Monday, April 3, 2023

அழைப்புப் பணி

 

اُدْعُ اِلٰى سَبِيْلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ‌ وَجَادِلْهُمْ بِالَّتِىْ هِىَ اَحْسَنُ‌ اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيْلِهٖ‌ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِيْنَ‏

(நபியே!) நீங்கள் (மனிதர்களை) மதிநுட்பத்துடனும், அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உங்கள் இறைவனின் வழியின் பக்கம் அழைப்பீராக! அன்றி, அவர்களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்) நீங்கள் (கண்ணியமான) அழகான முறையில் தர்க்கம் செய்யுங்கள். உங்கள் இறைவன் வழியிலிருந்து தவறியவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அவன்தான் நன்கறிவான். நேரான வழியிலிருப்பவர்கள் யார் என்பதையும் அவன்தான் நன்கறிவான். (அல்குர்ஆன் : 16:125)

அழைப்புப்பணியைக் குறித்தும் அந்த அழைப்புப் பணி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைக்குறித்தும் இவ்வசனம் பேசுகிறது.

1, அழைப்பு பணி அல்லாஹ்வின் வேலை

وَاللَّهُ يَدْعُو إِلَى دَارِ السَّلَامِ وَيَهْدِي مَنْ يَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ

அல்லாஹ் சாந்தி சமாதான வீட்டுக்கே அழைக்கிறான்.அவன் நாடுபவர்களை நேரான வழியில் செலுத்துகிறான் [அல்குர்ஆன் :10 ; 25]

இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள தாருஸ்ஸலாம்சமாதான இல்லம் என்பது சொர்க்கம். சொர்க்கம் செல்லும் வழியான இஸ்லாமிய மார்க்கத்தின் பால் அல்லாஹ் அழைக்கிறான்.சத்திய இஸ்லாத்தின் அழைப்பு பணியை இதன் மூலம் அல்லாஹ் துவக்கி வைக்கிறான்.

2, அழைப்பு பணியே நபியின் வேலை

قُلْ هَذِهِ سَبِيلِي أَدْعُو إِلَى اللَّهِ عَلَى بَصِيرَةٍ أَنَا وَمَنِ اتَّبَعَنِي وَسُبْحَانَ اللَّهِ وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ

[நபியே!] சொல்வீராக ! இதுவே எனது வழி. நான் அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன். நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவின் மீதே இருக்கிறோம்.அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். ஆகவே [அவனுக்கு] இணை வைப்பவர்களில் நானும் ஒருவனல்ல [அல்குர்ஆன் :12 ;108]

 

அழைப்பு பணி செய்பவரே நான் முஸ்லிம்எனச் சொல்ல தகுமானவர்.

وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ

 எவர் அல்லாஹ்வின் பக்கம் [மக்களை] அழைத்து [தானும்] நற் செயல்களை செய்து நிச்சயமாக நானும் ஒரு முஸ்லிம்என்று கூறுகின்றாரோ அவரை விட அழகிய சொல்லாளர் யார் ?       [அல்குர்ஆன் : 41 ; 33]

அழைப்பு பணியை மேற்கொள்ளாமல் தன்னை ஒரு முஸ்லிம் எனச் சொல்லிக் கொள்வது யாருக்கும் அழகல்ல.

தஃவா பணி இரண்டு வகை.

நபிகள் நாயகம் அவர்கள் காலத்தில் அழைப்பு பணி இரண்டு விதத்தில் நடந்தது.

1 – சொல்லாற்றல் மூலம்.

2 – எழுத்தாற்றல் மூலம்.

நபித்துவம் கிடைக்கப் பெற்ற ஆரம்ப காலத்தில் நபி அவர்களும், அவர்களின் தோழர்களும் நாவால் பிரச்சாரம் செய்து இஸ்லாத்தைப் பரப்பினார்கள்.நபி அவர்களின் முழு வாழ்க்கையுமே இதற்கு சான்றாக இருக்கிறது.மக்காவில் 13 ஆண்டு காலமும் மதினாவிற்கு ஹிஜ்ரத் சென்று ஆறு வருடக்காலம் வரையும் நாவாற்றல் மட்டும் தான் இஸ்லாமியப் பிரச்சாரத்திற்குப் பயன் பட்டது.

ஹிஜ்ரி ஆறில் ஹுதைபியா அமைதி ஒப்பந்தம்,போர் நிறுத்த அறிவிப்பு உண்டானது.இந்த அமைதியான காலத்தைப் பயன்படுத்தி நபிகள் நாயகம் அவர்கள் அரபகத்தைச் சுற்றியிருந்த எல்லா நாடுகளுக்கும் கடிதம் எழுதினார்கள்.

அந்த காலத்தில் மிகப்பெரும் வல்லரசுகளாக இருந்த ரோமாபுரி,பாரசீக சாம்ராஜ்யங்களுக்கும் மற்றும் குறு நில மன்னர்களுக்கும் எழுத்து மூலம் தஃவா பணி செய்தார்கள்.இந்த காலத்தில் பேச்சு,எழுத்து இந்த இரண்டுமே பிரச்சாரத்திற்குப் பயன்பட்டது.

இந்த வகையில் ; நபிகள் நாயகம் அவர்கள் கடிதத்தின் மூலமும் அழைப்பு பணி செய்தார்கள்.

அண்ணலார் கடிதம் எழுதிய அரசர்கள்.

1, ரோமானியப் பேரரசின் மன்னன் ஹெர்குலிஸுக்கு திஹ்யத்துல் கலபி [ரலி] என்ற தோழர் மூலம் கடிதம் அனுப்பினார்கள்.அவர் சாசானிய அரசன் ஹாரிஸ் என்பவர் மூலம் கடிதத்தை ஹெர்குலிஸிடம் சமர்பித்தார்.

2, திமிஷ்க் டமாஸ்கஸின் அமீராக ஆளுநராக இருந்த அல்ஹரிஸ் பின் அபி ஷம்ருக்கு ஷுஜாவு பின் வஷ்பில் அஸதி [ரலி] என்ற நபித்தோழர் கடிதம் கொண்டு சென்றார்.

3, பாரசீகத்தின் ராஜா கிஸ்ரா பின் ஹுர்முஸுக்கு அப்துல்லாஹ் பின் ஹுதாபா அஸ்ஸஹ்மி [ரலி] என்ற நபித்தோழர் மூலம் கடிதம் அனுப்பப்பட்டது.கிஸ்ரா, நபியின் கடிதத்தை கிழித்துப் போட்டான். இதனால் இவரது அரசும் கிழிக்கப்படும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அவ்விதமே ஆனது.

4, எகிப்தின் அதிபர் முகோகஸுக்கு ஹாதிப் பின் அபிபல்தஆ [ரலி] மூலம் இக்கடிதம் அனுப்பப்பட்டது.

5, நஜ்ஜாஷி பாதுஷாவுக்கு அஸ்ஹமா அம்ரு பின் ளம்ரி [ரலி] அவர்களிடம் கொடுத்து அனுப்பினார்கள்.

6, ஹவ்தா பின் அலிய்யுல் ஹனபிய்யு யமாவின் ஆளுநர் ஹவ்தாவுக்கு கடிதம் ஸலித் பின் அம்ருல் ஆமிரிய்யி [ரலி] மூலம் அனுப்பினார்கள்.

இதில் அபிசினியாவின் அதிபர் நஜ்ஜாஷி பாதுஷா, விபரம் அறிந்தேன்.ஒரு நபி வரவேண்டியிருக்கிறது என்பது தெரியும்.அவர் ஷாமில் சிரியாவில் தோன்றுவார் என எண்ணியிருந்தேன் என்று குறிப்பிட்டு இறுதியில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

ஆனால் எகிப்து அதிபர், நபிக்கு பதில் எழுதும் போது, உங்களது கடிதம் வந்து விபரம் அறிந்தேன்.ஒரு நபி வர வேண்டியதிருக்கிறது என்பது தெரியும்.ஆனால் அவர் சிரியாவில் தோன்றுவார் என எண்ணியிருந்தேன் என்று குறிப்பிட்டிருந்தார்.ஆனால் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வில்லை.எனினும் கடிதத்தையும் அல்லாஹ்வின் தூதரையும் மதித்து நிறைய பரிசுகளை அனுப்பி வைத்தார்.அதில் மாரியத்துல் கிப்திய்யா [ரலி] என்ற பேரழகியை நபிகள் நாயகத்திற்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்தார்.பெருமானாருக்கு இந்த மாரியா கிப்திய்யா [ரலி] அவர்கள் மூலம் இப்ராஹீம் என்னும் ஒரு ஆண் மகனும் பிறந்தது.

யமாமா-வின் ஆளுநர் இஸ்லாத்தைத் தழுவ வில்லை.எனினும் நபியின் கடிதத்தை மதித்தார்.கடிதம் கொண்டு வந்த ஹளரத் சலித் [ரலி] அவர்களுக்கு நளினமான பதிலை அளித்தார்.இவருடைய அரசவையில் அர்கூன் என்னும் கிறிஸ்தவ மத குரு வீற்றிருந்தார்.

அரசர்,இந்த பேரறிஞரிடம் நபியிடமிருந்து இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு விடுத்து கடிதம் வந்திருக்கும் செய்தியைச் சொல்லி நான் இந்த அழைப்பை ஏற்க வில்லை என்றார்.அதற்கு அந்த அறிஞர் ; ஏன் நபியின் அழைப்பை ஏற்க வில்லை? என வினவினார்.

அதற்கு அவ்வரசர் ; நான் எனது மதத்தின் மீது பற்றுடன் இருக்கிறேன். நான் இந்த நாட்டு மக்களுக்கு ராஜாவாக இருக்கிறேன்.நான் இந்த நபியைப் பின்பற்றினால் இந்த மக்கள் என்னை அரசராக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என பதிலளித்தார்.

பதவி பறிபோய் விடும் என பயந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத இந்த அரசரைப் பார்த்து கிறிஸ்தவ பேரறிஞர் கூறினார் ; இல்லை, அல்லாஹ் மேல் சத்தியம்.நீங்கள் அந்த நபியை ஏற்றுக் கொண்டால்,அவர் உங்கள் பதவியைப் பறிக்காமல் உங்களையே தொடர்ந்து அரசராக ஆக்குவார்.அவரைப் பின்பற்றுவதில் தான் உங்களுக்கு நன்மை இருக்கிறது.

நமது ஈஸா [ஏசுநாதர்] நபி [அலை] அவர்கள் நற்செய்தி சொன்ன அந்த அரேபிய்யாவின் நபி இவர் தான்.நம்மிடம் உள்ள இன்ஜீலில் பைபிளில் – “முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என எழுதப்பட்டுள்ளதுஎன்று அர்கூன் கூறினார்.

இந்த கிறிஸ்தவ மத குரு ஹளரத் அபூபக்கர் [ரலி] அவர்களின் ஆட்சி காலத்தில் காலித் பின் வலீத் [ரலி] அவர்களின் கரம் பற்றி இஸ்லாத்தைத் தழுவினார்.ஹவ்தா என்ற இந்த யமாமாவின் ஆட்சியாளர் முஸ்லிமாக வில்லை.எனினும் நிறைய பரிசுகளை அனுப்பி நபியின் தூதரை கௌரவித்தார்.

ரோமாபுரி பேரரசர் ஹெர்குலிஸ் நபியின் கடிதத்துக்கு மதிப்பளித்தார். நபியைப் பற்றி மேல் விபரங்களை விசாரித்தறிந்தார்.நபியையும் கடிதத்தையும் மெய்பித்தார்.

இந்த நபி வருவார் என்று எனக்கு தெரியும். ஆனால் அவர் உங்களில் அரபியர்களில் தோன்றுவார் என்று நான் கருதவில்லை.அவர்,என் பாதமிருக்கும் இந்த இடத்தைக் கைப்பற்றுவார்.அவரைப் போய்ச் சேருவேன் என்று உறுதியாக அறிந்தால் அவரைச் சந்திப்பதற்காக எத்தகைய கஷ்டத்தையும் தாங்குவேன்.நான் அவரிடம் இருந்தால் அவரது பாதத்தைக் கழுவி விடுவேன் எனக் கூறினார். [புகாரி]

பிறகு,இக்கடிதத்தை ஹளரத் திஹ்யத்துல் கலபி [ரலி] அவர்கள் மூலம் இத்தாலியில் இருந்த தனது நண்பரும் கிருஸ்தவ மத அறிஞருமான அன்றைய போப் ளகாதிர்என்பவரிடம் அனுப்பி இரகசியமாக இதை அவரிடம் சேர்க்க வேண்டும் என அனுப்பினார்.இந்தக் கடிதத்தைப் பார்த்ததும் போப் ஆண்டவரான பேரறிஞர் ளகாதிர் அவர்கள்,தனது கண்ணில் வைத்து ஒத்தி அதற்கு முத்தமிட்டார்.

பிறகு ஹெர்குலிஸின் கடிதத்திற்கு நான் இந்த நபியை ஏற்று நம்பிக்கை கொண்டு விட்டேன். இவர்,நாம் ஆவலுடன் ரொம்ப காலமாக எதிர்பார்த்த அந்த நபி தான்என பதில் அனுப்பினார்.பிறகு கலிமா சொல்லி இஸ்லாத்தில் இணைந்தார்.இறையறிந்த அங்குள்ள மத வெறியர்கள் அவரைக் கொலை செய்து விட்டனர். [ஸீரத்து இப்னு இஸ்ஹாக்]

இத்தாலிய அறிஞரின் பதில் கடிதம் தனது அபிப்ராயத்திற்குத் தோதுவாக இருந்த போது தானும் தனது கருத்தை வெளியிடுவதற்காக தனது அரசபையைக் கூட்டினார் ஹெர்குலிஸ்.அதில் ரோமிலுள்ள பெருமக்களை அழைத்து, “நீங்கள் வெற்றியும்,நேர்வழியும் பெற வேண்டுமா? இந்த நபியைப் பின்பற்றுங்கள்எனக் கேட்டுக் கொண்டார்.ஆனால் அம்மக்கள் இதை ஏற்றுக் கொள்ள வில்லை.உடனே [ஹெர்குலிஸ்] தனது முடிவையும் மாற்றிக் கொண்டார். [புகாரி] இறுதியில் ஆட்சியின் மீது அவருக்கு இருந்த ஆசை காரணமாக அவர் இஸ்லாமாக வில்லை.

பாரசீக மன்னன் நபியின் கடிதத்தைக் கிழித்தெறிந்து விட்டான்.எமன் ஆளுநர் பாதானுக்கு கடிதம் எழுதி இரண்டு காவலர்களை அனுப்பி அவரை [நபியை] க் கைது செய்து கொண்டு வருமாறு உத்தரவிட்டார்.அதன் படி இரண்டு காவலர்கள் மதீனா வந்து ஷஹின்ஷா மாமன்னர் கிஸ்ரா எங்களை அனுப்பி வைத்தார்.நீங்கள் சரணடைந்து விட்டால் உங்களுக்கு நல்லது.நீங்கள் மறுத்தால் உங்களுக்கே தெரியும்.மிகப்பெரிய வல்லரசான பாரசீகத்து சாம்ராஜ்ய சர்க்கரவர்த்தியைப் பகைத்தால் அவர் உங்களை மட்டுமல்ல,உங்களது இனம்,உங்கள் நாடு எல்லாவற்றையும் அழித்து விடுவார் என்று எச்சரித்தனர்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் ; “என்னைக் கைது செய்து கொண்டு வர உத்தரவிட்ட உங்களது மன்னர் கிஸ்ராவை அவரது மகன் ஷேர்வா இன்ன மாதத்தில் இன்ன இரவில் கொலை செய்து விட்டார்என்று எனக்கு இறைச் செய்தி வந்துள்ளது எனக் கூறினார்கள்.

இதைக் கேட்டு அதிரச்சியடைந்த காவலர்கள்,நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? இது தவறான செய்தியாக இருந்தால் கடும் விளைவைச் சந்திக்க வேண்டியது வரும் என்று உங்களுக்குத் தெரியுமா? என்று வினவினார்கள்.

ஆம் நான் சொன்ன விஷயம் உண்மை.நான் இப்படி சொன்னதாக உங்கள்  ஆளுநரிடம் சொல்லுங்கள் ; மேலும் எனது ஆட்சி அதிகாரம் கிஸ்ராவின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியை வந்தடையும்.இன்னும் அவருக்குச் சொல்லுங்கள் ; நீங்கள் முஸ்லிமாகி விட்டால் உங்களுக்குக் கீழுள்ள பகுதியை உங்களுக்கே கொடுத்து,உங்களையே உங்களது சமூகத்திற்கு அரசராக ஆக்குவேன் என்று.

இதைக் கேட்டு யமனுக்குத் திரும்பி அவர்கள் சொன்னதையெல்லாம் ஆளுநர் பாதானிடம் கூறியபோது, “அல்லாஹ் மேல் சத்தியம்.இது ஒரு அரசருடைய பேச்சாக இல்லை.அவர்கள் சொன்னது போல அவர் ஒரு நபியாகத் தான் இருக்க வேண்டும்.அவர்கள் சொன்னதை எதிர்பார்த்து இருங்கள்.அவர்கள் சொன்னபடி எல்லாம் நடந்திருந்தால் அவர் ஒரு நபி தான்.அவ்விதம் நடக்க வில்லையெனில் அதைப் பற்றி பிறகு யோசிப்போம்என்று பாதான் அறிவித்தார்.

இது நடந்து ரொம்ப நாள் கழிவதற்குள் சற்றும் தாமதம் ஏற்படாமல் கிஸ்ரா மகன் ஷேர்வாவிடமிருந்து தபால் வந்தது.நான் கிஸ்ராவை கொலை செய்து விட்டேன்.நீங்கள் எல்லோரும் இனி எனக்குக் கட்டுப் பட்டு நடக்க வேண்டும்.கிஸ்ரா, கடிதம் எழுதி கைது செய்யச் சொல்லியிருந்த மனிதரை [நபியை] இப்போது ஒன்றும் செய்ய வேண்டாம்என எழுதியிருந்தார்.

இந்தக் கடிதம் கண்டதும் யமன் ஆளுனர் பாதானும் அவருடன் இருந்த அனைவரும் இஸ்லாத்தில் இணைந்தனர்.

இப்படி நபியின் கடிதங்கள்  - எழுத்துக்கள் அன்றைய காலத்து ராஜாக்களையும் அந்நாட்டு மக்களையும் ஒரு கலக்கு கலக்கி ஒரு உலுக்கு உலுக்கியது என்றால் அது மிகையல்ல.எனவே அழைப்பு பணியில் எழுத்தாற்றல் மிகவும் சக்தி வாய்ந்தது.

அல்லாஹ் முதலில் படைத்தது பேனா [நபிமொழி]

இது, விதியை எழுதிய பேனா என்றாலும் எழுத்துலகின் அஸ்திவாரமான பேனா,அல்லாஹ்வின் முதல் படைப்பு என்று வரும் போது அந்த பேனா படைப்பாற்றல் மிக்கது என்று தெரிகிறது அல்லவா? பேனாவின் எழுத்து எழுச்சி மிக்கது.உயிர்ப்பிக்கும் சக்தி கொண்டது.உலகின் சரித்திரத்தை எழுதக்கூடியது மட்டுமல்ல, சரித்திரமும் படைக்கக்கூடியது.உலகின் தலைவிதியை,வரலாற்றை நிர்ணயிக்கக்கூடியது.எழுத்தாற்றல்,மக்களின் மனதை மாற்றி ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்து பெரும் அரசியல் புரட்சியை உண்டு பண்ணக்கூடியது என்பது நடப்பில் உள்ள கண்கூடான உண்மை.

اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ

[நபியே!] படைத்த உமதிறைவன் பெயரால் நீங்கள் ஓதுவீராக! அவனே மனிதனை இரத்தக்கட்டியிலிருந்து படைத்தான். [நபியே!] நீங்கள் ஓதுங்கள்.உங்களது இறைவன் மகா பெருங்கொடையாளி. அவன் தான் எழுது கோலைக்கொண்டு கற்றுக் கொடுத்தான்.அன்றி மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்குக் கற்றுக் கொடுக்கிறான். [அல்குர்ஆன் :96 ;1,2,3,4,5]

இது, வேதத்தின் ஆரம்ப வரிகள்.முதல் வசனம் பேச்சாற்றலையும், நான்காவது வசனம் எழுத்தாற்றலையும் எடுத்தோதுகிறது. இஸ்லாத்தையும் வேதத்தையும் இந்த இரு ஆற்றலைக் கொண்டு பரப்ப வேண்டும் என்பது ஆரம்பமாக இறங்கிய வேத வாக்கியங்கள் வெளிப்படுத்தும் கட்டளைகள். இந்த இரண்டு ஆற்றல்களும் மகத்தான சக்தி கொண்டது.

தஃப்தாஸானி என்பவர் மாபெரும் எழுத்தாளர். அவர் மீது நடவடிக்கை எடுக்க அந்த கால அரசரே தயங்கினார். ஏன்? எனக் கேட்ட போது ; “எனது வாள்முனை ஆட்சி செய்யாத பகுதிகளிலெல்லாம் அவரது பேனாமுனை ஆட்சி செய்கிறதுஎன்று பதிலளித்தார்.

அவ்வாறே பேச்சாற்றலும் பேரற்புதமானது.மூஸா நபி [அலை] அவர்கள், தனது சகோதரர் ஹாரூன் நபிக்கு நபித்துவம் வழங்க வேண்டும் என பரிந்துரை செய்த போது அதற்கு நபி மூஸா [அலை] அவர்கள் கூறிய காரணம் என்ன தெரியுமா? பேச்சாற்றல்.  

وَأَخِي هَارُونُ هُوَ أَفْصَحُ مِنِّي لِسَانًا فَأَرْسِلْهُ مَعِيَ رِدْءًا يُصَدِّقُنِي

என்னுடைய சகோதரர் ஹாரூன் என்னை விட தெளிவாகப் பேசக்கூடியவர்.அவரை எனக்கு உதவியாக என்னுடன் அனுப்பி வை. அவர் என்னை உண்மைப் படுத்துவார்என மூஸா நபி [அலை]  அவர்கள் பரிந்துரைத்தார்கள். [அல்குர்ஆன் :28 ;34]

 

 

புத்திசாலித்தனமாக அழைக்க வேண்டும்.

ادْعُ إِلَى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُمْ بِالَّتِي هِيَ أَحْسَنُ

புத்திசாலித்தனமாக அழைப்பது என்றால்,மனம் புண் படாமல் புரிய வைப்பதாகும்.ஒரு முறை ஒரு பெரியவர் தப்பு தப்பாக ஒழு செய்து கொண்டிருந்தார்.இதைப்பார்த்த இமாம் ஹஸன்,இமாம் ஹுஸைன் [ரலி] இருவரும் இதை அந்தப் பெரியவருக்கு உணர்த்த வேண்டும். ஆனால் வயதில் மூத்தவராக இருக்கிறார்.அவரிடம் சென்று நீங்கள் ஒழு செய்த முறை தவறு என்று சொல்வது மரியாதைக் குறைவு.மேலும் சிறுவர் சொல்வதை எப்படி ஏற்பது என்ற ஈகோ கூட அவருக்கு வந்து விடலாம். தவறை சுட்டிக்காட்டவும் வேண்டும். அதே நேரத்தில் அவர் ஏற்றுக் கொள்ளும் விதத்தில்,அவர் மனம் புண்படாமல் பக்குவமாகவும் எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற தீர்க்கமான யோசனையோடு அந்தப் பெரியவரிடம் சென்றார்கள் அந்த இரண்டு சிறுவர்களும்.பெரியவரே! நாங்கள் இருவரும் சிறுவர்கள்.நீங்கள் பெரியவர்.அதனால் நாங்கள் இருவரும் ஒழு செய்கிறோம்.அது சரியா தவறா என்று எங்களுக்கு தெரிய வில்லை.நீங்கள் தான் அதைப்பார்த்து நாங்கள் செய்வது சரியா தவறா எனச் சொல்ல வேண்டும் என வேண்டி நின்றனர்.

சரி என்று சொன்ன பெரியவர், அந்த சிறுவர்களான ஹஸன் [ரலி] ஹுஸைன் [ரலி] ஆகிய இருவரும் ஒழு செய்வதை பார்க்கத் தொடங்கினார்.அவர்கள் இருவரும் அழகாக சுன்னத்தான முறையில் முழுமையாக ஒழு செய்து காட்டினார்கள்.

இதை கவனமாக கவனித்த பெரியவர்,அவர்கள் இருவரும் மிகவும் நேர்த்தியாக ஒழு செய்வதைக் கண்டு, இப்படித்தான் ஒழு செய்ய வேண்டும்.நாம் செய்வது சரியில்லை என்பதை புரிந்து கொண்டார்.

ஒரு முறை ஒருவர் வந்து தனக்கு திருடுவதற்கு,குடிப்பதற்கு,விபச்சாரம் செய்வதற்கு அனுமதி வேண்டும் என்று நபி அவர்களிடம் வேண்டினார். அப்போது அண்ணலார் அவர்கள் எல்லாம் செய்வதற்கு அவருக்கு அனுமதி வழங்கினார்கள்.ஆனால் பொய் மட்டும் எப்போதும் சொல்லக்கூடாது என்று நிபந்தனை விதித்தார்கள்.இவ்வளவு தானே பொய் மட்டும் தானே பேசக்கூடாது.இது பெரிய விஷயமல்ல. திருடுவதற்கும், குடிப்பதற்கும், விபச்சாரம் செய்வதற்கும் அனுமதி கொடுத்ததே போதும் என சந்தோஷமாக புறப்பட்டார்.

ஒரு நாள் ஒரு இடத்திற்கு திருடுவதற்குப் புறப்பட்டார்.அப்போது அவருக்கு மனதிலே ஒரு சிந்தனை எழுந்தது.நாம் திருடி விட்டு வெளியே வரும்போது நம் எதிரில் யாரும் தென்படலாம், ஏன் நபி [ஸல்] அவர்களே கூட நமக்கு முன் தோன்றலாம்.அப்போது எங்கே போய் வருகிறாய்? என விசாரிக்கலாம்.அப்போது திருடி விட்டு வருகிறேன் என்று எப்படி சொல்ல முடியும்? ஆனால் பொய்யும் சொல்லக் கூடாது.இப்படியே சிந்தித்ததில் திருடச் செல்லாமல் திரும்பி விட்டார்.இவ்வாறே குடிப்பதற்கும், விபச்சாரம் செய்வதற்கும் சென்ற போது இவரது மனதிலே இதுமாதிரியான கேள்விகள் எழவே அந்த பாவங்களையும் செய்யாமல் செய்ய முடியாமல் திரும்பி போக வேண்டியது வந்தது. இறுதியில் திருந்தி, தவ்பா செய்து இறையச்சமுள்ள தோழராக மாறினார். இதுமாதிரியான அறிவுப்பூர்வமான அனுகுமுறை அழைப்பாளருக்கு அவசியம்.

இது தான் புத்திசாலித்தனமான முறையில் அழைப்பு பணி செய்வது.

அழகிய உபதேசம் என்பது,மனங்கவரும் செய்திகள்,சரித்திரங்கள், நிறவெறியால்,தீண்டாமையால்,ஜாதி வேற்றுமையால் மனம் புண்பட்டு இருக்கும் அடித்தட்டு மக்களுக்கு அவர்கள் மனம் நிறைவு தரும் செய்திகள்,அவர்களின் புண்பட்ட இதயத்திற்கு ஒத்தடம் கொடுக்கும் வகையில் மருந்தாக அமையும் நிவாரணம் அளிக்கும் செய்திகள், ஆதரவற்றவர்களுக்கு அன்பான ஆதரவான அரவணைக்கும் வரலாற்றுப் படிப்பினை மிக்க செய்திகள் ஆகியனவாகும்.

அழகான முறையில் தர்க்கம் செய்வது என்பது,அசத்தியத்தில் இருப்பவர்களின் தவறான கொள்கைகளை நாமாக சொல்லாமல் அவர்களாக புரிந்து கொள்ளும் விதத்தில் வாதாடுவது.

 

 

நளினமாக எடுத்துக் கூற வேண்டும்.

ஃபிர்அவ்ன் போன்ற அடக்கு முறையை கட்டவழித்து விடக்கூடிய அநியாயக்கார அரசனிடம் கூட,அழைப்பு பணியை மேற்கொள்ளலாம். மேற்கொள்ளவும் வேண்டும்.ஆனால் அவனிடம் மட்டுமல்ல, எல்லோரிடமும் நயமாக எடுத்து இயம்ப வேண்டும்.யாரையும் எளிதில் ஈர்த்து விடும் வகையில் எளிமையாக எடுத்துக் கூற வேண்டும். எல்லோரையும் கவரும் வகையில் மென்மையாக எடுத்துரைக்க வேண்டும். கடினமான சொற்கள்,தடித்த வார்த்தைகள் நம்முடைய பிரச்சாரத்தில் இருக்கவே கூடாது.கண்ணியமான சொல்லாடல்களை கணிவாக,பணிவாக பயன் படுத்த வேண்டும்.

فَقُولَا لَهُ قَوْلًا لَيِّنًا لَعَلَّهُ يَتَذَكَّرُ أَوْ يَخْشَى

  நீங்கள் அவனுக்கு [ஃபிர்அவ்னுக்கு] நளினமாகவே எடுத்துக் கூறுங்கள். அவன் நல்லுணர்ச்சி பெறலாம்.அல்லது அவன் அச்சம் கொள்ளலாம். [அல்குர்ஆன் :20 ;44]

நளினமான நல்லுபதேசம், எல்லோரையும் நல்லுணர்ச்சி பெற வைக்கும். இறையச்சத்தையும் ஏற்படுத்தும்.ஃபிர்அவ்னை விட பெரிய வம்பனும் இல்லை.மூஸா நபியை விட பெரிய அழைப்பாளரும் இல்லை.அழைப்பு பணியில் ஈடுபடும் எவரும் மூஸா நபியை விட சிறந்தவரும் இல்லை. தஃவா பணியை எடுத்துச் செல்கிற மக்களில் ஃபிர்அவ்னை விட அநியாயக்கார அட்டூழியம் செய்பவனும் யாருமில்லை.எனவே யாரிடம் பேசினாலும் பொறுமையாக பசுமையாக பவ்வியமாக பேச வேண்டும்.

ஃபிர்அவ்ன் நம்பிக்கை கொள்ள மாட்டான் என்று அல்லாஹ்வுக்குத் தெரியும்.இருந்தும்,அவனிடம் எடுத்துச் சொல்வதாக இருந்தாலும் மென்மையான சொற்பிரயோகம்,நளினமான உபதேசங்கொண்டு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று அல்லாஹ் உத்தர விட்டிருக்கிறான்.எதையும் சொல்ற மாதிரி சொன்னால் யாரும் கேட்பார்கள்.விவேகமற்ற வேகமான பேச்சு கேட்கின்ற ஆளையும் கேட்க வைக்காது.திருந்த மாட்டான் என்று தெரிந்தாலும் அவனிடம் பேசும் போதும் நம்பிக்கையோடு பக்குவமாக பேச வேண்டும்.

திருந்தாத ஃபிர்அவ்ன் போன்றவர்களிடம் எடுத்துரைக்கும் போது,அவன் நல்லுணர்வு பெறலாம் அல்லது இறையச்சமுள்ளவனாக மாறலாம் என்ற எதிர்பார்ப்புடன் எத்தி வைக்க வேண்டும்.நம்முடைய நயமான பேச்சு ஒருவேளை அவனுக்கு உபயோகப்படாமல் போனாலும் உபதேசிக்கிற நமக்கு உபயோகமில்லாமல் போகாது. அல்லாஹ்விடத்தில் அதற்கான சிறந்த கூலி உண்டு.மட்டுமல்ல ஒரு இடத்தில் நாம் இதய சுத்தியுடன் மிகுந்த ஈடுபாட்டு உணர்வுடன் எடுத்துரைக்கும் உபதேசம் அங்கே பயன்பாடு இல்லாமல் போனாலும் அதனால் மற்ற இடங்களில் நாம் எதிர் பார்க்காத விதத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

إِنَّ الَّذِينَ كَفَرُوا سَوَاءٌ عَلَيْهِمْ أَأَنْذَرْتَهُمْ أَمْ لَمْ تُنْذِرْهُمْ لَا يُؤْمِنُونَ

நபியே! எவர்கள் [இவ்வேதத்தை மன முரண்டாக] நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்கு நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும் எச்சரிக்கை செய்யாதிருப்பதும் உண்மையில் அவர்களுக்கு சமமே,அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள் [அல்குர்ஆன் :2 ;6]  

இந்த வசனத்தில் ; எச்சரிக்கை செய்வதும் செய்யாமலிருப்பதும் அவர்களுக்கு சமம்என்று தான் அல்லாஹ் கூறுகிறானே தவிர உங்களுக்கு சமம்என்று கூற வில்லை என்பது ஆய்ந்துணரத்தக்கது.

தாயிஇடம் கவலை இருக்க வேண்டும்.

இஸ்லாமியப் பிரச்சாரம் செய்கிற போது அதை எடுத்துச் சொல்வோரிடத்தில் கவலை இருக்க வேண்டும்.மக்கள் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டுமே என்ற ஆசையும்,அக்கரையும்,ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்களே என்ற வேதனையும் இருக்க வேண்டும். எந்தளவுக்கு அழைப்பு பணியில் கவலை இருக்க வேண்டும் என்றால், நமது நாயகம் அவர்களுக்கு ஏற்றுக் கொள்ளாத அம்மக்களின் மீது எவ்வளவு கவலை இருந்ததோ அந்தளவு இருக்க வேண்டும்.

لَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ أَلَّا يَكُونُوا مُؤْمِنِينَ

 நபியே! அவர்கள் நம்பிக்கை கொள்ளாததின் காரணமாக துக்கத்தால் உங்களை நீங்களே மாய்த்துக் கொள்வீர்கள் போலும் [அப்படி ஏதும் செய்திட வேண்டாம்]. [அல்குர்ஆன் :26 ;3]

சத்திய இஸ்லாத்தை எடுத்துச் சொல்லியும் ஏற்க முன்வராத மக்களின் மீது நமக்கு இருக்க வேண்டிய அக்கரை, கவலையின் அளவுகோல் இந்த வசனத்தில் விவரிக்கப்படுகிறது.கவலை சாதாரண கவலை அன்று. துக்கம் எந்தளவு தூக்கலாக இருக்க வேண்டுமென்றால்,ஒரு கட்டத்தில் துக்கம் தாளாமல் நாம் இறந்து விடுவோமா என்று கூட நமக்கு எண்ணம் வர வேண்டும்.துக்கம் தாங்க முடியாதவன் கடைசியாக அவன் எடுக்கும் முடிவு தற்கொலை.அம்முடிவின் விளிம்பு வரை [விளிம்பு வரை தான்] நாம் சென்று விட வேண்டும். [அதைத்தாண்டி சென்று விடக்கூடாது] அந்தக் கடைசி முடிவின் அளவுக்கு அழைப்பு பணியோடு நாம் ஒன்றி விட வேண்டும்.எதார்த்தமான ஈடுபாடுடையவர்களாக நாம் ஆகி விட வேண்டும்.

(குறிப்பு உதவி : கண்ணியத்திற்குரிய S.S. அஹ்மது பாகவி ஹழ்ரத் அவர்கள்)

No comments:

Post a Comment