Thursday, October 3, 2013

சிறுவர் பயான் ; அனாச்சாரம்

புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகட்டும்.ஸலாத்தும் ஸலாமும் நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களைப்பின்பற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் நம் அனைவர் மீதும் உண்டாகட்டும்.
மேடையில் அமர்ந்திருக்கும் மரியாதைக்குரிய தலைவர் அவர்களே!எங்களுக்கு சிறந்த வழிகாட்டுதலை வழங்கிக்கொண்டிருக்கும் மரியாதைக்குரிய ஆலிம் அவர்களே! இன்னும் மேடையில் அமர்ந்திருக்கும் ஏனைய ஆலிம்களே! பெரியவர்களே இந்த நிகழ்ச்சியை அவதானித்துக்கொண்டிருக்கும் பாசத்திற்குரிய தாய்மார்களே! பெரியோர்களோ மற்றும் சகோதரர்களே உங்கள் அனைவருக்கும் என் இதயம் எனும் பள்ளத்திலிருந்து துள்ளி எழும் ஸலாத்தை சொல்லி என் உரையைத் தொடங்குகிறேன். அஸ்ஸலாமு அலைக்கும். 

 எனக்கு வழங்கப்பட்டிருக்கும் தலைப்பு அனாச்சாரங்களின் பிடியில் நாம். 


கண்ணியத்திற்குறிய அல்லாஹ்வின் நல்லடியார்களே அல்லாஹ்வும் ரலூலும் எதை செய்ய வேண்டும் என்று முடிவு செய்து கொடுத்து விட்டார்களோ அதை செய்வது சுன்னத்தாகும்.அதற்கு மாற்றமாக எதை செய்தாலும் அதற்கு அனாச்சாரம் என்று சொல்லப்படும்.

அன்பிற்குறியவர்களே அல்லாஹ் ரசூல் காட்டித்தராத ஒரு விஷயத்தை செய்வது மற்ற தவறுகளைப்போன்று சாதாரண தவறு என்றோ மற்ற குற்றங்களைப்போன்று சாதாரண குற்றம் என்றோ சொல்லி விட முடியாது. மார்க்கம் காட்டித்தராத ஒரு அனாச்சாரத்தை, ஒரு மூட நம்பிக்கையை செய்வது பாவத்திலெல்லாம் மிகப்பெரிய பாவம்என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.ஏனெனில் இவ்வாறு அனாச்சாரத்தை செய்பவர்கள் புதிய மார்க்கத்தையே உற்பத்தி செய்கிறார்கள் என்று அர்த்தம்.அல்லாஹ் ரசூலோடு இந்த மார்க்கம் முடியவில்லை நானும் மார்க்கம் சொல்கிறேன் என்று அல்லாஹ் ரசூலோடு போட்டி போடுகிறார்கள் என்று அர்த்தம். எனவே அன்பிற்குரியவர்களே அனாச்சாரங்கள் விஷயத்தில் மூட நம்பிக்கைகள் விஷயத்தில் நாம் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்.

மனிதன் காலத்தை திட்டுகிறான் ஆனால் நானே காலத்தைப் படைத்தவன்,என் கையில் தான் இரவு பகல் உள்ளன என்று அல்லாஹ் கூறுகிறான். ஆனால் இன்றைக்கு கெட்ட நேரம் என்றும் கெட்ட நாள் என்றும் கெட்ட மாதம் என்றும் கெட்ட சகுணம் என்றும் எத்தனை மூடநம்பிக்கைகள் நம்மிடத்திலே தோன்றி விட்டன.குர்ஆன் ஹதீஸ் படித்த நம் வீடுகளிலும் இந்த மாதிரியான வார்த்தைகள் நடமாடுகிறது என்பதுதான் வேதனைக்கும் கேவலத்திற்கும் உரிய விஷயமாக இருக்கிறது. 

 இன்னைக்கு வீட்டை விட்டு வெளியேறும் போதோ,வீதியில் நடந்து செல்லும்போதோ,பயணங்களில் செல்லும்போதோ,அல்லது ஏதாவது ஒரு நேரத்தில் ஏதாவது ஒரு தடங்கள் ஏற்பட்டு விட்டாலோ ச்சே நேரமே சரியில்ல இன்னைக்கு யார் மூஞ்சில முழிச்சனோ----- அப்டின்னு சொல்றது, பிள்ளைக்கு மாறி மாறி ஏதாவது நோய் வந்துகிட்டே இருந்தா போதும் உடனே---ச்சே இவேன் புறந்த நேரமே சரியில்லப்பா அப்டின்னு சொல்றது.வீட்டுக்கு மருமவ வந்த நேரம்பாத்து ஏதாவது ஒரு சிக்கல் வந்திடுச்சின்னா போதும் இந்த சணியன் வந்த நேரந்தா---வீட்ல ஒவ்வொரு முஸீபத்தா---- நடக்குது.அப்படின்னு சொல்றது.தெருவுல போகும்போது ஏதாவது பூன குறுக்க போயிடுச்சின்னா பூன குறுக்கப்போயிடுச்சே இன்னைக்கி போற காரியம் உருப்படாது அப்டின்னு சொல்றது.நம்மளக்கு புடிக்காதவன் யாரையாவது பாத்தன்னா உடனே ஓன் மூஞ்சில முழிச்சிட்டேன்லே---இன்னைக்கி உருப்பட்ட மாதிரி தான் அப்டின்னு சொல்றது. இதெல்லாந்தான் இன்னைக்கி நம்ம வாயிலயிருந்து வரக்கூடிய வேத வசனங்கள். நம்ம வாயில குர்ஆன் வசனம் வருதோ இல்லையோ இது அடிக்கடி வரும். 

 அன்பிற்குரிய தாய்மார்களே இதுலாம் எங்கயிருந்து வந்துச்சி யார் சொல்லிக்கொடுத்தா இப்டில்லாம் சொல்றது சரிதானா நபி ஸல் அவங்க இப்டித்தா கத்துக்கொடுத்தாங்களா ஸஹாபாக்கள் இப்டித்தா சொல்லிக்கிட்டு இருந்தாங்களா இப்டித்தான் குர்ஆன்ல வந்திருக்குதா அப்டின்லாம் கொஞ்சங்கூட பாக்குறதும் கிடையாது யோசிக்கிறதும் கிடையாது. ஆமா நாம எப்டி யோசிப்போம் ஏன்னா நம்ம தான் முஸ்லிமே இல்லியே. என்னடா இவன்மேடையில ஏறி நம்லைள்ளாம் பாத்து காஃபிர்னு சொல்றானேன்னு நினைக்கிறீங்களா-----

அன்பிற்குறிய தாய்மார்களே பாய்மார்களே எப்ப ஒருத்தன் அல்லாஹ் படைச்ச காலத்தையும் நேரத்தையும் திட்ட ஆரம்பிச்சிட்டானோ அப்ப அவன் முஸ்லிமாவே இருக்க முடியாது.ஏன்னா ஒரு பொருள் சரியில்லஞ் சொல்லி நாம திட்டுனா அந்த திட்டு அந்த பொருள தயாரிச்சவனுக்குத்தான் போய் சேரும்.அதே மாதிரி காலத்த படைச்சது அல்லாஹ் இப்ப ஒருத்தன் காலமே சரியில்ல நேரமே சரியில்லன்னு திட்டுனா அவன் அல்லாஹ்வே திட்டுவதாகத்தான் அர்த்தம். அல்லாஹ்வை திட்டபவன் எப்டி முஸ்லிமா இருக்க முடியும்? அதனாலத்தான் தாய்மார்களே காலத்த திட்டுறவங்க முஸ்லிமே இல்லன்னு சொன்னேன். அன்புத்தாய்மார்களே இப்ப நீங்க யாருன்னு நீங்களே முடிவு பன்னிக்கோங்க.

அதுமட்டுமில்லாம இன்னைக்கி ஸஃபர் மாசம் வந்திடுச்சின்னா போதும் உடனே சனியம் புடிச்ச மாசம் வந்திடுச்சின்னு சொல்லி அதுல எந்த நல்ல காரியத்தையும் செய்யக்கூடாது--- அப்டி செஞ்சன்னா அந்த காரியம் உருப்படாது அபடின்னு சொல்றது,இந்த மாசத்தோட கடைசி புதன் கிழமைக்கி ஒடுக்கத்து புதன் என்று சொல்லி அன்னைக்கி எண்ண தேச்சி குளிக்கிறது மாஇலையில குர்ஆன் ஆயத்த எழுதி குடிக்கிறது என்று நாம செய்யக்கூடிய அனாச்சாரங்களுக்கும் அட்டூழியங்களுக்கும் அளவே இல்லாமப்போச்சி.

அன்பிற்குரிய தாய்மார்களே யாரோ நம்ம முன்னோர்கள் செஞ்சதனால அது சரின்னு ஆயிடாது.எதோ நம்ம முன்னார்கள் அறியாம செஞ்சிருப்பாங்க அத நாங்களும் செஞ்சிதான் ஆவோம்னு சென்னா நாம் அழிவைத்தான் சந்திக்க வேண்டும் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். ஷுஐப் அலை அவங்களோட கூட்டார்கள் எங்களோட முன்னோர்கள் செஞ்ச காரியத்த செய்யக்கூடாதுன்னு தடுக்குறதுக்கு நீங்க யாருன்னு ஷுஐப் நபியப்பாத்து கேட்டாங்க அதனாலத்தான் அழிஞ்சி போனாங்க. 

 எனவே அன்பு தாய்மார்களே இந்த மாதிரியான அனாச்சாரங்களையும் மூடநம்பிக்கைகளையும் விட்டு விட்டு அல்லாஹ் ரசூல் சொன்ன வழிகளில் நடப்பதற்கு வல்ல இறைவன் நம் எல்லோருக்கும் அருள் புரிவானாக என்று கூறி என் உரையை முடிக்கிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்.

No comments:

Post a Comment