்லிமினுடைய நிம்மதியான வாழ்க்கைக்கான ஆதாரம் இந்த ஹதீஸில் இருக்கிறது.

ஹழ்ரத் இப்னு மஸ்வூத் ரலி அவர்கள் எனக்கு ஏற்படும் நோயில் அல்லாஹ்விற்கு நான்கு முறை நன்றி செலுத்துவேன். ஒன்று என்னை விட அந்த நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டவனைப் பார்ப்பேன். அவனை விட எனக்கு அந்த நோயை குறைவாக கொடுத்ததற்காக அல்லாஹ்விற்கு ஆரம்பமாக நன்றி செலுத்துவேன். இரண்டாவது எந்த நோய் வந்தாலும் அது என் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துமே தவிர என் தீனுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனவே என் உடலுக்கு நோய் வந்தாலும் என் தீனில் எந்த பாதிப்பும் ஏற்படாதமைக்காக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவேன். மூன்றாவது, எனக்கு பொறுமையைக் கொடுத்ததற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவேன். நான்காவது அந்த நோயினால் என் பாவங்கள் அழிக்கப்படுகிறது. எனக்கு நன்மைகள் கிடைக்கிறது. எனவே அதற்காக அல்லாஹ்வுக்கு நான் நன்றி செலுத்துவேன் என்றார்கள். 

No comments:

Post a Comment