Wednesday, December 4, 2013

ஷைத்தானின் சூழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் வல்ல அல்லாஹ்வின் பெயர் கூறி ஆரம்பம் செய்கிறேன். அன்பு நிறைந்த அல்லாஹ்வின் நல்லடியார்களே அல்லாஹு ஜல்ல ஷஃனுஹு வதஆலா தன் அருள் மறை வேதமான அல்குர்ஆன் ஷரீஃபின் ஓர் இடத்தில்- وَقُلْ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ  وَأَعُوذُ بِكَ رَبِّ أَنْ يَحْضُرُونِ
இறைவா ஷைத்தானுடைய தீங்குகளை விட்டும்,அந்த ஷைத்தான்கள் என்னிடம் வருவதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத்தேடுகிறேன் என்று நபியே நீங்கள் சொல்லுங்கள் என்று கூறுகிறான்.
அல்லாஹுத்தஆலா உலகத்தைப் படைத்து, அவனை வணங்க வேண்டும் என்பதற்காக மனிதர்களைப் படைத்திருக்கிறான்,மனிதர்களுக்கு நேர் வழிகாட்டுவதற்காக அருள் மறை வேதங்களை உலகத்திற்குத் தந்திருக்கிறான்,அந்த அருள் மறை வேதங்களை சமூகத்திற்கு கற்றுக்கொடுப்பதற்காகவும், இருள் படிந்த உலகில் இஸ்லாமிய தீபத்தை ஏற்றி வைத்து ஒளிமயமாக மாற்றுவதற்காகவும்,  அறியாமையில் வீழ்ந்து கிடக்கும் சமுதாயத்திற்கு மார்க்க அறிவைப் புகட்டுவதற்காகவும், மிருகமாக வாழ்பவர்களை மனிதர்களாக,மனிதப் புனிதர்களாக மாற்றுவதற்காகவும் பரிசுத்த நபிமார்களை இவ்வையகத்தில் அல்லாஹ் உதிக்கச் செய்திருக்கிறான்.
அதே சமயம் மனிதர்களை வழிகெடுப்பதற்காக ஷைத்தானையும் உலகத்தில் படைத்திருக்கிறான். அந்த ஷைத்தான் வரும்பொழுதே அல்லாஹ்விடம் சொன்னான்: நீ என்னை வழிகெட்டவனாக வெளியேற்றிவிட்ட காரணத்தால் ஆதமுடைய சந்ததிகளான மனிதர்கள் உன்னுடைய நேரான பாதையில் செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில் உட்கார்ந்து கொள்வேன். பின் நிச்சயமாக நான் அவர்களது முன்னும், பின்னும், வலப்புறமும், இடப்புறமும் வந்து அவர்களை வழிகெடுத்துக் கொண்டிருப்பேன். எனவே நீ அவர்களில் அதிகமானவரை உனக்கு நன்றி செலுத்துபவர்களாக காண முடியாது என்று கூறினான்.
அவன் சொன்னது போன்றே இன்று நம்மில் பலர் அவனது மாய வலையில் விழுந்து வழிதவறி சென்று விட்டார்கள். இன்று நாம் நமது வாழ்வில் எத்தனையோ எதிரிகளையும்,விரோதிகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.அவர்களிடம் போராடி வெற்றி கண்டு கொண்டுக்கிறோம்.ஆனால் நமக்கு உண்மையான விரோதியாக,உண்மையான பகைவனாக இருக்கிற ஷைத்தானை நம்மில் பலர் அடையாளம் கண்டு கொள்ளவும் இல்லை,அவனை எதிர்த்து வெற்றி காணவும் இல்லை.அவனை வெற்றி காணுவதற்கான வழியை,அவனை ஜெயிப்பதற்கான பாதையை அறியாதது தான் அதற்கான காரணம்.
ஆனால் நமக்கு மிகப்பெரிய எதிரியாக இருக்கிற,நம்மை வழிகெடுப்பதையே இலட்சியமாக கொண்ட அந்த ஷைத்தானே அவனிடமிருந்து தப்பிக்க நமக்கு வழியை சொல்லி விட்டான்,அதாவது முன்னும்,பின்னும்,வலப்புறமும்,இடப்புறமும் வருவேன் என்று சொன்னவன் மேல் புறத்தையும்,கீழ் புறத்தையும் சொல்ல வில்லை.எனவே அதுதான் நாம் அவனிடமிருந்து தப்பிப்பதற்கான வழிகள்.அதாவது துஆவும்,ஸுஜூதும் தான் அவைகள்.எனவே படைத்த இறைவனுக்கு அதிகமாக ஸுஜூது செய்வோம்,அவனிடம் கரம் ஏந்துவோம்,பகைவனிடமிருந்து பாதுகாப்பைப் பெறுவோம்.இறைவா உன் அருளால் எங்கள் அனைவருக்கும் அந்த ஷைத்தானிடமிருந்து நிரந்தரமான பாதுகாப்பை நல்குவாயாக ஆமீன்.


No comments:

Post a Comment