Friday, August 29, 2014

நன் நட்பு


அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்} அன்பு நேயர்களே! உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் பல்வேறு உறவுகளைப் பெறுகிறான். ஒரே மனிதன் தந்தை,மகன், கணவன், அண்ணன்,மாமா என்று பல உறவுப் பெயர்களைத் தாங்கி  நிற்பதைப் பார்க்கிறோம்.


இதில் எந்த உறவு இல்லையென்றாலும் நட்பு என்ற உறவாவது ஒவ்வொரு மனிதனுக்கும் நிச்சயம் அமையப் பெற்றிருக்கும். காரணம்,சிறியவர் முதல் பெரியவர் வரை எவரும் தனித்து இருப்பதை விரும்புவதில்லை.பல கட்டங்களில் தேவைப்படும் உதவிகளைப் பெறுவதற்காகவும்,தாங்க முடியாத சிரமங்களை சந்திக்கிற போது அவற்றைக் கூறி ஆறுதல் தேடுவதற்காகவும் நட்பு என்ற வட்டத் துக்குள் இருப்பதையே அனைவரும் விரும்புவர்.

ஆனால் நல்லவர்களை இனம் கண்டு அவர்களை நண்பர்களாகத் தேர்வு செய்ய வேண்டும். நம் பிள்ளைகளுக்கும் அமைத்துத் தர வேண்டும். ஒருவனை நல்லவனாகவும்,தீயவனாகவும் மாற்றுவதில் நட்பு முக்கிய பங்கு வகிக்கிறது.

நல்லொழுக்கமுள்ள குடும்பத்தில் பிறந்தவன் தீய நண்பனின் சகவாசத்தால் தீய நடத்தைகளைக் கொண்டவனாக உருவெடுப் பதும்,மோசமான குடும்ப சூழலில் பிறந்தவன் நல்ல நட்புகளைப் பெற்று ஒழுக்கச்சீலனாக மாறுபடும் உலகம் என்ற கண்ணாடியில் தெரிகின்ற உண்மைகள்.

பூவைத் தொட்டு உறவாடும் காற்று நறுமணம் தருவதும், அசிங்கத்தைத்  தொட்ட காற்று துர்வாடை தருவதும் நட்பின் விளைவை நமக்குப் புரிய வைக்கிறது.

நல்ல நண்பன் கஸ்தூரி விற்பவனைப் போல.அவனிடமிருந்து கஸ்தூரியை வாங்கியோ,அல்லது அந்த நறுமணத்தை நுகர்ந்தோ அவனிடமிருந்து நீ பயனைப் பெற்றுக் கொள்வாய். தீய நண்பன் உலைப் பட்டரை வைத்திருக்கும் கொல்லனைப் போல.கொல்லனின் உலை உன் வீட்டையோ,அல்லது உன் ஆடையையோ எரித்து விடும்.அல்லது அவனிடமிருந்து வரும் கெட்ட வாடை உன்னை சிரமப்படுத்தும் என்று கூறி நட்பின் இலக்கணத்தைப் புரிய வைக்கிறார்கள் கண்மனி நாயகம் {ஸல்} அவர்கள்.

மகிழ்ச்சியில் மட்டுமில்லாது துக்கத்திலும் பங்கு கொள்ளுதல், சிரமத்தில் உதவுதல்,ஆறுதல் கூறி துயரங்களை மறைய வைத்தல், நன்மையான காரியங்களை அடையாளப் படுத்துதல்,தீய குணங்களை இனம் காட்டி களைய முற்படுதல்,எல்லா நேரங்களிலும் நன்மையை நாடுதல் இதுவெல்லாம் நல்ல நட்பின் இலக்கணங்கள் என்று இஸ்லாம் வரையறுத்துத் தருகிறது.

உடுக்கை இழந்தவன் கைபோல இடுக்கண் களைவதாம் நட்பு என்று கூறுகிறது வள்ளுவரின் குறள். அதாவது,உடம்பிலிருந்து ஆடை நழுவும் போது, கை விரைந்து சென்று நழுவும் ஆடையைப் பிடித்து மானத்தை காப்பாற்றுவதைப் போல், நண்பன் சிரமப்படும் போது விரைந்து சென்று சிரமத்திலிருந்து நண்பனை விடுவிப்பது தான் சிறந்த நட்பு என்பது அந்த குறளில் தொனிக்கும் பொருள்.

தான் விரும்புவதை தன் சகோதரனுக்கும் விரும்பாத வரை உங்களில் எவரும் உண்மை இறை நம்பிக்கையாளர்களாக ஆக முடியாது என்ற நபியின் அமுத மொழி எல்லா வகையிலும் நன்மையை நாடுபவனே சிறந்த நண்பன் என்பதை உரக்கச் சொல்கிறது.


அந்த சிறந்த நட்புகளை நம் பிள்ளைகளுக்கு ஏற்படுத்துவோம்! தலை சிறந்தவர்களாக அவர்களை வார்த்தெடுப்போம்!வல்ல இறைவன் அந்நிலையை உருவாக்கித் தருவானாக! ஆமீன். 

No comments:

Post a Comment