Wednesday, December 4, 2013

பிஸ்மில்லாஹ் சொல்வோம்



அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் வல்ல அல்லாஹ்வின் பெயர் கூறி ஆரம்பம் செய்கிறேன்.                          
                
     அன்பு நிறைந்த அல்லாஹ்வின் நல்லடியார்களே ! அல்லாஹுத் தஆலா மிக அருளாளன், அன்பாளன். அந்த அல்லாஹ்வின் ரஹ்மத் மிக உயர்வானது,அவனின் அருள் மிக விசாலமானது.அந்த உயர்ந்த அருளை விட்டும் எவரும் தேவையற்று இருக்க முடியாது.அந்த அருளை போதும் என்று எவரும் கூறி விடவும்  முடியாது.வல்ல அல்லாஹ்வின் அந்த பேரருளை நாம் நம்முடைய எல்லா செயல்களிலும் பெற்று,அனுபவித்து மகிழ வேண்டுமென்றால்
நாம் நமது எல்லா செயல்களிலும் அந்த வல்ல இறைவனின் திருநாமத்தை மொழிய வேண்டும். அதாவது நாம் நமது எல்லா செயல்களையும் பிஸ்மில்லா சொல்லி தொடங்கினால் அந்த செயல்கள் அனைத்திலும் அல்லாஹ்வின் அருளைக் காண முடியும். இல்லையென்றால் அருளை விட்டும் தூரமாக்கப்பட்ட ஷைத்தானின் நுழைவிடமாக அந்த செயல்கள் மாறிவிடும்.

அல்லாஹ்வின் திருப்பெயர் சொல்லி தொடங்கப்படாத எல்லா காரியங்களும் அல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமானவை என்று அகிலத்தின் அருட்கொடையான கண்மனி நாயகம் ரசூலுல்லாஹி  ஸல் அவர்கள் அருளுகிறார்கள்.
     
      எனவே நமது ஒவ்வொரு செயலின் தொடக்கமும் பிஸ்மில்லா வாக இருந்தால் நிச்சயமாக ஷைத்தானை நாம் தூர விலக்கி விடலாம்.   வீதியில் இரண்டு ஷைத்தான்கள் சந்தித்துக் கொண்டார்கள்.அதில் ஒருவன் குளித்து,புத்தாடை அணிந்து,எண்ணை தேய்த்து, தலைவாரி,செருப்பு அணிந்து,நல்ல கொழுத்தவனாக இருந்தான். இன்னொருவன் குளிக்காமல்,எண்ணை தேய்க்காமல், தலைவிரி கோலமாக,ஆடையில்லா நிர்வானமாக,செருப்பு இல்லாதவ னாக,சரியாக சாப்பிடாமல் மெலிந்தவனாக இருந்தான்.இருவரும் பேசிக் கொள்கிறார்கள்.நீ எப்படி இவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறாய் என்று மெலிந்த ஷைத்தான் கனமான ஷைத்தானைப் பார்த்து கேட்ட போது எனக்கு எல்லாம் கிடைக்கிறது.என் தோழமையைப் பெற்ற மனிதன் அவன் உண்ணும்போது எனக்கும் உணவு கொடுக்கிறான்.ஆடை அணிகிற போது எனக்கும் அணிவித்து விடுகிறான்.செருப்பு அணிகிறபோது எனக்கும் அணிவிக்கிறான். எண்ணை தேய்க்கிறபோது எனக்கும் தேய்த்து விடுகிறான். தலைவாருகிற போது எனக்கும் வாரி விடுகிறான்.எனவே தான் நான் இவ்வளவு தூய்மையாக இருக்கிறேன் என்று கூறினான்.சரி நீ ஏன் இவ்வளவு பலகீனமாக இருக்கிறாய் என்று கனமான ஷைத்தான் மெலிந்த ஷைத்தானைப் பார்த்து கேட்ட போது அதற்கவன்;எனக்கு எதுவும் கிடைப்பதில்லை.என் தோழமையைப் பெற்ற மனிதன் எனக்கு எதுவும் தருவதில்லை என்று கூறினான்.ஏன் கிடைப்பதில்லை என்று கேட்க அவன் எந்த காரியத்தை செய்தாலும் பிஸ்மில்லா கூறி செய்கிறான்.அதனால் அந்த காரியங்களில் என்னால் நுழைய முடியவில்லை என்று கூறினான்.

      இதைத்தான் நபி ஸல் அவர்கள் ;ஒருவன் பிஸ்மில்லா சொல்லி வீட்டில் நுழைந்து,பிஸ்மில்லா சொல்லி சாப்பிட்டால் இங்கே உங்களுக்கு தங்குமிடமும் இல்லை,உணவும் இல்லை என்று இப்லீஸ் தன் படைகளுக்கு கூறுகிறான்.ஆனால் ஒருவன் பிஸ்மில்லா சொல்லாமல் வீட்டில் நுழைந்து,பிஸ்மில்லா சொல்லாமல் சாப்பிட்டால் இங்கே உங்களுக்கு உணவும் இருக்கிறது,தங்குமிடமும் இருக்கிறது என்று இப்லீஸ் தன் படைகளுக்கு கூறுகிறான் என்று கூறினார்கள்.

      எனவே நாம் நமது எல்லா காரியங்களின் தொடக்கத்திலும் பிஸ்மில்லா கூறுவோம் ஷைத்தானின் ஊடுறுவலை விட்டும் தூய்மையாக்குவோம்.


      யா அல்லாஹ் நாங்கள் எங்களது எல்லா காரியங்களையும் பிஸ்மில்லா சொல்லி தொடங்க அருள் புரிவாயாக.ஷைத்தான் நுழைவதை விட்டும் பாதுகாப்பை வழங்குவாயாக ஆமீன்.  

No comments:

Post a Comment