Wednesday, December 4, 2013

மனத்தூய்மை

அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்] அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயர் கூறி ஆரம்பம் செய்கிறேன்.
அன்பு நிறைந்த அல்லாஹ்வின் நல்லடியார்களே இன்றைக்கு உலகத்திலே ஒவ்வொரு மனிதனும் ; நான் தான் உயர்ந்தவன், நான் தான் சிறந்தவன் என்று சொல்லிக் கொள்கிறான்.ஆனால் உண்மையில் உயர்வையும்,சிறப்பையும் தீர்மானிப்பது எது?
நம்மிடம் இருக்கும் பணமா, இல்லை பதவியா,இல்லை அழகா,இல்லை குடும்ப பாரம்பர்யமா என்று நாம் நமது சிந்தனைகளை கொஞ்சம் ஓட விட்டால் நிச்சயம் நம் உயர்விற்கு காரணம் பணமோ,பதவியோ,அழகோ,குடும்ப பாரம்பர்யமோ இல்லை என்ற உண்மை  நம் உள்ளத்தில்  நன்கு பளிச்சிடும்.
 அல்லாஹுத்தஆலா உலகத்திலே ஆரம்பமாக பூமியைப் படைத்தபோது அது இலேசாக ஆடியது, அசைந்தது.அதன் பிறகு உறுதியான மலைகளை அதன் மீது அமைத்த போது பூமி தன் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டு உறுதியானது.அதைப்பார்த்த மலக்குமார்கள்; இந்த மலை என்பது அல்லாஹ்வின் மிகப் பிரமாண்டமான படைப்பு.இந்த மலையைப் போன்று  சிறந்த,உறுதியான எந்த பொருளையும் அல்லாஹ் படைக்கவில்லை என்று கூறினார்கள். அதன் பிறகு அல்லாஹுத்தஆலா இரும்பைப் படைத்தான். அந்த இரும்பு மலையை உடைத்தது.அதைக் கண்ட மலக்குகள்: இந்த இரும்பு தான் சிறந்த படைப்பு.இதை விட சிறந்த,உறுதியான எந்தப் பொருளையும் அல்லாஹ் படைக்கவில்லை என்று கூறினார்கள்.பின்பு அல்லாஹ் நெருப்பைப் படைத்தான். அந்த நெருப்பு இரும்பை உறுக்கியது. அதைக்கண்டவுடன் இந்த நெருப்புதான் சிறந்தது.இதை விட சிறந்த,உறுதியான எந்தப் பொருளையும் அல்லாஹ் படைக்க வில்லை என்றார்கள்.அதன் பிறகு நீரைப் படைத்தான்.அந்த நீர் நெருப்பை அணைத்தது.அதைப்பார்த்த மலக்குகள்; நீர் தான் சிறந்தது.இதை விட சிறந்த ஒன்றை அல்லாஹ் படைக்கவில்லை என்றார்கள்.பிறகு அல்லாஹ் காற்றைப் படைத்தான்.அந்த காற்று நீரை தள்ளியது, புரட்டிப்போட்டது. அதையும் பார்த்தபோது மலக்குகள் குழம்பிப் போனார்கள்.இறைவா உனது படைப்பில் எது சிறந்தது என்று எங்களால் தீர்மானிக்க முடியவில்லை.
மலைதான் உயர்ந்தது என்று நினைத்தோம் ஆனால் இரும்பு அந்த மலையையே உடைத்து விட்டது.இரும்புதான் உயர்ந்தது என்று நினைத்தோம்.ஆனால் நெருப்பு அந்த இரும்பையே உறுக்கிவிட்டது.  நெருப்புதான் உயர்ந்தது என்று தீர்மானித்தோம்.ஆனால் நீர் அந்த நெருப்பையே ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டது.சரி நீர் தான் உயர்ந்தது என்று எண்ணினோம்.ஆனால் காற்று அந்த நீரையே புரட்டிவிட்டது. இறைவா உனது படைப்பின் கோலங்களை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த குழப்பத்திற்கு நீ தான் விடையளிக்க வேண்டும் என்று மலக்குகள் கேட்டார்கள், அப்போது அல்லாஹுத்தஆலா; வலக்கரம் செய்யக்கூடிய தர்மம் இடக்கரத்திற்குக் கூட தெரியாத அளவு மறைவாக, மனத்தூய்மையாக அமல் செய்யக்கூடிய மனிதனுடைய உள்ளத்தை விட சிறந்ததாக,உயர்வாக எதையும் நான் இந்த உலகில் படைக்கவில்லை என்று கூறினான்.

எனவே நமது உயர்வை தீர்மானிப்பதும்,நமது சிறப்பை முடிவு செய்வதும் நம்மிடம் இருக்கும் மனத்தூய்மைதான். யா அல்லாஹ் எங்களது உள்ளத்திலிருந்து தற்பெருமையையும்,கர்வத்தையும் அகற்றுவாயாக,எந்த காரியத்தை செய்தாலும் மனத்தூய்மையுடன் செய்யும் பாக்கியத்தை எங்கள் அனைவருக்கும் நல்குவாயாக ஆமீன்.

No comments:

Post a Comment