இறைத்தூதர்கள் செய்த பணியை அவர்கள் இடத்தில் இருந்து நிறைவேற்றுவதற்கு அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வலிமார்கள். தங்களுக்கென்று தனி அடையாளங்களோடு தனி முகவரிகளோடு இல்லாமல் மக்களோடு மக்களாக மனிதர்களில் மனிதர்களாக இருக்கிற காரணத்தினால் நிறைய வலிமார்கள் அறியப்படுவதில்லை.நிறைய வலிமார்கள் தங்களை யாரென்று காட்டிக் கொள்வதுமில்லை என்று வலிமார்கள் குறித்த ஒரு சிறு அறிமுகத்தை கடந்த வாரம் நாம் பார்த்தோம்.
மக்களோடு மக்களாக இருக்கிற வலிமார்கள் தங்களை
அடையாளப்படுத்திக் கொள்ளா விட்டாலும் தங்களை யாரென்று இனம் காட்டா விட்டாலும்
அவர்களிடம் இருக்கும் சில தன்மைகள் மூலம் சில குணங்கள் மூலம் அவர்களை நாம் அறிந்து
கொள்ள முடியும்.
முதல் அடையாளம் ; அல்லாஹ் குர்ஆனில் வலிமார்களை
அறிமுகப்படுத்துகிற போது
أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ
عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
அறிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக இறை
நேசர்களுக்கு பயமும் இருக்காது. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் : 10 ; 62)
قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ لَأُنَاسًا مَا هُمْ بِأَنْبِيَاءَ وَلَا شُهَدَاءَ
يَغْبِطُهُمْ الْأَنْبِيَاءُ وَالشُّهَدَاءُ يَوْمَ الْقِيَامَةِ بِمَكَانِهِمْ مِنْ
اللَّهِ تَعَالَى قَالُوا يَا رَسُولَ اللَّهِ تُخْبِرُنَا مَنْ هُمْ قَالَ هُمْ قَوْمٌ
تَحَابُّوا بِرُوحِ اللَّهِ عَلَى غَيْرِ أَرْحَامٍ بَيْنَهُمْ وَلَا أَمْوَالٍ يَتَعَاطَوْنَهَا
فَوَاللَّهِ إِنَّ وُجُوهَهُمْ لَنُورٌ وَإِنَّهُمْ عَلَى نُورٍ لَا يَخَافُونَ إِذَا
خَافَ النَّاسُ وَلَا يَحْزَنُونَ إِذَا حَزِنَ النَّاسُ وَقَرَأَ هَذِهِ الْآيَةَ
{ أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ
عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ }
அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் இருக்கிறார்கள்.
அவர்கள் நபிமார்களும் அல்ல. இறைவனின் பாதையில் உயிர் நீத்தவர்களும் அல்ல. இவர்களுக்கு
அல்லாஹ் விடத்தில் கிடைக்கும் அந்தஸ்தைப் பார்த்து நபிமார்களும் தியாகிகளும் பொறாமைப்படுவார்கள்
என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். சஹாபாக்கள், அவர்கள் யார்? என எங்களுக்குக் கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே என்று
கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் தங்களுக்கிடையே இரத்த உறவிற்காகவோ, கொடுத்து வாங்கிக் கொள்ளும் செல்வங்களுக்காகவோ அல்லாமல்
அல்லாஹ்விற்காக ஒருவரையொருவர் நேசித்துக் கொண்டவர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக!
நிச்சயமாக அவர்களுடைய முகங்கள் ஒளியாக இருக்கும். அவர்கள் ஒளியின் மீது இருப்பார்கள்.
மக்கள் அஞ்சும் போது அவர்கள் அஞ்சமாட்டார்கள். மக்கள் கவலைப்படும் போது அவர்கள் கவலைப்பட
மாட்டார்கள் என்று கூறி விட்டு அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்
என்ற வசனத்தை படித்துக் காட்டினார்கள். (அபூதாவூத் : 3060)
கடந்த காலத்தைப்பற்றிய கவலையோ
எதிர்காலத்தைப்பற்றிய அச்சமோ அவர்களுக்கு இருக்காது என்று
குறிப்பிடுகிறான்.நம்மிடம் இருக்கிற மிகப்பெரிய பலவீனமே இந்த இரண்டும் தான். கடந்த
காலத்தைப்பற்றிய கவலையும் எதிர்காலத்தைப்பற்றிய அச்சமும். இப்படி ஆகி விட்டதே
அப்படி ஆகி விட்டதே இது நடந்து விட்டதே அது நடந்து விட்டதே வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு
விட்டதே போட்ட முதலெல்லாம் வீணாப் போய் விட்டதே பயிரெல்லாம் வாடிப் போய் விட்டதே
என்று கடந்த காலத்தைப் பற்றிய கவலை ஒரு பக்கம்.அப்படி ஆகி விடுமோ இப்படி ஆகி விடுமோ
வியாபாரம் நஷ்டமாகி விடுமோ போட்ட முதல் வீணாப்போய் விடுமோ பயிர் வாடிப்போய் விடுமோ
வாழ்க்கையில் தோற்றுப் போய் விடுவோமோ என்று எதிர் காலத்தைப் பற்றிய அச்சம் ஒரு
பக்கம்.கல்யாணம் ஆகாதவர்களுக்கு கல்யாணம் செய்ய வேண்டும் என்ற கவலை, கல்யாணம் ஆனவர்களுக்கு கல்யாணம் ஆகி
விட்டதே இனி என்ன நடக்க போகிறதோ என்ற அச்சம், வீட்டை கட்டுவதற்கு முன்பு வீட்டை
கட்ட வேண்டுமென்ற கவலை,கட்டி முடித்த
பிறகு வாங்கிய கடனை அடைக்க வேண்டுமென்ற அச்சம்.
ஆக இந்த இரண்டு இல்லாத மனிதர்களை அதிகம்
பார்க்க முடியாது. நம் வாழ்வில் இருக்கிற சந்தோஷத்தையும் நிம்மதியையும் பறித்து
நம்மை மீளாத் துயரத்தில் நிறுத்தி விடுகிற மிக ஆபத்தான விஷயங்கள் இந்த இரண்டும்
தான். எனவே நம் வாழ்வில் சந்தோஷம் நிலைக்க வேண்டுமென்றால் நிம்மதி பெருக வேண்டுமென்றால்
முதல்ல இந்த இரண்டையும் நம்மிலிருந்து தூக்கி எறிந்து விட வேண்டும்.வலிமார்களுக்கு
இந்த இரண்டும் இருக்காது என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். இந்த இரண்டும் இல்லாத
அமைதியான உள்ளம் கொண்டவர்கள் வலிமார்கள்.
ஹள்ரத் கௌதுல் அஃலம் ரஹ் அவர்களிடம் உங்கள்
கப்பல் கவிழ்ந்து விட்டது என்று சொல்லப்பட்ட போது அவர்கள் உள்ளம் கவிழ வில்லை.எது
நடந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.இருப்பதைக் கொண்டு பொருந்திக் கொள்ள
வேண்டும்.இது இறை நேசர்களின் தன்மை.
இறைநேசர்களுக்கான இரண்டாவது தன்மை ; இஸ்திகாமத்.எதையும் நிலையாகச் செய்வது,
தொடர்படியாக செய்வது.மார்க்கம் கடமையாக்கி இருக்கிற மார்க்கம் வலியுறுத்துகிற நல்ல
காரியங்களை தொடர்ந்து செம்மையாக செய்து வருவது இறைநேசர்களின் சிறந்த பண்புகளில்
ஒன்று.
قال الإمام ابن حجر العسقلاني رحمه الله:
المراد بولي الله: العالم بالله، المواظب على طاعته، المخلص في عبادته؛ (فتح الباري)
இறைநேசர் என்பவர் இறைவனை அறிந்தவர்,இறை
வணக்கத்தின் மீது தொடர்படியாக இருப்பவர்,மனத்தூய்மையுடன் இறை வணக்கத்தில்
ஈடுபடுபவர். (ஃபத்ஹுல் பாரி)
كن طالبا للاستقامة لا طالبا للكرامة
வலிமார்களிடம்
நீங்கள் கராமத்தைத் தேடாதீர்கள். இஸ்திகாமத்தைத் தேடுங்கள் என்று ஞானிகள்
கூறுவார்கள்.
عن سعيد بن المسبب - رحمه الله - قال:
(ما فاتتني التكبيرة الأولى منذ خمسين سنة، وما نظرت في قفا رجل في الصلاة منذ خمسين
سنة
ஐம்பது வருடங்களாக எனக்கு தக்பீர் தஹ்ரீமா
தவறியதில்லை. ஐம்பது வருடங்களாக தொழுகையில் எனக்கு முன்னால் இருக்கும் மனிதரின் பின்
கழுத்தை நான் பார்த்ததில்லை என்று ஸயீத் பின் முஸய்யப் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
ஜுனைதுல் பக்தாதி ரஹ் அவர்களிடம் ஒருவர்
உங்களிடம் நான் எந்த அற்புதத்தையும் பார்க்க வில்லையே என்று கேட்பார். அதற்கு
அவர்கள் நான் என்றைக்காவது ஜமாஅத் தொழுகையை விட்டு பார்த்திருக்கிறாயா என்று
கேட்பார்கள். அவர் இல்லை என்று சொல்வார். இதை விட வேறு என்ன அற்புதத்தை நீ எதிர்
பார்க்கிறாய் என்று கேட்பார்கள்.
இறைநேசர்களை அடையாளம் கண்டு கொள்ள சொல்லப்படும் மூன்றாவது அடையாளம் ; நஃப்ஸை கட்டுப்படுத்தும் தன்மை.நஃப்ஸ் எதைச் சொல்கிறதோ அதற்கு மாற்றமாக
நடப்பது.
காரியங்களில் பேணுதல் வேண்டும் என்று நாம்
சொல்கிறோம்.பேணுதல் என்றால்
كل ما شككت فيه فالورع اجتنابه
சந்தேகம் வரும் காரியத்தை விட்டு விடுவதற்குப்
பெயர் தான் பேணுதல்.
ஒரு பொருள் ஹலால் என்று உறுதியாக தெரிந்தால்
அதை நாம் செய்வோம்.ஹராம் என்று உறுதியாக தெரிந்தால் அதை விட்டு விடுவமோ.ஆனால் ஒரு
பொருள் ஹலாலா ஹராமா என்பதில் சந்தேகம் ஏற்படுகிறது.வெளியூரில் ஒரு கடைக்கு சாப்பிட
செல்கிறோம்,அங்கை இறைச்சி ஹலாலா ஹராமா என்பதில் சந்தேகம் ஏற்படுகிறது.குழப்பம்
ஏற்படுகிறது என்றால் அதை தவிர்ந்து கொள்ள வேண்டும்.இதற்குப் பெயர் தான் பேணுதல்.
ஆனால் பேணுதலில் உச்சகட்டம் என்பது ترك بعض الحلال خشية الوقوع في الحرام ஹராம் நிகழந்து விடுவமோ என்ற
அச்சத்தில் ஹலாலையே விட்டு விடுவது. ஆனால் வலிமார்களின் தன்மை என்னவென்றால் ஹலால்
ஹராம் என்றெல்லாம் பிரித்துப் பார்க்காமல் நஃப்ஸ் கேட்கிற அத்தனைக்கும் மாற்றம்
செய்வார்கள். இன்றைக்கு நாம் என்ன செய்வோம், மீன் சாப்பிட வேண்டுமென்ற ஆசை வந்தால்
மீன் சாப்பிடுவோம்,கறி சாப்பிட வேண்டுமென்ற ஆசை வந்தால் கறி சாப்பிடுவோம், ஆனால்
வலிமார்கள் ஒரு விஷயத்தில் ஆசை வரும் போது அதை செய்ய மாட்டார்கள்.
هشام بن حسان قال: مررت بالحسن البصري وهو
جالس وقت السحر فقلت: يا أبا سعيد مثلك يجلس في هذا الوقت ؟ قال: إني توضأت وأردت نفسي
على الصلاة فأبت علي، وأرادتني على أن تنام فأبيت عليها
ஹிஷாம் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ; ஹஸன் பஸரி ரஹ் அவர்களை நான் கடந்து சென்றேன். அவர்கள்
ஸஹருடைய வேளையில் அமர்ந்திருந்தார்கள். உங்களைப் போன்றவர்கள் இந்த நேரத்தில் அமர்ந்திருக்க
வேண்டுமா என்று கேட்டேன். அதற்கவர்கள் தொழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
ஆனால் அதை என் நஃப்ஸ் மறுக்கிறது. தூங்க வேண்டும் என்று என் நஃப்ஸ் விரும்புகிறது.
அதை நான் மறுக்கிறேன் என்றார்கள்.
وعن سري السقطي أنه منذ أربعين سنة يشتهي
أن يغمس جزرة في دبس فما فعل
ஸிர்ரி ஸிக்தி ரஹ் அவர்கள் நாற்பது ஆண்டுகளாக
கேரட்டை ஒரு இனிப்புடன் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால்
அதை அவர்கள் செய்யவே இல்லை.
இது நஃப்ஸோடு போராடும் போராட்டம். மனிதனுக்கு மிகப்பெரிய
மூன்று எதிரிகள் உண்டு. மனோஇச்சை, ஷைத்தான், நஃப்ஸ். இதில் மிகப்பெரிய எதிரி
நஃப்ஸ். அந்த நஃப்ஸோடு போராடும் போராட்டம் மிகவும் கடினமானது. இது எல்லாருக்கும்
சாத்தியமாகாது.வலிமார்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே சாத்தியம்.
قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس
فتمنوا الموت إن كنتم صادقين
யூதர்களே! மற்ற மனிதர்களை விட நீங்கள் தான்
அல்லாஹ்வின் நேசர்கள் என்று எண்ணினால் மேலும் [ அவ்வெண்ணத்தில் ] உண்மையாளர் களாக இருந்தால் நீங்கள் மரணத்தை விரும்புங்கள் (அல்குர்ஆன் : 62 ; 6)
இந்த வசனத்திலிருந்து,
ஒருவர் அல்லாஹ்வின் நேசராக இருந்தால் அவருக்கு மரணத்தின்
மீது ஆசை வரும். வர வேண்டும்.
மரணப்படுக்கையில் இருந்த ஹழ்ரத் பிலால் {ரலி} அவர்களைப் பார்த்து வேதனைப்பட்ட அவர்களின் மகளிடம் இன்றைக்குப்
பிறகு உன் தந்தைக்கு என்றைக்கும் கஷ்டம் இல்லையே!
محمدا واصحابه غدا نلقي என் நேசர் ரசூல் ﷺ அவர்களையும், அவர்களின் தோழர்களையும் சந்திக்கப்
போகிறேன் என்று கூறினார்கள். (வஸாயா ரசூல்)
இப்படி இறைநேசர்களுக்கு பல தன்மைகள் பல
அடையாளங்கள் சொல்லப்பட்டாலும் எல்லாவற்றும் முத்தாய்ப்பாக நபி ﷺ
அவர்கள் ஒரு அடையாளத்தைச் சொன்னார்கள்.
قالَ رجلٌ يا رسولَ اللَّهِ مَن أولياءُ اللَّهِ قالَ الَّذينَ إذارُءوا ذُكِرَ اللَّهُ (صحيح الجامع)
இறைநேசர்கள் யார் என்று ஒருவர் கேட்டார். அப்போது
நபி ﷺ
அவர்கள், அவர்களைக் கண்டால் இறைவனின் நினைவு வரும் என்றார்கள்.
ஒருவர் என்ன துறையில் இருக்கிறாரோ அந்த துறை சார்ந்த விஷயங்கள் தான் அவரைப் பார்க்கிற போது நம் நினைவுக்கு வரும்.ஒரு மருத்துவரைப் பார்க்கிற போது நோய்நொடிகளும் மருத்துவமனையும் நம் ஞாபகத்திற்கு வரும், ஒரு வக்கீலைப் பார்க்கிற போது சட்டப் பிரச்சனைகளும் நீதிமன்றமும் நம் எண்ணத்திற்கு வரும்,ஒரு நாட்டின் அரசியல் தலைவரைப் பார்க்கிற போது நாட்டின் நிலவரங்கள் நம் சிந்தனையை தட்டி எழுப்பும். இப்படி ஒவ்வொரு துறை சார்ந்தவர்களும் நமக்கு ஒவ்வொரு விஷயத்தை நினைவுபடுத்துவதைப் போல வலிமார்கள் நமக்கு அல்லாஹ்வை நினைவுபடுத்துகிறார்கள்.யாரைப் பாரத்தவுடன் அல்லாஹ்வின் நினைவு நமக்கு வருகிறதோ அவர் தான் வலியுல்லாஹ்,இறை நேசர்.
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு அல்ஹம்து லில்லாஹ்.
ReplyDeleteஅல்லாஹ் உங்களுக்கு நிறைவான கல்வியையும் கூர்மையான சிந்தனையும் ஆஃபியத்தையும் தந்தருள்வானாக ஆமீன் ஆமீன்.
ஆமீன் ஆமீன்
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDeleteஅருமை மவ்லானா
ReplyDelete