Friday, August 29, 2014

தாயின் காலடியில் சுவனம்



வீடு என்பது மண்ணாலும்,கற்களாலும் ஆனது.அதுபோல் குடும்பம் என்பது அன்பாலும்,பாசத்தாலும் ஆனது.ஆனால் இன்று அந்தப் பாசப் பிணைப்பு கொஞ்சம் கொஞ்சமாக மனித மனங்களிலிருந்து கழன்று கொண்டிருப்பதை சமூக நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.அதிலும் குறிப்பாக இன்றைய தலைமுறையினரிடம் பெற்றோர் அன்பு, பெற்றோர் கவனிப்பு எல்லாம் குறைந்து, பெற்றோரை அவமதிப்பது இன்றைய நூதன நாகரீகமாக மாறிப்போனது.


நன்கு படித்து,நல்ல வருமானத்தில்,செல்வ செழிப்பில் மிதப்பவன், தனது இந்நிலைக்குக் காரணம் தன் தாய் தான் என்பதை மறந்து, அவளை தன் தாய் என்று சொல்வதைக் கூட அநாகரீகமாகக் கருதும் ஓர் துர்பாக்கிய காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அன்னையின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது என்று கூறி, இஸ்லாம் தாய்மையின் கண்ணியத்தை, தாய்மையின் மகத்துவத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. மனிதர்களில் யாருக்கு நான் அதிகக் கடமைப்பட்டுள்ளேன் என்ற நபித்தோழர் ஒருவரின் வினாவிற்கு மூன்று முறையும் தாய் என்றே பதில் உரைத்தார்கள் கண்மனி நாயகம் {ஸல்} அவர்கள்.

காரணம்,ஒரு குழந்தைக்காக தாய் ஏற்றுக் கொள்ளும் தியாகங்களும், சிரமங்களும் எண்ணிலடங்காதது. உலகில் எவரும் சந்திக்காதது. தன் குழந்தை உலகில் கால் பதிப்பதற்காக ஒரு தாய் இறப்பின் வாசல் வரை சென்று வருகிறாள்.பத்து நிமிடம் பிறரின் விரகுச் சுமையைத் தாங்கி நிற்கவே ஒதுங்கிவிடுகிற இக்காலத்தில், தொடர்ந்து பத்து மாத காலம் ஒரு சிசுவை தன் வயிற்றில் சுமக்கும் தாயின் சிரமம் ஈடு இணையற்றது.

சிசுவை தன் வயிற்றில் சுமக்கும் காலங்களில் அவள் மேற் கொள்ளும் இன்னல்களும் உலகம் அறிந்ததே! குழந்தை தன் எலும்புகள் வளரத் தேவையான கால்ஷியம் சத்தை தாயின் எலும்புகளிலிருந்து உறிஞ்சிக் கொள்கிறது,அதேபோல் தனக்குத் தேவையான இரும்புச் சத்தை தாயின் இரத்தத்திலிருந்து பெற்றுக் கொள்கிறது,இதனால் அவளுடைய மூளைக்குச் செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்து, அதனால் அவளுக்கு தலை சுற்றல் ஏற்படுகிறது.தாயின் இதயம் கற்ப காலத்தில் மிக அதிகமாக இயங்குகிறது.இதனால் அவளுக்கு அதிகக் களைப்பு ஏற்படுகிறது. வயிற்றிலிருக்கும் குழந்தையின் எடை அதிகரிக்க அதிகரிக்க தாய், முதுகு வலி,வயிற்று வலி,கால் வலி,பார்வை மந்தமாகுதல் போன்ற பாதிப்புகளை சந்திக்கிறாள்.    

ஒரு தாய் பலவீனத்தின் மேல் பலவீனம் கொண்டவளாக  குழந்தை யை தன் கருவில் சுமந்தாள் என்ற திருமறை வசனத்தின் கருத்தைத் தான் மருத்துவ உலகம் இன்றைக்கு மெய்ப்பித் திருக்கிறது.

அதனால் தான் தாயிக்கு உயர்ந்த மரியாதையை வழங்கும் படி இஸ்லாம் போதிக்கிறது.ஒரு நபித்தோழர் நபி {ஸல்} அவர்களின் அவைக்கு வந்து,நான் இஸ்லாத்திற்காக நாடு துறந்து வர உங்களிடம் உறுதிமொழி வழங்க வந்துள்ளேன்.என் அன்னை இதற்கு அனுமதி யளிக்காத நிலையில் அவரை அழ வைத்து விட்டு இங்கே கிழம்பி வந்து விட்டேன் என்றார்.

அதனை செவியுற்ற கருணை நபி {ஸல்} அவர்கள்,உடன் இங்கிருந்து கிழம்பி அழுது கொண்டிருக்கும் உன் அன்னையின் முகத்தில் புன்னகையை வரவழைத்து விட்டு,பிறகு இங்கு வா என்று மொழிந்தார்கள்.


அந்த அன்னையின் கண்ணியத்தைப் புரிவோம்.ஈருலகிலும் சோபமனம் பெறுவோம்.

No comments:

Post a Comment