Friday, June 24, 2022

குரல் கொடுப்போம் வாருங்கள்




நாட்டில் நடக்கிற அநீதங்களையும் அக்கரமங்களையும் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கிற அடக்குமுறைகளையும் கடந்த வாரம் நாம் அலசினோம். இவ்வாறு அநீதங்களும் அக்கரமங்களும் அடக்குமுறைகளும் நடக்கிற போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இன்ஷா அல்லாஹ் இந்த வாரம் நாம் பார்க்க இருக்கிறோம். இதுமாதிரியான நேரங்களில் நாம் நான்கு விஷயங்களை செய்ய வேண்டும். ஒன்று நாம் பாவங்களை குறைத்துக் கொண்டு செய்த பாவங்களுக்காக அல்லாஹ்விடம் தவ்பா செய்ய வேண்டும். ஏனென்றால் நமக்கு ஏற்படும் அத்தனை சோதனைகளுக்கும் காரணம் நம் பாவங்கள் தான்.

ظَهَرَ الْفَسَادُ فِى الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ اَيْدِى النَّاسِ لِيُذِيْقَهُمْ بَعْضَ الَّذِىْ عَمِلُوْا لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‏

மனிதர்களின் கைகள் தேடிக்கொண்டதன் காரணமாகக் கடலிலும் தரையிலும் அழிவு வேலைகள் (அதிகமாகப்) பரவி விட்டன. அதிலிருந்து அவர்கள் விலகிக் கொள்வதற்காக, அவர்களின் தீய செயல்களில் சிலவற்றின் தண்டனையை அவர்கள் (இம்மையிலும்) சுவைக்கும்படி அவன் செய்ய வேண்டியதாகிறது. (அல்குர்ஆன் : 30:41)

جـاء رسـول عمـر بـن الخطـاب مـن إحـدى الغـزوات فبشـره بـالنصـر

فسـأل عمـر بـن الخطـاب متـى بـدأ القتـال ؟؟

فقـالـوا : قبـل الضحـى ..

وقـال : متـى كـان النصـر ؟

فقـالـوا : قبـل المغـرب ...

فبكـى سيـدنـا عمـر حتـى ابتلـت لـحيتـه

فقـالـوا : يـا أميـر المـؤمنـين نبشـرك بـالنصـر فتبكـي ؟

فقـال رضـي الله عنـه :

" والله إن البـاطـل لا يصمـد أمـام الحـق طـوال هـذا الـوقـت

إلا بـذنـب أذنبـتمـوه أنتـم أو أذنبتـه أنـا

போர்க்களம் ஒன்றில் வெற்றி கிடைத்து விட்டதாக உமர் ரலி அவர்களிடம் செய்தி சொல்லப்பட்ட போது, போர் எப்போது தொடங்கியது என்று கேட்டார்கள். முற்பகல் என்று சொல்லப்பட்டது. எப்போது வெற்றி கிடைத்தது என்று கேட்டார்கள். மக்ரிப் தொழுகைக்கு முன்பு என்று சொல்லப்பட்டது. அதைக் கேட்டு அழுதார்கள். காரணம் கேட்ட போது சத்தியத்திற்கு முன்பு அசத்தியம் வீழாமல் பகல் முழுக்க நீடித்திருந்தது என்றால் அதற்கு ஒன்று நீங்கள் பாவம் செய்திருக்க வேண்டும். அல்லது நான் பாவம் செய்திருக்க வேண்டும் என்றார்கள்.

தோல்வி கிடைப்பதல்ல, வெற்றி தாமதமாகுவது கூட பாவங்களால் தான் என்பதை இந்நிகழ்வின் மூலம் நாம் தெரிந்து கொள்கிறோம். எனவே முதலில் நாம் தவ்பா செய்ய வேண்டும்.

இரண்டாவது உறுதியான இறை நம்பிக்கை நமக்கு வேண்டும்.எந்த சூழலிலும் இறை நம்பிக்கையில் ஒரு துளி கூட குறைந்து விடக்கூடாது. அல்லாஹ் நமக்கு உதவி செய்வான்,நமக்கு வெற்றியைத் தருவான்,நம்மை கை விட மாட்டான் என்று உறுதியாக நம்ப வேண்டும்.

மக்காவாசிகள் நபி அவர்களை ஏற்றுக் கொள்ளாத போது வெளியூர்வாசிகளாவது தன்னை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்பிக்கையில் தான் அவர்கள் தாயிஃப் நகரத்திற்கு சென்றார்கள். தாயிஃப் மக்கள் தனக்கு உதவி செய்வார்கள். தனக்கு வரவேற்பளிப்பார்கள். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர் பார்த்து அங்கே சென்றார்கள். ஆனால் அங்கே என்ன நடந்தது என்று நமக்கெல்லாம் தெரியும். அங்கே அவர்களுக்கு ஏமாற்றமும் அவமரியாதையும் தான் மிஞ்சியது. நபியை விரட்டியடித்தார்கள் சிறுவர்களை வைத்து கல்லால் அடித்து அவர்களை துரத்தினார்கள்.

فقال له زيد بن حارثة : كيف تدخل عليهم وقد أخرجوك ؟ يعني قريشا فقال : [ يا زيد إن الله ناصر دينه ومظهر نبيه.

அப்போது ஜைத் பின் ஹாரிஸா ரலி அவர்கள் மீண்டும் எப்படி மக்காவிற்குள் நுழைவது என்று கேட்டார்கள். அப்போது நபி அவர்கள்  நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய தீனுக்கு உதவி புரிவான்.தன்னுடைய நபிக்கு வெற்றியைத் தருவான் என்றார்கள்.

இந்த வார்த்தையை நபி அவர்கள் எந்த மாதிரியான சூழ்நிலையில் சொன்னார்கள் என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். நாமும் இப்படியெல்லாம் சொல்வோம். அல்லாஹ் எனக்கு உதவி செய்வான். அல்லாஹ் என்னைக் காப்பாற்றுவான், அல்லாஹ் என்னை கை விட மாட்டான் என்று சொல்லுவோம். எப்போது என்றால் எல்லாம் கைகூடி வருகிற பொழுது, எல்லா உதவிகளும் நம் கண் முன்னால் தெரிகின்ற பொழுது, வெற்றிக்கான வாசல்கள் எல்லாம் திறக்கப்படுகிற போது, சூழ்நிலைகளெல்லாம் நமக்கு சாதகமாக அமைகிற போது. சொல்வோம். ஆனால் அன்றைக்கு நபிகள் நாயகம் அவர்களின் சூழ்நிலை என்ன ? தனக்கு பக்கபலமாக இருந்த அபூதாலிப் போய் விட்டார்கள். அவ்வப்போது ஆறுதல் வார்த்தைகளை சொல்லி அவர்களை உற்சாகப்படுத்திய அன்னை கதீஜா ரழி அவர்கள் போய் விட்டார்கள். சொந்த ஊர் மக்கள் அவர்களை துரத்துகிறார்கள் ஆறுதலும் உதவியும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்ற வெளியூர் மக்களும் அவர்களை விரட்டி அடிக்கிறார்கள்.உதவிக்கரம் நீட்ட ஆளில்லை. அரவணைக்க ஆளில்லை. தோள் கொடுக்க ஆளில்லை.சூழ்நிலைகள் அவர்களுக்கு சாதகமாக இல்லை. அப்போது அவர்கள் வெற்றி பெறுவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. இந்த நிர்க்கதியான சூழ்நிலையிலும் அல்லாஹ் இந்த தீனுக்கு உதவி செய்வான். அல்லாஹ் என்னை பாதுகாப்பான். எனக்கு கண்ணியத்தைத் தருவான் என்று சொன்னார்கள் என்றால் அவர்களின் மிக உயர்ந்த ஈமானிய பலத்தையும் இறை நம்பிக்கையின் ஆழத்தையும் இந்த வரலாறு நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

தொடர்ந்து நமக்கு எதிரான அடக்குமுறைகளும் அநீதங்களும் நடந்து நாம் நசுக்கப்பட்டாலும் நிச்சயம் ஒரு நாள் நம் கரம் ஓங்கும். அதற்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கும் என்று நம்ப வேண்டும்.

மூன்றாவது நம் துஆவை கை விட்டு விடக்கூடாது. சூழ்நிலைகள் மாறுவதற்கும் கண்ணியமான பாதுகாப்பான வாழ்க்கை நமக்கு கிடைப்பதற்கும் இறைவனிடம் அதிகம் பிரார்த்திக்க வேண்டும். இஸ்லாமிய வரலாற்றில் பல கட்டங்களில் இஸ்லாமியர்களுக்கு வெற்றி கிடைக்க காரணமாக அமைந்தது துஆ தான்.

வரலாற்றிலே இரண்டு நிகழ்வு உண்டு. ஒன்று இஸ்லாமிய வரலாற்றில் நடந்த முதல் போர்க்களம், இஸ்லாத்திற்கு மகத்தான வெற்றியை பெற்றுத் தந்ததோடு இஸ்லாமிய சமூகம் உணர்ந்து கொள்ளும் படியான பல்வேறு பாடங்களையும் படிப்பினைகளையும் பெற்றுத்தந்த பத்ர் போர்க்களம். இன்னொன்று தாவூத் அலை அவர்கள் ஜாலூத் மன்னனை வீழ்த்திய வரலாறு.

ஹழ்ரத் மூஸா அலை அவர்களுக்குப் பின் பனூ இஸ்ரவேலர்களிடையே நீண்ட காலமாக எந்த நபியும் வரவில்லை. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி ஜாலூத் என்ற கொடிய மன்னன் பனூ இஸ்ரவேலர்களை கொடுமைப் படுத்தினான்,,அநியாயமாக அவர்களைக் கொன்று குவித்தான், அவர்களின் பொருட்களை சூரையாடினான். இதனால் அவர்கள் மிகப்பெரும் கொடுமைகளுக்கு உள்ளானார்கள்.இப்படியே நாட்கள் ஓடிக் கொண்டிருந்தது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர்களுக்கு ஷம்வீல் என்ற ஒரு நபியை அல்லாஹ் அனுப்பி வைத்தான். பனூ இஸ்ரவேலர்கள் அந்த நபியிடம் சென்று எங்களுக்கு ஓர் அரசனை ஏற்படுத்தித் தர வேண்டும், அந்த அரசனின் துணையோடு அந்த கொடிய மன்னனான ஜாலூத்தோடு போர் புரிய வேண்டும். அதற்காக அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள் என்று கேட்டார்கள். அந்த நபியும் அதை ஏற்றுக் கொண்டு அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள். அல்லாஹுத்தஆலா தாலூத் அரசரை அவர்களுக்குக் கொடுத்தான். தாலூத் மன்னர் சுமார் 70,000 மக்களை ஒன்று திரட்டி போருக்காக ஆயத்தமானார். மக்களே! நீங்கள் ஜாலூத்தை வெல்லப் புறப்படுகிறீர்கள். வழியில் அல்லாஹ்வின் சோதனை ஏற்படும். அந்த நேரத்தில் என் சொற்படி நடந்தால் தான் வெற்றி பெற முடியும். பாலைவனப் பிரதேசத்தில் நீங்கள் நடந்து செல்லும் போது தண்ணீர் தாகமெடுத்து நாவெல்லாம் வரண்டு போகும். பாலஸ்தீனுக்கும் ஜோர்டானுக்கும் இடையே ஒரு ஆறு ஓடிக் கொண்டிருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். அதன் தண்ணீர் மிகவும் சுவையாக இருக்கும். அதிலிருந்து நீங்கள் ஒரு மிடறுக்கு மேல் குடிக்க கூடாது. மீறி அதிகமாகக் குடித்தால் எங்கள் கூட்டத்தை விட்டு விலகி விடுவீர்கள் என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னபடி அந்த ஆறு வந்தது. அந்த தண்ணீரை சொற்ப நபர்களைத் தவிர அனைவரும் வயிறு முட்ட குடித்தார்கள். அதனால் எழுந்திருத்து நடக்க முடியாமல் ஆகி விட்டார்கள்.

அந்த சொற்ப நபர்கள் மட்டுமே அந்த ஆற்றைக் கடந்து போனார்கள் ஆனால் அங்கே ஜாலூத் மன்னனையும் பிரமாண்டமான அவனது படையையும் பார்த்து இவர்களை சந்திப்பதற்கு எங்களுக்கு ஆற்றல் கிடையாது என்று பயந்தார்கள். பனூ இஸ்ரவேலர் களிடையே ஜாலூத்தைக் கொல்பவருக்கு எனது மகளை மணமுடித்து தருவேன் மட்டுமல்ல, எனது ஆட்சியில் சரிபாதியைத் தருவேன் என்று தாலூத் சொன்னார். ஆனாலும் யாரும் முன் வரவில்லை. ஹள்ரத் தாவூத் அலை அவர்கள் மட்டும் ஜாலூத்தை சந்திப்பதற்கு முன் வந்தார்கள் சிறிய கல்லை கொண்டு அவனை வீழ்த்தினார்கள். அதன் பிறகு இஸ்லாமியர்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது என்பது வரலாறு.

இந்த பத்ர் நிகழ்வுக்கும் தாவூத் அலை ஜாலூத்தை வீழ்த்திய இந்த நிகழ்வுக்கும் நிறைய தொடர்பு உண்டு.

1، ஸஹாபாக்கள் மதீனாவை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். பனூ இஸ்ரவேலர்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.

2، அவ்வாறு வெளியேற்றப்பட்டதைக் காரணமாக வைத்துத்தான் அங்கே போருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இவர்களும் அதைத்தான் சொன்னார்கள்.

 قَالُوا وَمَا لَنَا أَلَّا نُقَاتِلَ فِي سَبِيلِ اللَّهِ وَقَدْ أُخْرِجْنَا مِنْ دِيَارِنَا وَأَبْنَائِنا 

எங்கள் முன்னோர்கள் மற்றும் எங்கள் இல்லங்களிலிருந்து நாங்கள் வெளியேற்றப் பட்டிருக்கும் நிலையில் நாங்கள் போர் புரியாமல் இருப்போமா என்று பனூ இஸ்ரவேலர்கள் கேட்டார்கள். (அல்குர்ஆன் 2 246)

3،  பத்ரில் இஸ்லாமியர்கள் சொற்பமாக இருந்தார்கள் எதிரிகள் மெஜாரிட்டியாக இருந்தார்கள். அதேபோன்று இந்த நிகழ்விலும் தாலூத் மன்னரின் படை சொற்பமாகும் ஜாலூத்தின் படை மெஜாரிட்டியாக இருந்தது.

4، இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 313 ஆக இருந்ததை போன்றே இந்த நிகழ்விலும் தாலூத் மன்னரோடு சென்ற அந்த படையின் எண்ணிக்கை 313 ஆகத்தான் இருந்தது.

5، பெரும் படையைப் பார்த்து அவர்களும் அஞ்சினார்கள்.இவர்களும் அஞ்சினார்கள்.

وان فريقا من المومنين لكارهون.

முஃமின்களில் ஒரு பிரிவினர் (பத்ர் போர்க்களத்திற்கு உம்முடன் வருவதற்கு இணக்கமில்லாம்) வெறுத்துக் கொண்டிருந்தனர். (அல்குர்ஆன் : 8 ; 5)

قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده

ஜாலூத் மற்றும் அவன் படைகளுடன் இன்று போர் செய்வதற்கு எங்களுக்கு வலுவில்லை என்று அவர்கள் கூறினார்கள். (அல்குர்ஆன் 2 249)

6இங்கேயும் அல்லாஹ் இஸ்லாமியர்களுக்கு வெற்றியை கொடுத்தான் அங்கேயும் அல்லாஹுத்தஆலா இஸ்லாமியர்களுக்குத் தான் வெற்றியை தந்தான்.

7எல்லாவற்றையும் விட இந்த இரண்டு நிகழ்விலும் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தது துஆ தான். பத்ர் போர்க்களம் நடப்பதற்கு முந்திய இரவில் நபி  அவர்கள் உறுக்கமாக இறைவனிடத்தில் துஆ செய்தார்கள். அந்த துஆ தான் அவர்களின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. அதே போன்று இந்த நிகழ்விலும் தாலூத்தின் மக்கள் துஆ  செய்தார்கள். அதை அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் பதிவு செய்திருக்கிறான்.

لما برزوا لجالوت وجنوده:[قالوا ربنا أفرغ علينا صبرًا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين]

ஜாலூத்தையும் அவன் படைகளையும் களத்தில் சந்திக்க அவர்கள் முன்னேறிச் சென்ற போது எங்கள் இறைவா! எங்களுக்கு பொறுமையைத் தருவாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவி புரிவாயாக! என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 2 250)

பல நிற்கதியான கட்டங்களிலும் அச்சுறுத்தலான சூழ்நிலைகளிலும் அமைதியையும் வெற்றியையும் இஸ்லாமிய சமூகத்திற்கு பெற்றுத்தந்தது துஆக்கள் தான் என்பது வரலாறு கூறும் உண்மை.

நான்காவது மிக முக்கியமாக நாம் செய்ய வேண்டியது அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பது.

عن أبي سعيدٍ الخدري رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ((من رأى منكم منكرًا، فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان))؛ رواه مسلم

உங்களில் எவரேனும் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அதனை கையால் தடுக்கட்டும், அப்படி முடியவில்லை என்றால் அதனை நாவால் தடுக்கட்டும், அப்படியும் முடிய வில்லை என்றால் அதனை தன் உள்ளத்தால் வெறுத்து ஒதுங்கட்டும். இந்த நிலையானது இறை நம்பிக்கையின் பலகீனமா(ன நிலையா)கும்”. (முஸ்லிம் -78)

நம் கண் முன்னால் ஒரு அநீதம் நடக்கிற போது அதை தடுப்பதற்கு மூன்று முறைகளை பெருமானார் நபி அவர்கள் கையாள வேண்டும் என்று கூறுகிறார்கள். அதில் ஒன்று கையால் தடுக்க வேண்டும். தவறுகளைத் தடுப்பதற்கான முதல் வழிமுறை இது தான். ஒரு தவறை அல்லது அநீதத்தை ஒருவரால் கையால் தடுக்க முடியும் என்றால் அவர் கையால் தான் தடுக்க வேண்டும். கையால் தடுக்க சக்தி இருக்கிற போது அவர் நாவால் தடுக்க முற்படக்கூடாது. அதேபோன்று நாவால் தடுக்க சக்தி இருக்கிற போது மனதால் மட்டுமே வெறுத்து என் கடமை முடிந்து விட்டது என்று ஒதுங்கி செல்லக்கூடாது. அநீதிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டிய இடத்தில் குரல் எழுப்புவது நம்முடைய தார்மீக கடமையாகும்.

أخرج مروانُ المنبرَ في يومِ عيدٍ فبدأ بالخُطْبَةِ قبل الصَّلاةِ فقام رجلٌ فقال يا مروانُ خالفتَ السُّنةَ أخرجْتَ المنبرَ في يومِ عيدٍ ولم يكن يُخْرَجُ فيه وبدأتَ بالخطبةِ قبل الصلاةِ فقال أبو سعيدٍ الخدريُّ مَنْ هذا قالوا فلانُ بنُ فلانٍ فقال أما هذا فقد قضى ما عليه سمعتُ رسولَ الله صلى الله عليه وسلم يقولُ من رأى منكرًا فاستطاع أن يُغَيِّرَه بيدِهِ فلْيُغَيِّرْه بيدِهِ فإن لم يَسْتَطِعْ فبلسانِه فإنْ لمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ وذلك أضعفُ الإيمانِ

மர்வான் என்ற ஆட்சியாளர் பெருநாள் அன்று தொழுகைக்கு முன்னால் குத்பா ஓத ஆரம்பித்தார். (பெருநாள் குத்பா என்பது தொழுகைக்குப் பிறகு ஓதுவது தான் நபியின் வழிமுறை. அதற்கு மாற்றமாக அவர் செய்தார்) உடனே ஒரு மனிதர் மர்வான் அவர்களே நீங்கள் நபியின் வழிமுறைக்கு மாற்றம் செய்து விட்டீர்கள் என்றார். சபையில் இருந்த அபூஸஈதுல் குத்ரீ ரலி அவர்கள் யார் இவர் என்று கேட்டார்கள். அவர் யார் என்று அருகில் உள்ளவர் அறிமுகப்படுத்தினார்கள். அப்போது அபூஸஈதுல் குத்ரீ ரலி அவர்கள், அவரின் மீது இருந்த கடமையை அவர் பூர்த்தி செயது விட்டார். ஏனெனில் உங்களில் ஒருவர் ஒரு தவறைக் கண்டால் தன் கரத்தால் அதைத் தடுக்க வேண்டும். முடியாத போது தன் நாவால் தடுக்க வேண்டும்.முடியாத போது தன் உள்ளத்தால் அதை வெறுக்க வேண்டும். அது தான் மிகக்குறைந்த ஈமான் என்று நபி அவர்கள்  சொன்னதை நான் கேட்டிருக்கிறேன் என்றார்கள்.  (அபூதாவூது ; 1140)

அநியாயக்கார ஆட்சியாளர்களுக்கு எதிராக குரல் கொடுப்பதும் நாம் நம் கருத்துக்களை வெளிப்படுத்துவதும் அவர்களுக்கு எதிராக போராடுவதும் ஒவ்வொரு இஸ்லாமியனின் தார்மீக கடமை.

ஒரு பெண்ணின் வீட்டை இடிக்கிற போது நாடே அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.இடிப்பவர்களை விட நடப்பதை வேடிக்கை பார்ப்பவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். ஏனென்றால் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். யாராலும் எதை செய்ய முடியாது என்ற தைரியத்தில் தான் அவர்கள் அந்த காரியத்தை செய்கிறார்கள். எனவே அவர்கள் செய்த அநீதச் செயலுக்கு வேடிக்கை பார்க்கிற அனைவரும் உடந்தையானவர்கள் தான். எனவே அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.நாம் குரல் கொடுத்து என்ன ஆகப்போகிறது என்று ஒரு சமூகம் இருந்தால் அதுவே அந்த சமூகத்தின் அழிவுக்கு காரணமாகி விடும் என்பதற்கு வரலாறுகள் சான்று.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வருகிறான். சிறுக சிறுக யூதர்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக்கி அவர்களை வதை செய்தான். முகாம்களுக்கு அனுப்பி அவர்களை சித்தரவதை செய்தான். மிப்பெரிய இனப்படுகொலையை நிகழ்த்தினான். ஹிட்லர் நடத்திய இனப்படுகொலையில் யூதர்கள் ஜிப்சிகள், ரஷ்யர்கள், கம்யூனிஸ்ட்கள், போர் கைதிகள் என சுமார் 1 கோடிக்கும் அதிகமானவர்கள் இந்த இன அழிப்பில் கொல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. உலகில் மிகப்பெரிய மிகப்பெரிய ஏழு இனப்படுகொலைகளில் யூத இனப்படுகொலையும் ஒன்று. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவெனில் யூதர்கள் தங்களது அடிப்படைகளை, உரிமைகளை இழந்து வதை முகாம்களில் விஷக்காற்றை உறிஞ்சி கொல்லப்படும் போது கூட ஹிட்லரின் பாசிசத்தை அவர்கள் எதிர்க்க வில்லை. மாறாக அவர்கள் இந்த உண்மையை எதிர் கொள்ளாமல் தமக்கு எந்த பிரச்சனையும் இல்லையென ஒரு கற்பனை உலகில் வாழ்ந்தார்கள். தமது பணத்தாலும் நடவடிக்கையாலும் தாம் தப்பித்து விடலாம் என நம்பினார்கள். ஆனால் அந்த நம்பிக்கை விரைவில் பொய்த்தது. பெரும்பணக்கார யூதர்கள் கூட ஏழையாக்கப்பட்டு வதைமுகாம்களில் கூலி வேலை செய்ய நேர்ந்தது. அவர்கள் தமது பிள்ளைகளையும் மனைவியரையும் பிரிந்து இறுதியில் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டனர். அப்போது தான் தமது அமைதியின்விளைவு தான் இதுவென அவர்களுக்குப் புரிந்தது.

அநீதங்கள் நடக்கிற போது தட்டிக் கேட்காமல் தள்ளி நின்றால் குரல் எழுப்பாமல் ஒதுங்கிச் சென்றால் என்ன விளைவு ஏற்படும் என்பதற்கு யூத இனப்படுகொலை ஒரு சான்று.

நடக்கின்ற அநியாயங்களைப் பார்த்து கண்டும் காணாதது போல் இருப்பது மிகப்பெரிய ஆபத்தாகும். அநீதக்காரர்களுக்கு இறங்கும் வேதனை அதைப் பார்த்து அதை தடுக்காமல் இருக்கும் மவ்னிகளின் மீதும் இறங்கும்.

إن الناس إذا رأوا الظالم فلم يأخذوا على يديه أوشك أن يعمهم الله بعقاب منه

மக்கள் ஒரு அநியாயக்காரனைப் பார்த்து அவனை அதிலிருந்து தடுக்க வில்லையென்றால் அல்லாஹ் வேதனை அனைவருக்கும் பொதுவாக இறக்கி விடுவான். (அபூதாவூது 4338)

مثل القائم على حدود الله والواقع فيها كمثل قوم استهموا على سفينة فأصاب بعضهم أعلاها وبعضهم أسفلها فكان الذين في أسفلها إذا استقوا من الماء مروا على من فوقهم فقالوا لو أنا خرقنا في نصيبنا خرقا ولم نؤذ من فوقنا فإن يتركوهم وما أرادوا هلكوا جميعا وإن أخذوا على أيديهم نجوا ونجوا جميعا»

அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை - ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் சிலருக்குக் கீழ்த் தளத்தில், இடம் கிடைத்தது.கீழ் தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது (அதைக் கொண்டு வர) அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. (அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது). அப்போது, கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் (தமக்குள்) 'நாம் (தண்ணீருக்காக) நம்முடைய பங்கில் (கீழ்த் தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம், நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம்' என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள் விட்டுவிட்டால் (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்து போவார்கள். (ஓட்டையிட விடாமல்) அவர்களின் கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (அவர்களுடன் மற்ற) அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (புகாரி, திர்மிதீ)

அநீதியை முடிந்த வரை தடுக்க வேண்டும். அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று வரும் இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் நாம் வீதியில் இறங்கி போராடுகிறோம். நடக்கின்ற போராட்டக் களங்களில் நாம் முழுமையாக பங்கெடுத்து நம் கண்டனக்குரலை பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக இப்போது பெருமானார் ﷺ அவர்களை அவதூராகப் பேசியதைக் கண்டித்தும் அவ்வாறு பேசியவர்களை கைது செய்யக்கோரியும் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் ஆர்பாட்டங்களும் நடைபெறுகிறது. நபி அவர்களின் மீது நமக்கிருக்கும் உண்மையான அன்பை வெளிப்படுத்துவதற்கு அதில் முழுமையாக பங்கேற்க வேண்டும். வல்ல ரஹ்மான் நமக்கு வெற்றியைத் தருவானாக

 

 


7 comments:

  1. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத் எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா உங்கள் கல்வி ஞானத்திலும் உங்கள் குடும்பத்திலும் பரக்கத் செய்வானாக

    ReplyDelete
  2. அற்புதமான பதிவு

    ReplyDelete
  3. உங்களின் கல்வி ஞானங்களில் அல்லாஹ் பரக்கத் செய்வானாக , ஆமீன் ஆமீன்

    ReplyDelete
  4. முஹம்மது ஜைனுத்தீன் ஃபாஜில் அன்வாரிJune 24, 2022 at 7:10 AM

    உங்களுடைய கல்வி ஞானங்களில் அல்லாஹ் பரக்கத் செய்வானாக ஆமீன் ஆமீன்

    ReplyDelete
  5. மாஷா அல்லாஹ் பாரகல்லாஹ்

    ReplyDelete
  6. மாஷாஅல்லாஹ் பாரகல்லாஹ் காலங்கருதிய கட்டுரை

    ReplyDelete
  7. பாரக்கல்லாஹ்

    ReplyDelete