Monday, April 11, 2022

அழகிய வரலாறு

 

نَحْنُ نَقُصُّ عَلَيْكَ اَحْسَنَ الْقَصَصِ بِمَاۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ هٰذَا الْقُرْاٰنَ ‌ وَاِنْ كُنْتَ مِنْ قَبْلِهٖ لَمِنَ الْغٰفِلِيْنَ

(நபியே!) வஹீ மூலம் நாம் உங்களுக்கு அறிவிக்கும்   இந்தக் குர்ஆனின் மூலம் சரித்திரங்களில் மிக்க அழகானதொன்றை உங்களுக்கு நாம் விவரிக்கின்றோம். இதற்கு முன்னர் நிச்சயமாக நீங்கள் இதனை அறியாதவராகவே இருந்தீர்கள். (அல்குர்ஆன் : 12:3)

குர்ஆனில் அல்லாஹ் கூறியிருக்கிற வரலாறுகளிலெல்லாம் மிக அழகான வரலாறு யூசுஃப் நபி அலை அவர்களின் வரலாறு. மிக நீண்ட வரலாறும் கூட.

குர்ஆனில் எத்தனையோ நபிமார்களின் வரலாறுகளை அல்லாஹ் சொல்கிறான். அந்த வரலாறுகளெல்லாம் தேவைக்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப கொஞ்ச கொஞ்சமாக, இந்த சூராவில் கொஞ்சம், அந்த சூராவில் கொஞ்சம் என்று பிரித்துப் பிரித்து பேசுகிறான். எந்த நபியின் வரலாறும் குர்ஆனில ஒரே இடத்தில் முழுமையாக சொல்லப்பட வில்லை. அவ்வாறு முழுமையாக ஒரே இடத்தில் அதுவும் ஒரே அத்தியாயத்தில் சொல்லப்பட்ட ஒரே வரலாறு யூசுப் நபி வரலாறு மட்டும்.

அவர்களின் சிறு பிராயத்தில் கனவு கண்டது, அதை சகோதரர்களிடம் சொன்னது, அவர்கள் கிணற்றில் போட்டு நாடகம் ஆடியது, வியாபாரக் கூட்டம் கிணற்றிலிருந்து அவர்களை எடுத்து மிஸ்ர் நாட்டில் விற்றது. அவரை மிஸர் ராஜா விலைக்கு வாங்கியது, அந்த ராஜாவின் மனைவி அரசி இவர்கள் மேல் ஆவல் கொண்டது, அதனால் அவர்கள் சிறைக்கு சென்றது, அங்கே இரண்டு பேர் கனவுக்கு விளக்கம் கேட்டு அதற்கு விளக்கம் சொன்னது, அதைக் கேள்விப்பட்டு அரசர் அவரை விடுதலை செய்து தன் கனவுக்கு விளக்கம் கேட்டது, உங்க ஊரில் பஞ்சம் வரும். அவ்வாறு வருவதற்கு முன்பு இப்படி இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்ல அவர்களை நிதி அமைச்சராக ஆக்கியது, அதற்குப் பிறகு மிஸ்ருக்கே அரசராக ஆனது, தன் சகோதரர்களை சந்தித்தது, பெற்றோர்களை சந்தித்தது அதற்கு பிறகு அவர்கள் வஃபாத் ஆனது என மொத்த வரலாறும் ஒரே சூராவில் முழுமையாக அல்லாஹ் சொல்லி நிறைவு செய்து விட்டான்.

 

அரபி மதரஸாக்களில் இந்த சூராவின் தஃப்ஸீர் ஒரு மாதத்திற்கும் மேலாக உஸ்தாதுமார்கள் நடத்துவார்கள். அதை இப்போது உங்களுக்கு இரண்டு நிமிடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

அழகிய வரலாறு என்று கூறுகிறான்.வரலாறு மட்டுமல்ல அவர்களும் பேரழகு தான்.உலகத்தில் பேரழகிற்கும் திறமையாக நிர்வாகத்திற்கும் மிகச்சிறந்த கற்பொழுக்கத்திற்கும் முன் உதாரணமாக திகழ்ந்தவர்கள் ஹள்ரத் யூசுப் அலை அவர்கள்.

مررت بيوسف عليه السلام ليلة عرج بي إلى السماء، فقلت لجبريل عليه السلام من هذا؟ فقال هذا يوسف. فقيل يا رسول الله كيف رأيته؟ قال كالقمر ليلة البدر

மிஃராஜின் போது ஒரு வானத்தில் யூசுஃப் நபி அலை அவர்களை கடந்து போனேன். ஜிப்ரயீல் அலை அவர்களிடம் இவர்கள் யாரென்று கேட்டேன். இவர் தான் யூசுஃப் என்று சொன்னார்கள் என்று நபி . அவர்கள் சொன்ன போது, அல்லாஹ்வின் தூதர் அவர்களே அவர்கள் எப்படி இருந்தார்கள் என்று கேட்கப்பட்டது. அவர்கள் பௌர்ணமி இரவின் முழு சந்திரனைப் போல் இருந்தார்கள் என்று கூறினார்கள்.

 وحكى أنه عليه السلام كان إذا سار في أزقة مصر تلألأ وجهه على الجدران كما يرى نور الشمس

அவர்கள் மிஸ்ர் நாட்டின் பாதைகளில் நடந்து போனால் சூரிய ஒளி படுவதைப் போல் அவர்களின் முகத்தின் ஒளி சுவற்றில் படும் என்று சொல்லப்படுகிறது. அந்தளவு பேரழகானவர்கள் யூசுஃப் அலை அவர்கள்.

அந்த அழகில் மயங்கித்தான் மிஸ்ர் நாட்டின் மங்கைகள் தங்கள் கைகளை அறுத்துக் கொண்டார்கள்.

فَلَمَّا سَمِعَتْ بِمَكْرِهِنَّ اَرْسَلَتْ اِلَيْهِنَّ وَاَعْتَدَتْ لَهُنَّ مُتَّكَـاً وَّاٰتَتْ كُلَّ وَاحِدَةٍ مِّنْهُنَّ سِكِّيْنًا وَّقَالَتِ اخْرُجْ عَلَيْهِنَّ ‌ فَلَمَّا رَاَيْنَهٗۤ اَكْبَرْنَهٗ وَقَطَّعْنَ اَيْدِيَهُنَّ وَقُلْنَ حَاشَ لِلّٰهِ مَا هٰذَا بَشَرًا  اِنْ هٰذَاۤ اِلَّا مَلَكٌ كَرِيْمٌ‏

(அந்தப்) பெண்களின் (இந்த) இழிமொழிகளை அவள் செவியுறவே, அப்பெண்களுக்காக ஒரு விருந்து சபையைக் கூட்டி, அதற்கு அவர்களை அழைத்து அங்கு வந்த ஒவ்வொருத்திக்கும் ஒரு கனியும் (அதை அறுத்துப் புசிக்க) ஒரு கத்தி(யும்) கொடுத்து அவரை (அலங்கரித்து) அவர்கள் முன் வரும்படிக் கூறினாள். அவரை அப்பெண்கள் காணவே (அவருடைய அழகைக் கண்டு)   அவரை மிக்க உயர்வானவராக எண்ணி (மெய்மறந்து, கனியை அறுப்பதற்குப் பதிலாக) தங்கள் கை (விரல்)களையே அறுத்துக் கொண்டு "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவர் மனிதரல்ல! இவர் (அனைவரின் மனதையும் கவரக்கூடிய) அழகு வாய்ந்த ஒரு வானவரே அன்றி வேறில்லை" என்று கூறினார்கள். (அல்குர்ஆன் : 12:31)

அந்த அழகே அவர்களுக்கு ஆபத்தாக வந்து நின்றது.அவர்களுடைய அழகில் மயங்கி அரசருடைய மனைவி அவர்கள் மேல் ஆசைப்பட்டார்கள். அரசியாக இருந்ததினால் அவர்களும் அழகாகத்தான் இருந்திருப்பார்கள். ஆனால் இளம் வாலிபரான யூசுப் அலை அவர்கள் அவர்களை திரும்பிக் கூட பார்க்க வில்லை.

அவ்விருவருக்கும் நடந்த உரையாடல் தஃப்ஸீர் கிதாபுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

وفي الخبر أنها قالت له : يا يوسف ! ما أحسن صورة وجهك ! قال : في الرحم صورني ربي ; قالت : يا يوسف ما أحسن شعرك ! قال : هو أول شيء يبلى مني في قبري ; قالت : يا يوسف ! ما أحسن عينيك ؟ قال : بهما أنظر إلى ربي . قالت : يا يوسف ! ارفع بصرك فانظر في وجهي ، قال : إني أخاف العمى في آخرتي . قالت يا يوسف ! أدنو منك وتتباعد مني ؟ ! قال : أريد بذلك القرب من ربي . قالت : يا يوسف ! القيطون فرشته لك فادخل معي ، قال : القيطون لا يسترني من ربي . قالت : يا يوسف ! فراش الحرير قد فرشته لك ، قم فاقض حاجتي ، قال : إذا يذهب من الجنة نصيبي ; إلى غير ذلك من كلامها وهو يراجعها ; إلى أن هم بها .

உங்கள் முகம் எவ்வளவு அழகாக இருக்கிறது என்று அரசி கூறிய போது, அதற்கவர்கள், என் இறைவன் என் தாயின் கருவறையில் என்னை அவ்வாறு வடிவமைத்தான் என்று கூறினார்கள். உங்கள் முடி எவ்வளவு அழகாக இருக்கிறது என்ற போது, நான் இறந்த பிறகு என்னிலிருந்து முதன்முதலாக மக்கிப் போகக் கூடியது அது தான் என்றார்கள். உங்கள் கண்கள் எவ்வளவு அழகாக இருக்கிறது என்ற போது அதைக் கொண்டு தான் என் இறைவனின் அத்தாட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றார்கள். உங்கள் பார்வையை உயர்த்தி என்னைப் பாருங்கள் என்று சொன்ன போது, மறுமையில் என் கண்கள் குருடாகி விடுவதை நான் அஞ்சுகிறேன் என்றார்கள். நான் உங்களை நெருங்கி வருகிறேன். நீங்கள் என்னை விட்டும் தூரமாக செல்கிறீர்களே என்ற போது, நான் அதை கொண்டு என் இறைவனின் நெருக்கத்தை விரும்புகிறேன் என்றார்கள். உங்களுக்காக நான் மக்களின் பார்வை படாதவாறு தனி அறையை வைத்திருக்கிறேன். என்னோடு வாருங்கள் என்று அழைத்த பொழுது, என் இறைவனின் கண்களிலிருந்து எதுவும் மறையாது என்றார்கள். உங்களுக்காக நான் பட்டு விரிப்பை விரித்து வைத்திருக்கிறேன். என் தேவையை பூர்த்தி செய்யுங்கள் என்ற போது, அவ்வாறு நான் செய்தால் சுவனத்தில் என் பங்கை நான் இழந்து விடுவேன் என்றார்கள். (தஃப்ஸீர் குர்துபீ)

எவ்வளவு ஆசை வார்த்தைகளைக் கூறியும் எதற்கும் மயங்காமல் தன்னைப் பாதுகாத்துக் கொண்டார்கள். ஒரு இளைஞர் எவ்வாறு கற்பொழுக்கத்தோடு இருக்க வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு ஹள்ரத் யூசுஃப் அலை அவர்கள் தான்.

வாலிப வயது என்பது, மனிதன் தன் வாழ்வில் பெறும் மிக முக்கிய கட்டம். மனிதன் சகல உடல் ஆரோக்கியத்தையும் பெற்று கம்பீரமாக வாழும் வயது.அதே சமயம்  எதையும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவாகும் வயதாகும். எண்ணங்கள் அலை பாய்கிற, ஆசைகள் எல்லை மீறுகிற ஆபத்தான வயது வாலிப வயது. அந்த வயதிலும் அவர்கள் தன்னைப் பாதுகாத்துக் கொண்டார்கள்.

இன்றைக்கு நிறைய பேர் தவறு செய்யாமல் இருக்கிறார்கள் என்றால் இறையச்சத்தினால் அல்ல. தவறு செய்யும் வாய்ப்பு கிடைக்க வில்லை என்பதினால். தவறு செய்யும் சூழ்நிலைக்கு அவர் செல்ல வில்லை என்பதினால். ஆனால் யூசுஃப் அலை அவர்கள் தவறு செய்யும் வாய்ப்பு இருந்தும் இறையச்சத்தினால் மட்டுமே அதிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொண்டார்கள். இவ்வாறு தவறு செய்யும் வாய்ப்பு இருந்தும் அதில் ஈடாமல் இறையச்சத்தோடு நடக்கும் வாலிபனுக்கு அர்ஷின் நிழல் கிடைக்கும்.

سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ تَعَالَى في ظِلِّهِ يَومَ لا ظِلَّ إلَّا ظِلُّهُ: إمَامٌ عَدْلٌ، وشَابٌّ نَشَأَ في عِبَادَةِ اللَّهِ، ورَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ في المَسَاجِدِ، ورَجُلَانِ تَحَابَّا في اللَّهِ، اجْتَمعا عليه وتَفَرَّقَا عليه، ورَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وجَمَالٍ فَقالَ: إنِّي أَخَافُ اللَّهَ، ورَجُلٌ تَصَدَّقَ بصَدَقَةٍ فأخْفَاهَا حتَّى لا تَعْلَمَ شِمَالُهُ ما تُنْفِقُ يَمِينُهُ، ورَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا، فَفَاضَتْ عَيْنَاهُ

அல்லாஹ் தன்னுடைய (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் தன்னுடைய நிழலில் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான்: 1. நீதிமிக்க ஆட்சியாளர். 2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன். 3. பள்ளிவாசலுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக் கொள்ளும் இதயமுடையவர். 4. இறைவழியில் நட்புகொண்ட இருவர். 5. அந்தஸ்தும் அழகும் உடைய ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்த போது நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்என்று கூறியவர். 6. தம் இடக் கரம் செய்த தர்மத்தை வலக் கரம் கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர். 7. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனுடைய அச்சத்தில்) கண்ணீர் சிந்திய மனிதன். (புகாரி ; 1423)

பெண்ணுடைய அழகில் மயங்கி பெண்ணை ஒரு ஆண் துரத்திக் கொண்டு போவதைத்தான் நாம கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அங்கே தலை கீழாக நடந்தது. அந்த அரசி யூசுஃப் அலை அவர்களை துரத்திச் சென்றார்கள். அரசர் பார்த்து விட்ட போது அவர்களை என்னிடம் தவறாக நடந்து கொள்ள நினைத்ததாக கூறி விட்டார்கள். இருந்தாலும் யூசுஃப் அலை அவர்கள் தவறு செய்ய வில்லை என்பதை அரசர் அறிந்து கொண்டார். இது உன்னுடைய சூழ்ச்சி தான் என்று தன் மனைவியைப் பார்த்துக் கூறினார்.

فَلَمَّا رَاٰ قَمِيْصَهٗ قُدَّ مِنْ دُبُرٍ قَالَ اِنَّهٗ مِنْ كَيْدِكُنَّ‌ اِنَّ كَيْدَكُنَّ عَظِيْمٌ‏

(ஆகவே, அவளது கணவர்) யூஸுஃபுடைய சட்டையைக் கவனித்ததில், அது பின்புறமாகக் கிழிந்திருப்பதைக் கண்டு (தன் மனைவியை நோக்கி) "நிச்சயமாக இது (பெண்களாகிய) உங்களுடைய சதியே; நிச்சயமாக உங்களின் சதி மகத்தானது" என்று கூறினார்கள். (அல்குர்ஆன் : 12:28)

இந்த இடத்தில் பெண்களின் சூழ்ச்சியைப் பற்றி கூறும் போது அளீம் என்ற வார்த்தை இடம் பெற்றிருக்கிறது. அளீம் என்றால் மிகப்பெரியது, மிகப் பிரமாண்டமானது என்று பொருள். உண்மையில் பெண்களின் சூழ்ச்சி மிகப்பெரியது தான்.

ஒரு கணவன் மனைவி அன்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார்கள். திடீரென்று மனைவி உடல் நலம் குன்றி மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்தாள். அருகே இருந்த கணவனைப் பார்த்து என் அன்பு கணவனே நான் மரணித்து விட்டால் நீங்கள் வேறு ஒரு பெண்ணை திருமணம் முடித்துக் கொள்வீர்களா என்று கேட்டாள். இல்லை இல்லை நான் வேறு பெண்ணை மணமுடித்துக் கொள்ள மாட்டேன் என்று அவர் கூறினார். அப்போது அந்த மனைவி மிகவும் நல்லது. நான் இறந்து என்னை அடக்கம் செய்யப்பட்ட பிறகு என் மன்னரையின் மண் காயும் வரை நீங்கள் திருமணம் முடிக்கக் கூடாது. அதற்குப் பிறகு வேண்டுமானால் நீங்கள் மணமுடித்துக் கொள்ளுங்கள் என்றாள். மண் எவ்வளவு நாள் ஈரமாகவே இருக்கப் போகிறது என்று நினைத்து அவரும் சரி என்று சொன்னார். மனைவி இறந்த பிறகு அடக்கம் செய்யப்பட்டது. ஒவ்வொரு நாளும் மனைவியின் மண்ணரைக்கு சென்று பார்ப்பார். மண் ஈரமாகவே இருந்தது. பல நாட்களாக காயாமல் அந்த மண்ணரையின் மண் ஈரமாகவே இருந்தது. ஒரு நாள் அந்த மண்ணரைக்கு  சென்ற போது இறந்து போன மனைவியின் சகோதரன் அங்கு நின்று கொண்டிருந்தான். இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்ட போது, என் சகோதரி இறப்பதற்கு முன்பு, நான் இறந்து விட்டால் நீ ஒவ்வொரு நாளும் என் மன்னரைக்கு வந்து என் மண்ணறையின் மண் காயாதவாறு அதன் மீது தண்ணீர் ஊற்றி விட்டு செல்ல வேண்டும் என்று என்னிடத்தில் வாக்குறுதியை பெற்றுக்கொண்டாள். அதைத் தான் நான் தினமும் செய்து கொண்டிருக்கிறேன் என்று கூறினார். மனைவியின் சூழ்ச்சியைக் கண்டு அவர் மிகவும் அதிர்ந்து போனார். (ஒரு அரபி பத்திரிக்கையில் படித்தது)

அதனால் தான் சொல்வார்கள் ;

وعن بعض العلماء: أنا أخاف من النساء أكثر مما أخاف من الشيطان؛ لأن الله تعالى يقول: (إن كيد الشيطـان كان ضعيفا) وقال للنساء: (إن كيدكن عظيم

நான் ஷைத்தானை விட பெண்ணிடமிருந்து தான் பயப்படுகிறேன். ஏனெனில் ஷைத்தானின் சூழ்ச்சியை பலவீனம் என்று சொல்லும் இறைவன் பெண்ணின் சூழ்ச்சியை மிகப்பெரியது என்று கூறுகிறான் என்று சிலர் கூறுவார்கள்.

 

2 comments: