Thursday, April 1, 2021

கறை நல்லது



தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிற, களத்தில் நிற்கிற அத்தனை கட்சிகளும் தீவிரமான இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிற இவ்வேளையில் தேர்தல் குறித்த விழிப்புணர்வும் தேர்தல் தொடர்பான மார்க்கத்தின் பார்வையும் ஷரீஅத்தின் வழிகாட்டுதலும் நமக்கு வேண்டும்.

மக்களாட்சி நடைபெறுகிற ஜனநாயக நாட்டில் ஆட்சியாளரை ஓட்டு போட்டு தேர்வு செய்கிற பழக்கம் காலம் காலமாக நடைமுறையில் இருந்து  வருகிறது.  முற்காலத்தில் ஒரே ஒரு ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்களே அவர்களில் மூத்தவரை தேர்ந்தெடுத்து முடிசூட்டிக் கொள்ளும் வழக்கம் இருந்தது. காலம் போகையில் வயது வேறுபாடு அற்று தகுதி உடையவரை தேர்ந்தெடுக்க ஆரம்பித்தனர். பின்பு ஏதாவது போட்டிகளை வைத்து வெற்றி பெறுபவரை தேர்ந்தெடுத்தார்கள். அதற்குப் பின்பு ராஜ சபையில் வீற்றிருக்கும் சான்றோர்களின் வாக்குகளைக் கேட்டு அவர்களின் எண்ணப்படி முடி சூட்டினார்கள். பின்பு அதிலும் திருப்தியடையாமல் பொறுப்புகள் மக்களின் கையில் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தங்களுக்கு யார் அரசனாக வேண்டும் என்பதனை தாங்களே முடிவு செய்ய அவரவருக்கு உரிமை அளிக்கபட்டது.

ஓட்டு போடுவது அது ஒரு ஜனநாயக கடமை என்று சொல்லப் படுகிறது. ஆனால் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைமுறையில் இருக்கிற இந்த ஓட்டு முறை, ஷரீஅத்தினுடைய பார்வையில் அதன் அந்தஸ்து என்ன? அதன் படித்தரம் என்ன? அதன் சட்டம் என்ன? என்று நாம் சிந்தித்துப் பார்க்க கடமைப் பட்டிருக்கிறோம்.மார்க்க பெருமக்கள், ஷரீஅத்தில் ஆழம் கண்டவர்கள் இந்த ஓட்டு முறையை பல விதமான கண்ணோட்டத்தில்  பார்க்கிறார்கள். குர்ஆன் ஹதீஸ் வெளிச்சத்தில் இதை பல விதமாக பார்க்கப்படுகிறது.

முதலாவது ஓட்டு என்பது அது அமானிதம் என்று சொல்லப்படுகிறது. ஓட்டுப் போட்டு நமக்கான ஆட்சியாளரை தேர்வு செய்கிற உரிமை வழங்கப்பட்ட நாம் நம்மிடத்தில் அந்த அமானிதம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று உணர வேண்டும்.

قَالَ فَإِذَا ضُيِّعَتْ الْأَمَانَةُ فَانْتَظِرْ السَّاعَةَ قَالَ كَيْفَ إِضَاعَتُهَا قَالَ إِذَا وُسِّدَ الْأَمْرُ إِلَى غَيْرِ أَهْلِهِ فَانْتَظِرْ السَّاعَةَ

அமானிதம் வீணடிக்கப்பட்டால் மறுமையை எதிர் பார்த்துக் கொள் என்று நபி அவர்கள் சொன்னார்கள். அமானிதம் வீணடிக்கப்படுதல் என்றால் என்ன யா ரசூலல்லாஹ் ஒரு ஸஹாபி கேட்ட போது, தகுதியற்றவர்களுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டால் மறுமையை எதிர் பார்த்துக் கொள் என பதிலளித்தார்கள். (புகாரி ; 6496)

ஆட்சி அதிகாரத்தை அதற்குத் தகுதியில்லாதவர்களிடத்தில் நாம் ஒப்படைக்கும் பொழுது சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு உலகத்தில் குழப்பங்கள் தலைவிரித்தாடி, அது உலகத்தினுடைய அழிவிற்குக் காரணமாகி கியாமத்திற்கு அது வித்திடும் என்பதை நபிகள் பெருமானார் அவர்கள் இந்த ஹதீஸின் மூலம் நமக்கு தெளிவு படுத்தி விட்டார்கள்.

இரண்டாவது, ஓட்டு என்பது ஒரு சிபாரிசு என்று சொல்லப்படுகிறது. நாம் ஒருவருக்கு ஓட்டு போடுகிறோம் என்றால், இவர் ஆட்சிக்குத் தகுதியானவர், ஆட்சிக்கு வர இவர் ஏற்புடையவர் என்று அவருக்காக நாம் சிபாரிசு செய்கிறோம் என்று பொருள். ஷஃபாஅத் என்று வருகிற போது தகுதியான நேரத்தில் தகுதியான விஷயத்திற்கு தகுதியான ஆளுக்கு ஷஃபாஅத் செய்ய வேண்டும். இல்லை யென்றால் அதற்காக அல்லாஹ் விடத்தில் நாம் பதில் சொல்ல வேண்டும்.

مَنْ يَشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَكُنْ لَهُ نَصِيبٌ مِنْهَا وَمَنْ يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُنْ لَهُ كِفْلٌ مِنْهَا وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ مُقِيتًا

எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு. (அவ்வாறே) எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு சிபாரிசு செய்தால், அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகமுண்டு. அல்லாஹ் எல்லா பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் :  4  ; 85 )

மூன்றாவது ; ஓட்டு என்பது சாட்சி சொல்வதாகும். இஸ்லாமியப்பார்வையில்       ஓட்டுப்போடுவது     நீதிமன்றத்தில் சாட்சி அளிப்பதின் அந்தஸ்ததை பெறுகிறது என பிரபல இஸ்லாமிய சட்ட அறிஞரான முப்தீ முஹம்மது ஷஃபீ (ரஹ்) அவருடைய திருக்குர்ஆன் விரிவுரை மஆரிபுல் குர்ஆனில் குறிப்பிடுகிறார்கள்.

இப்படி இன்றைக்கு ஓட்டு என்பதற்கு மார்க்கத்தின் அடிப்படையில் ஷரீஅத்தின் பார்வையில் அதற்கு பல அர்த்தங்கள் சொல்லப்படுகிறது, பல வியாக்கியானங்கள் கூறப்படுகிறது.எப்படி வைத்துக் கொண்டாலும் ஓட்டு போடுவது அவசியம் என்பதை உணர முடிகின்றது.அமானிதம் என்று வைத்துக் கொண்டாலும் ஓட்டுப் போட வேண்டும்,ஏனென்றால் அமானிதத்தை சரியாக நிறைவேற்ற வேண்டும் அதை பாதுகாக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது.

والذين هم لاماناتهم وعهدهم ر اعون

இறை நம்பிக்கையாளர்கள் தமது அமானிதங்களையும், உடன்படிக்கையையும் பேணுவார்கள். (திருக்குர்ஆன் ; 23 : 8)

لا إيمانَ لِمَن لا أمانةَ له ، ولا دِينَ لِمَن لا عهدَ له .

எவரிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டதை நிறைவேற்றும் தன்மை இல்லையோ அவரிடம் இறை நம்பிக்கை இல்லை. எவரிடம் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் தன்மை இல்லையோ அவரிடம் இஸ்லாம் மார்க்கம் இல்லை. (அஹ்மது ; 12567)

பரிந்துரை என்று வைத்துக் கொண்டாலும் நாம் ஓட்டுப் போடத்தான் வேண்டும். ஏனென்றால் பரிந்துரை செய்ய வேண்டும் அதில் நிறைய நன்மைகள் இருப்பதாக நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

اشفعوا توجروا

பரிந்த்துரை செய்யுங்கள். அதில் நீங்கள் கூலி வழங்கப்படுவீர்கள். (அபூதாவூது ; 5132)

சாட்சி சொல்லுதல் என்று வைத்துக் கொண்டாலும் ஓட்டுப் போட்டே ஆக வேண்டும்.ஏனென்றால் சாட்சி சொல்ல அழைக்கப்படும் போது மறுக்காமல் செல்ல வேண்டும் என்பது இஸ்லாம் கூறுகிற கருத்து. 

{وَلَا يَأْبَ الشُّهَدَاءُ إِذَا مَا دُعُوا} [سورة البقرة الآية 282] وقال تعالى: {وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَ وَمَنْ يَكْتُمْهَا فَإِنَّهُ آثِمٌ قَلْبُهُ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ

(சாட்சி கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்க வேண்டாம். (அல்குர்ஆன் ; 2 ; 282)

நீங்கள் சாட்சியை மறைக்காதீர்கள். எவன் ஒருவன் அதை மறைக்கின்றானோ நிச்சயமாக அவனுடைய இருதயம் பாவத்திற்குள்ளாகிறது - இன்னும் நீங்கள் செய்வதையெல்லாம் அல்லாஹ் நன்கறிவான். (அல்குர்ஆன் ; 2 ; 283)

من كتم شهادة إذا دعي إليها كان كمن شهد بالزور

சாட்சிக்கு அழைக்கப்பட்ட நிலையில் எவன்  அதை மறைக்கிறானோ அவன் பொய் சாட்சி சொன்னவனைப் போல் ஆகி விடுகிறான். (அல்முஃஜமுல் அவ்ஸத் ; 4167)

எனவே இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை ஓட்டுப் போடுவது ஜனநாயக கடமை மட்டுமல்ல. மார்க்க ரீதியான கடமை. இதை ரொம்ப அழுத்தமாக சொல்ல வேண்டிய தேவை ஏன் எற்பட்டது என்றால் இன்றைக்கு தேர்தலைப் பற்றி தவறான அபிப்பிராயம் நம்மிடத்தில் இருக்கிறது. தேர்தல் களத்தில் நிற்கிற யாரும் யோக்கியன் இல்லை, அத்தனை பேரும் மக்களை ஏமாற்றுபவர்கள் தான். எனவே யாருக்கு ஓட்டு போட்டு என்ன பயன் ? என்று நினைக்கிறார்கள். இன்னும் சிலர்  என் ஒரு ஓட்டினால் என்ன ஆகிவிடப் போகிறது என்று  எண்ணிக்கொண்டு தமது ஜனநாயகக் கடமையை நிறை வேற்றத் தவறுகிறார்கள். இந்த எண்ணம் தான்   நல்ல தகுதிமிக்க வேட்பாளர் தோற்றுப்போவதற்கும் தகுதியில்லாத வேட்பாளர் வெற்றிபெறுவதற்கும் காரணமாக அமைந்து விடுகிறது.

நம்மில் பலருக்கு ஓட்டு போடுவதன் முக்கியத்துவம் தெரிவதில்லை. அதிகாரத்தை இவருக்கு கொடுக்க வேண்டும் என மக்கள் நிர்ணயிப்பது தான் ஓட்டு போடுவது என்பது. இது ஒவ்வொருவரும் தவறவிடக்கூடாத வாய்ப்பு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

மார்க்ஸிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவர் முஸ்லிம்கள் போடும் ஓட்டு வெறும் 56 சதவீதம் தான் என்று குறிப்பிடுகிறார்.ஒட்டு மொத்த முஸ்லிம்களில் 46 சதவீதம் பேர் ஓட்டுப் போடுவதே இல்லை.போட வேண்டிய நேரத்தில் சரியாக ஓட்டைப் போடாமல் அவன் வந்து விட்டான் இவன் வந்து விட்டான் என்று புலம்புவது. ஓட்டுக்களை ஒழுக்காக செலுத்தாமல் இப்படி புலம்புவதில் எந்தப் பயனும் இல்லை.

நாம் போடுகிற ஒவ்வொரு ஓட்டும் நாட்டில் ஆட்சியாளர்களை தீர்மானிப்பதில் முக்கிய அம்சம் என்பதை மறந்து விட வேண்டாம். ஒரு தேர்தலில் கர்நாடகாவின் ஒரு முஸ்லிம் வேட்பாளர் 12 ஓட்டு வித்தியாசத்தில் தோற்றுப் போனார்.காரணம் அவங்க வீட்டில இருந்த 12 பேர் ஓட்டு போட வில்லை.

அடுத்த ஐந்து வருடத்திற்கு அரசியல் நடத்துவது யார் என்பதை தீர்மாணிக்கிற சக்தியை நமது விரல் நுனிக்கு இந்திய ஜனநாயகம் வழங்கியுள்ளது.  அந்த ஐந்து வருடங்களைத் தீர்மானிக்கும் வேலைக்காக ஐந்து மணி நேரம் கூடக் காத்துக்கிடக்கலாம்..எனவே எந்தக் காரணத்திற்காகவும் ஓட்டுப் போடுவதை தவிர்த்து விடக்கூடாது.  

மட்டுமல்ல இஸ்லாம் ஒரு அநீதத்தைக் கண்டால் ஒரு தவறைக் கண்டால் அதை தடுக்க வேண்டும் என்று சொல்கிறது.ஒருதவறைப் பார்த்து அதை தடுப்பதற்கு சக்தி இருந்தும் தடுக்க வில்லையென்றால் நமக்கும் அல்லாஹ்வின் வேதனை வந்து விடும் என்று இஸ்லாம் எச்சரிக்கிறது.

إِنَّ النَّاسَ إِذَا رَأَوْا الظَّالِمَ فَلَمْ يَأْخُذُوا عَلَى يَدَيْهِ أَوْشَكَ أَنْ يَعُمَّهُمْ اللَّهُ بِعِقَابٍ

மக்கள் அநீதம் செய்யும்  ஒருவனைப் பார்த்து அவன் கையைப் பிடித்து அவனைத்தடுக்க வில்லையென்றால் அல்லாஹ்  தன் வேதனையை அவர்களுக்கு பொதுவாக்க முற்பட்டு விட்டுவான். (திர்மிதி ; 2168)

 مَا مِنْ قَوْمٍ يُعْمَلُ فِيهِمْ بِالْمَعَاصِي ثُمَّ يَقْدِرُونَ عَلَى أَنْ يُغَيِّرُوا ثُمَّ لَا يُغَيِّرُوا إِلَّا يُوشِكُ أَنْ يَعُمَّهُمْ اللَّهُ مِنْهُ بِعِقَابٍ -  أَبُو دَاوُد 3775

ஒரு சமூகத்தில் குற்றங்கள் நடைபெறுகிறது. அதை தடுப்பதற்கு அவர்களுக்கு சக்தி இருந்தும் அதைத் தடுக்க வில்லையென்றால் அல்லாஹ் அவர்களுக்கு தன் வேதனையை இறக்க முற்படுவான். (அபூதாவூது ; 4338)

எனவே ஒரு முஸ்லிமைப் பொறுத்த வரை ஒரு தவறைக் கண்டால் அதை தடுத்தே ஆக வேண்டும்.தவறைத் தடுப்பதற்கான வழிமுறையையும் இஸ்லாம் சொல்லித் தருகின்றது.

من رأى منكرًا فلْيغيِّرهُ بيدهِ، فإن لمْ يستطعْ فبلسانِه، فإن لمْ يستطعْ فبقلبِه، وذلك أضعفُ الإيمانِ

இந்த ஹதீஸின் பொருள் என்ன வென்றால் ஒரு தவறை ஒரு முஸ்லிம் கண்டால் எப்படி முடியுமோ அப்படித் தடுக்க வேண்டும்.

இப்போது மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருக்கிற பா.ஜா.க அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிரான எத்தனை சூழ்ச்சிகளை செய்து கொண்டிருக்கிறது என்று நமக்கெல்லாம் தெரியும்.இவர்களின் ஆட்சியில் முஸ்லிம்களின் உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லை.  முஸ்லிம்கள் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் குறிப்பாக வடநாடுகளில் அச்சுறுத்தப்படுகின்றார்கள்.இஸ்லாத்தின் பெயரால் வதைக்கப்  படுகிறார்கள். அசாம் போன்ற  மாநிலங்களில்  சந்தையில் மாட்டுக்கறி  விற்பனை செய்பவர்களை அடித்து துன்புறுத்தி பலவந்தமாக பன்றிக் கறியை சாப்பிட வைக்கிறார்கள்.இப்படி ஒன்றல்ல இரண்டல்ல நாளும் 1000 நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது.

முஸ்லிம்களின் பொருளதாரம் திட்டமிட்டே நசுக்கப்படுகின்றது. முஸ்லிம்களின் வழிபாட்டுத்தளங்கள் திட்டமிட்டே தாக்கப்படுகிறது. முஸ்லிம்கள் தங்களின் உயிரை விடவும் மேலாக மதிக்கின்ற இஸ்லாமிய சட்டங்கள் விமர்சிக்கப்பட்டு, அதற்கு தடைகள் போடப்படுகிறது. முஸ்லிம்கள் குறித்த தவறான கருத்துக்கள் பள்ளிப்பாட புத்தகங்களில் தினிக்கப்பட்டு அந்த பிஞ்சு உள்ளத்திலேயே இஸ்லாத்திற்கு எதிரான விதைகள் தூவப்படுகிறது. கடந்த்த வாரம் குறிப்பிட்டது போல இஸ்லாமியர்களை நாட்டை விட்டே வெளியாக்க முயற்சி செய்யப்படுகிறது. இப்படி எத்தனையோ விஷயங்களை சொல்லலாம்.

இதல்லாமல் இந்த பாசிச அரசாங்கத்தின் அடிவருடிகள் பேசுகிற ஒவ்வொரு பேச்சும் நாம் சிந்திக்க வேண்டியவை. இந்த நாடு ஹிந்து நாடு. ஹிந்துக்கள் மட்டுமே வாழ வேண்டிய நாடு என்று ஒருவன் பேசுகிறான். வரும் காலங்களில் இந்தியாவில் எந்த மஸ்ஜிகளும் இருக்காது,இருக்கிற அத்தனை மஸ்ஜித்களையும் இடித்துத் தள்ள வேண்டும் என்று ஒருவன் பேசுகிறான்.இந்த தேர்தலுக்கு பிறகு அடுத்த நம் நாட்டில் தேர்தலே இருக்காது.அதாவது ஜனநாயக ஆட்சி இருக்காது. சர்வாதிகார ஆட்சி தான் இருக்கும் என்பதை அப்பட்டமாக தெரிவிக்கிறார்கள்.

இத்தனை பெரிய விஷமக்கருத்துக்களையும் விஷமக்காரிங்களையும் கொண்ட அவர்களோடு கைகோர்த்திருக்கிற அதிமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தால் இன்னும் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை நினைத்துப் பார்க்கவே முடிய வில்லை. எனவே எவர்கள் ஆட்சிக்கு வருகிறார்களோ இல்லையோ அவர்கள் வரக்கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். இந்த வாரத்தோடு அவர்களை இந்த நாட்டை விட்டே துறத்த வேண்டும்.அதற்கு நாம் அவர்களோடு நேருக்கு நேர் நின்று போர் செய்ய முடியாது.சண்டை போட முடியாது,அவர்களை எதிர்த்து நேருக்கு நேராக குரல் கொடுக்க முடியாது. எனவே இப்போது அவர்களையும் எதிர்க்கவும் அவர்களை விரட்டவும் அவர்களின் அநீதத்தைத் தடுக்கவும் நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் இந்த ஓட்டு மட்டும் தான்.

அதே போல் நாம் போடாமல் விடுகின்ற ஒவ்வொரு ஓட்டும் எதிரிகளின் வெற்றிக்கு காரணமாகி விடும். எனவே இந்த வகையில் நாம் போட வில்லையென்றால் அநீதத்தை தடுக்காமல் விட்டதோடு அநீதத்திற்கு துணை போன குற்றமும் வந்து விடும். எனவே எப்படி பார்த்தாலும் இன்றைய சூழலில் நாம் ஓட்டு போடுவது நம் மீது கட்டாய கடமையாக இருக்கிறது

அநியாயக்கார ஆட்சி செய்து கொண்டிருக்கிற அவர்களை விரட்ட நம் ஓட்டுக்களை அவர்களுக்கு எதிராக பதிவு செய்ய வேண்டும் அந்த அநியாயங்கள  தடுக்க நாம் கையொள வேண்டிய ஒரே வழிமுறை  இது தான். மட்டுமல்ல, அந்த எதிர்ப்பு ஓட்டுக்கள் ஒரே இடத்தில் போய் சேர வேண்டும். அப்படி சேராமல் அங்கும் இங்குமாக பிரிந்து விட்டால் மறுபடியும் அவர்கள் தான் ஆட்சியைப் பிடிப்பார்கள். இன்றைக்கு ஓட்டுக்களை பிரிப்பதற்கு அத்தனை சூட்சிகளையும் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். பார்ப்பதற்கு வெளிரங்கத்தில் அவர்களுக்கு பரம எதிரி போல் தெரியும்.ஆனால் உள்ளே அவர்களோடு ரகசியக்கூட்டனி வைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

முன்பு நடந்த மக்களவைத் தேர்தலில் அவர்கள் கடைபிடித்த தேர்தல் வியூகம் இது தான். உத்தரபிரதேசத்தில் இஸ்லாமியர்களின் வாக்கு அதிகம்.அங்கே பாஜகவின் ஆதரவாளர்களை விட பாஜாகவை எதிர்ப்பவர்கள் தான் அதிகம். ஆனாலும் உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியை பிடித்தது.காரணம் பாஜக வின் எதிர்ப்பு ஓட்டுகளை ஒரே இடத்தில் ஒன்று சேர விடாமல் பார்த்துக்கொண்டார்கள்.  பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்று ஆசைப்பட்ட மக்களின் ஓட்டுகள் ஒரே இடத்தில் ஒன்று சேராததின் விளைவு அந்த மக்கள் விரும்பாத பாஜக ஆட்சியே அவர்களுக்கு வந்து விட்டது.எனவே இந்த நேரத்தில் ரொம்ப விழிப்புணர்வோடு செயல்பட வேண்டிய தருணம் இது.

இஸ்லாம் விழிப்புணர்வு மார்க்கம் விழிப்புணர்வை தூண்டுகின்ற மார்க்கம். எப்போதும் விழிப்புணர்வோடும் கவனத்தோடும் இருக்க வேண்டும் என்று கற்றுத் தருகின்ற மார்க்கம். ஒரு முஸ்லிம் நிகழ்காலத்தோடு மட்டும் தன் வாழ்க்கையை நிறுத்திக் கொள்ளாமல் வருங்காலத்தைப் பற்றியும் யோசிக்க வேண்டும். தூரநோக்கு சிந்தனை இல்லாமல் வருங்காலத்தைப் பற்றிய கவலை இல்லாமல் நாளைய தினம் பற்றிய எண்ணங்களை விசாலமாக்கிக் கொள்ளாமல் இன்றைய தினம் நன்மையாக இருக்கிறது, இன்றைய தினம் அமைதியாக இருக்கிறது, இன்றைய தினம் பாதுகாப்பாக இருக்கிறது என்று மட்டும் தன் எண்ணங்களை சுருக்கிக் கொள்பவன் உண்மையான முஸ்லிமாக இருக்க முடியாது.

இஸ்லாம் என்பது வெறும் வணக்கங்களை மட்டுமே கற்றுத்தரும் மார்க்கமல்ல.எப்படி தொழ வேண்டும் எப்படி நோன்பு வைக்க வேண்டும், எப்படி ஹஜ் செய்ய வேண்டும் என்று வணக்கவியலை மட்டுமே கொண்ட மார்க்கமல்ல.அப்படி வணக்கங்களை மட்டுமே சொல்லித் தந்திருந்தால் இன்றைக்கு உலகில் இஸ்லாம் இந்தளவு விரிவடைந்திருக்காது, வெற்றி பெற்றிருக்காது. இஸ்லாம் உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்பதற்கும் மனித உள்ளங்களை தன் ஈர்பதற்கும் முக்கிய காரணமே இஸ்லாத்தில் எல்லாம் இருக்கிறது என்பது தான். பிறப்பு முதல் இறப்பு வரை நகம் வெட்டுவது முதல் நாடாளுகின்ற வரை அனைத்திற்கும் வழிகாட்டுதல் இஸ்லாத்தில் உண்டு. இஸ்லாத்தில் இல்லாத விஷயங்களே உலகத்தில் இல்லை.

அந்த அடிப்படையில் வெறுமனே வணக்கங்களை மட்டும் கற்றுத் தராமல் தூரநோக்கு சிந்தனை, எதிர்காலத்திற்கான திட்டமிடல், வரும் காலங்களில் நம்மை நோக்கி வரும் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ளுதல், வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கான நகர்வு என எல்லாவற்றையும் இஸ்லாம் கற்றுத் தந்திருக்கிறது. ஒரு முஸ்லிம் என்றைக்கும் தூர நோக்குச் சிந்தனையோடு இருக்க வேண்டும். வருங்காலத்திற்கான திட்டமிடலோடு வாழ்க்கையில் பயணிக்க வேண்டும்.எதைச் செய்தாலும் அதன் மூலம் வருகின்ற லாப நஷ்டங்களை வெற்றி தோல்விகளை பிளஸ் மைனஸ்களை யோசித்துச் செய்ய வேண்டும்.

இதற்கு முதல் முன்மாதிரியே நபி ஸல் அவர்கள் தான்.

 أن عائشةَ قالت: لما استُعزَّ برسولِ الله صلى الله عليه وسلم قال: ((مُروا أبا بكرٍ فلْيُصل بالناس، قالت: قلت: يا نبيَّ الله، إن أبا بكر رجلٌ رقيقٌ، ضعيفُ الصوت، كثيرُ البكاء، إذا قرأ القرآن! قال: ((مُروه فليُصلِّ بالناس))، قالت: فعُدتُ بمثلِ قولي، فقال: ((إنكن صواحبُ يوسف، فمُرُوه فليصلِّ بالناس))،

நபியவர்கள் தான் மரணிப்பதற்கு முன்பு தொழ வைக்க முடியாத நிலை வந்த போது ஹள்ரத் அபூபக்கர் ரலி அவர்களை அந்த இடத்தில் நின்று தொழ வைக்கச் சொன்னார்கள்.என் தந்தை மிகவும் பலவீனமானவர். அதிகம் அழக்கூடியவர் எனவே அவர் வேண்டாமே என்றெல்லாம் பலமுறை அன்னை ஆயிஷா ரலி அவர்கள் சொல்லியும் நபியவர்கள் அபூபக்கர் ரலி அவர்களைத்தான் தொழ வைக்க வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். அவர்களும் தொழுகை நடத்தினார்கள்.

நபியவர்களின் மறைவுக்குப் பின் யாரை கலீபாவாக நியமிப்பது என்ற பிரச்சனை எழுகிறது. நீண்ட குழப்பத்திற்குப் பிறகு எல்லோரும் அபுபக்கர் ரலி அவர்களை முன்மொழிந்தார்கள். அதற்கு மிக முக்கியமான காரணம் நபியவர்கள் அபூபக்கர் ரலி அவர்களை அன்றைக்கு இமாமாக நிறுத்திய அந்த நிகழ்வு தான்.

இந்த இரண்டு நிகழ்வுகளையும் பொருத்திப் பார்த்தால் நபி ஸல் அவர்களின் தீட்சன்யமான பார்வையும் தூரநோக்குச் சிந்தனையும் நமக்குத் தெரியும்.பலமுறை அன்னை ஆயிஷா ரலி அவர்கள் என் தந்தை அபூபக்கர் அவர்களை தொழ வைக்கச் சொல்ல வேண்டாம். அவரால் தொழ வைக்க முடியாது என்று சொல்லியும் அவர் தான் தொழ வைக்க வேண்டும் என்று நபி ஸல் அவர்கள் உறுதியாக சொன்னதற்கு காரணம்.என் மறைவிக்குப் பின்னால் என் இடத்தில் அவர் தான் நிற்க வேண்டும், கிலாஃபத்திற்கு அவர் தான் வர வேண்டும் என்பதை மறைமுகமாக உணர்த்தி விட்டார்கள். ஒரு வேலை அப்படி ஒரு நிகழ்வு நடக்க வில்லையென்றால் கலீஃபாவை தேர்ந்தெடுப்பதில் ஸஹாபாக்களுக்கு மத்தியில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டிருக்கும். பின்னால் அப்படி ஒரு குழப்பம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை முன்கூட்டியே சிந்தித்ததின் விளைவாகத்தான் நபி ஸல் அவர்கள் ஹள்ரத் அபூபக்கர் ரலி அவர்களை தொழுகைக்கு நிறுத்தினார்கள் என்பதை பார்க்கிறோம். எதிலும் தூரநோக்குச் சிந்தனை, தெளிவான சீரிய பார்வை வேண்டும் என்பதைத்தான் நபியின் இந்த அணுகுமுறை நமக்கு உணர்த்துகிறது.

அதே சமயத்தில் ஒருவரை நம்பி நாம் ஓட்டுப் போட்டோம், ஆனால் தேர்தலில் ஜெயித்த பிறகு அவர் மாறிப்போய் விட்டால் அதற்கு நாம் பொறுப்பல்ல. அதனால் நமக்கு எந்தக் குற்றமும் ஏற்படாது. ஃபிக்ஹில் تحري  என்ற ஒரு சொல் உண்டு. தேடித்தெரிதல் என்பது அதன் பொருள். ஒரு புது  ஊருக்கு  செல்பவர்  யோசிக்காமல்  கொள்ளாமல்  ஏதாவது  ஒரு திசையைப்  பார்த்து தொழுவிட்டார்.  பின்னர் கிப்லா வேறு  என்று  தெரிந்தால் அவர் திருப்பித்  தொழ  வேண்டும். அதே நபர் விசாரித்து அல்லது தேடிப்பார்த்து ஒரு திசையைப் நோக்கி தொழுதார். பிறகு அவருக்கு கிப்லா வேறு என்று தெரிந்தால் அவர் திருப்பி தொழ வேண்டியதில்லை என்று இஸ்லாமிய சட்டம் சொல்கிறது.

அந்த அடிப்படையில் ஓட்டுப் போடுவதற்கு முன்பு முன் எச்சரிக்கையோடு யாருக்கு போட வேண்டும். யாருக்கு போடுவது நல்லது, யார் நன்றாக செயல்படுவார் என்றெல்லாம் சிந்தித்து, அதன் பிறகு ஓட்டை செலுத்த வேண்டும் என்பதை இந்த சட்டத்தின் வாயிலாக நாம் அறிந்து கொள்கிறோம். 

அரசியல் சாக்கடை நமக்கெதுக்கு என்று ஒதுங்கி விடக்கூடாது. அரசியல் போர்வையில் நாட்டை துண்டாட நினைக்கிற ஒரு எதிரியை வீட்டுக்கு அனுப்ப நாம் களம் கண்டாக வேண்டும். அனைவரும் மறக்காமல் தவறாமல் ஜனநாயகக் கடமையாக இருக்கிற ஓட்டை கட்டாயம் போட வேண்டும். இறைவன் நமக்கு துணை நிற்பானாக!

 

 

 

  

1 comment: