Sunday, April 24, 2022

உலகில் ஒருவர் மட்டுமே செய்த அமல்

 

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نَاجَيْتُمُ الرَّسُوْلَ فَقَدِّمُوْا بَيْنَ يَدَىْ نَجْوٰٮكُمْ صَدَقَةً  ‌ ذٰ لِكَ خَيْرٌ لَّكُمْ وَاَطْهَرُ ‌ فَاِنْ لَّمْ تَجِدُوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏

நம்பிக்கையாளர்களே! நீங்கள் நம்முடைய தூதருடன் இரகசியம் பேச விரும்பினால், உங்கள் இரகசியத்திற்கு முன்னதாகவே (ஏழைகளுக்கு) ஏதும் தானம் செய்துவிடுங்கள். இது உங்களுக்கு நன்மையும் பரிசுத்தத் தன்மையும் ஆகும். (தானம் கொடுப்பதற்கு எதனையும்) நீங்கள் அடைந்திராவிட்டால், (அதைப்பற்றி உங்கள் மீது குற்றமில்லை.) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 58:12)

ءَاَشْفَقْتُمْ اَنْ تُقَدِّمُوْا بَيْنَ يَدَىْ نَجْوٰٮكُمْ صَدَقٰتٍ‌  فَاِذْ لَمْ تَفْعَلُوْا وَتَابَ اللّٰهُ عَلَيْكُمْ فَاَقِيْمُوا الصَّلٰوةَ وَ اٰتُوا الزَّكٰوةَ وَاَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ‌  وَاللّٰهُ خَبِيْرٌ بِمَا تَعْمَلُوْنَ‏

நீங்கள் உங்கள் இரகசியத்திற்கு முன்னர், நீங்கள் தானம் கொடுப்பதைப் பற்றிப் பயந்துவிட்டீர்களா? (மெய்யாகவே) உங்களால் (தானம்) செய்ய முடியாவிடில், அல்லாஹ் உங்களை மன்னித்து விடுவான். எனினும், தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (உண்மையாகவே) வழிப்பட்டு நடந்து கொள்ளுங்கள். நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 58:13)

முதல் வசனத்தில் நபி அவர்களுடன் தனியாக பேசுவதாக இருந்தால் தர்மம் செய்து விட்டுத்தான் பேச வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். இரண்டாவது வசனம் தர்மம் செய்ய வில்லையென்றால் பரவா இல்லை. அல்லாஹ் உங்களை மன்னித்து விடுவான் என்ற கருத்தை உள்ளடக்கியிருக்கிறது.

இதில் முதல் வசனம் இறக்கப்பட்ட பிறகு மிகவும் ஏழைகளாக இருக்கிற நபித்தோழர்களுக்கு இனிமேல் பேச முடியாமல் போய் விடுமோ என்ற கவலை வந்தது. பணத்தைக் கொடுத்து விட்டுத்தான் பேச வேண்டுமா என்று சொல்லி முனாஃபிக்குகளும் யூதர்களும் இனிமேல் பேச்சை நிறுத்தி விட வேண்டும் என்று நினைத்தார்கள். இருந்தாலும் நபி அவர்களுடன் பேசுவதற்கு முன் தரமம் செய்ய வேண்டும் என்ற சட்டம் இறங்கி பின்பு அச்சட்டம் மாறப்பட்டு விட்டது. ஒரு இரவு மட்டும் தான் அந்த சட்டம் இருந்ததாக கூறப்படுகிறது.

قال ابن عباس : نزلت بسبب أن المسلمين كانوا يكثرون المسائل على رسول الله صلى الله عليه وسلم حتى شقوا عليه ، فأراد الله عز وجل أن يخفف عن نبيه صلى الله عليه وسلم ، فلما قال ذلك كف كثير من الناس . ثم وسع الله عليهم بالآية التي بعدها

ஈமான் கொண்டவர்கள் நபி அவர்களிடம் வந்து அடிக்கடி மார்க்க விளக்கத்தை கேட்டுக்கொண்டிருந்தார்கள் அது நபி அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி விடும் என்பதினால் அதை கொஞ்சம் குறைப்பதற்காக அல்லாஹுத்தஆலா, நீங்கள் பேசுவதாக இருந்தால் தர்மம் செய்து விட்டு பேசுங்கள் என்ற வசனத்தை இறக்கியருளினான் இந்த வசனம் இறக்கியருளப்பட்ட பிறகு அவ்வாறு கேட்பது கொஞ்சம் குறைந்தது. இருந்தாலும் தர்மம் செய்வது எல்லோரும் முடியாது என்பதினால் அந்த சட்டத்தை நீக்கி விட்டான் என இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள். (குர்துபீ)

وقال الحسن : نزلت بسبب أن قوما من المسلمين كانوا يستخلون النبي صلى الله عليه وسلم ويناجونه ، فظن بهم قوم من المسلمين أنهم ينتقصونهم في النجوى ، فشق عليهم ذلك فأمرهم الله تعالى بالصدقة عند النجوى ؛ ليقطعهم عن استخلائه .

ஈமான் கொண்டவர்களில் ஒரு சிலர் நபி அவர்களோடு தனியாக அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். அது மற்றவர்களுக்கு தங்களைக் குறித்துத்தான் அந்த மக்கள் பேசுகிறார்களோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. எனவே அல்லாஹுத்தஆலா அப்படி ஒரு சட்டத்தை ஏற்படுத்தினான் என ஹஸன் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

وقال زيد بن أسلم : نزلت بسبب أن المنافقين واليهود كانوا يناجون النبي صلى الله عليه وسلم ويقولون : إنه أذن يسمع كل ما قيل له ، وكان لا يمنع أحدا مناجاته . فكان ذلك يشق على المسلمين ، لأن الشيطان كان يلقي في أنفسهم أنهم ناجوه بأن جموعا اجتمعت لقتاله

அன்றைய காலத்தில் யூதர்களும் முனாஃபிக்குகள் நபி அவர்களோடு அமர்ந்து தனியாக பேசிக் கொண்டிருப்பார்கள். நபி அவர்களும் எதுவும் சொல்லாமல் அவை அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருப்பார்கள். நபி அவர்கள் எதைச் சொன்னாலும் கேட்கிறார்கள் என்று அவர்கள் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அது நபித்தோழர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. அப்போது தான் இந்த வசனம் அருளப்பட்டது என ஜைத் பின் அஸ்லம் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

பொதுவாக நமக்கு முக்கியமான வேலை இருக்கும் போது கொஞ்சம் நேரம் நம்மிடம் யாராவது எதையாவது தேவையில்லாமல் பேசிக் கொண்டிருந்தாலே சங்கடப்படுவோம். எப்படியாவது அவரை வெளியே அனுப்ப வேண்டும் என்று முயற்சிப்போம். ஆனால் நபி அவர்களுடைய பழக்கம் என்னவென்றால் தன்னிடம் வந்தவர்கள் யாராக இருந்தாலும் அவங்களாக செல்கிற வரைக்கும் அவர்களை போங்க என்று சொல்ல மாட்டார்கள்.

நாமும் அப்டித்தான் நடந்து கொள்ள வேண்டும். வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தாலோ அல்லது சாதாரணமாக நம்மை யாராவது சந்திக்க வந்தாலோ அவர்களது தேவையை முடிக்கும் வரை அவர்களை போங்க என்று சொல்லக்கூடாது.அவ்வாறு சொல்வது ஒழுக்கமில்லை.நாம் நேரடியாக சொல்ல மாட்டோம்.ஆனால் வந்தவர்கள் புரிந்து கொள்ளும் அளவில் மறைமுகமாக ஜாடைமாடையாக சொல்வோம். வந்து இறங்கி கொஞ்சம் நேரத்திலேயே என்ன ரிடர்ன் டிக்கட்டெல்லாம் போட்டாச்சா. போடலன்னா சொல்லுங்க. மொபைல்ல நானே போட்டுக் கொடுத்து விடுகிறேன் என்று சொல்வோம். இன்னும் சில பேர் இதை விட டீஸன்டா ஹாஜியார்! எப்ப ஊருக்கு போறீங்க. ஒன்னும் இல்ல. உங்க ஊருக்கு பக்கத்துல தான் போக வேண்டியது இருக்குது. நீங்க போகும் போது நானும் உங்க கூடயே வந்தர்லான்னு தான் கேட்டேன் என்று சொல்வார்கள்.

அதே சமயத்தில் விருந்தாளியாக சென்றிருப்பவர்களும் வீட்டிலுள்ள வர்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும். இது தான் சாக்கு என்று வந்ததோட டேரா போட்டு விடக் கூடாது. இவர் எப்போது போவாரோ என்று வீட்டிலுள்ளவர்கள் நினைக்கிற அளவுக்கு நடந்து கொள்ளக் கூடாது.

ஆனால் சிரமமாகவே இருந்தாலும் வந்தவர்களை என்றைக்கும் விரட்ட வேண்டும் என்று மாநபி அவர்கள் நினைக்கவே மாட்டார்கள். இருந்தாலும் அவ்வாறு அவர்கள் நபி அவர்களுக்கு சிரமம் தருவதை அல்லாஹ் விரும்ப வில்லை. எனவே தான் அப்படி ஒரு சட்டத்தை இறக்கினான்.

பொதுவாக தனக்குப் பிரியமானவர்களோடு எப்போது அமர்ந்து பேச வேண்டும் என்று ஒவ்வொருவரின் மனமும் விரும்பும்.

وَمَا تِلْكَ بِيَمِيْنِكَ يٰمُوْسٰى‏

"மூஸாவே! உங்களது வலது கையில் இருப்பது என்ன?" என்று கேட்டான். (அல்குர்ஆன் : 20:17)

قَالَ هِىَ عَصَاىَ‌ اَتَوَكَّؤُا عَلَيْهَا وَاَهُشُّ بِهَا عَلٰى غَـنَمِىْ وَلِىَ فِيْهَا مَاٰرِبُ اُخْرٰى‏

அதற்கவர் "இது என்னுடைய கைத்தடி. இதன்மீது நான் சாய்ந்து கொள்வேன். இதைக் கொண்டு என்னுடைய ஆடுகளுக்குத் தழை (குழை)களைப் பறிப்பேன். இன்னும் இதில் எனக்கு வேறு பல பயன்களும் இருக்கின்றன" என்று கூறினார். (அல்குர்ஆன் : 20:18)

கையில் என்ன என்று கேட்ட போது குச்சி என்று சொன்னாலே போதுமானது தான். இருந்தாலும் அதை வைத்து நான் என்னவெல்லாம் செய்வேன் என்று மூஸா நபி அலை அவர்கள் விவரிக்கிறார்கள். அல்லாஹ்வுடன் தன் உரையாடல் நீள வேண்டும் என்று அவர்கள் ஆசைப்பட்டார்கள் என்று அறிஞர்கள் கூறுவார்கள்.

நபி அவர்கள் எதுவும் சொல்ல மாட்டார்கள் என்பதற்காக அவர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டே இருப்பார்கள். அல்லது எதாவது சந்தேகங்களை கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அவர்களையும் நாம் குறை சொல்ல முடியாது. நபி அவர்களைப் பார்ப்பதும் அவர்களோடு அமர்ந்து பேசுவதும் யாருக்குத்தான் இன்பத்தைக் கொடுக்காது.

جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال: (يا رسول الله والله إنك لأحب إلي من نفسي، وإنك أحب إلي من أهلي، وأحب إلي من ولدي، وأني لأكون في البيت فأذكرك فما أصبر حتى آتيك فأنظر إليك، وإذا ذكرت موتي وموتك عرفت أنك إذا دخلت الجنة رفعت مع النبيين، وأني إذا دخلت الجنة خشيت ألا أراك، فلم يرد عليه النبي صلى الله عليه وسلم حتى نزل جبريل عليه السلام بهذه الآية ( ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقاً).

நபி அவர்களிடம் ஒரு நபித்தோழர் வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களே அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் என் உயிரை விடவும் என் குடும்பத்தை விடவும் என குழந்தைகளை விடவும் உங்களை நேசிக்கிறேன். நான் என் வீட்டில் இருக்கிற பொழுது உங்கள் ஞாபகம் எனக்கு வந்து விட்டால் உங்களிடத்தில் வந்து உங்களைப் பார்க்கின்ற வரை என் உள்ளம் அமைதி பெறாது. உடனே ஓடி வந்து விடுவேன். ஆனால் இப்போது என் மரணத்திற்குப் பின் உண்டான நிலையைக் குறித்து யோசிக்கிறேன். நீங்கள் சொர்க்கம் சென்றால் உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பீர்கள். எனவே சொர்க்கத்திலே என்னால் உங்களைப் பார்க்க முடியுமோ முடியாதோ என்ற கவலை எனக்கு வந்து விட்டது என்றார்கள்.

மேற்கூறப்பட்ட வசனம் ஒரு இரவு மட்டும் அமலில் இருந்தாலும் அந்த குறுகிய காலத்திலும் ஹளர்த் அலி ரலி அவர்கள் அதைக் கொண்டு அமல் செய்து விட்டார்கள்.

عن علي بن أبي طالب أنه قال : في كتاب الله آية ما عمل بها أحد قبلي ولا يعمل بها أحد بعدي ، وهي : يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقة كان لي دينار فبعته ، فكنت إذا ناجيت الرسول تصدقت بدرهم حتى نفد ، فنسخت بالآية الأخرى أأشفقتم أن تقدموا بين يدي نجواكم صدقات

ஹள்ரத் அலி ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; அல்குர்ஆனில் ஒரு வசனம் இருக்கிறது. அந்த வசனத்தின் படி எனக்கு முன்னாலும் யாரும் அமல் செய்ய வில்லை. எனக்கு பின்னாலும் அதன்படி யாரும் அமல் செய்ய முடியாது. அந்த வசனத்தைக் கொண்டு அமல் செய்தது நான் ஒருவன் தான் என்றார்கள். அது தான் மேற்கூறப்பட்ட வசனம். )தஃப்ஸீர் தப்ரீ(

وقال ابن عمر : لقد كانت لعلي رضي الله عنه ثلاثة لو كانت لي واحدة منهن كانت أحب إلي من حمر النعم : تزويجه فاطمة ، وإعطاؤه الراية يوم خيبر وآية النجوى

ஹள்ரத் அலி ரலி அவர்களுக்கு மூன்று விசேஷமான விஷயங்கள் இருந்தது. அதில் ஒன்று கிடைத்திருந்தாலும் அது எனக்கு செந்நிற ஒட்டகைகள் கிடைப்பதை விட மிகவும் விருப்பமானது. ஒன்று நபி அவர்களின் மகளை அவர்கள் மனமுடித்தது. இரண்டாவது கைபர் யுத்தகளத்தில் அவர்களிடத்தில் நபியவர்கள் கொடியைக் கொடுத்தது. மூன்றாவது மேற்கூறப்பட்ட வசனத்தின் படி அமல் செய்வது என்று இப்னு உமர் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

இன்று நாம் பேசிக்கொண்டிருக்கிற செய்திகளில் நமக்கு கிடைக்கும் பாடங்கள்.

Ø  நபி அவர்களின் மிக உயர்ந்த நற்குணம்.

Ø  அமல்கள் மீது நபித்தோழர்களுக்கு இருந்த ஆர்வம்

Ø  நபி அவர்கள் மீது நபித்தோழர்களுக்கு இருந்த அளவு கடந்த பிரியம்

Ø  மற்றவர்களிடம் நாம் நடந்து கொள்ள வேண்டிய நாகரீகம்

Ø  அடியார்கள் மீது அல்லாஹ்விற்கு இருக்கும் இரக்கம்.

Ø  நபி அவர்களுக்கு எந்த வகையிலும் சிரமம் ஏற்பட்டு விடக்கூடாது என்ற அல்லாஹ்வின் எண்ணம்.

3 comments: