Sunday, October 24, 2021

ஹதீஸ் எண் 51 ستكون بعدي اثرة

 

عن ابن مسعود  أن رسول الله قال: إنها ستكون بعدي أثَرة وأمور تنكرونها، قالوا: يا رسول الله، فما تأمرنا؟، قال: تؤدون الحق الذي عليكم، وتسألون الله الذي لكم[1] متفق عليه.

எனக்கு பின் உரிமை பறித்தலும் நீங்கள் வெறுக்கும் காரியங்களும் உருவாகும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். இறைத்தூதர் அவர்களே எங்களுக்கு இது விஷயமாக நீங்கள் இடும் கட்டளை என்ன என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். உங்கள் மீதுள்ள கடமைகளை நிறைவேற்றுங்கள். உங்களுக்குத் தேவையானதை அல்லாஹ்விடம் கேளுங்கள் என்றார்கள். (புகாரி ; 7052)

நபி ஸல் அவர்கள் மறைவான விஷயத்தையும் அறிவார்கள், இறைவனுடைய உத்தரவைக் கொண்டு அதை அறிவிப்பார்கள் என்பதற்கு இந்த  ஹதீஸை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியும். தனக்குப் பின்னால் வரக்கூடிய காலத்தில் பிறருடைய உரிமைகளை பறித்து சுயநலமாக வாழக்கூடிய ஒரு நிலை வரும் என்று எச்சரித்தார்கள். அதை நாம் இன்றைக்கு கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم.

நபி ஸல் அவர்கள் காலங்களில் சிறந்தது என்னுடைய காலம். அதற்கு பிறகு என்னை அடுத்து வரக்கூடிய காலம். அதற்கு பிறகு அவர்களை அடுத்து வரக்கூடிய காலம் என்றார்கள்.

சஹாபாக்களின் காலம் மிகவும் பொற்காலமாக இருந்தது. அவர்கள் மிகச் சிறந்தவர்களாக உத்தமர்களாக தனக்கு கிடைக்கா விட்டாலும் பிறருக்கு கிடைக்க வேண்டும் என்று பொதுநல சிந்தனை உள்ளவர்களாக இருந்தார்கள் என்பதை அவர்களது வரலாறு நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

انطلق حذيفة العدوي في معركة اليرموك يبحث عن ابن عم له، ومعه شَرْبة ماء، وبعد أن وجده جريحًا، قال له: أَسقيك؟ فأشار إليه بالموافَقة، وقبل أن يَسقيه سمِعَا رجلاً يقول: آه، فأشار ابن عم حذيفة إليه؛ ليذهب بشربة الماء إلى الرجل الذي يتألَّم، فذهب إليه حذيفة، فوجده هشام بن العاص

யர்மூக் போர்க்களத்தின் போது ஹுதைஃபா ரலி அவர்கள் தன் கையில் தண்ணீர் பையை வைத்துக் கொண்டு தன்னுடைய சிறிய தந்தையின் மகனைத் தேடிக் கொண்டு சென்றார்கள். அங்கு அவர் கடுமையாக காயமடைந்து குற்றுயிரும் குலையுயிருமாக கிடப்பதைப் பார்த்தார்கள். அவருக்கு தண்ணீர் தரலாம் என்று அவருக்கு அருகில் சென்ற பொழுது, இன்னொருவர் தண்ணீர் தாகத்தால் சத்தம் இடுவதை கேட்டு நீங்கள் அவருக்கு தண்ணீர் கொடுங்கள் என்று சுட்டிக்காட்டினார். நான் அவருக்கு தண்ணீர் தரலாம் என்று சென்ற பொழுது அவர் இன்னொருவரை சுட்டிக்காட்டி அவருக்கு தண்ணீர் கொடுக்குமாறு சொன்னார். அவருக்கு தண்ணீர் தரலாம் என்று சென்று பார்த்த பொழுது அவர் இறந்து போயிருந்தார். இரண்டாவது நபருருக்காவது தண்ணீரைக் கொடுக்கலாம் என்று பார்த்தால் அவரும் இறந்து போய் விட்டார். இறுதியாக என் சிறிய தந்தையின் மகனைப் பார்த்த பொழுது அவருடைய ரூஹும் பிரிந்து விட்டது.

பொதுவாக மரண வேளையில் எதையாவது செய்து தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று முயற்சிக்கின்றவர்களுக்கு மத்தியில் நபித்தோழர்கள் தன் உயிர் போனாலும் பரவாயில்லை பிறர் உயிர் காக்கப்பட வேண்டுமென்று விரும்பிய அந்த பொதுநலம் மிகவும் உயர்ந்தது. ஆனால் இன்றைக்கு நம்முடைய காலத்தில் நான் வாழ வேண்டும், நான் பிழைக்க வேண்டும், அதனால் யார் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை என்று சுயநல சிந்தனையோடு இருப்பவர்களைத் தான் நாம் பார்க்கிறோம். எனவே நபியின் காலத்திற்குப் பிறகு சுயநலம் பெருகி விட்டது.

 

அதேபோன்று எனக்குப் பின்னால் நீங்கள் வெறுக்கின்ற காரியங்களைப் பார்ப்பீர்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். நபியவர்களின் காலத்திற்குப் பிறகு அவ்வாறு நிறைய காரியங்கள் நடக்க ஆரம்பித்து விட்டது. குறிப்பாக தொழுகையை அந்தந்த நேரங்களில் தொழாமல் பிற்படுத்தக் கூடிய நிலை நபியின் காலத்திற்குப் பிறகு சர்வ சாதாரணமாக நடக்க ஆரம்பித்து விட்டது. குறிப்பாக பனு உமையா ஆட்சி காலத்தில் ஜூம்ஆ தொழுகையை அஸர் நேரம் வரைக்கும் பிற்படுத்துபவர்களாகவும் அஸர் தொழுகையை மஃரிப் நேரம் வரைக்கும் பிற்படுத்தக் கூடியவர்களாகவும் இருந்தார்கள் என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. இவ்வாறு நபியின் காலத்திற்குப் பிறகு எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்து விட்டது.

நபியுடைய காலத்திற்குப் பிறகு வாழ்ந்த சில ஸஹாபாக்கள் அந்த கால மாற்றத்தைக் குறித்து நமக்கு விவரிக்கிறார்கள். குறிப்பாக அனஸ் ரலி போன்ற சஹாபாக்கள் சொல்கிறார்கள் ;

 

 

وجاء عن عدد من أصحاب النبي كأنس  وجماعة أنهم قالوا: لو بُعث رسول الله لم يعرف شيئاً مما كان عليه إلا أنكم تسوون صفوفكم في الصلاة.

ஒருவேளை அல்லாஹ்வின் தூதர் நபி ஸல் அவர்கள் மீண்டும் நம்மிடத்திலே வந்தால் தொழுகையில் அணிவகுத்து நிற்கின்ற அந்த காரியத்தை தவிர அவர்கள் காலத்தில் இருந்த வேறு எந்த நல்ல காரியத்தையும் அவர்கள் அறிந்து கொள்ள மாட்டார்கள். அந்த அளவிற்கு காலம் ரொம்ப மாறிப் போய் விட்டது என்று குறிப்பிடுகிறார்கள்.

No comments:

Post a Comment