அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்].அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் வல்ல
அல்லாஹ்வின் திருப்பெயர் கூறி ஆரம்பம் செய்கிறேன்.
கண்ணியம் நிறைந்த அல்லாஹ்வின் நல்லடியார்களே அருமை நாயகம் ஸல் அவர்கள் இப்புவியை விட்டுப் பிரியும்
பொழுது இரண்டு பொக்கிஷத்தை நம்மிடம் விட்டுச் சென்றார்கள். ஒன்று ; அற்புதமான அல்குர்ஆன்.மற்றொன்று ; அவர்களின் சொல்,செயல்,அழகிய வழிமுறை.
அல்குர்ஆன்
என்பது ; அல்லாஹ்வின்
புனிதமான வார்த்தை,அதை ஏற்று செயல்படுபவன் முஸ்லிம்.அதை ஏற்காதவன் காஃபிர்.
சுத்தமானவரே அன்றி யாரும் தொடக்கூடாது என்று கூறி அல்லாஹ் அதன் கண்ணியத்தை
இப்புவிக்கு அறிமுகம் செய்கிறான். அல்குர்ஆனை பார்ப்பதும் நன்மை,படிப்பதும் நன்மை,கேட்பதும் நன்மை,அதை தொட்டு
முத்தமிடுவதும் நன்மை.
அல்குர்ஆனை
பார்ப்பவரின் குற்றங்கள் மன்னிக்கப்படும், படிப்பவரின் உள்ளம் பிரகாசத்தால் ஒளிரும்,அதை ஓதக் கேட்பவருக்கு
அல்லாஹ்வின் ரஹ்மத் கிடைக்கும். அதை மனனம் செய்தவர் ஹாஃபிழாகுவார்,அதை முறையாக
ஓதுபவர் காரியாகுவார்,அதற்கு விளக்கம் கூறுபவர் முஃபஸ்ஸிராகுவார், அதை கற்றுக்
கொடுப்பவர் முஅல்லிமாகுவார்,அதன் படி நடப்பவர் இறைநேசராகுவார்.
நான்
கற்றுத்தரும் ஆசிரியாகவே உலகத்திற்கு அனுப்பப் பட்டுள்ளேன் என்பது அருமை நாயகம் ஸல்
அவர்களின் வாக்காகும்.நபி ஸல் அவர்கள் கியாமத் வரை ஆசிரியராக இருப்பதுபோல்
அல்குர்ஆன் கியாமத் வரை வழிகாட்டியாக இருக்கிறது.
அல்லாஹ்
அகிலத்தின் இரட்சகன்,கஃபத்துல்லாஹ் அகிலத்தின் கிப்லா,அண்ணல் நபியவர்கள்
அகிலத்தின் அருட்கொடை,அல்குர்ஆன் அகிலத்தின் வழிகாட்டி.
அல்குர்ஆனோடு
தொடர்பு கொள்கிற அனைத்தும் உயர்வைப் பெரும் என்பது குர்ஆனுக்கு அல்லாஹ் வழங்கிய
மிகப்பெரும் கண்ணியமாகும். அல்குர்ஆன் இறங்கியதால் ரமழான் சிறந்த
மாதமானது,லைலத்துல் கத்ர் சிறந்த இரவானது,அல்குர்ஆனை- கொண்டு வந்ததினால் ஜிப்ரயீல்
[அலை]அவர்கள் சிறந்த மலக்கானார்கள்,அல்குர்ஆன்
இறங்கியதால் மக்கா சிறந்த ஊரானது,அரபி சிறந்த மொழியானது,நபி ஸல் அவர்கள் சிறந்த
தூதரானார்கள்,நாம் சிறந்த உம்மத்தானோம்.
இதற்கு முன்பு
இறங்கிய தவ்ராத்,இன்ஜீல்,ஜபூர் வேதங்களில் ஆயிரக்கணக்கான மாற்றங்கள்
நிகழ்ந்துவிட்டன.ஆனால் அல்குர்ஆன் 1400 வருடங்களுக்கும் மேலாக என்னைப்போன்று ஒரு
அத்தியாயத்தை கொண்டு வாருங்கள்,என்னைப் போன்று ஒரு வசனத்தை கொண்டு வாருங்கள் என்று
வீர முழக்கமிட்டும் இன்று வரை அதன் ஒரு புள்ளிகூட மாறாமல் இருப்பது அதன்
தனித்தன்மையை நமக்கு உணர்த்துகிறது.
அல்லாஹுத்தஆலா
மூஸா நபிக்கு பிரம்பை பாம்பாக மாற்றும் ஆற்றலைக் கொடுத்தான்.ஈஸா நபிக்கு
வெண்குஷ்டம், கருங்குஷ்டத்தை சுகமாக்கும் ஆற்றலைக் கொடுத்தான்.அவைகள் அவர்களுடன்
முடிந்து விட்டது.ஆனால் அண்ணல் நபிக்கு அல்குர்ஆனை அற்புதமாக கொடுத்தான்.அது இன்று
வரை,இல்லை இல்லை இனி கியாமத் அழியா அற்புதமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
அந்த அற்புத
வேதத்தை நாம் கற்போம்,கற்றுக் கொடுப்போம், மனனம் செய்வோம்,அதை விளங்குவோம்,அதன் வழி
நடப்போம்.யா அல்லாஹ் அல்குர்ஆனை கற்று அதன் வழி நடக்க எங்களுக்கு அருள் புரிவாயாக
ஆமீன்.
No comments:
Post a Comment