Friday, August 29, 2014

சந்தேகம்



அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்} அன்பு நேயர்களே! மனித வாழ்வின் அனைத்துக் கோணங்களிலும் தூரநோக்கு சிந்தனையுடன் தன் கருத்துக்களைப் பதிவு செய்த இஸ்லாம்,குடும்ப வாழ்வு பிணங்காமல், சீர்குலையாமல் மகிழ்ச்சிகரமாக அமைவதற்கும் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.


உறவுகளும்,நட்புகளும் விரிசலின்றி நீடிப்பது ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுவதில் தான் அடங்கியிருக்கிறது. உறவுகளிலும், நட்புகளிலும் மனம் விட்டுப் பேசுவது நின்று போனால் தேவை யில்லாத அனுமானங்களும்,சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பிடித்துக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடும். பின்பு அந்த உறவுகளிலும்,நட்புகளிலும் விரிசல் ஏற்படுவது தடுக்க முடியாத ஒன்றாக மாறிவிடும்.

ஒரு குடும்பத்தில் சந்தேகம் முன்வாசல் வழியாக வந்தால் சந்தோஷம் பின் வாசல் வழியாக போய்விடும் என்று கூறுவார்கள். இன்று பெரும் பாலான தம்பதிகளிடம் நிலவுவது சந்தேகம் என்ற இந்த மனநோய் தான். இந்த மனநோய் வந்து விட்டால் தம்பதிகள் தங்களுக்கு மத்தியில் பரஸ்பர அன்பு,புரிந்துணர்வை இழந்து மிகப்பெரும் விளைவை சந்திக்க வேண்டியது வரும்.

ஒரு இராணுவ வீரன் திருமணமான மூன்றாவது மாதத்தில் மனைவி கர்ப்பினியாக இருக்கும் நிலையில் அவளைப் பிரிந்து பணிக்குச் சென்று விடுகிறான். மூன்று வருடங்கள் கழிந்து ஊர் திரும்பிய கணவனை மகிழ்ச்சி படுத்த அவனுக்குப் பிடித்தமான உணவுகளை தயாரிப்பதில் மனைவி ஈடுபட்டிருந்தாள்.அந்நேரத்தில் உன் தந்தை வந்திருக்கிறேன்,இங்கே வா என, கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனை அந்த இராணுவ வீரன் தன் பக்கம் அழைத்தான்.

அதைக்கேட்ட அச்சிறுவன்,நீங்கள் ஒன்றும் என் தந்தை இல்லை எனக்கூறினான்.அப்படியானால் உன் தந்தை யார்? என்று கேட்ட போது, என் அம்மா நிற்கும்போது உடன் நிற்பார்,என் அம்மா உட்காரும் போது உடன் உட்காருவார். அவர் தான் என் தந்தை என்று அச்சிறுவன் அப்பாவித்தனமாக கூறியதைக் கேட்டு அதிர்ச்சி யடைந்தான் இராணுவ வீரன்.

மனைவியின் நடத்தையின் மீது சந்தேகம் கொண்டான். எனவே அவள் சமைத்ததை உண்ண வில்லை,அவளுடன் பேச வில்லை. அவளின் மீது தன் வெறுப்பை வெளிப்படுத்தினான்.இதே நிலை மூன்று நாட்கள் தொடர மன முடைந்து போன அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டாள். மனைவி இறந்த அன்று அவன் தன் மகனுக்கு அருகில் படுத்திருந்த போது அவனுடைய நிழலைப் பார்த்து அச்சிறுவன் இதோ இவர் தான் என் தந்தை என்று கூறினான்.

தந்தை இல்லாத வருத்தம் மகனை பாதிக்காமல் இருக்க தன் நிழலைக் காட்டி இது தான் உன் தந்தை என்று மனைவி, அச் சிறுவனிடம் சொல்லியிருந்தது அப்போது தான் அவனுக்கு புரிந்தது.

சிறு சந்தேகம் வந்தவுடன் மனைவியிடம் அதுகுறித்து அவன் வினவியிருக்கலாம்.அல்லது திடீரென தன்னைப் பார்த்து முகம் சுழிக்கிற கணவனிடம் அதைப்பற்றி மனைவி கேட்டிருக்கலாம். ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசாமல் வெறும் யூகங்களை மட்டும் நம்பி சந்தேகம் கொள்வதினால் ஏற்படும் விளைவு என்ன என்பதை இந்நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.

ஆதாரமில்லாமல் பிறரை சந்தேகப்படுவது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன் என்ற ஏந்தல் நபி {ஸல்} அவர்களின் வார்த்தையின் ஆழம் இப்போது நமக்குப் புரிகிறதல்லவா!

வல்ல இறைவன் நம் உறவுகளில் சந்தேகத்தை நீக்கி, புரிந்துணர்வை ஏற்படுத்தி, சுபிட்சத்தை நிலைபடுத்துவானாக!

           

No comments:

Post a Comment