அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் வல்லோன் அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.சாந்தியும் சமாதானமும் எங்கள் உயிரிலும் மேலான கண்மனி நாயகம் ரசூலுல்லாஹி ஸல் அவர்களின் மீதும் பரிசுத்தமான அவர்களின் குடும்பத்தார் மீது உன்னதமான அவர்களின் தோழர்கள் மீதும் உண்டாகட்டுமாக.
உலகத்தில் மனித சமூகத்தை
வழிநடத்துவதற்காக அல்லாஹ்வால் அருளப்பட்டது தான் அல்குர்ஆன் ஷரீஃப்.உலகத்தில்
எத்தனையோ புத்தகங்கள் இருக்கிறது. எத்தனையோ புத்தகங்களை நாம் பார்த்திருக் கிறோம்,
படித்திருக்கிறோம்,கேள்விப்பட்டிருக்கிறோம்.ஆனால்
அண்ணலம் பெருமானார் நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு அல்லாஹ் அருளிய அல்குர்ஆனுக்கு
இருக்கும் சிறப்பு மகிமை வேறு எந்த புத்தகத்திற்கும் கிடையாது.
அல்குர்ஆனுக்கு அல்லாஹ் வழங்கிய மிகப்பெரும் கண்ணியம்
என்னவென்றால் அந்த குர்ஆனோடு தொடர்பு கொள்கிற அனைத்தும் உயர்வைப் பெரும்.எப்படின்னு
கேக்குறீங்களா ? அல்குர்ஆன் இறங்கிய மாதம் என்பதால் ரமழான் சிறந்த மாதமானது,
அல்குர்ஆன்
இறங்கிய இரவு என்பதால் லைலத்துல் கத்ர் சிறந்த இரவானது, அல்குர்ஆனைக்-
கொண்டு மலக் என்பதால் ஜிப்ரயீல் [அலை] அவர்கள் சிறந்த மலக்கானார்கள், அல்குர்ஆன்
இறங்கிய ஊர் என்பதால் மக்கா சிறந்த ஊரானது, அல்குர்ஆன் இறங்கிய மொழி என்பதால் அரபி
சிறந்த மொழியானது, அல்குர்ஆன் இறக்கப்பட்ட உம்மத் என்பதால் நாம் சிறந்த
உம்மத்தானோம்.அல்குர்ஆனுக்கு அல்லாஹ் கொடுத்த மாபெரும் சிறப்பு இது தான்.
மட்டுமல்ல அல்லாஹ் நபிமார்களுக்கு கொடுத்த முஃஜிஸாக்களில்
மாபெரும் முஃஜிஸாவாக, நபிமார்களுக்கு வழங்கிய அற்பதங்களில் பேரற்புதமாக
அல்குர்ஆன் இருந்து கொண்டிருக்கிறது.
அன்றைக்கு மக்கத்து காஃபிர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம்
"நீங்கள் உண்மையில் நபியாக இருந்தால் இதற்கு முன்னால் இருந்த நபிமார்கள்
காட்டிய அற்புதங்களைப் போன்று நீங்களும் எங்களுக்கு அற்புதங்களைக்
காட்டுங்கள்" என்று இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அல்லாஹ்
சொன்ன பதில் என்ன தெரியுமா
أوَلَمْ يَكْفِهِمْ
أَنَّا أَنزَلْنَا عَلَيْكَ الْكِتَابَ يُتْلَىٰ عَلَيْهِمْ
அவர்களிடத்தில் ஓதிக் காட்டப்படுகின்ற ஒரு வேதத்தை நாம்
உங்களுக்கு இறக்கியிருப்பது அவர்களக்கு போதாதா ? என்று கேட்கிறான். குர்ஆன் தான்
மிகப்பெரும் அற்புதம் அதை விட வேறென்ன அற்புதத்தை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்
என்று அல்லாஹ் கேட்கிறான். எனவே உலகத்தில் இதுவரை வந்த அனைத்து அற்புதங்களை விட
மிகப்பெரிய அற்புதம் அல்குர்ஆன் தான் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அல்லாஹுத்தஆலா மூஸா நபிக்கு பிரம்பை பாம்பாக மாற்றும்
ஆற்றலைக் கொடுத்தான்.ஈஸா நபிக்கு வெண்குஷ்டம், கருங்குஷ்டத்தை சுகமாக்கும் ஆற்றலைக்
கொடுத்தான்.அவைகள் அவர்களின் காலத்தோடு முடிந்து விட்டது. இப்படியே ஒவ்வொரு
நபிமார்களுக்கும் அல்லாஹ் கொடுத்த அற்புதங்கள் அந்தந்த காலத்தோடு முடிந்து
விட்டது.ஆனால் அண்ணல் நபி ஸல் அவர்களுக்கு அல்குர்ஆனை அற்புதமாக கொடுத்தான். அது
இன்று வரை,இல்லை இல்லை இனி கியாமத் வரை அழியா அற்புதமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
மட்டுமல்ல உலகத்தில் வேறெந்த வேத நூட்களோ புத்தகங்களோ
ஏற்படுத்தாத ஏற்படுத்த முடியாத மாபெரும் புரட்சியை சமூக மாற்றத்தை அல்குர்ஆன்
ஷரீப் அகிலத்தில் ஏற்படுத்தியது. மனித சமூகத்தில் மிக மோசமானவர்களை நல்லவர்களாக
மாற்றியது அல்குர்ஆன் தான்.
உலக வரலாற்றில் எத்தனையோ கரடுமுரடான உள்ளம் கொண்டவர்களையும்
கல்நெஞ்சம் கொண்டவர்களையும் தன் வசீகர வார்த்தையால் ஈர்த்து அவர்களை தன் வழிக்கு
கொண்டு வந்த பெருமை குர்ஆனுக்கு மட்டுமே உண்டு.அதற்கு மிகச்சிறந்த உதாரணம் ஹள்ரத்
உமர் ரலி அவர்கள்.இறைவசனங்களைக் கேட்டதினால் அவர்கள் இஸ்லாத்திற்குள் நுழைந்தார்கள்.
அதுமட்டுமல்ல சகோதரர்களே யாரோடு எந்தப் பொருளோடு சேருகிறதோ
அவரையும் அந்தப் பொருளையும் உயர்வுபடுத்துகிற மாபெரும் அற்புதத்தை குர்ஆனுக்கு
அல்லாஹ் வழங்கியிருக்கிறான். தன்னை சுமந்தவர்களை, தன்னை கண்ணியப்படுத்தியவர்களை, தன்னை அழகு
படுத்தியவர்களை, தன்னை அலங்காரப்படுத்தியவர்களை, தன்னை மக்கள்
மன்றத்திற்கு கொண்டு போய் சேர்த்தவர்களை இம்மையிலும் மறுமையிலும் உயர்ந்த
இடத்திற்கு கொண்டு செல்லும் ஒரு அற்புத வேதம் அல்குர்ஆன் ஷரீஃப்.
பேரற்புதமாக அல்குர்ஆன் ஷரீஃபை நாம் ஓதுவதற்கும், அதோடு நம் தொடர்பை
அதிகப்படுத்திக் கொள்வதற்கும்,அதன் படி அமல் செய்வதற்கும் அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்
புரிவானாக ஆமீன்.
No comments:
Post a Comment