உலகில் கொடுப்பவன், வாங்குபவன் என மனிதனை இருவகையாகப்
பிரிக்கலாம். இதில் வாங்குபவனை விட கொடுப்பவனே சிறந்தவன். பிறருக்கு உதவி புரிபவனே
சிறந்த மனிதன், சுவனம் செல்லத்தகுதி யானவன் என்பது இஸ்லாத்தின் பார்வை.கொடுக்கும்
உயர்ந்த கரம்,வாங்கும் தாழ்ந்த கரத்தை விட உயர்வானது என்பது அண்ணல் நபி {ஸல்} அவர்கள் உலகிற்குக் கூறிய அழகு வார்த்தை.
நபித்தோழர்கள்
குழுமி இருக்கும் சபை ஒன்றில், இன்று உங்களில் இறுதிச்
சடங்கில் கலந்து கொண்டவர் யாரும் இருக்கின்றீர்களா? என்ற நபி {ஸல்} அவர்களின் கேள்விக்கு அபூபக்கர் சித்தீக் {ரலி} என்ற தோழரிடமிருந்து ஆம்,இன்று
நான் ஒரு இறுதிச் சடங்கில் கலந்து கொண்டுள்ளேன் என்று பதில் வருகிறது. இன்று
உங்களில் நோன்பு வைத்தவர் யாரும் இருக்கின்றீர்களா? என்ற நபிகளாரின் இரண்டாவது கேள்விக்கும் அபூபக்கர் சித்தீக்
{ரலி} அவர்கள் ஆம்
என்றுரைத்தார்கள். இன்று உங்களில் பசித்தவருக்கு உணவளித்தவர் யாரும்
இருக்கின்றீர் களா? என்ற நபியின் அடுத்த கேள்விக்கும் அதே நபித்தோழரிடமிருந்து ஆம்
என்றே பதில் வந்தது.
அப்போது, இம்மூன்று
செயல்களும் யாரிடம் ஒன்றிணைந்து விட்டதோ அவர் சுவனம் புகுவார் என்று
வாக்களித்தார்கள் உத்தம தூதர் முஹம்மது நபி {ஸல்} அவர்கள்.
உலகில் நான்
யாருக்கும் கொடுக்க மாட்டேன்,நான் யாருக்கும் உதவ மாட்டேன் என்று சொல்பவன்
உண்மையில் அவன் மனிதன் அல்ல, பிணத்தைப் போன்றவன். யாருக்கும் உதவ முடியாத,
எல்லோருடைய உதவியையும் எதிர் பார்ப்பது பிணம் தானே.
எனவே நம்மால்
முடிந்தளவு பொருளால்,கல்வியால்,உணவால் பிறருக்கு உதவி செய்யும் உயர்ந்த குணத்தை
நாம் நமதாக்கிக் கொள்ள வேண்டும்.
அகிலத்தில்
அல்லாஹ்வால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து சிருஷ்டி களும் எதாவது வகையில் பிறருக்கு
உதவி புரியும் நிலையில் இருப்பதை நாம் பூமியில் காணும் காட்சிகள் நமக்கு
உணர்த்துகிறது.
தனக்கு ஏற்படும்
காயங்களைக் கூட பாராமல் தன் எஜமானனை பாதுகாப்பாக பல மைல் தூரம் சுமந்து செல்லும்
குதிரை,
நாம் போடுகின்ற
ஒரு சில பிஸ்கட்களுக்காக காலம் முழுக்க நன்றி விசுவாசத்தை வெளிப்படுத்தும் நாய்,
எதுவும் தரா
விட்டாலும் கிடைக்கிற காகிதத்தை திண்று கொண்டு நம் பொதிகளை சுமக்கும் கழுதை,
தன் மேல்
சிறுநீர் கழிப்பவனுக்கும் இளநீரைப் பரிசாக வழங்கும் தென்னை மரம்,
தன் மேல் கல்
எறிபவனுக்கும் சுவையான பழங்களை தந்துதவம் மாமரம்,
கடலின் உப்பு
நீரை உள்வாங்கிக் கொண்டு நமக்காக மதுரமான நீரை வாரி வழங்கும் மேகம்
இதுவெல்லாம்,
பிறருக்கு எப்படி உதவ வேண்டும் என்பதை நமக்குப் பயிற்றுவிக்கும் சிறந்த
ஆசிரியர்களாகத் திகழ்கிறது.
இஸ்லாத்தில்
சிறந்த காரியம் எது? என்ற நபித்தோழர் ஒருவரின்
வினாவிற்கு இஸ்லாத்தில் போற்றத்தகுந்த பல்வேறு செயல்கள் இருக்க, பசித்தவருக்கு
உணவளித்து அவருக்கு உதவுவதே இஸ்லாத்தில்
சிறந்த காரியம் என்ற முஹம்மது நபி {ஸல்} அவர்களின் பதில் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.
அந்த உயர்ந்த
பண்பைப் பெற்றுத் திகழ அல்லாஹ் நம் எல்லோருக்கும் அருள் புரிவானாக ஆமீன்.
No comments:
Post a Comment