یُوصِیكُمُ ٱللَّهُ فِیۤ أَوۡلَـٰدِكُمۡۖ لِلذَّكَرِ مِثۡلُ حَظِّ ٱلۡأُنثَیَیۡنِۚ
உங்கள் சந்ததியில் ஆணும் பெண்ணும் இருந்தால் ஒரு ஆணுக்கு இரு பெண்களுக்குரியது போன்ற பாகம் உண்டென்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான். (அல்குர்ஆன் : 4 ;11)
عن جابر قَالَ: جَاءَتِ امْرَأَةُ سَعْدِ
بْنِ الرَّبيع إِلَى رسول الله صلى الله عليه وسلم فقالت: يَا رَسُولَ اللَّهِ، هَاتَانِ
ابْنَتَا سَعْدِ بْنِ الرَّبِيعِ، قُتل أَبُوهُمَا مَعَكَ فِي أحُد شَهِيدًا، وَإِنَّ
عَمَّهُمَا أَخَذَ مَالَهُمَا، فَلَمْ يَدَعْ لَهُمَا مَالًا وَلَا يُنْكَحَان إِلَّا
وَلَهُمَا مَالٌ. قَالَ: فَقَالَ: "يَقْضِي اللَّهُ فِي ذَلِكَ". قَالَ:
فَنَزَلَتْ آيَةُ الْمِيرَاثِ، فَأَرْسَلَ رسولُ اللَّهِ ﷺ إِلَى عَمِّهِمَا فَقَالَ: "أعْطِ
ابْنَتي سَعْدٍ الثُّلُثَيْنِ، وأُمُّهُمَا الثُّمُنَ، وَمَا بَقِيَ فَهُوَ لَكَ".فَهَذا
أوَّلُ مِيراثٍ قُسِمَ في الإسْلامِ (ابن كثير)
ஸஅத் பின் ரபீவு ரலி அவர்களின் மனைவி நபி ﷺ அவர்களிடத்தில் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே என்னுடைய கணவர் உஹது போர்க்களத்தில்
கலந்து கொண்டு ஷஹீதாகி விட்டார். அவரின் மூலமாக எனக்கு பிறந்த இரண்டு பெண் மக்கள் இருக்கிறார்கள்.
ஆனால் அவருடைய சகோதரர் அவர் விட்டுச் சென்ற அனைத்து செல்வத்தையும் எடுத்துக் கொண்டார்.
என் பிள்ளைகளுக்காக எதையும் அவர் விட்டு வைக்க வில்லை. பொருளாதாரம் இல்லாமல் அவர்களை
திருமணம் செய்து வைக்க முடியாது என்று முறையிட்டார்கள். அப்போது நபி ﷺ அவர்கள் இந்த விஷயத்தில் அல்லாஹ் சரியான தீர்வை
சொல்வான் என்று சொன்னார்கள். அந்நேரத்தில் தான் இந்த வசனம் அருளப்பட்டது. நபி ﷺ அவர்கள் ஸஅது ரலி அவர்களின் சகோதரரை அழைத்து இந்த பெண் மக்களுக்கு மூன்றில் இரண்டு
பங்கையும் அவர்களது தாயிக்கு எட்டில் ஒரு பங்கையும் கொடுத்து விடுங்கள். மீதியுள்ளது
உனக்குரியது என்று சொன்னார்கள். வாரிசுரிமை குறித்த வசனம் அருளப்பட்ட பிறகு பங்கு
வைக்கப்பட்ட முதல் சொத்து இது தான். (இப்னு கஸீர்)
فَإِنَّ أَهْلَ الْجَاهِلِيَّةِ كَانُوا
يَجْعَلُونَ جَمِيعَ الْمِيرَاثِ لِلذُّكُورِ دُونَ الْإِنَاثِ، فَأَمَرَ اللَّهُ تَعَالَى
بِالتَّسْوِيَةِ بَيْنَهُمْ فِي أَصْلِ الْمِيرَاثِ، وَفَاوَتَ بَيْنَ الصِّنْفَيْنِ،
فَجَعَلَ لِلذَّكَرِ مِثْلَ حَظِّ الْأُنْثَيَيْنِ؛ وَذَلِكَ لِاحْتِيَاجِ الرَّجُلِ
إِلَى مُؤْنَةِ النَّفَقَةِ وَالْكُلْفَةِ وَمُعَانَاةِ التِّجَارَةِ وَالتَّكَسُّبِ
وتجشُّم الْمَشَقَّةِ، فَنَاسَبَ أَنْ يُعْطَى ضعْفَيْ مَا تَأْخُذُهُ(١٧) الْأُنْثَى
(ابن كثير)
அல்லாஹ்வினால் அருளப்பட்ட வாழ்க்கை நெறியான இஸ்லாமிய
ஷரீஅத் அனைத்து மக்களுக்கும் சமமாக நீதமாக சட்டங்களை வகுத்துத் தந்திருக்கிறது. ஆண்கள்
பெண்கள் என அனைவருக்கும் பாரபட்சமின்றி சட்டங்களை சொல்லியிருக்கிறது.சிலர்
நினைப்பது போன்று ஒரு சாராருக்கு சாதகமாகவும் மற்றொரு சாராருக்கு பாதகமாகவும் இருக்கும்
என்பது தவறாகும். குறிப்பாக வாரிசுரிமை சட்டங்கள் பெண்களுக்கு பாதகமாக இருப்பதாக சிலர்
கூறுகிறார்கள். இந்த நேரத்தில் வாரிசுரிமைச் சட்டத்தில் இஸ்லாத்தின் நிலைப்பாடு
என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
உலகின் பெரும்பாலான மதங்களில் இனங்களில் பெண்களுக்கு
சொத்துரிமை இருந்ததில்லை. தவராத் வேதத்தில் ஆண்களுக்கே சொத்துரிமை உண்டு என்று கூறப்பட்டுள்ளது.
கிறிஸ்துவ மதத்திலும் பெண்களுக்கு சொத்துரிமை இருந்தது இல்லை. 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் தான் ஐரோப்பாவில் பெண்களுக்கு
சொத்துரிமை பற்றியும் பேசப்பட்டது. நமது இந்திய நாட்டில் கிபி 1956 ஆம் ஆண்டில் தான் பெண்களுக்கு சொத்துரிமை உண்டு
எனும் சட்டம் நிறைவேறியது.
இஸ்லாத்திற்கு முன் அரபு நாட்டில் ஆண்களுக்கு மட்டுமே
சொத்தில் உரிமை உண்டு. போர் புரிய தகுதி உடையவர்களே சொத்தில் உரிமை பெற முடியும் என்பது
அவர்களின் வாதம். ஆனால் இஸ்லாத்தின் ஆரம்ப காலங்களிலேயே பெண்களுக்கு பெற்றோர் உறவினர்
சொத்துக்களில் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு என அழுத்தமாக கூறி
விட்டது.
لِلرِّجَالِ نَصِيْبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدٰنِ
وَالْاَقْرَبُوْنَ وَلِلنِّسَآءِ نَصِيْبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدٰنِ وَالْاَقْرَبُوْنَ
مِمَّا قَلَّ مِنْهُ اَوْ كَثُرَ نَصِيْبًا مَّفْرُوْضًا
(இறந்துபோன) தாயோ, தந்தையோ, உறவினர்களோ விட்டுப்போன பொருள்களில் (அவை அதிகமாகவோ
கொஞ்சமாகவோ இருந்தபோதிலும்) ஆண்களுக்குப் பாகமுண்டு. (அவ்வாறே) தாயோ, தந்தையோ, உறவினர்களோ விட்டுச் சென்ற பொருள்களில்,
அவை அதிகமாகவோ கொஞ்சமாகவோ
இருந்த போதிலும் பெண்களுக்கும் பாகமுண்டு. (இது அல்லாஹ்வினால்) ஏற்படுத்தப்பட்ட பாகமாகும்.
(அல்குர்ஆன் : 4:7)
இஸ்லாம் வகுத்துக் கொடுத்த வாரிசுரிமை சட்டத்தின்
ஆழத்தை உற்று நோக்கினால் பெண்களுக்கு எந்த இடத்திலும் அநீதம் இழைக்கப் படவில்லை, ஆண்களை
விட பெண்கள் குறைவாக நடத்தப்பட வில்லை என்பதை உணர்ந்து கொள்ள முடியும். இஸ்லாமிய வாரிசுரிமை
சட்டத்தின் படி வாரிசுரிமை பெறுபவர்களில் முதன்மையானவர்கள் ஆறு பேர். தாய், தந்தை,
கணவர், மனைவி, ஆண்மகன், பெண் மகள். இதில் சரியாக ஆண்கள் மூவரும் பெண்கள் மூவரும் இருப்பதை
நாம் கவனிக்க வேண்டும்
அதேபோன்று இஸ்லாமிய சட்ட விதியின் படி பங்கு பெறக்கூடிய
நபர்களில் ஒட்டுமொத்தமாக பெண்கள் 14 பேரும் ஆண்கள் ஏழு பேரும் இருக்கிறார்கள். அப்படி பார்த்தால் பங்கு பெறக்கூடிய
வாரிசு தாரர்களில் ஆண்களை விட ஒரு மடங்கு பெண்கள் அதிகமாகத் தான் இருக்கிறார்கள்.
கொடுக்கப்படக்கூடிய பங்குகளில் மிகப்பெரிய பங்கு
என்பது மூன்றில் இரண்டாகும். அந்த மூன்றில் இரண்டு என்ற பங்கைப் பெறுவது பெண்கள் தான்.
ஆண்களுக்கு அந்த பங்கு இல்லை.
சில நேரங்களில் பெண் மற்றும் வாரிசாக இருப்பாள்.
ஆணுக்கு அந்த நேரத்தில் எந்த பங்கும் கிடைக்காது.உதாரணமாக ஒரு பெண் இறந்து
அவருக்கு கணவன்,தாய்,தந்தை,பெண் பிள்ளைகள்,பேத்தி வாரிசாக இருந்தால் பேத்திக்கு
ஆறில் ஒரு பங்கு கிடைக்கும். அதே நிலையில் பேத்திக்கு பதிலாக பேரன் இருந்தால்
அவனுக்கு எதுவும் கிடைக்காது.
இதையெல்லாம் பார்க்கின்ற பொழுது சொத்துரிமை விஷயத்தில்
ஆண்களுக்கு நிகராகவே பெண்கள் இஸ்லாத்தில் நடத்தப்படுகிறார்கள். சொல்லப்போனால் ஆண்களை
விட கூடுதலாகவே பெண்கள் பங்கு பெறுகிறார்கள் என்பதே உண்மை.
சில நேரங்களில் பெண்களை விட ஆண்களுக்கு சொத்து அதிகமாக
கொடுக்கப்படுவது உண்மை தான். ஆனால் இந்த வித்தியாசம் பாலின பாகுபாட்டால் உண்டானது அல்ல.
பெண்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது என்றும் அல்ல. ஆண்களின் சுமைகளை கருத்தில் கொண்டு
அவர்களுக்கு அதிகமாக தரப்படுகிறது.
அதாவது பெண் குழந்தை ஒன்று பிறந்து விட்டால் அது
பருவமடையும் வரையும் திருமணம் முடித்து தரும் வரையிலும் அவளது உணவு உடை உறைவிடம் மருத்துவ
செலவுகள் என எல்லா வகையான பராமரிப்புகளும் தந்தை மீதே கடமையாகிறது. திருமணம் முடிந்த
பிறகு மேலே குறிப்பிட்ட அந்த பெண்ணின் பராமரிப்பு சுமைகள் கணவன் மீது வந்தடைகிறது.
தன்னிடம் பணம் இருந்தாலும் அவளின் பராமரிப்பு கணவன் மீது போய் சேர்கிறது. அவன் பராமரிக்கா
விட்டால் பெண் வழக்கும் தொடர முடியும். பெண் வயோதிக வயதை எட்டி கணவனையும் இழந்து விட்டால்
அவளின் பராமரிப்பு மகன்கள் அல்லது சகோதரர்கள் மீது வந்து விடும். பெண்களை பராமரிப்பு
செய்ய யாருமே இல்லாத நிலையில் அவளுக்கு பைத்துல் மால் பொது நிதியிலிருந்து தரப்பட வேண்டும்
என்று இஸ்லாம் சொல்கிறது. ஆக பெண் பிறந்ததிலிருந்து கடைசி காலம் வரை அவளின் செலவினங்கள்
மற்றவரின் பொறுப்பாகவே இருக்கிறது. பெண் யாருக்கும் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் அவள்
மீது இல்லை. ஆனால் ஆணுடைய நிலை இதற்கு மாற்றமானது. ஆண் ஒரு பருவத்தை அடைந்தது முதல்
அவனின் தேவைகளை அவனே நிறைவேற்ற கடமைப்பட்டவன். அவன் அது மட்டுமின்றி அவனின் மனைவி மக்களின்
உணவு உடை உறைவிடம் மருத்துவ செலவுகள் படிப்பு செலவுகள் என அனைத்தும் அவன் மீது கடமையாக
இருக்கிறது. தம்முடைய திருமணமாகாத சகோதர சகோதரிகள் தலாக் சொல்லப்பட்ட சகோதரிகளின் பராமரிப்போம்
அதையும் அவனை ஏற்றுக் கொள்கிறான். வயோதிகம் அடைந்த பெற்றோர்கள் இருந்தால் அவர்களின்
பராமரிப்பும் இவன் மீது வந்து விழுகிறது. தன் மகன் மகள்களில் யாராவது இறந்து விட்டால்
அவர்களின் பிள்ளைகள், அதாவது பேரன் பேத்திகளை பராமரிக்கும் பொறுப்பும் ஆணையே வந்து
சேருகிறது. இவ்வாறு சிந்தித்துப் பார்த்தால் பெண்களின் பங்கை விட ஆணுடைய பங்கும் சுமையும்
அதிகமாக இருக்கிறது. எனவே தான் சில சமயங்களில் பெண்களை விட ஆண்களுக்கு பங்கு அதிகமாக
தரப்பட வேண்டும் என்று ஷரீஅத் கூறுகிறது. எனவே எல்லா நிலைகளிலும் நீதத்தை பேணுவதைப்
போல் சொத்துரிமை சட்டத்திலும் இஸ்லாம் நீதத்தை கடைபிடிக்கிறது.
اَلرِّجَالُ قَوَّامُوْنَ عَلَى النِّسَآءِ
بِمَا فَضَّلَ اللّٰهُ بَعْضَهُمْ عَلٰى بَعْضٍ وَّبِمَاۤ اَنْفَقُوْا مِنْ اَمْوَالِهِمْ
(ஆண், பெண் இருபாலாரில்) ஆண் பாலாரை(ப் பெண்பாலார் மீது) அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருப்பதுடன்
(ஆண்பாலார்) தங்கள் பொருள்களை(ப் பெண் பாலாருக்கு)ச் செலவு செய்வதனாலும் ஆண்கள்தான்
பெண்களை நிர்வகிக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர். (அல்குர்ஆன் : 4:34)
இதற்கு இன்னொரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால்,
ஒரு ஆணுக்கு அவனுடைய மகனை விட தந்தையே மிக நெருக்கமாகவும் இவன் உருவாக காரணமாகவும்
இருக்கிறான். ஆனால் ஷரீஅத் சட்டப்படி பங்கு வைக்கின்ற பொழுது மகனுக்கு அதிகமாகவும்
தந்தைக்கு குறைவாகவும் ஷரீஅத் கொடுக்கச் சொல்கிறது. ஏனென்றால் தந்தை தனது பொறுப்புக்களை
செய்து முடித்து அநேகமாக ஓய்வு பெறும் நிலைக்கு வந்து விட்டார். ஆனால் மகனோ இப்போது
தான் தனது பொறுப்புக்களை நிறைவேற்ற களத்தில் இறங்கி இருக்கிறார். ஆகவே மகனுக்கு அதிகம்
தந்தைக்கு குறைவு என்று ஷரீஅத் சொல்லுகிறது. எனவே எப்படிப் பார்த்தாலும் ஷரீஅத்தின்
வாரிசுரிமை சட்டம் நீதமாகவும் பாரபட்சமும் இன்றி இருப்பதை நியாயவாதிகள் உணர்வார்கள்.
அல்லாஹ் வகுத்துக் கொடுத்த வாரிசுரிமை
சட்டத்திலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய முதல் செய்தி. ஒருவர் எத்தனை
செல்வந்தராக இருந்தாலும் அவர் இறந்த பிறகு அந்த சொத்தை அவர் எடுத்துச் செல்ல
முடியாது. விட்டுத்தான் செல்ல வேண்டும்.
2 வது செய்தி செல்வம் நாம் சம்பாத்தித்தாக
இருந்தாலும் நாம் நம் விருப்பப்படி அந்த சொத்துக்களை நாம் விரும்பியவர்களுக்கும்
விரும்பிய அளவு கொடுக்க முடியாது. அல்லாஹ் சொன்ன விதிப்படி தான் பங்கு வைக்க
முடியும். அந்த பொறுப்பை இறைவன் எடுத்துக் கொண்டான். மனிதன் கையில்
கொடுத்திருந்தால் நீதம் பேணப்படாது.
عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ رَضِيَ
اللَّهُ عَنْهُ، قَالَ : جَاءَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُنِي
وَأَنَا بِمَكَّةَ، وَهُوَ يَكْرَهُ أَنْ يَمُوتَ بِالْأَرْضِ الَّتِي هَاجَرَ مِنْهَا،
قَالَ : " يَرْحَمُ اللَّهُ ابْنَ عَفْرَاءَ ". قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ،
أُوصِي بِمَالِي كُلِّهِ ؟ قَالَ : " لَا ". قُلْتُ : فَالشَّطْرُ ؟ قَالَ
: " لَا ". قُلْتُ : الثُّلُثُ ؟ قَالَ : " فَالثُّلُثُ، وَالثُّلُثُ
كَثِيرٌ، إِنَّكَ أَنْ تَدَعَ وَرَثَتَكَ أَغْنِيَاءَ خَيْرٌ مِنْ أَنْ تَدَعَهُمْ
عَالَةً يَتَكَفَّفُونَ النَّاسَ فِي أَيْدِيهِمْ، وَإِنَّكَ مَهْمَا أَنْفَقْتَ مِنْ
نَفَقَةٍ فَإِنَّهَا صَدَقَةٌ، حَتَّى اللُّقْمَةُ الَّتِي تَرْفَعُهَا إِلَى فِي امْرَأَتِكَ،
وَعَسَى اللَّهُ أَنْ يَرْفَعَكَ فَيَنْتَفِعَ بِكَ نَاسٌ، وَيُضَرَّ بِكَ آخَرُونَ،
وَلَمْ يَكُنْ لَهُ يَوْمَئِذٍ إِلَّا ابْنَةٌ "
ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். மக்காவில்
(நோயுற்று) இருந்த என்னை நபி(ஸல்) அவர்கள் (தம் ஹஜ்ஜின் போது) நலம் விசாரித்து வந்தார்கள்.
நான் துறந்து வந்த பூமியில் (மக்காவில்) மரணிப்பதை நான் விரும்பவில்லை. (மக்காவிலேயே
மரணித்துவிட்ட மற்றொருவரான) ‘அஃப்ராவின் புதல்(வர் ஸஅத்பின் கவ்லா என்ப)வருக்கு அல்லாஹ் கருணை புரிவானாக!’
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள்
கூறினார்கள். ‘இறைத்தூதர் அவர்களே!
என் செல்வம் முழுவதையும் நான் மரணசாசனம் செய்து விடட்டுமா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘வேண்டாம்” என்று கூறினார்கள். நான், ‘அப்படியென்றால் (என் செல்வத்தில்) பாதியை மரண சாசனம்
செய்து விடட்டுமா?’ என்று கேட்டேன். அதற்கும்,
‘வேண்டாம்” என்றே பதிலளித்தார்கள்.
நான், ‘மூன்றிலொரு பங்கை(யாவது
மரண சாசனம் செய்து விடட்டுமா?)” என்று கேட்டேன். அவர்கள், ‘மூன்றிலொரு பங்கா? மூன்றிலொரு பங்கே
அதிகம் தான். நீங்கள் உங்கள் வாரிசுகளைத் தன்னிறைவுடையவர்களாகவிட்டுச் செல்வது,
அவர்களை மக்களிடம் கையேந்தும்படி
ஏழைகளாகவிட்டுச் செல்வதை விட நல்லதாகும். நீங்கள் செய்த (நல்ல) செலவு எதுவாயினும் தருமமேயாகும்.
நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் இடுகிற ஒரு கவளம் (உணவு) கூட (தருமமேயாகும்.) மேலும்,
உங்களுக்கு அல்லாஹ் நீண்ட
ஆயுளைத் தருவான். உங்கள் வாயிலாக மக்கள் சிலர் பயனடைவார்கள். மற்ற (தீயவர்) சிலர் உங்களால்
இழப்புக்குள்ளாவார்கள்” என்று கூறினார்கள். அன்று அவருக்கு ஒரு மகளைத் தவிர
வேறு (நேரடி வாரிசுகள்) யாரும் இருக்கவில்லை. (புகாரி : 2742)
No comments:
Post a Comment