அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் புனிதம் நிறைந்த ரமலான் மாதம் நம்மை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது.இன்ஷா அல்லாஹ் இன்னும் ஒரு சில தினங்களில் ரமலான் மாதத்தை அடைய இருக்கிறோம்.பாக்கியம் நிறைந்த அந்த ரமலான் மாதத்தை அடைந்து கொள்ளும் பாக்கியத்தை தருவானாக!
ஆரோக்கியத்தோடும் உற்சாகத்தோடும் உடல் தெம்போடும் கடந்த வருடங்களை விட நிறைவாக அதிகமாக அமல்கள் செய்து அல்லாஹ்வின் திருப்தியையும் உயர்ந்த அந்தஸ்து களையும் பெறுவதற்கு அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக!
அல்லாஹுத்தஆலா நமக்கு ஏற்படுத்தியிருக்கிற கட்டளைகள்,தொழுகை, நோன்பு,ஜகாத்,ஹஜ் இதுமாதிரி மனிதர்கள் கட்டாயமாக செய்தாக வேண்டும் என்று அல்லாஹ் சொல்லியிருக்கிற எந்தக் கடமையாக இருந்தாலும் - அது சின்ன விஷயமாக இருந்தாலும் சரி, பெரிய காரியமாக இருந்தாலும் சரி அது வெறும் வணக்கமாக மட்டும் இல்லாது செய்யக் கூடிய மக்களுக்கு அதில் நிறைய பிரயோஜனங்களும், நன்மைகளும் இருப்பதை நாம் பாக்கலாம்.
உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் இஸ்லாத்தின் கடமைகளை ஆய்வு செய்து பார்த்த அறிவியல் மேதைகள், மருத்துவ நிபுணர்கள் எல்லோருமே இஸ்லாத்தில் இருக்கக்கூடிய எல்லா கடமைகளுமே மனித சமுதாயத்திற்கு நன்மையாகத் தான் இருக்கிறது, அதில் ஆரோக்கியம் கிடைக்கிறது, அறிவுக்குப் பொருத்தமாக இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.
அந்த அடிப்படையில் நாம் வைக்க இருக்கிற இந்த நோன்பிலும் நிறைய நன்மைகளும் பயன்களும் இருக்கிறது.அதைத்தான் நாம் இன்றைக்கு அலச இருக்கிறோம்.
இன்றைக்கு நாம் அனைவருமே ஆரோக்கியத்தையும் நோயின்றி சுகமாக வாழ்வதையும் விரும்புகிறோம். ஆரோக்கியத்தை விரும்பாதவர்கள் உலகில் யாரும் இருக்க முடியாது.சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.ஆரோக்கியம் இருந்தால் தான் நாம் வாழ்வை அனுபவிக்க முடியும்.ஆரோக்கியம் இல்லாமல் 100 வருடம் வாழ்ந்தாலும் அதில் எந்தப் பயனும் இல்லை.இஸ்லாமும் அந்த ஆரோக்கியத்தைத் தான் அதிகம் கேட்கும் படி சொல்கிறது.
أتى رجلٌ إلى رسولِ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّمَ وأنا جالسٌ فقال يا رسولَ اللهِ أيُّ الدعاءِ أفضلُ فقال سَلْ رَبَّكَ العَفْوَ والعَافِيَةَ في الدنيا والآخرةِ ثُمَّ أَتَاهُ في اليومِ الثَّانِي فقال أيُّ الدعاءِ أفضلُ قال سَلْ رَبَّكَ العَفْوَ والعَافِيَةَ في الدنيا والآخرةِ ثُمَّ أَتَاهُ في اليومِ الثالثِ فقال أيُّ الدعاءِ أفضلُ فقال سَلْ رَبَّكَ العَفْوَ والعَافِيَةَ في الدنيا والآخرةِ أُعْطِيتَ العَفْوَ والعَافِيَةَ في الدنيا والآخرةِ فقد أَفْلَحْتَ .
துஆக்களில் சிறந்தது எது என்று கேட்கப்பட்ட போது இறைவனிடம் மன்னிப்பையும் ஆரோக்கியத்தையும் கேள் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
ஆரோக்கியம் தான் வெற்றிக்கான முதற்படி என்று சொல்கிறார்கள்.ஆனால் இன்றைக்கு நம்மிடத்தில் ஆரோக்கியம் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. நம்ம வீட்டுல எது இருக்குதோ இல்லையோ மருந்து மாத்திரைகள் கண்டிப்பாக இருக்கும்.நம்மில் அத்தனை பேர் வீட்டிலும் மினி மெடிக்கல் ஷாப பே இருக்கிறது. அந்தளவு நோய் நொடிகளின் பிடியில் நாம் மாட்டித் தவித்துக் கொண்டிருக்கிறோம்.
இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் இஸ்லாம் ஆரோக்கியம் குறித்து சொல்லியிருக்கிற ஒரே ஒரு அறிவுரையை நாம் விட்டு விட்டோம்.அதனால் நாம் இன்றைக்கு நோயினால் சீரழிந்து கொண்டிருக்கிறோம்.
கொசுவை ஒழிப்பதை விட அந்தக் கொசுக்களை உற்பத்தியாக்கும் கழிவு நீரையும் அழிப்பது தான் புத்திசாலித்தனம்.இன்றைக்கு மருத்துவ உலகம் நோய் நொடிகளை அழிக்க மருந்துகளைத் தருகிறது.ஆனால் இஸ்லாம் அந்த நோய்களை உற்பத்தியாக்கும் காரணங்களைக் கண்டறிந்து அதை கலைவதற்கு அறிவுரைகளை வழங்குகிறது.
இன்றைக்குள்ள எல்லா நோய்களுக்கும் அடிப்படைக் காரணம் கட்டுப்பாடில்லாத உணவு முறை தான். வாழ்வதற்காக உண்ண வேண்டும்.ஆனால் இன்றைக்கு நாம் உண்பதற்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்தளவு உணவு முறைகளில் ஒரு கட்டுப்பாடு இல்லாமல் யோய் விட்டது. அது தான் இத்தனை நோய்களுக்கும் காரணம்.
இஸ்லாம் அந்த உணவுக் கட்டுப்பாட்டை நமக்கு வழியுறுத்துகிறது.
وقد روي، تعليقاً على الآية {وكُلُواْ وَاشْرَبُواْ وَلاَ تُسْرِفُواْ} «أن الرشيد كان له طبيب نصرانيٌ حاذقٌ، فقال ذات يوم لعلي بن الحسين بن واقد: ليس في كتابكم من علم الطب شيء، والعلم علمان: علم الأديان وعلم الأبدان! فقال له علي: قد جمع الله الطب كله في نصف آية من كتابه، وهو قوله: {وكُلُواْ وَاشْرَبُواْ وَلاَ تُسْرِفُواْ} وجمع نبينا(ص) الطب في قوله: المعدة بيت الداء والحمية رأس كل دواء، وأعطِ كل بدن ما عوّدته، فقال الطبيب: ما ترك كتابكم ولا نبيكم لجالينوس طبّاً»[16]
உங்கள் வேத்ததில் மருத்துவ மூல விதி எதுவும் கூறப்பட்டுள்ளதா ? என்று கலீபா ஹாரூன் ரஷீது பாதுஷாவின் சபையில் இருந்த அறிஞர் அலி பின் ஹுஸைன் அல்வாகிதி அவர்களிடம் கிருத்துவ மருத்துவர் ஒருவர் கேட்டார். அலி இப்னு ஹுஸைன் அல்வாகிதீ அவர்கள், ஒட்டுமொத்த மருத்துவத்தின் அடிப்படையையும் அல்லாஹ் குர்ஆனிலுள்ள ஒரு வரியில் கூறியிருக்கிறான் என்றார். "அது என்னவென்று கேட்ட போது
“உண்ணுங்கள் பருகுங்கள் அளவு கடந்து விடாதீர்கள்.” (அல்குர்ஆன் : 7 ; 31) என்ற வசனத்தை சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று ஒட்டுமொத்த மருத்துவத்தின் அடிப்படையையும் நபி ﷺ அவர்கள், “இரைப்பை தான் எல்லா வியாதிகளுக்கும் அடிப்படை. நீங்கள் உங்களின் உடலுக்கு எது தேவையோ அதைக் கொடுங்கள். பத்தியம் சிகிச்சையை விட மேலானது.” என்ற ஹதீஸில் கூறியிருக்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டினார். இதைக்கேட்டு அதிசயித்துப் போன அந்த மருத்துவ அறிஞர், உங்களுடைய வேதமும் உங்களுடைய நபியும் மருத்துவ மேதை ஜாலினூஸுக்கு எதையும் விட்டு வைக்க வில்லை எனக் கூறி வியந்தார். (தஃப்ஸீர் குர்துபீ)
அதே ஹாரூன் ரஷீது பாதுஷாவின் சபையில் இன்னொரு நிகழ்வு ;
حكى أن الرشيد جمع أربعة أطباء هندي ورومي وعراقي وسوادي وقال ليصف كل واحد منكم الدواء الذي لا داء فيه فقال الهندي الدواء الذي لا داء فيه عندي هو الإهليلج الأسود وقال العراقي هو حب الرشاد الأبيض وقال الرومي هو عندي الماء الحار وقال السوادي وكان أعلمهم الإهليلج يعفص المعدة وهذا داء وحب الرشاد يزلق المعدة وهذا داء والماء الحار يرخي المعدة وهذا داء قالوا فما عندك فقال الدواء الذي لا داء معه عندي أن لا تأكل الطعام حتى تشتهيه وأن ترفع يدك عنه وأنت تشتهيه فقالوا صدقت
மன்னர் ஹாரூன் ரஷீது பாதுஷா அவர்கள் தன் நாட்டிலுள்ள மிக முக்கியமான பிரசித்தி பெற்ற மருத்துவர்களை அழைத்து நோயில்லாத மருத்துவம் எது? அதாவது எந்த மருந்தை எடுத்துக் கொண்டாலும் அது, அந்த நோயை குணப்படுத்தி விட்டு இன்னொரு நோயை உற்பத்தி செய்து விடும். இவ்வாறில்லாமல் பின்விளைவு இல்லாத மருத்துவம் எது ? என்று கேட்டார்கள். அவையில் வீற்றிருந்த மருத்துவர்கள் ஒவ்வொருவரும் ஒரு மருந்தைச் சொன்னார்கள். அதில் ஒரு மருத்துவ அறிஞர், அவர்கள் குறிப்பிட்ட ஒவ்வொரு மருந்திலும் இன்னன்ன பாதிப்பு இருக்கிறது என்று குறிப்பிட்டார். அப்படியென்றால் உங்களிடம் மிகச்சிறந்த மருத்துவம் எது என்று கேட்டார்கள். உணவின் தேட்டம் வரும் வரை உணவை உட்கொள்ளக் கூடாது. உணவின் தேட்டம் கொஞ்சம் இருக்கும் போதே உணவிலிருந்து கையை எடுத்து விட வேண்டும். இது தான் பின்விளைவு இல்லாத மருத்துவம் என்று சொன்ன போது அவையினர் அனைவராலும் அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. (இஹ்யாவு உலூமித்தீன்)
வயிறு தான் எல்லா நோயுக்கும் காரணம். பத்தியம் தான் எல்லா நோயுக்கும் மருந்து என்பதை மன்னர் ஹாரூன் ரஷீதின் சபையில் நடைபெற்ற இந்த நிகழ்விலும் பார்க்க முடிகிறது.
எனவே ஆரோக்கியமான உணவு முறை என்பது பசி எடுத்த பிறகு சாப்பிட வேண்டும். கொஞ்சம் பசி இருக்கிற போதே உணவிலிருந்து கையை எடுத்து விட வேண்டும்.
நாம் எந்தளவு உணவை குறைந்துக் கொள்கிறோமோ அந்தளவு நாம் ஆரோக்கியமாக வாழ முடியும்.உணவு கூட கூட நோய்களும் அதிகமாகிக் கொண்டே போகும். அதனால் தான் இஸ்லாம் பசியை வலியுறுத்துகிறது, அதிகம் பசியோடு இருப்பதை சிறந்த பண்பு என்று சித்தரிக்கிறது.
"جاهدوا أنفسكم بالجوع والعطش فإن الأجر في ذلك كأجر المجاهد في سبيل الله وأنه ليس من عمل أحب إلى الله من جوع وعطش
பசியை கொண்டும் தாகத்தை கொண்டும் உங்கள் நஃப்ஸோடு போராடுங்கள் நிச்சயமாக அதற்கு கூலி என்பது அல்லாஹ்வுடைய பாதையில் போர் செய்யக் கூடிய ஒரு போராளியின் கூலியை போன்றது. பசி மற்றும் தாகத்தை விட அல்லாஹ்விடத்தில் மிகப் பிரியமாக எந்த அமலும் இல்லை. (இஹ்யா)
وقيل يا رسول الله أي الناس أفضل? قال "من قل مطعمه وضحكه ورضي مما يستر به عورته
மக்களில் மிகச் சிறந்தவர் யார் என்று நபி அவர்களிடம் கேட்கப்பட்ட பொழுது யார் குறைவாக உணவு உட்கொண்டு குறைவாக சிரித்து மறைவிடத்தை மறைகின்ற அளவுக்கான ஆடையைக் கொண்டு பொருந்திக் கொள்வாரோ அவரே மிகச் சிறந்தவர் என்றார்கள. (இஹ்யா)
எனவே உணவைக் குறைத்துக் கொண்டு அதிகம் பசியாக இருப்பதின் மூலம் ஏற்படும் நன்மைகளும் பயன்களும் அதிகம்.இந்த அடிப்படையில் நாம் சிந்தித்தால் நோன்பில் எத்தனை நன்மைகள் இருக்கிறது என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
صوموا تصحوا
நோன்பிருங்கள். ஆரோக்கியம் பெறுங்கள். (அல்முஃஜமுல் அவ்ஸத்)
நோன்பில் அப்படி என்ன ஆரோக்கியம் இருக்கிறது? நோன்பிற்கும் உடல் சுகத்திற்கும் அப்படி என்ன தொடர்பு இருக்கிறது ? என்று நாம் யோசித்தால் இன்றைக்கு உள்ள அறிவியல் நிபுணர்களும், மருத்துவ நிபுணர்களும் நமக்கு பல்வேறு சுவையான செய்திகளை சொல்லித் தருகிறார்கள்.
30 நாள் தொடர்ந்து நோன்பு வைத்தால் உடல் பலகீனமாகி விடும்,உடலில் சத்து குறைந்து விடும் என்று இன்றைக்கு சிலர் தவறாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் உணவில்லாமல், சாப்பிடாமல் இறந்து போனவர்களை விட அதிகமாக அளவுக்கு அதிகமாக,வயிறு புடைக்க சாப்பிட்டு இறந்தவர்கள் தான் அதிகம் என்று இன்றைய புள்ளி விபரம் சொல்கிறது.
நோன்பு வைப்பதால் உடல் வலிமை அதிகமாகிறது, உடலில் ஒரு விதமான தெம்பு ஏற்படுகிறது என்றெல்லாம் மார்க் குலிஸ் என்ற ஆசிரியர் சொல்கிறார்.
அமெரிக்காவில உள்ள டாக்டர் S.N.M ஹாஸ் சொல்கிறார் ;
“நோன்பு மிகச்சிறந்த இயற்கை மருத்துவம். மட்டுமல்ல ரொம்ப தொன்மையான, பழமையான நோய் நிவாரணி. 15 வருடங்களுக்கு முன்பு நான் நோய்வாய் பட்டு, உடல் ரொம்ப பலகீனமாகி விட்டது. அந்த நேரத்தில் ஒரு சில தினங்களாக சாப்பிடாமல் என் வயிற்றை காலியாக்கினேன்.அதற்குப் பின்னால் தான் என் உடம்புக்கு ஒரு தெம்பு கிடைத்தது. நோன்பு வைப்பதினால் ஏதோ புதிய சக்தி உடலில் பாய்வதை நான் உணர்ந்தேன். உடலில் என்றைக்கும் இல்லாத அளவு ஒரு உத்வேகம் கிடைப்பதை நான் உணர்ந்தேன்.
எனவே பல நோய்களை தடுப்பதற்கும், உடல் பலகீனமானவர்கள் உடல் தேறுவதற்கும் நோன்பு தான் சிறந்த தீர்வு என்று நான் கண்டு பிடித்தேன் என்று சொல்கிறார்.
ஒரு நாள் நோன்பு வைப்பது மூன்று வாரம் தொடர்ந்து மருத்து சாப்பிடுவதற்குச் சமம் என்பது மருத்துவத்தின் தந்தை என்று சொல்லப்படக்கூடிய இப்னு சீனா அவர்களின் கருத்து.
அதுமட்டுமில்லாமல் யார் என்றைக்கும் இளமையோடு இருப்பதற்கு விரும்புகிறார்களோ அவர்களுக்கு அதற்கான சிறந்த வழிமுறை நோன்பு தான் என்று சைல்டு என்ற ஆராய்ச்சியாளர் சொல்கிறார்.
கொஞ்சம் புழுக்களை வைத்து ஒரு ஆராய்ச்சியும் செய்தார் ;சில புழுக்களுக்கு அவை என்னென்ன விரும்பி சாப்பிடுமோ அந்த எல்லா உணவையும் கொடுத்தார். ஒரு நேரம் விடாமல் ஒவ்வொரு நேரமும் அவைகளுக்குத் தீனி போட்டார். இன்னும் சில புழுக்களுக்கு ஒரு நேரம் உணவு கொடுத்து அடுத்த நேரம் பட்டினி போட்டார். அதாவது ஒரு நேரம் உணவு.ஒரு நேரம் பட்டினி, இப்படியே வளர்த்தார். எந்த புழுக்களுக்கு அதிகமாக தீனி போட்டு,எல்லா நேரமும் தீனி போட்டு வளர்த்தாரோ அந்த புழுக்கள் அனைத்தும் சீக்கிரமே இறந்து விட்டது. எந்த புழுக்களுக்கு சரியாக உணவு கொடுக்காமல் அரை தீனி போட்டு ஒரு நேரம் உணவு ஒரு நேரம் பட்டினி என்று வளர்த்தாரோ அந்த புழுக்கள் தான் அதிக நாள் உயிர் வாழந்தது. அந்த ஆராய்ச்சிக்குப் பிறகு தான் பாதி நேரம் சாப்பிட்டு பாதி நேரம் வயிற்றை காலியாக போடும் நோன்பு, மனிதனுக்கு இளமையை தருகிறது என்று கண்டு பிடித்து இந்த உண்மையை உலகத்திற்குச் சொன்னதாக நாம் கேள்விப் படுகிறோம்.
நமது உடல் சரியாக இயங்குவதற்கு நம் உடம்பில் உஷ்ணம் சரியாக இருக்க வேண்டும்.உஷ்ணம் அதிகாவும் இருக்கக்கூடாது. குறைவாகவும் இருக்கக் கூடாது.அதிகமாக இருந்தாலும் ஆபத்து. குறைவாக இருந்தாலும் ஆபத்து. ஆனால் இன்றைக்கு அப்படியா இருக்கிறது? ஒன்று ரொம்ப அதிகமாகி விடுகிறது. அல்லது ரொம்ப குறைவாக ஆகி விடுகிறது.ஆனால் நோன்பு வைப்பதினால் அதிகப்படியான உடல் வெப்பம் குறைந்து உஷ்ணம் சமநிலைக்கு வருகிறது என்பதும் இன்றைக்கு நிரூபணமாகி இருக்கிறது.
இதை அன்றைக்கே நபி ஸல் அவர்கள் சொன்னார்கள்
يَا مَعْشَرَ الشَّبَابِ مَنْ اسْتَطَاعَ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ
திருமணத்திற்கான சூழ்நிலை இல்லாதவர் நோன்பு பிடிக்க வேண்டும் என்று நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த ஹதீஸை கொஞ்சம் நாம் ஆய்வு செய்து பார்த்தால் நபி [ஸல்] அவர்கள் எந்த அளவு தூர நோக்கு சிந்தனையோடும், நோன்பில் ஏற்படும் மருத்துவம் குறித்தும் பேசியிருப்பார்கள் என்று நாம் புரிந்து காள்ள முடியும்.
பொருள் வசதி உள்ளவர்கள் திருமணம் முடியுங்கள்.பொருள் வசதி இல்லாதவர்கள் நோன்பு வைக்க வேண்டும் என்று சொல்ல காரணம் என்ன? வாலிபப் பருவம் என்பது, இணையைத் தேடுகிற பருவம். குறிப்பிட்ட வயது வந்து விட்டால் திருமணம் செய்து வைக்க வேண்டும்.அந்த திருமணம் அவனுக்கு ஒழுக்கத்தைக் கொடுக்கும். குறிப்பிட்ட வயது வந்த பிறகும் திருமணம் முடிக்காமல் இருந்தால் அவன் தவறான பாதையில் போய் விடுவான். அதனால் தான் திருமணம் முடிக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது.
திருமணம் என்றால் இஸ்லாமிய சட்டப்படி அதற்கு உடல் தகுதி மட்டும் போதாது.பொருளாதார தகுதியும் இருக்க வேண்டும்.பொருள் தகுதியும், உடல் தகுதியும் இருப்பவன் தான் திருமணம் செய்ய முடியும்.
ஆனால் ஒருவனுக்கு உடல் தகுதி இருக்கிறது.ஆனால் பொருள் தகுதி இல்லை. பொருள் தகுதி இல்லையென்றால் திருமணம் முடிக்க முடியாது. இந்த வயதில் திருமணம் முடிக்க வில்லை யென்றால் தவறான காரியத்திலும் போய் விடுவான்.
இப்ப என்ன செய்வது ? என்று யோசிக்கும் போது அதற்குத் தான் பதில் தருகிறார்கள் நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் ;- பொருள் தகுதி இல்லையென்றால் நீங்கள் நோன்பு வைத்துக் கொள்ளுங்கள்.அது உங்களுக்கு கேடயமாக இருக்கும் என்று சொல்லி, நோன்பு மனித உடம்பில் உஷ்ணத்தை கட்டுப் படுத்துகிறது என்ற அறிவியல் உண்மையை அழகாக சொல்லி விட்டார்கள் நபி [ஸல்] அவர்கள்.
இப்படி பல்வேறு பலன்களை நோன்பு தருவதினால் தான் {FASTING IS A BEST MADECINE} உண்மையான நோன்பு ஒரு சிறந்த மருத்துவம் என்று எல்லா மருத்துவர்களும் சொல்கிறார்கள்.
மாஷா அல்லாஹ்...
ReplyDeleteகாலத்திற்கு ஏற்றார் போல் அருமையான பதிவு
அல்ஹம்துலில்லாஹ்
ReplyDeleteமாஷா அல்லாஹ் காலத்திற்கு ஏற்றார்போல் நல்லதொரு அருமையான கட்டுரை அல்லாஹ் உங்களுடைய வாழ்க்கையை மிக சிறப்பாக வானகமே
ஆமீன்
Deleteமாஷா அல்லாஹ்
Deleteமாஷா அல்லாஹ் மிகச் சிறந்த குறிப்புகள்..காலத்திற்கு ஏற்ற பதிவு. அல்லாஹ் தங்களுக்கு எல்லா வகையிலும் பரக்கத் செய்வானாக ஆமீன்
ReplyDelete