Friday, August 1, 2025

வேடிக்கை பார்ப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள்

 

 


من رأى منكم منكرًا، فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان)

உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும்,முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்),அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலகீனமா(ன நிலையா)கும்.  (முஸ்லிம்: 78)

நம் கண் முன்னால் ஒரு அநீதம் நடக்கிற போது அதை தடுப்பதற்கு மூன்று முறைகளை பெருமானார் நபி அவர்கள் கையாள வேண்டும் என்று கூறுகிறார்கள். 1.கையால் தடுப்பது. 2. நாவால் தடுப்பது. 3. உள்ளத்தால் வெறுப்பது.

இந்த மூன்றில் எதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்பது இந்த ஹதீஸின் பொருளல்ல.

முதலில் கையால் தடுக்க வேண்டும். தவறுகளைத் தடுப்பதற்கான முதல் வழிமுறை இது தான். ஒரு தவறை அல்லது அநீதத்தை ஒருவரால் கையால் தடுக்க முடியும் என்றால் அவர் கையால் தான் தடுக்க வேண்டும். கையால் தடுக்க சக்தி இருக்கிற போது அவர் நாவால் தடுக்க முற்படக்கூடாது. அதேபோன்று நாவால் தடுக்க சக்தி இருக்கிற போது மனதால் மட்டுமே வெறுத்து என் கடமை முடிந்து விட்டது என்று ஒதுங்கி செல்லக்கூடாது.

அநீதியைத் தடுப்பது, அநீதிக்கு எதிராக குரல் எழுப்புவது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருக்கிற தார்மீக கடமையாகும். ஒரு விஷயம் தவறு என்றால் அதை செய்தவர் யாராக இருந்தாலும் அதைத் தடுக்க வேண்டும். குறைந்த பட்சம் அது தவறு என்றாவது அவருக்கு உணர்த்த வேண்டும். உணர்த்துவது நம் கடமை.  

أَوَّلُ مَنْ بَدَأَ بِالْخُطْبَةِ يَوْمَ الْعِيدِ قَبْلَ الصَّلَاةِ مَرْوَانُ. فَقَامَ إِلَيْهِ رَجُلٌ، فَقَالَ: الصَّلَاةُ قَبْلَ الْخُطْبَةِ، فَقَالَ: قَدْ تُرِكَ مَا هُنَالِكَ، فَقَالَ أَبُو سَعِيدٍ: أَمَّا هَذَا فَقَدْ قَضَى مَا عَلَيْهِ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ، وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ»

தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(பெருநாளன்று தொழுகைக்குப் பிறகு தான் குத்பா ஓதப்படும். அது தான் நபியின் சுன்னத்.ஆனால்முதன்முதலில் பெருநாள் தினத்தில் தொழுகைக்கு முன் சொற்பொழிவு (குத்பா) நிகழ்த்தியவர் மர்வான் பின் ஹகம் ஆவார். (அவ்வாறு அவர் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார்.)அப்போது அவரை நோக்கி ஒருவர் எழுந்து நின்று,” “சொற்பொழிவுக்கு முன்பே (பெருநாள் தொழுகை) தொழ வேண்டும் என்று கூறினார்.

அதற்கு மர்வான் “முன்பு நடைபெற்றது கைவிடப்பட்டு விட்டது (இப்போது அது நடைமுறையில் இல்லை) “ என்று கூறினார்.(அப்போது அங்கிருந்த) அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள்,இதோ இந்த மனிதர் தமது கடமையை நிறைவேற்றி விட்டார்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூற நான் கேட்டுள்ளேன்:

உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும்,முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்),அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலகீனமா(ன நிலையா)கும். (முஸ்லிம்: 78)

அநியாயக்கார ஆட்சியாளர்களுக்கு எதிராக குரல் கொடுப்பதும் நாம் நம் கருத்துக்களை வெளிப்படுத்துவதும் அவர்களுக்கு எதிராக போராடுவதும் ஒவ்வொரு இஸ்லாமியனின் தார்மீக கடமை.

 

நடக்கின்ற அநியாயங்களைப் பார்த்து கண்டும் காணாதது போல் இருப்பது மிகப்பெரிய ஆபத்தாகும். அநீதக்காரர்களுக்கு இறங்கும் வேதனை அதைப் பார்த்து அதை தடுக்காமல் இருக்கும் மவ்னிகளின் மீதும் இறங்கும்.

ஒரு ஊரில் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பவர்கள் அவசியம் இருக்க வேண்டும். அதுவே அந்த ஊருக்கான பாதுகாப்பு.இல்லையென்றால் அந்த ஊருக்கு வேதனை வந்து விடும்.

قال القرطبي: قيل كل بلدة فيها أربعة فأهلها معصومون من البلاء إمام عادل لا يظلم وعالم على سبيل الهدى ومشايخ يأمرون بالمعروف وينهون عن المنكر ويُحرضون على طلب العلم والقرآن ونساؤهم مستورات لا يتبرجن تبرج الجاهلية الأولى

ஒரு ஊரில் நான்கு சாரார் இருந்தால் அந்த ஊர் மக்கள் சோதனையை விட்டும் பாதுகாக்கப்படுவார்கள் என்று அல்லாமா குர்துபீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள். 1. அநீதம் இழைக்காத நீதமான தலைவர். 2. நேரான பாதையில் இருக்கிற மார்க்க அறிஞர். 3. நன்மையை ஏவி தீமையைத் தடுத்து கல்வியைத் தேடுவதையும் குர்ஆனை ஓதுவதையும் ஆர்வமூட்டுகின்ற பெரியோர்கள். 4. தன் அழகை வெளிப்படுத்தாமல் தன்னை மறைத்துக் கொள்கின்ற ஒழுக்கான பெண்கள்.

 

நன்மையை ஏவாதவர்கள் இருந்தும் இல்லாதவர்களைப் போன்று.

سئل حذيفة رضي الله عنه عن ميت الأحياء, فقال: الذي لا ينكر المنكر بيده, ولا بلسانه, ولا بقلبه

தன் கரத்தாலோ நாவாலோ உள்ளத்தாலோ தவறைத் தடுக்காதவர் உயிர் இருந்தும் இல்லாதவர் என்று ஹுதைஃபா ரலி அவர்கள் கூறினார்கள்.

 

ஒரு சமூகம் நன்மையை ஏவி தீமையைத் தடுக்க வில்லையானால் அந்த சமூகம் அல்லாஹ்வின் வேதனையை சந்திக்கும்.

 

قال أبو الدرداء رضي الله عنه: لتأمرن بالمعروف, ولتنهن عن المنكر, أو ليسلطن الله عليكم سلطاناً ظالماً, لا يجل كبيركم, ولا يرحم صغيركم, ويدعو عليه خياركم فلا يستجاب لهم, وتستنصرون فلا تنصرون, وتستغفرون فلا يغفر لكم

 

நன்மையை ஏவி தீமையைத் தடுத்துக் கொண்டிருங்கள். இல்லையானால் பெரியோர்களை மதிக்காத சிறியவர்கள் மீது இரக்கம் காட்டாத அநியாயக்கார ஆட்சியாளரை உங்கள் மீது அல்லாஹ் சாட்டி விடுவான். உங்களில் சிறந்தவர் அவருக்கெதிராக துஆ செய்தாலும் அந்த துஆ ஏற்கப்படாது. அல்லாஹ்விடம் நீங்கள் உதவி தேடினால் அல்லாஹ்வின் உதவி உங்களுக்கு கிடைக்காது. பாவமன்னிப்பு தேடினால் அல்லாஹ்விடம் உங்களுக்கு மன்னிப்பு கிடைக்காது என அபுத்தர்தா ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

 

قال الإمام ابن العربي رحمه الله: الذنوب منها ما يعجل الله عقوبته, ومنها ما يمهل بها إلى الآخرة, والسكوت على المنكر تتعجل عقوبته في الدنيا بنقص الأموال والأنفس والثمرات

மனிதர்கள் செய்கின்ற சில குற்றங்களுக்காக அல்லாஹ் மறுமையில் தண்டிப்பான். சில குற்றங்களுக்கு உலகிலேயே தண்டனையைக் கொடுத்து விடுவான். தவறைப் பார்த்து தடுக்காமல் மௌனமாக இருப்பவர்களுக்கு அல்லாஹ் உலகிலேயே தண்டனையை வழங்கி விடுவான் என இப்னுல் அரபீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

 

إنَّ أولَ ما دخل النَّقْصُ على بني إسرائيلَ أنه كان الرجلُ يَلْقى الرجلَ فيقولُ: يا هذا اتَّقِ اللهَ ودَعْ ما تَصْنَعُ فإنه لا يَحِلُّ لك ثم يَلْقاهُ من الغَدِ وهو على حالِهِ فلا يَمْنَعُهُ ذلك أن يكونَ أَكِيلَهُ وشَرِيبَهُ وقَعِيدَهُ فلما فعلوا ذلك ضرب اللهُ قلوبَ بعضِهم ببعضٍ ثم قال: لُعِنَ الَّذِينَ كَفَرُوا مِنْ بَنِي إِسْرائِيلَ عَلى لِسانِ داوُدَ وَعِيسى ابْنِ مَرْيَمَ ذَلِكَ بِما عَصَوْا وَكانُوا يَعْتَدُونَ كانُوا لا يَتَناهَوْنَ عَنْ مُنْكَرٍ فَعَلُوهُ لَبِئْسَ ما كانُوا يَفْعَلُونَ تَرى كَثِيرًا مِنْهُمْ يَتَوَلَّوْنَ الَّذِينَ كَفَرُوا لَبِئْسَ ما قَدَّمَتْ لَهُمْ أَنْفُسُهُمْ إلى قولِه فاسِقُونَ ثم قال: كلا واللهِ لَتَأْمُرُنَّ بالمعروفِ ولَتَنْهَوُنَّ عن المنكرِ ولَتَأْخُذُنَّ على يَدِ الظالمِ ولَتَأْطُرُنَّهُ على الحقِّ أَطْرًا ولَتَقْصُرُنَّهُ على الحقِّ قَصْرًا أو لَيَضْرِبَنَّ اللهُ بقلوبِ بعضِكم على بعضٍ ثم لَيَلْعَنَكُم كما لعنهم

 

பனூ இஸ்ரவேலர்களிடம்  நுழைந்த  குறைகளில் முதன்மையானதுஅவர்களில் ஒருவர் இன்னொருவரிடம் செல்வார்.  அவரைப் பார்த்து  நீர் அல்லாஹ்வை பயப்படுவீராக!  பாவம் செய்து வருவதை விட்டு விடுவீராக!  பாவம் செய்வது உனக்கு கூடாது என்று கூறுவார்.  மறுநாளும் அதே பாவம் செய்த நிலையில் அவரை சந்திப்பார். (ஆனால் அப்போது அவரைத்தடுக்காமல்)  அவருடன் சாப்பிடுவார்.  உட்கார்ந்து இருப்பார்.  அவரை விட்டு விலகி இருக்க மாட்டார்.  இதை அவர்கள் செய்த போது அவர்களின் சிலரை சிலருடன் உள்ளத்தால் அல்லாஹ் இணைத்து விட்டான்  என்று  நபி அவர்கள் கூறிவிட்டு  பின்வரும் வசனத்தை ஓதினார்கள்.  பின்னர்  நபி அவர்கள்  அவ்வாறு அல்ல, அல்லாஹ்வின் மீது சத்தியமாக  நீங்கள் நல்லதை ஏவ வேண்டும். தீயதிலிருந்து தடுக்க வேண்டும்.  அநீதக்காரனின் கையை நீங்கள் பிடித்து  சத்தியத்தின் மீது இருக்கச் செய்து அந்த சத்தியத்திலேயே அவனை நிலைத்திருக்க செய்யவும் வேண்டும்.  இல்லையெனில்  உங்களில் சிலரை சிலரிடம்  இதயங்கள் மூலம் இணைத்து விடுவான்.  பின்பு அவர்களை சபித்தது போல் உங்களையும் சபித்து விடுவான் என்று கூறினார்கள். (ரியாளுஸ் ஸாலிஹீன்)

 

குர்ஆனின் கடும் எச்சரிக்கைக்குறிய வசனம்          

 

لَوْلَا يَنْهٰٮهُمُ الرَّبَّانِيُّوْنَ وَالْاَحْبَارُ عَنْ قَوْلِهِمُ الْاِثْمَ وَاَكْلِهِمُ السُّحْتَ‌ لَبِئْسَ مَا كَانُوْا يَصْنَعُوْنَ‏

அவர்கள் பாவமான வார்த்தைகளைக் கூறுவதிலிருந்தும், விலக்கபட்டப் பொருள்களை அவர்கள் உண்பதிலிருந்தும், (அவர்களுடைய) மேதைகளும் குருமார்களும் அவர்களைத் தடுத்திருக்க வேண்டாமா? இவர்கள் செய்வதெல்லாம் தீமையேதாம். (அல்குர்ஆன் : 5:63)

 

وعن ابن عباس، قال: ما في القرآن آية أشد توبيخاً من هذه الآية

இந்த வசனத்தைப் போன்று கடும் எச்சரிக்கை உள்ள வேறு வசனம் குர்ஆனில் இல்லை என்று இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

 

مثل القائم على حدود الله، والواقع فيها، كمثل قوم استهموا على سفينة، فأصاب بعضهم أعلاها، وبعضهم أسفلها، فكان الذين في أسفلها إذا استقوا من الماء مروا على من فوقهم، فقالوا: لو أنا خرقنا في نصيبنا خرقا، ولم نؤذ من فوقنا. فإن يتركوهم وما أرادوا، هلكوا جميعا، وإن أخذوا على أيديهم نجوا ونجوا جميعا

 

அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை - ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் சிலருக்குக் கீழ் தளத்திலும் இடம் கிடைத்தது. கீழ்த் தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது (அதைக் கொண்டு வர) அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. (அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது). அப்போது, கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் (தமக்குள்) 'நாம் (தண்ணீருக்காக) நம்முடையபங்கில்       (கீழ்த்தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம்; நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம்' என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள் விட்டு விட்டால் (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்து போவார்கள். (ஓட்டையிட விடாமல்) அவர்களைத் தடுத்தால் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (அவர்களுடன் மற்ற) அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (புகாரி ; 2493)

 

لُعِنَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ بَنِىْۤ اِسْرَآءِيْلَ عَلٰى لِسَانِ دَاوٗدَ وَعِيْسَى ابْنِ مَرْيَمَ‌  ذٰ لِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا يَعْتَدُوْنَ

இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, காஃபிராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப்பட்டுள்ளனர் ஏனென்றால் அவர்கள் (இறைவன் கட்டளைக்கு) மாறு செய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டும் இருந்தார்கள். (அல்குர்ஆன் : 5:78)

 

كَانُوْا لَا يَتَـنَاهَوْنَ عَنْ مُّنْكَرٍ فَعَلُوْهُ ‌ لَبِئْسَ مَا كَانُوْا يَفْعَلُوْنَ‏

இன்னும் தாம் செய்து கொண்டிருந்த தீய காரியங்களை விட்டு ஒருவரையொருவர் தடுப்போராகவும் அவர்கள் இருக்க வில்லை; அவர்கள் செய்து கொண்டிருந்தவையெல்லாம் நிச்சயமாக மிகவும் தீயவையாகும். (அல்குர்ஆன் : 5:79)

இந்த வசனத்தில் பனூஇஸ்ராயீல் நபிமார்களின் மூலம் சபிக்கப்பட்டதற்கு காரணமாக அல்லாஹ் மூன்று விஷயங்களை குறிப்பிடுகிறான். அதில் ஒன்று ; தீமைகளை ஒருவரை ஒருவர் தடுக்க வில்லை என்பது.

 

وكانَ ابْنُ عَبّاسٍ إذا قَرَأ هَذِهِ الآيَةَ بَكى، وقالَ: إنَّ هَؤُلاءِ الَّذِينَ سَكَتُوا عَنِ النَّهْيِ عَنِ المُنْكَرِ هَلَكُوا، ونَحْنُ نَرى أشْياءَ نُنْكِرُها، ثُمَّ نَسْكُتُ ولا نَقُولُ شَيْئًا تفسير رازي

இந்த வசனத்தை ஓதும் போதெல்லாம் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கண்ணீர் வடிப்பார்கள். தவறைப் பார்த்து மௌனமாக இருந்த இவர்கள் அழிந்து போய் விட்டார்கள். நாம் இன்றைக்கு எத்தனையோ தவறுகளைப் பார்க்கிறோம். எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்து விடுகிறோம். நம் நிலை என்னவாகுமோ என்று நினைத்து அழுவார்கள். (தஃப்ஸீர் ராஸீ)

 

தவறைத் தடுக்காமல் மௌனமாக இருந்தவர்கள் அழிந்து போனார்கள்

நபி தாவூத் அலை அவர்களின் சமூகத்தைச் சார்ந்த மக்கள் கடலோரம் அமைந்துள்ள “ஈலா“ என்ற கிராமத்தில் வசித்து வந்தார்கள்.

மறுமையை மறந்து இவ்வுலகமே எல்லாம் என்று வாழ்ந்த இவர்களைச் சோதிக்க வல்ல நாயன் நாடினான். இவர்களின் பிராதான தொழில் மீன்பிடியாகும். சனிக்கிழமை மீன்பிடிப்பது இவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தது. சனிக் கிழமை அதிகளவு மீன் கரையொதுங்குவதை அவதானித்த இவர்கள் அல்லாஹ்வின் தடையை மீறி மீன்பிடிக்க நாடினார்கள்.

இவர்களின் பேராசையை புரிந்து கொண்ட ஷைத்தான் இவர்களை வழிகெடுப்பதற்கு பின்வரும் ஒரு தந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தான்.

கடலிலிருந்து ஒரு கால்வாய் தோண்டி கடலுக்கு வெளியே பெரிய மடுவை ஏற்படுத்துவதால் சனிக்கிழமை அதிகளவு கரையொதுங்கும் மீன்கள் கால்வாய் வழியாக மடுவை வந்தடையும். மீன்கள் மடுவை அடைந்ததும் கால்வாயை மூடிவிட வேண்டும். இவ்வாறு ஒதுங்கிய மீன்களை சனிக்கிழமை பிடிக்காமல், ஞாயிறு பிடிப்பதால் அல்லாஹ்வின் தடையை மீறிய குற்றம் வராது. இதன் மூலம் கணிசமான மீன்கள் கிடைக்கும்! தடையை மீறிய குற்றத்திலிருந்து விடுதலையும் கிட்டும் என்று கூறி ஆசையை ஏற்படுத்தினான்.!

உடனே அவர்கள் செயலில் குதித்தனர். மடுவுக்குள் மீனை சிக்கவைப்பதும், மீன் பிடிப்பதற்குச் சமம்“ என்பதைப் புரிந்து கொள்ளாத இவர்கள், சனிக்கிழமை மீனை கையால் பிடிக்கா விட்டால் போதும் என்று கற்பனை செய்து கொண்டனர். உண்மையில் இது அல்லாஹ்வின் கட்டளையை மீறும் செயல் என்பதை இவர்கள் அறியவில்லை!

இவர்களின் இந்த செயலை யூதர்களில் பலர் விரும்பவில்லை. இதனால் யூதர்கள் மூன்று கூட்டமாகப் பிரிந்தனர்.

1. வெளிப்படையாக எதிர்ப்பவர்கள்

2. உளமாற வெறுப்பவர்கள்

3. இச்செயலை ஆதரிப்பவர்கள்

வெளிப்படையாக இப்பாதக செயலை எதிர்ப்பவர்கள் இச்செயலை ஆதரிப்பவர்களுடன் அனைத்து வகையான தொடர்புகளையும் நிறுத்திக் கொண்டதுடன், இவர்களைப் பிடிக்கும் அல்லாஹ்வின் தண்டனை தங்களுக்கு அணுகாதிருக்க ஊரின் மத்தியில் ஓர் தடுப்பு மதில் ஒன்றை எழுப்பி போக்குவரத்திற்காக ஒரு சிறு வழியையும்  வைத்தனர்.

சனிக்கிழமை மீனைச் சிறைப்படுத்தி மீனைப்பிடிப்போரை தாவூத் நபியவர்கள் எச்சரித்தார்கள், அவர்கள் அதனைக் கண்டு கொள்ளவில்லை. தாவூத் நபி அலை அவர்கள் பொறுமை இழந்தார்கள்.இவர்களைச் சபித்தார்கள். இதன் பின் இவர்கள் வாழ்ந்த பகுதி வெறிச்சோடிக் கிடந்தன. மனித நடமாட்டம் இல்லாதிருப்பதை அவதானித்தவர்கள் தடுப்புச் சுவருக்கு மேலால் எட்டிப் பார்த்தனர். என்ன ஆச்சரியம்!அவர்கள் அனைவரும் குரங்குகளாக உருமாறியிருந்தனர்.

தடுப்புச் சுவரைத் தாண்டி அவர்களைப் பார்க்கச் சென்றவர்களை குரங்குகளாக உருமாறியவர்கள் தங்கள் உறவினர்களை இனங்கண்டு கட்டிப் பிடித்து கதறியழுதனர். ஆனால் உறவினர்கள் குரங்குகளாக உரு மாறியவர்களை இனங்காண முடியாதவாறு தவித்தனர்.

உண்ணவும், பருகவும் முடியாமல் தவித்த இவர்கள், மூன்று நாட்கள் வரை பசியோடும், தாகத்தோடும் இருந்து இறந்து போயினர். இவ்வாறு குரங்குகளாக உருமாறி இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,000ஆகும்.

சனிக்கிழமை மீன் பிடிப்பதை வெளிப்படையாக எதிர்த்தவர்களும், மனதால் வெறுத்து ஒதுங்கியவர்களும் இத்தண்டனையிலிருந்து  தப்பிக் கொண்டனர்.

 

كَذَّبَتْ ثَمُوْدُ بِطَغْوٰٮهَآ  ۙ

ஸமூது கூட்டத்தினர் (ஸாலிஹ் நபியைத்) தங்கள் அநியாயத்தால் பொய்யாக்கினார்கள். (அல்குர்ஆன் : 91:11)

 

اِذِ انْبَعَثَ اَشْقٰٮهَا  ۙ

அவர்களிலுள்ள ஒரு துர்பாக்கியன் முன் வந்தபொழுது, (அல்குர்ஆன் : 91:12)

 

فَقَالَ لَهُمْ رَسُوْلُ اللّٰهِ نَاقَةَ اللّٰهِ وَسُقْيٰهَا

அல்லாஹ்வின் தூதர் (ஆகிய சாலிஹ் நபி) தன் மக்களை நோக்கி ‘‘இது அல்லாஹ்வுடைய ஒரு பெண் ஒட்டகம் (இதைத் துன்புறுத்தாமலும்) இது தண்ணீர் அருந்த (தடை செய்யாமலும்) விட்டு விடுங்கள்'' என்று கூறினார். (அல்குர்ஆன் : 91:13)

فَكَذَّبُوْهُ فَعَقَرُوْهَا   ۙفَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُمْ بِذَنْبِهِمْ فَسَوّٰٮهَا  ۙ

எனினும், அவர்கள் அவரைப் பொய்யாக்கி, அதன் கால் நரம்பைத் தறித்துவிட்டனர். ஆகவே, அவர்களுடைய இறைவன் அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக, அவர்களின் மீது வேதனையை இறக்கி, அவர்கள் அனைவரையும் (தரை) மட்டமாக்கி விட்டான்.(அல்குர்ஆன் : 91:14)

وَلَا يَخَافُ عُقْبٰهَا

இவர்களின் முடிவைப் பற்றி(த் தன்னைப் பழிவாங்கி விடுவார்களென்று இறைவன்) பயப்படவில்லை. (அல்குர்ஆன் : 91:15)

قصة ناقة نبي الله صالح، ومن قاموا بقتلها، فعلى الرغم من أن القائم بالجريمة شخص واحد، ومعروف ومعلوم، وأشار إليه القرآن الكريم بفعله، لكنه عند حديثه عن الجريمة لم يستثنِ أحدًا ممن كان يقدر على منعها، فقال تعالى: (إذ انبعث أشقاها. فقال لهم رسول الله ناقة الله وسقياها. فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها) الشمس: 12-14.

فالضمير هنا في التكذيب وذبح الناقة، ضمير جمع، رغم أن من ذبحها هو شخص واحد، وقال عنه القرآن: (إذ انبعث أشقاها)، ولكن عند الحديث عن الجريمة والعقوبة، فجاء بالجمع، لأن هناك من حرّض، وهناك من ذبح، وهناك من هلل لما يفعل المجرم، وهناك من صمت صمتًا شجعه على الإقدام على جريمته.

أَشْقَى الْقَبِيلَةِ، هُوَ قُدَار بْنُ سَالِفٍ عاقرُ النَّاقَةِ

ஸாலிஹ் அலை அவர்களின் வரலாற்றில் அல்லாஹ்வின் அற்புதமாக வெளிப்பட்ட அந்த ஒட்டகத்தை அறுத்தது குதார் பின் ஸாலிஃப் என்ற ஒருத்தன் தான். ஆனால் அல்லாஹ் இந்த வசனத்தில் அவர்கள் அறுத்து விட்டார்கள் பன்மையாக கூறுகிறான். இதற்கு விளக்கம் கூறும் இமாம்கள், அறுப்பதைத் தூண்டியவர்கள், அதை ஆர்வப்படுத்தியவர்கள், அந்த செயலை உற்சாகப்படுத்தியவர்கள், அதை மௌனமாக வேடிக்கை பார்த்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட்டார்கள் என்று கூறுகிறார்கள்.

எனவே தவறுகளை அநீதங்களை தடுப்பதற்கு சக்தியிருந்தும் தடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பவர்களும் அதற்கு ஆதரவு தறுபவர்களும் அல்லாஹ்வின் சாபத்திற்கும் வேதனைக்கும் உரியவர்கள்.

இன்று ஃபலஸ்தீன மக்கள் உணவில்லாம் கடும் பசியால் தினம் தினம் மடிந்து கொண்டிருக்கிறார்கள். நாம் இங்கிருந்து வேதனைப்படுகிறோம். அவர்களுக்காக துஆ செய்கிறோம். ஆனால் தடுக்க வேண்டிய இடத்தில் இருக்கும் பல இஸ்லாமிய நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.

கொடுமையிலேயே பெரிய கொடுமை பசியால் மரணிப்பது

«تَعَوَّذُوا بِاللَّهِ مِنْ جَهْدِ البَلاَءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ القَضَاءِ، وَشَمَاتَةِ الأَعْدَاءِ»

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நீங்கள் அல்லாஹ்விடம் தாங்கமுடியாத சோதனை, அழிவில் வீழ்வது, விதியின் கேடு, எதிரிகளால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புக் கோருங்கள்.  (புகாரி: 6616)

فقالوا عن شرح معنى تعوذه من (جهد البلاء)، أنه  أن تحتاج إلى ما في أيدي الناس فيمنعوك.

இந்த ஹதீஸில் தாங்க முடியாத சோதனை என்ற வார்த்தைக்கு விளக்கமளிக்கும் இமாம்கள் தன் இயலாமையால் ஒருவர் மக்களிடத்தில் தேவையாகுவார். ஆனால் அம்மக்கள் அவரை விரட்டுவார்கள் என்று கூறுகிறார்கள்.

இந்த தாங்க முடியாத கடும் சோதனையைத் தான் இன்று ஃபலஸ்தீன மக்கள் சந்தித்திருக்கிறார்கள்.

 

இதை வேடிக்கை பார்ப்பவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானவர்கள்

إذا رأيتمُ الرجلَ يقتلُ صبرًا فلا تحضروا مكانَهُ، فلعلهُ يقتلُ ظلمًا فتنزلُ السخطةُ فتصيبكمْ

பசியால் ஒருவர் கொல்லப்படுவதை நீங்கள் பார்த்தால் அந்த இடத்தில் நீங்கள் இருக்காதீர்கள். அல்லாஹ்வின் கோபப்பார்வை இறங்கி அது உங்களையும் பிடித்துக் கொள்ளும். அல்ஜாமிவுஸ்ஸகீர்

 

إذا عُمِلتِ الخطيئةُ في الأرضِ، كان من شهِدَها فكرِهَها -وقال مرة: فأنكَرَها- كان كمَن غاب عنها، ومَن غابَ عنها فرضِيَها، كان كمَن شهِدَها]. قال: مَن شهِدَها فكرِهَها، كان كمَن غاب عنها

பூமியில் ஒரு பாவம் நடந்து அந்த இடத்தில் இருந்தும் ஒருவர் அதை வெறுத்தால் அதில் பங்கெடுத்தாவரைப் போல. அந்த இடத்தில் இல்லாமல் ஒருவர் அதை ஆதரித்தால் அதில் பங்கெடுத்தவரைப் போல. (தப்ரானி)

 

ஃபலஸ்தீன மக்கள் படும் துயரங்களை வேடிக்கை பார்ப்பவர்கள் இந்த எச்சரிக்கைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். அதைத்தடுப்பதற்கு முற்பட வேண்டும். அல்லாஹ் அம்மக்களுக்கு அவனுடைய கிருபையால் விரைவில் விடிவு காலத்தை ஏற்படுத்துவானாக!   

No comments:

Post a Comment