Wednesday, December 18, 2013

பாவ மன்னிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்].அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருநாமம் கூறி தொடங்குகிறேன்.
அன்பு நிறைந்த அல்லாஹ்வின் நல்லடியார்களே! உலகத்திலே அல்லாஹ்வின் படைப்புகளை நான்கு வகையாகப் பிரிக்கலாம். 1,நன்மை மட்டும் செய்யும் வானவர்கள். 2,பாவம் மட்டும் செய்யும் ஷைத்தான்கள். 3,நன்மையும்,பாவமும் செய்யும் மனிதர்கள். 4,நன்மை,பாவம் இரண்டையும் செய்யத்தெரியாத உயிரினங்கள்.                                                  
இதில் மூன்றாவது வகையாக இருக்கிற நமக்கு அல்லாஹுத்தஆலா பலகீனத்தையும் கொடுத்திருக்கிறான், புத்திசாலித்தனத்தையும் கொடுத்திருக்கிறான். நம்மிடம் இருக்கிற பலகீனத்தால் நாம் பாவம் செய்து விடுகிறோம்.ஆனால் நமக்கு அல்லாஹ் வழங்கியிருக்கிற புத்திசாலித்தனத்தால் அந்த பாவத்திற்கு பரிகாரத்தைப் பெற்றுக்கொண்டு அகிலத்தைப் படைத்த அந்த அல்லாஹ்வின் அன்பைப் பெற்று  விடுகிறோம்.
   
உண்மையில் எவன் தன் பலகீனத்தை ஏற்றுக் கொண்டு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுகிறானோ அவன் தான் புத்திசாலியாக இருக்க முடியும். எவன் தன் நிலையை உணராமல் பாவத்திலேயே மூழ்கிக் கிடக்கிறானோ அவனை விட அறிவிழி உலகத்தில் யாரும் இருக்க முடியாது.             
 செய்த பாவங்களுக்காக வருந்தி, பாவ மன்னிப்புத்தேடி, அல்லாஹ்விடம் மீழுதல் என்பது : அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறுவதற்காக தங்களின் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய நல்லோர்களின் பண்பு. ஈருலக வாழ்விலும் வெற்றி பெறத் துடிப்பவர்களின் குணம். அகிலத்தைப் படைத்த அந்த அல்லாஹ்வின் அன்பைப் பெற்ற நம் முன்னோர்களான நபிமார்கள், ஷுஹதாக்கள், சித்தீக்கீன்கள்,ஸாலிஹீன்கள் அனைவரும், அல்லாஹ்வின் அன்பு எனும் கோட்டைக்குள் நுழைவதற்காக பயன் படுத்திய திறவுகோள். அவர்கள் புத்திசாலித்தனத்தால் மிக உயர்ந்த பண்பான பாவ மன்னிப்புத் தேடுதலை கையில் எடுத்த காரணத்தால் வெற்றி பெற்றார்கள்.                           
எனவே நாம் ஈருலகிலும்  வெற்றியாளர்களாகத் திகழ வேண்டுமென்றால் பாவ மன்னிப்புத் தேடுதல் என்ற உண்ணதமான ஆயுதத்தை கையில் எடுக்க வேண்டும்                               . وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ முஃமின்களே நீங்கள் அனைவரும் பாவ மன்னிப்புத்தேடி அல்லாஹ்வின் அளவில் மீளுங்கள் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்பதாக இறைவன் திருமறையில் வாக்களிக்கிறான்.                                       
                         
 என்னிடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள் நான் உங்களது பாவங்களை மன்னிக்கிறேன்,உங்களுக்கு மழையை இறக்குகிறேன்,பொருட்செல்வத்தையும்,குழந்தைச்செல்வத்தையும் வழங்குகிறேன்.தோட்டந்துறவுகளைத் தருகிறேன்.நதிகளை ஏற்படுத்துகிறேன் என்று இறைவன் நூஹ் அத்தியாயத்தில் கூறுவதிலிருந்து பாவ மன்னிப்புத் தேடுவதின் சிறப்பை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
 فالله تعالى أشد فرحاً بتوبة العبد المؤمن ஆள் நடமாட்டம் இல்லாத, உதவிக்கு வழியில்லாத, காட்டு வனாந்திரப் பகுதியில் தொலைந்து போன வாகனத்தையும்,உணவுப் பொருட்களையும் திரும்ப பெற்றுக் கொண்டவன் எந்தளவு ஆனந்த வெள்ளத்தில் மிதப்பானோ, மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பானோ அதை விட அதிகமாக,  பாவ மன்னிப்புத் தேடுகிற நம்மைப் பார்த்து இறைவன் மகிழ்ச்சியடைகிறான் என்பதாக கண்மனி நாயகம் {ஸல்} அவர்கள் கூறுகிறார்கள்.எனவே பாவ மன்னிப்புத் தேடுவோம் அல்லாஹ்வின் அன்பைப் பெறுவோம்.

இறைவா நாங்கள் பாவிகள். உன் மன்னிப்பு இல்லையானால் நாங்கள் நஷ்டமடைந்து விடுவோம்.எனவே எங்கள் பாங்களை மன்னித்து எங்களின் மீது அருள் புரிவாயாக ஆமீன்.

No comments:

Post a Comment