அல்லாஹுத்தஆலா நம் வாழ்க்கையின் சிறந்த வழிகாட்டியாக அண்ணல் நபி ஸல் அவர்களைத் தந்திருக்கிறான். வாழ்க்கையில் எந்த விஷயங்களாக இருந்தாலும் எந்த பிரச்சனைகளுக்குத் தீர்வாக இருந்தாலும் எந்த சந்தேகங்களுக்கு விடையாக இருந்தாலும் அதற்கு வழிகாட்டியும் முன்மாதிரியும் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் தான். அல்லாஹ் குர்ஆனில்
لقد كان لكم في رسول الله اسوة حسنة
அல்லாஹுடைய தூதரிடத்தில் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது
என்று கூறுகிறான்.
நபி ﷺ அவர்கள் வாழ்வில்
எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு இருக்கிறது. எல்லா சந்தேகங்களுக்கும் விடை இருக்கிறது.
எல்லா கேள்விகளுக்கும் பதில் இருக்கிறது.
உலகத்தில் எத்தனையோ தலைவர்கள் வந்தாலும் ஒப்பற்ற தலைவராக நபி
ஸல் அவர்கள் இருந்தார்கள். உலகத்தின் மற்ற தலைவர்களெல்லாம் ஏதாவது ஒரு துறையில் மட்டும்
தான் வெற்றியடைந்திருக்கிறார்கள். சில சமயங்களில் அதிலும் அவர்கள் தோற்றுப் போய்
விடுவார்கள். குடும்பத்தில் வெற்றி பெற்றால் சமுதாயத்தில் தோற்று விடுவார்கள். சமுதாயத்தில்
வெற்றி பெற்றால் குடும்பத்தில் தோற்று விடுவார்கள். பொது வாழ்வில் தூய்மையாக இருந்தால்
தன் தனிப்பட்ட வாழ்வில் தூய்மையாக இருக்க மாட்டார்கள். தன் தனிப்பட்ட வாழ்வில் தூய்மையாக
இருந்தால் பொதுவாழ்வில் தூய்மையாக இருக்க மாட்டார்கள்.
இன்றைக்கு மிகப்பெரிய தலைவர்களாக போற்றப்படுகின்ற எத்தனையோ பேர்
தன் குடும்பத்தில் தன் மனைவிக்கு நல்ல கணவனாக இருந்ததில்லை. தன் பிள்ளைகளுக்கு நல்ல
தகப்பனாக இருந்ததில்லை. தன் பெற்றோருக்கு நல்ல மகனாக இருந்ததில்லை. ஆனால் நபிகள் நாயகம்
ஸல் அவர்கள் குடும்பத்திலும் வெற்றி பெற்றார்கள். சமுதாயத்திலும் வெற்றி பெற்றார்கள்.
பொது வாழ்விலும் தூய்மையாக இருந்தார்கள். தன் தனிப்பட்ட வாழ்விலும் தூய்மையாக இருந்தார்கள்.
சமுதாயத்திற்கு நல்ல தலைவராக இருந்ததோடு மட்டுமல்லாமல் தன் மனைவிக்கு நல்ல கணவனாகவும்
தன் பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாகவும் தன் பெற்றோருக்கு நல்ல மகனாகவும் இருந்தார்கள்.
இன்றைக்குள்ள எத்தனையோ தலைவர்கள் வெளி உலகத்தில் மக்கள் அவர்களைக்
கொண்டாடுவார்கள், மதிப்பார்கள். ஆனால் வீட்டுக்குள் வந்தால் அவர்களின் மனைவி மதிக்க
மாட்டாள். அவர்லாம் ஒரு ஆளா என்று கேட்கிற அளவிற்குத் தான் அவர்களுடைய வாழ்க்கை இருந்திருக்கிறது.
ஆனால் ஸல் அவர்கள்
خيركم خيركم لاهله وانا خير لاهلي
தன் மனைவியிடத்தில் சிறந்தவரே உங்களில் சிறந்தவர். நான் என்
மனைவியிடத்தில் சிறந்தவனாக இருக்கிறேன் என்று கூறினார்கள்.
குடும்பத்தலைவர்களில் பெரும்பாலும் வீட்டில் உள்ளவர்களின் மனநிலையை
அறியாதவர்களாகத்தான் இருப்பார்கள். மனைவியின் நிலை அறியாத குடும்பத்தலைவர், பிள்ளைகளிடம் அன்பு
காட்டாத குடும்பத்தலைவர், நல்லொழுக்கங்களை கற்பிக்காத குடும்பத்தலைவர், இப்படித்தான் அதிகம்
இருப்பார்கள். ஆனால் நபிகளார் ஸல் அவர்கள் சரியான குடும்பத்தலைவராக இருந்திருக்கிறார்கள்.
தன்னுடைய மனைவிமார்கள் எப்போது எப்படி இருப்பார்கள் என்பதைக்கூட புரிந்து வைத்திருக்கிறார்கள்.
நபி ஸல் அவர்கள் தனது மனைவி ஆயிஷா ரழி அவர்களிடம், ஆயிஷாவே நீ எப்போது
கோபமாய் இருப்பாய் நீ எப்போது மகிழ்ச்சியாய் இருப்பாய் என்று எனக்குத் தெரியும் எனக்
கூறிய போது, ஆச்சரியமடைந்த ஆயிஷா ரலி அவர்கள் சொல்லுங்கள் நாயகமே என்றார்கள்.
என் மீது அன்புடன் இருக்கும் போது நீ பேசினால்
முஹம்மதின் ரப்பின் மீது சத்தியமாக எனக் கூறுவாய். என் மீது சற்று கோபமாக இருந்தால்
இப்ராஹீமின் ரப்பின் மீது சத்தியமாக எனக் கூறுவாய் என்று நபி ஸல் அவர்கள்
கூறினார்கள். அப்போது ஆயிஷா ரலி அவர்கள் ஆம் நாயகமே! நீங்கள் சொல்வது சரி தான்.
ஆனால் நான் கோபமாக இருக்கும் போது உங்களின் பெயரை மட்டும் தான் நான் விட்டு
விடுவேன். உங்கள் மீது அளவு கடந்த பிரியத்தில் தான் நான் இருக்கிறேன் என ஆயிஷா ரழி
அவர்கள் கூறினார்கள். மனைவியின் மனதைக் கூட புரிந்திருந்த காரணத்தினால் தான் நபி
ஸல் அவர்கள் ஒப்பற்ற குடும்பத் தலைவராக இருக்கிறார்கள்.
சமுதாயத் தலைவர்களில் பெரும்பாலும் சமுதாயத மக்களின் நிலைகளை
அறிவதில்லை. பதவிக்காக மக்களிடம் காலில் விழாத குறையாக கெஞ்சிக் கூத்தாடுவார்கள். ஆனால்
பதவிக்கு வந்த பிறகு அவர்களை கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் பிள்ளைகளின் முக பாவனைகளை
வைத்து ஒரு தாய் அவர்களின் நிலைகளை அறிவதைப் போல நபி ஸல் அவர்கள் தன் சமுதாய மக்களின் முகங்களைப் பார்த்தே அவர்களின் நிலைகளை
அறிந்து அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுப்பார்கள்.
ஒரு நாள் அபூஹுரைராரா ரழி அவர்களுக்கு கடும் பசி ஏற்பட்டு வீதியில்
விழுந்து விடுகிறார்கள். அப்போது அந்த
வழியாக வந்த அபூபக்கர் ரழி அவர்களிடம், தன்னை சாப்பாட்டுக்கு அழைத்துச் செல்ல மாட்டார்களா? என்ற எண்ணத்தில் ஒரு ஆயத்தின் விளக்கத்தை அபூஹுரைரா
ரழி அவர்கள் கேட்டார்கள். ஆனால் அபூபக்கர் ரழி அவர்கள் அதற்கான விளக்கத்தை மட்டும்
சொல்லி விட்டு சென்று விட்டார்கள். அதன் பின் உமர் ரழி அவர்கள் அந்த வழியாக வந்ததும்
அவர்களிடமும் அதே மாதிரி கேட்டார்கள். உமர் ரலி அவர்களும் அதற்கான விளக்கத்தை சொன்னார்களே
தவிர அபூஹுரைராவின் பசியை புரிந்து கொள்ள வில்லை. மூன்றாவதாக கருணை நபி ஸல் அவர்கள்
அந்த வழியாக வந்ததும், அவர்களின் முக பாவனையை வைத்து அபூஹுரைரா வாருங்கள் போகலாம் என
அவர்களை அழைத்து அவர்களுக்கு உணவு கொடுத்து அவர்களின் பசியைப் போக்கினார்கள்.
இவ்வாறு எல்லா நிலையிலும் நபி ஸல் அவர்கள் சிறந்த தலைவராக ஒப்பற்ற
தலைவராக நிகரற்ற தலைவராக இருந்திருக்கிறார்கள். அவர்களை நாமும் பின்பற்றுவோம். அவர்களை
நம்முடைய முழுமையான வழிகாட்டியாக எடுத்து செயல் படுவோம். அவர்களின் அன்பை பெறுவோம்.
அல்லாஹ் உதவி செய்வானாக.
No comments:
Post a Comment