Friday, March 31, 2023

உண்மையே அமைதிக்கான வழி

 

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَكُوْنُوْا مَعَ الصّٰدِقِيْنَ‏

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள் மேலும், (சொல்லிலும் செயலிலும்) உண்மையாளர்களுடன் இருங்கள். (அல்குர்ஆன் : 9:119)

عَنْ أَبِي وَائِلٍ عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى الْبِرِّ وَإِنَّ الْبِرَّ يَهْدِي إِلَى الْجَنَّةِ وَإِنَّ الرَّجُلَ لَيَصْدُقُ حَتَّى يَكُونَ صِدِّيقًا وَإِنَّ الْكَذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ وَإِنَّ الْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ كَذَّابًا رواه البخاري

உண்மை நற்செயலின் பக்கம் வழிகாட்டுகிறது. நற்செயல் சுவர்க்கத்தின் பக்கம் வழிகாட்டுகிறது. மனிதன் உண்மை பேசுகிறான். கடைசியில் (அல்லாஹ்விடம்) உண்மையாளனாகிவிடுகிறான். பொய் தீயசெயல்களின் பக்கம் வழிகாட்டுகிறது. தீய செயல்கள் நரகத்தின் பக்கம் வழிகாட்டுகிறது. மனிதன் பொய்பேசுகிறான். இறுதியில் அல்லாஹ்விடம் பொய்யனாகி விடுகிறான். (புகாரீ ; 6094)

عَنْ أَبِي الْحَوْرَاءِ السَّعْدِيِّ قَالَ قُلْتُ لِلْحَسَنِ بْنِ عَلِيٍّ مَا حَفِظْتَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ حَفِظْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لَا يَرِيبُكَ فَإِنَّ الصِّدْقَ طُمَأْنِينَةٌ وَإِنَّ الْكَذِبَ رِيبَةٌ

உனக்கு சந்தேகம் அளிப்பதை விட்டு விட்டு சந்தேகம் அளிக்காதவற்றின் பக்கம் சென்று விடு. உண்மை அமைதியைத் தரும். பொய் சந்தேகத்தை வளர்க்கும். (திர்மிதீ ; 2442)

பொதுவாக இன்றைக்கு நாம் அச்சமில்லாமல் நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ வேண்டும் என்று விரும்புகிறோம். அந்த அமைதியாக வாழ்வு பேச்சிலும் செயல் அனைத்திலும் உண்மையாக இருப்பவர்களுக்குத்தான் அமையும். பேச்சிலோ செயல்பாடுகளிலோ பொய் வந்து விட்டால் கூடவே சேர்ந்து அச்சமும் வந்து விடும். ஏனென்றால் ஒரு சூழ்நிலையை சமாளிப்பதற்காக பொய் சொல்லி விட்டால் அந்த பொய்யைப் பாதுகாப்பதற்காக தினம் தினம் சிரமப்பட வேண்டும். யாரும் கண்டு பிடித்து விடுவார்களோ நம் மானம் போய் விடுமோ நம் கண்ணியம் குறைந்து விடுமோ நம் குறைகளை யாரும் கண்டு பிடித்து விடுவார்களோ என்று அஞ்சிக் கொண்டே வாழ வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் உண்மை பேசும் போது அவ்வாறான சிக்கல்கள் நிகழாது. இதனைத் தவிர நாம் யாரிடமாவது பொய்யுரைத்து அது நிரூபிக்கப்பட்டால் நம்மீது மற்றவர்களுக்குள்ள நம்பிக்கை மற்றும் சமூகத்திலுள்ள நன்மதிப்பு ஆகியற்றை இழக்க நேரிடும்.அதன்பின் நாம் உண்மையே கூறினாலும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். உண்மையானது பல எதிர்ப்புக்களை தேடித் தந்தாலும் அதுவே நம்மீதான நம்பிக்கையை கட்டியெழுப்பும்.

இஸ்லாமும் அப்படித்தான் கூறுகிறது. பொய் சொல்பவரின் சாட்சி ஏற்றுக் கொள்ளப்படாது. ஒருவர் பொய் சொன்னார் என்ற சந்தேகம் எழுந்தால் அவர் அறிவிக்கும் ஹதீஸ் ஏற்றுக் கொள்ளப்படாது,

இன்றைக்கு பொய் என்பது நம் நாவில் சர்வ சாதாரணமாக இன்றைக்கு வந்து கொண்டிருக்கிறது. நமக்கே தெரியாமல் நம் நாவில் பொய் வந்து விடும். அதை தவறு என்றே நம்மில் நிறைய பேர் நினைப்பதில்லை. மனிதர்கள் செய்யக்கூடிய குற்றங்களில் இரண்டு வகை இருக்கிறது. 1, குற்றம் என்று தெரியும். 2, குற்றம் என்றே தெரியாது.குற்றம் என்ற உணர்வே இருக்காது. இந்த இரண்டாவது வகையைச் சேர்நதது தான் பொய்.

இன்றைக்கு பொய் சிறியவர் பெரியவர் என்ற பாரபட்சம் இல்லாமல் ஆண் பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லோரிடத்திலும் இருக்கிறது.எல்லா வீடுகளிலும் இருக்கிறது. எல்லா குடும்பங்களிலும் இருக்கிறது.ஆனால் அதை யாரும் அவ்வளவு பெரிதாக நினைப் பதில்லை.கண்டு கொள்வதில்லை.அது பாவம் அது குற்றம் என்ற நினைவே பல பேருக்கு வருவதில்லை.

பொய் பேசுபவன் முஃமினாகவே இருக்க முடியாது.

عن عبد الله بن جراد سألتُ رسولَ اللهِ ، فقلتُ: يا رسولَ اللهِ هل يزني المؤمنُ؟ قال: قد يكونُ ذلك قال: يا نبيَّ اللهِ، هل يكذِبُ المؤمنُ؟ قال : لا ثمَّ أتبعها بقولِ اللهِ تعالى: إنَّما يَفْتَرِي الكَذِبَ الَّذِينَ لا يُؤْمِنُونَ بِآَياتِ اللهِ

யாரசூலல்லாஹ்  ஒரு முஃமின் விபச்சாரம் செய்வானா? என்று சஹாபாக்களில் ஒருவர் கேட்ட போது, 'செய்யலாம் என்றார்கள். ஒரு முஃமின் பொய் சொல்வானா? என்று கேட்ட போது, சொல்ல மாட்டான் என்று கூறி,

'நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் (உண்மையில்)அவர்கள் தாம் பொய்யர்கள்(நபியே! நீர் பொய்யரல்ல).' (அல்-குர்ஆன் 16:105) என்ற ஆயத்தை ஓதிக் காட்டினார்கள். (இஹ்யா)

விளையாட்டாக கூட பொய் சொல்வதை நபி அவர்கள் அனுமதிக்க வில்லை.

இன்று நம்மில் பலர் சர்வ சாதாரணமாக குழந்தைகளிடம் விளையாட்டாகப் பொய் பேசுகிறோம். நாம் பேசக்கூடிய ஒவ்வொரு வார்த்தைகளும் இரு வானவர்களால் பதிவு செய்யப் படுகிறது என்பதை மறந்து விடுகிறோம். இந்த விஷயத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் நாம் குழந்தைகளிடம் விளையாடுவதற்காக பொய் கூறும்போது நம் வாயிலிருந்து வெளிவந்த வார்தைகளை பொய் என்று நம் நன்மை தீமை பட்டியலிலே பதிக்கப்பட்டு விடுகிறது. இதை குறித்து நபி அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

فعن عبد الله بن عامر رضي الله عنهما أنه قال: دعتني أمي يوماً ورسول الله صلى الله عليه وسلم في بيتنا، فقالت: "ها تعال أعطيك"، فقال لها رسول الله صلى الله عليه وسلم: «ما أردت أن تعطيه؟» قالت: "أعطيه تمراً"، فقال لها رسول الله صلى الله عليه وسلم: «أما إنك لو لم تعطيه شيئاً كتبت عليك كذبة

ஒருநாள் நபி அவர்கள் எங்கள் வீட்டில் அமர்திருக்கும் போது என் அன்னை இங்கே வாநான் உனக்கு ஒன்று தருகிறேன், என்று என்னை அழைத்தார்கள். அப்போது நபி அவர்கள் கூறினார்கள், அவருக்கு என்ன தரப்போகிறாய் என்று (என் தாயிடம்) வினவினார்கள். (அதற்கு என் தாய்) நான் அவருக்கு ஒரு பேரிச்சம் பழம் கொடுப்பேன், என்று கூறினார்கள். (அதற்கு) நபி அவர்கள் நீங்கள் அவருக்கு ஒன்றும் தராமல் இருந்தால் நீங்கள் பொய் கூறியவராகியிருப்பீர்கள், என்று கூறினார்கள். (அபூதாவூது ; 4991)

தாம் காணாத கனவை கண்டதாக பொய்க் கூறுவதை இஸ்லாம் தடை செய்துள்ளது

عَنْ عِكْرِمَةَ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ

مَنْ تَحَلَّمَ بِحُلُمٍ لَمْ يَرَهُ كُلِّفَ أَنْ يَعْقِدَ بَيْنَ شَعِيرَتَيْنِ وَلَنْ يَفْعَلَ وَمَنِ اسْتَمَعَ إِلَى حَدِيثِ قَوْمٍ وَهُمْ لَهُ كَارِهُونَ ، أَوْ يَفِرُّونَ مِنْهُ صُبَّ فِي أُذُنِهِ الآنُكُ يَوْمَ الْقِيَامَةِ ، وَمَنْ صَوَّرَ صُورَةً عُذِّبِ وَكُلِّفَ أَنْ يَنْفُخَ فِيهَا وَلَيْسَ بِنَافِخٍ قَالَ سُفْيَانُ وَصَلَهُ لَنَا أَيُّوبُ

ஒருவர் தாம் காணாத கனவைக் கண்டதாக திட்டமிட்டு சொன்னால், அவர் (மறுமையில்) இரண்டு வாற் கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து) முடிச்சுப் போடும் படி நிர்ப்பந்திக்கப்படுவார். ஆனால், அவரால் ஒருபோதும் (அப்படிச்) செய்ய முடியாது. (அவருக்கு அளிக்கப்படும் வேதனையும் நிற்காது.) தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்அல்லது தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில் அவர்களின் உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறவரின் காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும். (உயிரினத்தின்) உருவப் படத்தை வரைகிறவர் அதற்கு உயிர் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார். ஆனால், அவரால் உயிர் கொடுக்க முடியாது. (புகாரி ; 7042)

பொய் என்பது ஆரம்பத்தில் இலகுவாக தெரியும். பிரச்சனையின் போது அந்த நேரத்தில் சமாளிப்பதற்கு பொய் பயன்படலாம். ஆனால் அதன் பின்விளைவுகள் மோசமானதாக இருக்கும்.

தபூக் போரில் மூன்று நபித்தோழர்கள் கலந்து கொள்ள வில்லை. போர் முடிந்த பிறகு போருக்கு செல்லாத முனாஃபிக்-கள் நபி அவர்களிடம் வந்து பொய்யான காரணங்களை சொல்லி அன்த நேரத்தில் தப்பித்துக் கொண்டார்கள். ஆனால் அந்த மூன்று ஸஹாபாக்களும் உண்மையைச் சொன்னார்கள். அவர்களுடன் யாரும் பேச வேண்டாம் என்று நபி அவர்கள். அது அவர்களுக்கு அந்த நேரத்தில் மிகப்பெரிய சோதனையாக இருந்தது. ஆனால் பின்பு அவர்களைப்பற்றி குர்ஆன் வசனங்களை இறக்கி வாழ்த்து கூறினான். ஆனால் அந்த நேரத்தில் பொய் பேசி தப்பித்துக் கொண்ட முனாஃபிக்-களை கண்டித்து வசனத்தை இறக்கினான்.    

 

No comments:

Post a Comment