Friday, July 22, 2022

எந்தக் கல்வி தற்கொலையிலிருந்து பாதுகாக்கும் ?

உலகில் வாழுகின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாத ஒன்று கல்வி. கல்வி தான் மனிதனை மனிதனாக்கும், மனித நேயமுள்ளவனாக்கும், ஞானமுள்ளவனாக மாற்றும், நேரான பாதை எது, தவறான பாதை எது என்பதை உணர்ந்து கொள்ளும் பகுத்தறிவு தன்மையை வழங்கும். கல்வியின்றி ஒரு மனிதன் நிச்சயம் முழுமை பெற மாட்டான். அதனால் தான் மற்ற மதங்களைக் காட்டிலும் இஸ்லாம் கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகிறது.

திருக்குர்ஆனின் முதல் வசனமே இக்ரஃ. ‘நபியே நீர் ஓதுவீராக, கற்பீராகஎன்ற இறைவனின் கட்டளையுடன் தான் தொடங்குகிறது. கல்வியைத் தேட வேண்டும் என்பதை தூண்டும் படியான 70-க்கும் மேற்பட்ட வசனங்கள் திருக்குர்ஆனில் இடம் பெற்றிருக்கிறது. கல்வி எங்கு கிடைத்தாலும் அங்கு சென்று கல்வி ஞானத்தை பெற்றுக் கொள்ளவும் அதை பெருக்கிக் கொள்ளவும் வலியுறுத்துகிறது இஸ்லாம்.

இஸ்லாம் வழங்கிய கட்டளைகளைப் பின்பற்றி நபியவர்களின் வாக்கிற்கு மதிப்பளித்து நடைபெற்ற பல இஸ்லாமிய அரசுகள் கல்வியில் பல புரட்சிகரமான நடவடிக்கைகளை மேற் கொண்டிருக்கிறது.இஸ்லாமிய சாம்ராஜ்யங்கள் எங்கெல்லாம் இருந்ததோ அங்கெல்லாம் அதன் தலைநகரங்களில் மிகப்பெரிய பொது நூலகங்கள் அமைக்கப் பெற்றிருந்தன. ஸ்பெயின்-கார்டோபா மற்றும் ஈராக்-பாக்தாத் ஆகிய நகரங்களில் இருந்த பொது நூலகங்களில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இருந்துள்ளன என்பது வியப்புக்குரிய செய்தியாகும். அந்த அளவிற்கு இஸ்லாமும், இஸ்லாத்தை பின்பற்றிய ஆட்சியாளர்களும் கல்வி ஞானத்திற்கு அதிக முக்கியத்துவத்தை கொடுத்தார்கள்.

இன்றைய சூழலில் கல்வி தான் எல்லோருக்குமான பாதுகாப்பு அரணாக இருக்கிறது. கல்வியை விடுத்து வேறு எதுவும் எந்த பயனையும் அளிக்காது. இது எல்லோருக்கும் பொருந்தக் கூடியது. கல்வி அவசியம் என்பதில் உலகில் யாருக்கும் இருவேறு கருத்து இருக்க வாய்ப்பில்லை. அனைத்து தரப்பினருக்கும் கல்வி அவசியம் வழங்கப்பட வேண்டும் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எது சிறந்த கல்வி என்பதில் தான் கருத்து பேதங்கள் உண்டு. அந்தந்த துறை சார்ந்தவர்கள் அந்தந்த கல்வியை சிறந்த கல்வி என்று கூறுவார்கள். இஸ்லாத்தைப் பொருத்த வரை அல்லாஹ்வையும் ரஸூலையும் தெரிந்து கொள்கிற, அவர்களை நமக்கு ஞாபகப்படுத்துகிற, சுய ஒழுக்கத்தையும் சுய கட்டுப்பாட்டையும் போதிக்கிற மார்க்க கல்வி தான் மற்றெல்லா கல்விகளை விட மேலானது.

ஆனால் இன்றைக்கு உலகக்கல்வியின் மதிப்பு உணரப்பட்டிருக்கிற அளவுக்கு மார்க்க கல்வியின் மதிப்பு உணரப்பட வில்லை. உலகக்கல்வியினால் கிடைக்கிற நன்மைகள் புரியப்பட்ட அளவுக்கு மார்க்க கல்வியினால் கிடைக்கும் நன்மைகள் மக்களால் புரியப்பட வில்லை.

இன்றைக்கு நாம் நம் பிள்ளைகளின் மார்க்க அறிவு குறித்து சிந்திக்காமல் கவலைப்படாமல் அவர்களுக்கு உலகம் சார்ந்த கல்வி தான் வேண்டும் என்று நினைக்கிறோம்.ஆனால் உலகக்கல்விக்கும் மார்க்க கல்விக்கும் என்ன வித்தியாசம் ? உலகக்கல்வி எதைத் தருகிறது ? மார்க்க கல்வி எதைத் தருகிறது ? என்று சிந்திக்க வேண்டும்.அவ்வாறு சிந்திக்கும் பட்சத்தில் உண்மையில் எது சிறந்த கல்வி என்பதை அறிந்து கொள்ள முடியும்.

ஒரு மனிதன் வாழ்க்கையில் உயர வேண்டுமென்றால் அவனிடத்தில் பணிவு இருக்க வேண்டும்.பெருமையின் ஒரு துளி கூட இருக்கக் கூடாது.பெருமைக்குரியவன் அல்லாஹ் ஒருவன் மட்டும் தான்.

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ:   الْكِبْرِيَاءُ رِدَائِي، وَالْعَظَمَةُ إِزَارِي ، فَمَنْ نَازَعَنِي وَاحِدًا مِنْهُمَا، قَذَفْتُهُ فِي النَّارِ

கண்ணியம் என் கீழ் ஆடை; பெருமை என் மேலாடை. இவ்விரண்டில் ஒன்றை என்னிடமிருந்து கழற்ற நினைப்பவனை நிச்சயம் நான் அவனை வேதனை செய்வேன் என இறைவன் கூறியதாக நபி (ஸல்) கூறினார்கள் (முஸ்லிம்).

பெருமை தனக்கு மட்டும் சொந்தம் என்கிற காரணத்தால் பெருமை கொள்வதை அல்லாஹ் ஒரு போதும் விரும்புவதில்லை. பெருமை கொள்பவன் வாழ்வில் உயர்வதும் இல்லை. ஒருவனுக்கு பெருமை மட்டும் வந்து விட்டால் அவன் எத்தனை பெரிய உயரத்தில் இருந்தாலும் அவன் ஒன்றும் இல்லாமல் ஆகி விடுவான் என்பதற்கு இப்லீஸ் மிகச்சரியான உதாரணம். உலகத்தின் உயர்ந்த படைப்பான மலக்குகளோடு சுவனத்தில் இருந்த இப்லீஸ் இறைவனின் சாபத்தைப் பெற்று சுவனத்தை விட்டும் தூக்கி எறியப்பட்டதற்கு காரணம் அவனிடம் ஏற்பட்ட அந்த பெருமை தான்.

அதே சமயம் பணிவு யாரிடத்தில் இருக்கிறதோ அவர் வாழ்வில் யாரும் தொடாத உயரத்தைத் தொடுவார்.பணிந்து நடப்பவரை அல்லாஹ் உயர்த்திக் கொண்டே இருப்பான்.

ما نقصت صدقة من مال، وما زاد الله عبداً بعفو إلا عزًّا، وما تواضع أحد لله إلا رفعه الله

தர்மம் செய்வதால் பொருளாதாரம் குறைந்து விடாது. ஒரு அடியானை இறைவன் மன்னிப்பதால் கண்ணியத்தைத் தவிர வேறு எதையும் அதிகமாக்க மாட்டான். இறைவனுக்காக பணிந்து நடக்கும் எந்த மனிதனையும் இறைவன் உயர்த்தாமல் விட்டதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

அகில உலகத்திற்கும் தலைவராக மனித குலம் அனைத்திற்கும் முன்னோடியாக மிகப்பெரிய நபியாக மிகப்பெரிய ரசூலாக உலகத்தில் எந்த நபியும் பெறாத பெற முடியாத அந்தஸ்துகளையும் படித்தரங்களையும் பெற்றவர்களாக சுவனத்தில் முதன்முதலாக அடியெடுத்து வைப்பவர்களாக இப்படி பல்வேறு சிறப்புகளுக்கு உரித்தானவர்களாக நபிகள் பெருமானார் அவர்கள் இருந்தும் எந்த கட்டத்திலும் தன்னை உயர்த்திப் பேசியதில்லை, தன்னை உயர்வாக காட்டிக் கொண்டதில்லை.அப்படி நினைத்ததும் இல்லை. அந்தப் பணிவு தான் அவர்களை உயர்த்தியது.

அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்ற அனைவரிடத்திலும் பணிவு இருந்ததை நாம் காணலாம்.

قال رجاء بن حيوة: سمرت عند عمر بن عبدالعزيز ذات ليلة فعشي (ضعف) السراج، فقلت: ألا أنبه هذا الغلام يصلحه؟ فقال: لا، دعه ينام، فقلت: أفلا أقوم أصلحه؟ فقال: لا، ليس من مروءة الرجل استخدام ضيفه، ثم قام بنفسه فأصلحه وصبَّ فيه زيتًا، ثم جاء، وقال: قمتُ وأنا عمر بن عبدالعزيز، وجئتُ وأنا عمر بن عبدالعزيز؛).

ரஜா பின் ஹயா அவர்கள் கூறுகிறார்கள் ; ஒரு நாள் நான் உமர் பின் அப்துல் அஜீஸ் ரஹ் அவர்களோடு இரவு உரையாடிக் கொண்டிருந்தேன். அப்போது விளக்கின் வெளிச்சம் குறைந்தது. எண்ணை இல்லாமல் அணைந்து போக முற்பட்டது.உடனே தூங்கிக் கொண்டிருக்கும் அடிமையை எழுப்பவா ? அவர் அதை சரி செய்வார் என்று கேட்டேன். அப்போது அவர்கள் வேண்டாம். அவர் தூங்கட்டும் என்றார்கள். அப்படியானால் நான் எழுந்து சரி செய்யவா என்று கேட்டேன். அதற்கும் வேண்டாம். தன் விருந்தாளிகளிடத்தில் வேலை வாங்குவது நல்ல மனிதருக்கு அழகல்ல என்று கூறி தானே எழுந்து அதற்கு எண்ணை ஊற்றி அதை சரி செய்தார்கள். (அல்பிதாயா வன்நிஹாயா)

நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டிருக்கிற நான்கு இமாம்களில் ஒவ்வொருவரும் உலகமே கொண்டாடும் கல்விக் கடலாக இருந்தும் அவர்கள் எப்போதும் அதை வெளிப்படுத்தியது கிடையாது. தன்னை சாதாரணமானவர்களாகத்தான் கருதினார்கள். நான்கு இமாம்களில் ஹள்ரத் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களும் இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்களும் சம காலத்தில் வாழ்ந்தவர்கள். (இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 150 204, இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 164 241)

 قال الشافعي عن الإمام أحمد ما في بغداد أفقه ولا أورع ولا أعلم من أحمد،

இமாம் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) அவர்களைப் பற்றி இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் ; “பக்தாத் மாநகரில் இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்களை விட நன்கு கல்விஞானம் பெற்ற மிகப் பேனுதலுள்ள சட்ட நுனுக்கங்களை நன்கு தெரிந்த வேறு எவரும் இல்லைஎன்று கூறுகிறார்கள்.

وقال أحمد عن الشافعي: لقد كان الشافعي مثل الشمس للدنيا، ومثل العافية للبدن

இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களைப் பற்றி இமாம் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) அவர்கள் ; “இந்த பூமிக்கு சூரியனைப் போன்றும் உடலுக்கு ஆரோக்கியத்தைப் போன்றும் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் இருக்கிறார்கள்என்று குறிப்பிடுகிறார்கள்.

قال عنه الإمام أحمد بن حنبل: " ولولا الشافعي ما عرفنا فقه الحديث، وكان الفقه مقفلًا على أهله حتى  فتحه الله بالشافعي

இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள்  மட்டும் இல்லையென்றால் ஹதீஸிலிருந்து ஆய்வு செய்யக்கூடிய மார்க்கச் சட்ட அறிவை நாங்கள் அறிந்திருக்க மாட்டோம்.ஃபிக்ஹின் வாசல் மூடப்பட்டிருந்தது. அதன் கதவை அல்லாஹ் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் மூலம் தான் திறந்தான்என்று அஹ்மத் (ரஹ்) அவர்கள் கூறுவார்கள்.

فجاء شاب اسمه إسحاق بن راهوية ـ وكان من الطلبة المتحمسين الذين يطلبون العلم ـ والتقى بأحمد بن حنبل، وهم أصدقاء، فقال له أحمد بن حنبل: تعال حتى أُرِيك رجلًا لم تر عينك مثله قط، ليس هناك مثله في الدنيا، وأخذ بيده حتى أجلسه في حلقة الشافعي

ஒரு நாள் இஸ்ஹாக் பின் ராஹவைஹி (ரஹ்) அவர்கள் அஹ்மத் பின் ஹம்பில் (ரஹ்) அவர்களை சந்திப்பதற்கு வந்தார்கள்.அப்போது அவர்கள் ; இது வரை உன் கண்கள் கண்டிராத உலகில் அவரைப் போன்று வேறு எவரும் இல்லை என்று சொல்லத்தக்க ஒரு மாமனிதரை உனக்கு காட்டுகிறேன் என்று சொல்லி இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களை அடையாளம் காட்டினார்கள்.

இப்படி மாறி மாறி மற்றவர்களை புகழ்ந்து பேசினார்களே தவிர தன்னை பெருமைப் படுத்திக் கொள்ள வில்லை. அந்த பணிவு தான் அவர்களைப் பற்றி இன்றளவும் பேச வைத்திருக்கிறது.

எனவே பணிவு தான் ஒரு மனிதனின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்.அப்படி வாழ்க்கையின் உயரத்தைப் பெற்றுத்தருகின்ற அந்த பணிவைத் தருவது இந்த மார்க்க கல்வி தான்.மார்க்க கல்வி அதை படிப்பவருக்கு பணிவைக் கற்றுத்தரும். ஆனால் உலகக்கல்வி பெருமையை உருவாக்கும். உலகக்கல்விக்கும் மார்க்க கல்விக்கும் இடையே இருக்கிற முதல் வித்தியாசம் இது.

இரண்டாவது வித்தியாசம் மார்க்க கல்வி எல்லாரையும் மதிக்க கற்றுத்தரும், சிறுவர்களை மதிப்பது,பெரியோர்களை மதிப்பது, பெண்களை மதிப்பது, கணவன்மார்களை மதிப்பது, குறிப்பாக தனக்கு கல்வி போதித்த ஆசிரியர்களை மதிப்பது. இவ்வாறு பிறரை மதிக்கின்ற பண்பை மார்க்க கல்வி கொடுக்கும்.மார்க்க கல்வி பயின்ற மார்க்க அறிஞர்களிடம் தன்னை விட அறிவிலும் அனுபவத்திலும் அந்தஸ்திலும் உயர்ந்தவர்களை மதிக்கும் தன்மை இருக்கும். உலக கல்வி படித்தவர்களிடம் இந்த தன்மையை பார்க்க முடியாது.

فعن عمار بن أبي عمار أن زيد بن ثابت ركب دابته يوما، فأخذ ابن عباس رضي الله عنهما بركاب دابته، فقال زيد: “تنحَّ يا ابن عم رسول الله، فقال ابن عباس: هكذا أمرنا أن نفعل بعلمائنا وكبرائنا، فقال زيد لابن عباس: أرني يدك؟ فأخرج يده، فقبَّلها، ثم قال: هكذا أمرنا أن نفعل بأهل بيت نبينا”. الطبقات الكبري

ஜைத் பின் ஸாபித் ரலி அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருந்த போது அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரலி அவர்கள் அந்த ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்து நடந்தார்கள். நீங்களெல்லாம் இதை பிடிக்கலாமாவிட்டு விடுங்கள் என்று கூறிய போது எங்களில் மார்க்கம் படித்த ஆலிம்களிடம் இவ்வாறு தான் நடந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் ஏவப்பட்டிருக்கிறோம் என்று அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரலி அவர்கள் கூறினார்கள். பின்பு ஜைத் ரலி அவர்கள் ஒட்டகத்திலிருந்து கீழே இறங்கி அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரலி  அவர்களிடம் உங்கள் கையைக் கொடுங்கள் என்று கூறி அவர்களின் கையில் முத்தமிட்டார்கள். பின்பு நபி ஸல் அவர்களின் குடும்பத்தாரோடு இவ்வாறு தான் நடந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் பணிக்கப்பட்டிருக்கிறோம் என்றார்கள். (அத்தபகாதுல் குப்ரா)

روي عن الإمام أبى حنيفة أنَّه قال: “ما مددت رجلي نحو دار أستاذي حمَّاد إجلالاً له، وكان بين داري وداره سبع سكك

இமாம் அபூஹனீஃபா ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ; என்னுடைய கல்வி ஆசான் ஹம்மாத் ரஹ் அவர்களின் கண்ணியம் கருதி அவர்களின் இல்லத்தை நோக்கி என் கால்களை நீட்டியதில்லை. என் இல்லத்திற்கும் அவர்களின் இல்லத்திற்கும் இடையில் ஏழு சந்துகள் இருந்தன என்று கூறுகிறார்கள்.

இந்த மாதிரி தனக்கு கல்வி போதித்த ஆசிரியர்களை மதிக்கும் குணத்தை உலக கல்வி படித்தவர்களிடம் பார்ப்பது அரிது. அதே போன்று முதிர்ச்சியடைந்து விட்ட பெற்றோர்களை கை விடாமல் பார்ப்பது மார்க்கம் படித்தவர்கள் தான். எந்த மார்க்க அறிஞரும் தன் பெற்றோர்களை கவனிக்காமல் முதியோர் இல்லத்தில் விட்டதாக வரலாறு கிடையாது. ஆனால் உலக கல்வி படித்தவர்கள் எந்தளவு தங்கள் பெற்றோர்களை வதை செய்கிறார்கள் என்பதை சொல்ல வேண்டிய அவசியமில்லை.

ஒரு ஏழைத் தாய் மிகவும் சிரமப்பட்டு கடன்களை வாங்கி தான் உண்ணாமல் பருகாமல் சேர்த்த வைத்த பணத்தைக் கொண்டு தன் மகனை வெளிநாட்டிற்கு படிப்பிற்கு அனுப்பி வைத்தாள்.நான்கு வருடங்கள் படிப்பை முடித்து விட்டு நாடு திரும்பிற மகனைப் பார்ப்பதற்கு ஆசையோடு கிழிந்த ஆடைகளோடு விமான நிலையம் செல்கிறார் அந்த தாய். கிழிந்த ஆடைகளை உடுத்தியிருந்த அந்த தாயைப் பார்த்து இவள் யார் என்று அவனுடைய நண்பர்கள் அவனிடம் கேட்ட போது அவளை தன் தாய் என்று சொல்வதற்கு வெட்கப்பட்டு இவள் என் வீட்டு வேலைக்காரி என்று சொன்னான். உலக கல்வி படித்தவர்களின் நிலை இது தான்.

மூன்றாவது வித்தியாசம் உலகக்கல்வி பொருளாசையையும் பேராசையையும் ஏற்படுத்தி சுயமரியாதையை இழக்கச் செய்து விடும்.இன்றைக்கு 50 என்றும் 100 என்றும் 500 என்றும் 1000 என்றும் 100000 என்றும் லஞ்சமாக கையேந்தி கேட்டுப் பெற்று தன் சுயமரியாதையை இழந்து நிற்பது இன்றைக்குள்ள படித்த பட்டதாரிகள் தான் என்பது நாம் கண்கூடாக பார்க்கிற உண்மை. இன்றைக்கு கமிஷன் இல்லாமல் எந்த காரியமும் நடக்காது என்று சொல்கின்ற அளவுக்கு எல்லா விஷயங்களிலும் லஞ்சம் புகுந்து விட்டது. அதில் கொடி கட்டிப் பறப்பவர்கள் யாரென்றால் படித்த அரசு அதிகாரிகள் தான்.எனவே அவர்களின் படிப்பு அவர்களுக்கு கௌரவத்தைக் கொடுப்பதில்லை, சுயமரியாதையைக் கற்றுக் கொடுப்பதில்லை.ஆனால் மார்க்கக்கல்வி அதை படிப்பவர்களுக்கு அதைப் பெற்றவர்களுக்கு கௌரவத்தையும் சுயமரியாதையும் கற்றுத் தருகின்றது. மார்க்கம் படித்த எவரும் எந்த நேரத்திலும் தங்கள் சுயமரியாதையை இழந்து நிற்பதில்லை. தங்கள் கௌரவத்தையும் மரியாதையையும் விட்டுக் கொடுப்பதில்லை.

كان أهلُ الصُّفَّةِ أَضْيافَ أهلِ الإسلامِ، لا يَأْوونَ على أهلٍ ولا مالٍ، واللهِ الذي لا إلهَ إلَّا هو إنْ كنتُ لَأَعْتَمِدُ بكَبِدي على الأرضِ؛ مِنَ الجوعِ، وأَشُدُّ الحَجَرَ على بَطْني؛ مِنَ الجوعِ، ولقد قعَدْتُ يومًا على طريقِهِمُ الذي يخرُجونَ فيه، فمرَّ بي أبو بكرٍ، فسألْتُه عن آيةٍ مِن كتابِ اللهِ، ما أسألُه إلَّا ليُشْبِعَني، فمرَّ ولم يفعَلْ، ثمَّ مرَّ بي عمرُ، فسألْتُه عن آيةٍ مِن كتابِ اللهِ، ما أسألُه إلَّا ليُشْبِعَني، فمرَّ ولم يفعَلْ، ثمَّ مرَّ أبو القاسِمِ صلَّى اللهُ عليه وسلَّمَ، فتبسَّمَ حينَ رآني، وقال: أبا هُريرةَ، قلتُ: لبَّيْكَ يا رسولَ اللهِ، قال: الْحَقْ، ومضى؛ فاتَّبَعْتُهُ، ودخَلَ منزلَه، فاستأذَنْتُ؛ فأذِنَ لي، فوجَدَ قَدَحًا مِن لبنٍ ........

பசியின் கொடுமையால் வாடி வந்த திண்ணைத் தோழர்களுள் அபூஹுரைரா ரலி அவர்களும் ஒருவர். பசியின் கொடுமையால் அடிக்கடி மயக்கமுற்றுத் தரையில் விழுந்து கிடப்பார்கள். சில சமயங்களில் வயிற்றைத் தரையில் வைத்து அழுத்திக் கொண்டும், சிலசமயங்களில் கல்லை வயிற்றில் கட்டிக் கொண்டும் படுத்திருப்பார்கள். ஒரு சமயம் கடுமையான பசியின் காரணமாக முக்கியமான நபித்தோழர்கள் வரும் வழியில் அபூஹுரைரா ரலி உட்கார்ந்திருந்தார்கள். அவ்வழியாக வந்த அபூபக்கர் ரலி அவர்களிடம் குர்ஆனிலுள்ள ஒரு ஆயத்திற்கான விளக்கத்தைக் கேட்டார்கள். தன் பசியை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் அபூஹுரைரா ரலி அவர்களின் நோக்கம். ஆனால் அபூபக்கர் ரலி அவர்கள் விளக்கத்தை கூறி விட்டு கடந்து விட்டார்கள். பிறகு அதே எண்ணத்தோடு உமர் ரலி அவர்களிடம் விளக்கம் கேட்டார்கள். அவர்களும் விளக்கம் சொன்னார்கள். அபூஹுரைரா ரலி அவர்களின் நிலையை புரிந்து கொள்ள வில்லை. பின்னர் அங்கு வந்த ரசூல் அவர்கள் அபூஹுரைராவின் நிலையைப் புரிந்து கொண்டு புன்னகை புரிந்து அபூஹுரைராவே! என்னுடன் வாரும்என்று அழைத்துச் சென்றார்கள்................ (திர்மிதி ; 2477)

உயிர் போகும் அளவு கடுமையான பசி இருந்தும் தன் வாயால் எனக்கு பசிக்கிறது என்றோ என் பசியை ஆற்ற ஏதாவது உணவு இருந்தால் தாருங்கள் என்றோ கேட்க வில்லை. அவ்வாறு கேட்பதற்கு அவர்களின் சுயமரியாதை இடம் கொடுக்க வில்லை. மார்க்க கல்வியினால் கிடைக்கும் பலன் இது தான். யாரிடத்திலும் தேவையாகாத சுயமரியாதையோடு வாழுகிற வாழ்க்கையை கற்றுத் தரும்.

இன்றைக்கும் எல்லாம் இருந்தும் பிறரிடம் கையேந்தி பிழைப்பை நடத்தும் நபர்களுக்கு மத்தியில் எதுவும் இல்லா விட்டாலும் பிறரிடம் கேட்கும் நிலைக்கு அவர்களைக் கொண்டு செல்லாமல் அவர்களுக்கு சுயமரியாதையைக் கொடுத்தது அவர்களிடத்தில் இருந்த அந்த மார்க்க கல்வி தான்.

سالم بن عبد الله بن عمر بن الخطاب -رضي الله عنهم- كان يطوف ذات يوم بالكعبة فإذا بخليفة من الخلفاء، فقال هذا الخليفة: يا سالم سلني، فقال سالم: إني أستحي أن أسأل غير الله في بيت الله، فلما خرج سالم من المسجد الحرام، قال هذا الخليفة: يا سالم سلني. فقال سالم: أمن حوائج الدنيا أم من حوائج الآخرة؟ فقال هذا الخليفة: من حوائج الدنيا، فإن حوائج الآخرة لا أملكها. فقال سالم -رضي الله عنه-: إذا لم أسأل حوائج الدنيا ممن يملكها، فكيف أسألها ممن لا يملكها؟.

ஹஜ்ரத் உமர் பின் கத்தாப் ரலி அவர்களின் பேரரான ஸாலிம் ரஹ்  அவர்கள் ஒரு நாள் கஃபாவை தவாப் செய்து கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் ஆட்சியாளராக இருந்த ஒரு கலீஃபா ஸாலிம் ரஹ் அவர்களைப் பார்த்து உங்களுக்கு ஏதாவது தேவை இருந்தால் என்னிடத்தில் கேளுங்கள் என்று கூறினார்கள். அப்போது அவர்கள் அல்லாஹ்வினுடைய இறை இல்லத்தில் இருந்து கொண்டு அல்லாஹ் அல்லாத மற்றவர்களிடம் என் தேவையை கேட்பதற்கு நான் வெட்கப்படுகிறேன் என்று கூறினார்கள். ஹரமை விட்டும் அவர்கள் வெளியே வந்த பிறகு கலீஃபா அவர்கள் ஸாலிம் ரஹ் அவர்களைப் பார்த்து ஏதாவது தேவை இருந்தால் என்னிடத்திலே கேளுங்கள் என்று மீண்டும் சொன்னார்கள். அப்போது நீங்கள் சொல்வது உலகத்தினுடைய தேவைகளா அல்லது மறுமையினுடைய தேவைகளா என்று கேட்டார்கள். நான் உலகத்தினுடைய தேவைகளைத் தான் சொல்கிறேன். மறுமையினுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஆற்றல் எனக்கு இல்லை என்று கூறினார்கள். அப்போது ஸாலிம் ரஹ் அவர்கள் உலகத்தினுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான முழு ஆற்றலும் அதிகாரமும் கொண்ட என்னுடைய இறைவனிடத்திலேயே நான் அதைக் குறித்து கேட்காத போது உங்களிடத்தில் நான் எப்படி அதைக் கேட்பேன் என்று கூறினார்கள்.

எனவே மார்க்க கல்வி சுயமரியாதையைக் கொடுக்கிறது. உலகக்கல்வி சுயமரியாதையைக் கெடுக்கிறது. இது மூன்றாவது வித்தியாசம்.

எல்லாவற்றிற்கும் மேலாக நான்காவது வித்தியாசம் மார்க்க கல்வி இறை நம்பிக்கையையும் மன உறுதியையும் தருகிறது. எவ்வளவு பெரிய சூழ்நிலைகள் வந்தாலும் கலங்காமல் தளர்ந்து விடாமல் சோர்ந்து விடாமல் அதை எதிர் கொள்கிற மனப்பக்குவத்தை தருகிறது. இறைவன் இருக்கிறான். கடலுக்கு அடியில் கடும் இருட்டில் மீன் வயிற்றிற்குள் இருந்த ஒருவரையும் பாதுகாத்தவன் அவன். எனவே அவன் என்னை கை விட மாட்டான் என்ற உணர்வைக் கொடுத்து தைரியாக வாழ கற்றுத் தருகிறது மார்க்க கல்வி. ஆனால் உலக கல்வி பயின்ற அனைவரிடமும் இந்த மன உறுதியும் தைரியமும் இருக்கும் என்று சொல்ல முடியாது. அதனால் தான் ஒரு சின்ன பிரச்சனை வந்தாலும் அதை எதிர் கொள்ள தைரியம் இல்லாமல் தற்கொலை என்ற முடிவுக்கு சென்று விடுகிறார்கள். அவர்கள் படித்த அந்த கல்வியும் உலக அறிவும் அவர்களுக்கு பிரச்சனைகளை எதிர் கொள்கிற மனப்பக்குவத்தை கொடுப்பதில்லை. ஆனால் உலகில் யாரும் அனுபவிக்காத கொடுமைகளையும் நெருக்கடிகளையும் தினம் தினம் சந்தித்தும் மன திடத்துடன் வாழுபவர்கள் மார்க்க அறிஞர்கள்.

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரணம் இன்று அனைவராலும் பேசுபொருளாக இருக்கிறது. அது தற்கொலையா கொலையா என்று தெரியாத நிலையில் அதைக்குறித்து பல்வேறு சர்ச்சைகள் நடந்து வருகிறது. அது கொலையல்ல தற்கொலை தான் என்ற முடிவு எட்டப்படுவதற்குத்தான் அதிக வாய்ப்பிருக்கிறது. ஸ்கூலுடைய இமேஜைப் பாதுகாக்க அதன் பெயர் கெட்டு விடாமல் பாதுகாக்க பணமுதலைகளின் தலையீட்டால் அப்படித்தான் தீர்ப்பு வர அதிகம் வாய்ப்பிருக்கிறது. உண்மை என்ன என்பதை இறைவன் தான் நன்கறிவான்.  ஆனால் தேர்வு பயத்திலும் தேர்வு முடிவுகள் பயத்திலும் ஆசிரியர்களாலும் சில இடங்களில் பெற்றோர்களாலும் ஏற்படுகின்ற நெருக்கடிகள், மன உளைச்சல்களாலும் எண்ணற்ற மாணவ மாணவிகளின் தற்கொலைகள் அன்றாடம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அவர்கள் படிக்கின்ற அந்த படிப்பும் அவர்கள் பெற்றிருக்கின்ற அந்த அறிவும் தவறான முடிகளிலிருந்து அவர்களை காப்பாற்றுவதில்லை. இந்த வகையிலும் மார்க்க கல்வி உலக கல்வியை விட மேலானது, உயர்வானது.

உலகத்தில் அத்தனை துறை சார்ந்தவர்களும் தற்கொலை செய்திருக்கிறார்கள். மருத்துவர்கள், இன்ஜினியர்கள்,தொழிலாளர்கள், தொழிலதிபர்கள்,வக்கீல்கள், கல்லூரி ஆசிரியர்கள், ஏன் மனோதத்துவம் படித்தவர்கள், ராணுவ வீரர்கள் கூட தற்கொலை செய்திருக்கிறார்கள். ஆனால் உலகில் தற்கொலை என்ற முடிவிற்கு இதுவரை செல்லாதவர்கள் மார்க்க அறிஞர்கள் மட்டும் தான். உலக கல்விக்கும் மார்க்க கல்விக்கும் மத்தியில் இருக்கிற மிகப்பெரிய வித்தியாசம் இது.  

மட்டுமல்ல, மனைவிகளிடத்தில் நீதமாக நடந்து கொள்வது, பிள்ளைகளை நல்ல முறையில் வளர்ப்பது, சகோதரர்களோடு ஒற்றுமையோடு பயணிப்பது, அண்டை வீட்டாருடன் இணங்கி வாழ்வது, உறவுகளை அரவணைத்து வாழ்வது,மக்கள் நலனில் அக்கரை செலுத்துவது, பொது நலத்தோடு வாழ்வது, சமூக சிந்தனையோடு வாழ்வது இப்படி மார்க்க கல்வியின் மூலம் கிடைக்கும் நற்பயன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். எனவே உலக கல்வியை விட மார்க்க கல்வி எல்லா வகையிலும் உயர்ந்தது என்பதில் ஐயமில்லை.

இஸ்லாம் உலக கல்விக்கு எதிரான மார்க்கமல்ல. ஒரு மனிதன் தனக்கோ சமூகத்திற்கோ பயன் தருகின்ற எந்த கல்வியையும் படிப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதியுண்டு. மட்டுமல்ல, அனைத்து கல்வியையும் கற்க வேண்டும் என்பதை இஸ்லாம் ஆர்வப்படுத்தவும் செய்கிறது. ஆனால் எந்த கல்வியை படித்தாலும் அத்துடன் மார்க்க கல்வியும் அவசியம் வேண்டும் என்பது நாம் புரிந்து கொள்ள வேண்டிய முதல் செய்தி

இரண்டாவது செய்தி, எந்த கல்வியாக இருந்தாலும் அதன் மூலம் பிள்ளைகளுக்கு அதிக சுமைகளை ஏற்படுத்தக் கூடாது.   இன்றைய காலச்சூழலில் படி படி என்று நம் பிள்ளைகள் அதிக பிரஷ்ஷர் கொடுக்கப்படுகிறார்கள்.அதுவும் 10 ம் வகுப்பு வந்து விட்டால் அவனுக்கு ரெஸ்டே கிடையாது. காலை 7 மணிக்கு தொடங்குகிற அவனின் கல்விக்கான ஓட்டம் இரவு 10 மணி ஆகியும் முடிவதில்லை. வாரத்தில் வரும் அந்த ஒரு நாள் விடுமுறையைக் கூட ஸ்பெஷல் கிளாஸ் என்று வைத்து அவனை கசக்கி பிழிகிறார்கள். இப்படி அதிக பிரஷ்ஷர் கொடுக்கப்படுகிற காரணத்தால் இன்றைக்குள்ள சிறுவர்கள் அதிக மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள், சிறு வயதிலேயே ஹை பிரஷ்ஷர் வருவதற்கு காரணம் இது தான். இது இப்படியே தொடர்ந்தால் வரும் காலங்களில் பைத்தியம் ஏற்படக்கூட வாய்ப்பு இருக்கிறது என்பதாக மருத்துவ உலகம் எச்சரிக்கிறது. சில நேரங்களில் அந்த மன அழுத்தத்தால் தற்கொலை முடிவுக்கும் சென்று விடுகிறார்கள். படிப்பை விட நம் பிள்ளைகளின் வாழ்க்கை மிக முக்கியம் என்பதை பெற்றோர்களும் ஆசிரியர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

  

6 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்.
    அருமையான தகவல்களோடு இன்றைய சூழலுக்கு ஏற்ப பதிவிட்ட இந்த கட்டுரை என் உள்ளத்தை தொட்டது. படிக்கும் போதே தங்களுக்கு துஆ செய்தேன். அல்ஹம்துலில்லாஹ்.
    அல்லாஹ்வும் ரஸூலும் நல்லவர்களும் நல்லவர்களும்தங்களை நேசிப்பார்களாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

    ReplyDelete
  2. Mashallah baarakallah

    ReplyDelete
  3. அருமையான பதிவு

    ReplyDelete
  4. 👍 varum Vara zumma bayan kiripum
    Munkothiye pathiyu saithaal nanraga irukum 1&2 day munnal hazarath

    ReplyDelete