Thursday, October 1, 2015

நல்லதையே எண்ணுவோம்



மலேசிய மின்னல் FM வானொலியில் பேசிய உரை
பேசுவதற்கு நாவையும், நினைப்பதற்கு உள்ளத்தையும்,வணங்குவதற்கு உடலையும் தந்த எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே புகழனைத்தும் உரித்தாகுக! சங்கடங்களை சகித்து தங்கடங்களை தகர்த்து இனிய இஸ்லாத்தை சம்பூரணமாக்கிய சர்தார் நபி {ஸல்} அவர்களின் மீதும் அவர்களின் உன்னத வழியை பின்பற்றி வாழ்ந்த உன்னதத்தோழர்கள் மீதும், வாஞ்சை மிக்க இறைநேசர்கள் மீதும், இந்த உரையை செவி மடுத்துக் கொண்டிருக்கும் நம் அனைவர் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும்,கருணையும் என்றென்றும் குறைவின்றி நிறைவாக நிலவட்டு மாக என்ற உயர்ந்த வாழ்த்துக்களுடன் என் வார்த்தைகளைத் தொடங்குகிறேன்.அன்புமிக்க மின்னல் FM நேயர்களே! மறை வசனமும் இறைத் தூதரும் என்ற சிறப்புமிகு இந்நிகழ்ச்சியின் வழியே மீண்டும் உங்களை சந்திப்பதில் ஆனந்தம் அடைகிறேன்.


அன்பானவர்களே எண்ணங்களுக்கேற்பவே ஒருவரது செயல்கள் அமைகிறது. நம் மனதில் தோன்றும் எண்ணம் தான் நல்ல காரியங் களையும், தீய செயல்களையும் செய்வதற்கு தூண்டுதலாக அமைகிறது. ஒரு நீர் தேக்கத்தில் ஒரு கல்லைப் போட்டால் கல் விழும் இடத்தில் அலைகள் தோன்றி, அப்படியே பரவி கரை வரை பெரிதாகி பின் மறைந்து விடும். அதைப்போல நம் எண்ணத்தில் கல் போல் விழும் தீய சிந்தனைகள், அலை போல உடல் முழுதும் பரவுகிறது. அந்த எண்ணம் கண்களை அடையும்போது அந்தக் கண்கள் தீயவற்றை பார்க்கிறது. கைகளை அடையும்போது அந்தக் கைகள் தீய செயல்களை செய்கிறது. கால்களை அடையும்போது அந்தக் கால்கள் செல்லக் கூடாத இடங்களுக்கு செல்கிறது. அதுவே நல்ல எண்ணமாக இருந்தால் நம் செயல்களும் நல்லதாகவே அமைந்து விடும். ஆகவே, மனதில் நற்சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த கருத்தைத்தான் கருத்துக் கருவூலம் மாநபி ஸல் அவர்கள், 
إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ
காரியங்கள் அனைத்தும் எண்ணங்களைக் கொண்டே அமைகிறது என்ற அரை வரியில் நமக்கு அன்றைக்கே விளக்கி விட்டார்கள்.
ஹதீஸ் கலை நிபுணரான இமாம் புகாரி (ரஹ்) அவர்கள், தாங்கள் எழுதிய உலகத்திருமறை அல்குர்ஆனுக்கு அடுத்த அந்தஸ்தில் இருக்கிற புகாரி என்ற நபிமொழி கிரந்தத்தின் முதல் நபிமொழியாக எண்ணத்தைப் பற்றி பேசும் இந்த நபிமொழியைத்தான் பதிவிட்டிருக்கிறார்கள்.

ஆக அத்தனை காரியங்களுக்கும் அடிப்படை நமது எண்ணங்கள் தான். மனிதர்களுக்கு மத்தியில் ஒருவரை ஒருவர் வெறுப்பதற்கும், இதமான உறவுகள்  இல்லாமல் போவதற்கும், அவர்களுக்கு மத்தியில் தவறான புரிதல்கள் உருவாகுவதற்கும் காரணமாக இருப்பது தேவையற்ற சந்தேகங்களும், தவறான எண்ணங்களும் தான்.

நம்முடைய மனதில் சுமந்து கொண்டிருக்கும் அடுத்தவர்களைப் பற்றிய அந்த தீய எண்ணங்கள் தான் குரோதமாக மாறி, அந்த தவரான எண்ணத்தை அவதூராக பரப்பும் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தி விடும். ஆகவே தேவையற்ற எண்ணங்களையும், அதன் மூலம் உருவெடுக்கும் அவதூறு பரப்புதலையும் கண்டிப்பாக தவிர்ந்து கொள்ள வேண்டும். 

ஷைத்தான் மனிதனை பாவத்தின் பக்கம் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்குக் கையாலும் மிக எளிய வழிமுறைகளில் ஒன்று தீய எண்ணங்களை உருவாக்குவது தான்.

அல்லாஹுத்தஆலா தன் அருள்மறை வேதம் அல்குர்ஆன் ஷரீபில் கூறுகிறான்
يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَحِيمٌ

நம்பிக்கை கொண்டோரே! சந்தேகமான பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! நிச்சயமாக எண்ணங்களில் சிலது பாவமாகும்.  என்று (49:12) ல் குறிப்பிடுகிறான்.

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறுவார்கள்.
عَنْ أَبِي هُرَيْرَةَ

عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِيَّاكُمْ وَالظَّنَّ فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الْحَدِيثِ وَلَا تَحَسَّسُوا وَلَا تَجَسَّسُوا وَلَا تَحَاسَدُوا وَلَا تَدَابَرُوا وَلَا تَبَاغَضُوا وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا
பிறர் மீது கெட்ட எண்ணம் கொள்வது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் கெட்ட எண்ணம் தான் பேச்சுக்களிலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்றவர்களின் குறைகளை) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள். ஒருவரை யொருவர் பொறாமை கொள்ளாதீர்கள்.ஒருவரையொருவர் வெறுத்துக் கொள்ளாதீர்கள். ஒருவரையொருவர் பகைத்துக் கொள்ளாதீர்கள். அனைவரும் சகோதரர்களாய் இருங்கள்என்று மாநபி ஸல் அவர்கள் குறிப்பிடும் செய்தி  புகாரி 5143. ல் இடம் பெற்றிருக்கிறது. 

பிறர் மீது கெட்ட எண்ணம் கொள்வது குறித்து எச்சரிக்கை விடுத்து விட்டு அதைப் பற்றி விளக்குகிறார்கள் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள். பேச்சுக்களில் மிகவும் பொய்யான பேச்சு கெட்ட எண்ணத்தில் உருவாகும் பேச்சுதான் என்று உணர்த்துகிறார்கள்.

கெட்ட எண்ணத்தில் ஆதாரம் இல்லாமல் நாம் பேசும் போது நிறைய பொய்களை சேர்த்து பேச வேண்டிய நிலை உருவாகிவிடுகின்றது. அவர்களைப் பற்றி தேவையில்லாமல் துருவித் துருவி ஆராய வேண்டிய நிலையையும் உருவாக்கி விடுகின்றோம். 

அதனால் தான் துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள் அடுத்தவர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள் நண்பர்களாக இருந்து கொள்ளுங்கள் என்று அழகிய முறையில் உபதேசம் செய்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள். 

இந்த நபிமொழியில் நபி ஸல் அவர்கள் கையாண்ட கருத்தாடலை நாம் கவனிக்க வேண்டும். பிறர் மீது கெட்ட எண்ணம் கொள்ளாதீர்கள். அவ்வாறு கெட்ட எண்ணம் கொண்டால் பொய் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும். பொய் சொல்ல வேண்டுமென்றால் துறுவித் துறுவி ஆராய வேண்டும். துறுதித்துறுவி ஆராய வேண்டுமெனில் அவர் பேசுவதை ஒட்டுக் கேட்க வேண்டியது வரும்.அவ்வாறு ஒட்டுக் கேட்டால் பொறாமை ஏற்படும். அதன் பிறகு அவர் மீது வெறுப்பு ஏற்படும்.இறுதியில் அவரிடத்தில் பகைமை ஏற்படும் என்று எண்ணத்தின் காரணமாக ஒன்றன் பின் ஒன்றாக சங்கிலித்தொடர் போல் நிகழும் மனித மாற்றங்களை அண்ணல் நபி ஸல் அவர்கள் அழகாக,முறையாக நமக்கு படம் பிடித்துக் காட்டி விட்டார்கள்.

كَفَى بِالْمَرْءِ كَذِبًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ

ஒருவர், தான் கேள்விப்பட்டதை எல்லாம் (பிறருக்கு) சொல்வதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும் என்பது நாயகத்தின் வாக்கு.  நூல்: முஸ்லிம் 6. 

நமக்கு வரும் செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் அடுத்தவர்களிடம் சொலவதோ அல்லது பரப்புவதோ கூடாது.அந்த செய்தி உண்மையா ? இல்லை பொய்யா ? யதார்தத்திற்கு உட்பட்டதா ? அல்லது யதார்தத்திற்கு அப்பாற்பட்டதா ? என்பதையெல்லாம் உறுதி செய்து அது உண்மையாக இருந்தால் மட்டும் தான் தேவைப்பட்டால் அதை சொல்ல வேண்டிய நபர்களுக்கு சொல்ல வேண்டிய விதத்தில் சொல்ல வேண்டும்.இல்லை யென்றால் அதை விட்டு விட வேண்டும்.

குறிப்பாக FACEBOOK,WHATSAPP,TWITTER போன்ற செய்திகளை பரிமாறிக் கொள்ளும் தொழில் நுட்பங்களை பாவிக்கக் கூடியவர்கள் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.ஏனென்றால் இதுமாதிரியான தளங்களில் அதிகம் பரிமாறப்படுவது யூகங்களும் தவறான செய்திகளும் தான்.எனவே அதில் உலா வரும் தகவல்களை பரிமாற நினைப்பவர்கள் மேல்கூறிய நபி மொழியை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்த வரையில் உறுப்புக்களின் காரியங் களுக்கு மட்டுமல்ல உள்ளத்தின் பிரதிபலிப்புகளுக்கும்  முன்னுரிமை உண்டு.கேள்வி கணக்கும் உண்டு.

وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا
எதைப்பற்றி உமக்கு தீர்க்க ஞானமில்லையோ அதை செய்யத் தொட வேண்டாம்.நிச்சயாக மறுமையில் செவிப்புலன்,பார்வை,இதயம் இவை ஒவ்வொன்றும் அதனதன் செயல் பற்றி கேள்வி கணக்கு கேட்கப்படும் என அத்தியாயம் 17 வசனம் 36 ல் அல்லாஹுத்தஆலா குறிப்பிடுகிறான்.

இமாம் சமக்ஷரி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
எண்ணங்கள் பலவகை உண்டு : அதில் சில எண்ணம் ஆபத்தானதும் தடுக்கப்பட்டதுமாதும்.

அதில் ஒன்று படைத்தவனாம் அல்லாஹ்வைப்பற்றி தீய எண்ணம் கொள்வது.

 وھو أن یسيء المرء الظن برب العالمین، فیتزوج ویقول: أظن أن لله لن یوفقني! یبدأ في تجارتھ ویقول: أظن أن لله

سیصبیني بخسارة! یأتي الموت ویقول: أظن أن لله سیعذبني
அல்லாஹ் எனக்கு எந்த நலவையும் செய்ய மாட்டோன்,அல்லாஹ் என் வியாபாரத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்த மாட்டான்,நான் இறந்த பிறகு எனக்கு சுவனத்தை தர மாட்டான் என்று அல்லாஹ்வைக் குறித்து தீய எண்ணம் கொள்வது.இதுமாதிரியான எண்ணங்களை இஸ்லாம் தடை செய்கிறது.நாம் பாவமே செய்திருந்தாலும் அல்லாஹ்வை குறித்து தவறான எண்ணம் கொள்ளக்கூடாது.

படைத்தவனைப்பற்றி தீய எண்ணம் கொள்வது இணைவைப்போர்,மற்றும் நயவஞ்சகர்களின் பண்பு என திருக்குர்ஆன் எச்சரிக்கை செய்கிறது.

என்று வரும் 48 ; 6 வசனத்தில் இணைவைப்பாளர்களையும் நயவஞ்சகர் களையும் அடையாளப்படுத்தும் அல்லாஹ், தன்னைப்பற்றி தீய எண்ணம் கொள்வதை அவர்களது குணமாக சித்தரிக்கிறான். 

நபி (ஸல்) கூறுகிறார்கள்.

"لا یموتن أحدكم إلا وھو یحسن الظن بربه
ஒருவன் அல்லாஹ்வைக்குறித்து நல்லெண்ணம் கொண்ட நிலையி லேயே தவிர மரணிக்க வேண்டாம் என்று குறிப்பிடுகிறார்கள்.

" اللهم إني أسألك صدق التوكل عليك، وحسن الظن بك "
இறைவா உன் மீது உண்மையான நம்பிக்கையையும் உன்னைப்பற்றிய நல்ல எண்ணத்தையும் உன்னிடம் நான் கேட்கிறேன் என்று சயீது பின் ஜுபைர் ரலி அவர்கள் பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள் என்று வரலாறு கூறுகிறது.

இரண்டாவது அடுத்தவர்களைப்பற்றி தவறான எண்ணம் கொள்வது. இதையும் இஸ்லாம் தடை செய்கிறது.

لما نزل الموت بمحمد بن المنكدر رأوه متھللِّ الوجھ، قالوا لھ: سبحان لله! أراك متھلل الوجھ وأنت تموت! قال: لفعلي خصلتین أفرح

بلقاء ربي. قیل: ما ھما؟ قال: أني لم أتدخل فیما لا یعنیني، وأني ألقى لله وقلبي سلیم على الناس. محسن الظن بھم، أحمل أفعالھم

وأقوالھم على أحسن المحامل، لا یورث في قلبھ حقدا ولا حسدا على أحد منھم

முஹம்மத் இப்னு முன்கதிர் (ரஹ்) அவர்களின் மரண வேளையில் இருந்த போது அவர்களின் முகம் மிகவும் பிரகாசமாக இருப்பதை கண்டு காரணம் கேட்கப்பட்டது.அதற்கு அவர்கள்,என்னிடம் சிறந்த இரு குணங்களுண்டு. அந்த சிறந்த குணங்களுடன் என் இறைவனான அல்லாஹ்வை சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் என்றார்கள்.
1.எனக்கு தேவையில்லாத விஷயம் எதுவாக இருந்தாலும் நான் அதில் தலையிடமாட்டேன்.2.எல்லோரைப்பற்றியும் என் மனதில் நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்திக் கொள்வேன் என்றார்கள்.

وقال ابن سيرين رحمه الله: إذا بلغك عن أخيك شيء فالتمس له عذرًا ، فإن لم تجد فقل: لعل له عذرًا لا أعرفه
.
உன் சகோதரனைப் பற்றி  தவறான செய்தி ஏதேனும் உன்னிடம் வருமானால் அதற்கு காரணத்தை தேடு. காரணம் கிடைக்காவிட்டால் எனக்கு தெரியவில்லை ஏதேனும் தங்கடம் இருக்கலாம் என்று நீ உன் மனதில் சொல்லிக்கொள் என இமாம் இப்னு சீரீன் (ரஹ்) அவகள் கூறுகிறார்கள்.

இன்று நாம் என்ன செய்கிறோம் ? ஏதேனும் ஒருவரைப் பற்றி ஒரு தவறான செய்தி சொல்லப் பட்டால் அது உண்மையா பொய்யா என்று யோசிக்காமல் அவர் செய்திருப்பார் என்று நாமே முடிவு செய்து கொண்டு உடனே அதை வெளி உலகிற்கு கொண்டு வந்து விடுகிறோம். ஆனால் அவ்வாறு ஒரு செய்தி கூறப்பட்டால் ஏதாவது ஒரு தங்கடம் இருக்கும் அதனால் அவர் செய்திருப்பார்.அல்லது அந்த செய்தி பொய்யாக இருக்கும் அவர் செய்திருக்க மாட்டார் என்று அவர் மீது நல்ல அபிப்ராயம் கொள்ள வேண்டும் என்பது தான் இஸ்லாம் காட்டிதரும் அழகிய வழிமுறை.

یدخل أقوام الجنة، قلوبھُم كقلوب الطیر بیضاء
சில கூட்டங்கள் சுவர்க்கத்தில் நுழைவார்கள்.அவர்களின் உள்ளங்கள் பறவை உள்ளங்களைப்போல வெண்மையாக இருக்கும் என்று அண்ணல் நபி ஸல் அவர்கள் கூறினார்கள் அந்த கூற்றுக்கிணங்க நமது உள்ளத்தை யும் அல்லாஹ் தூய்மையாக ஆக்குவானாக.பிறரைப் பற்றி நல்ல அபிப்ராயத்தை நமது உள்ளங்களில் ஏற்படுத்துவானாக ஆமீன்.

2 comments:

  1. நல்லது உணர்ந்தேன்..இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்
    நல்ல பதிவு
    அரபு வாசகங்கள் முன் பின்னாக மாறி உள்ளன. அதை சரி செய்தால் நன்றாக இருக்கும். جزاكم الله خيرا

    ReplyDelete