Thursday, December 19, 2013

இஸ்லாம் கூறும் அறம்.

   


அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்] அன்பு நேயர்களே! உலகத்தில் அறம் என்ற தர்மத்தை வலியுறுத்தாத சமயங்களே இல்லை. மனிதனை உயர்வு படுத்துகின்ற, அவனுக்கு வரும் சோதனைகளிலிருந்து அவனைக் காக்கின்ற உயர்ந்த தர்மத்தைக் குறித்து எல்லா சமயங்களும் பேசுகிறது.

ஆனால் தர்மத்தைக் குறித்த இஸ்லாத்தின் பார்வை, மிக வித்தியாசமானது. ஒவ்வொரு நாளும் உடம்பின் ஒவ்வொரு பாகமும் அறம் செய்ய வேண்டும் என்ற உயர்ந்த கோட்பாட்டிற்கு வித்திட்டது இஸ்லாம் என்று கூறினால் மிகையாகாது. தர்மம் என்பது, ஒரு வழிப்பாதையல்ல. நீதியுடன் நடப்பது,சரக்குகளை ஏற்ற உதவுவது, தொழுக்காக அடியெடுத்து வைப்பது, பாதையில் கிடக்கும் தொல்லை தருபவற்றை அகற்றுவது, புன்முறுவல் பூப்பது, மனைவியின் வாயில் அன்போடு ஒரு கவளம் ஊட்டுவது போன்ற அனைத்து நற்செயல்களும் தர்மமே என்று கோடிட்டுக் காட்டி தர்மத்தின் வாயில்களை விரிவுபடுத்துகிறது இஸ்லாம்.

உங்களை நரகத்தில் நுழைய வைத்தது எது என்று சுவனவாசிகள் நரகவாதிகளைப் பார்த்து கேட்கும் போது, அவர்கள் கூறும் பதில்களில் ஒன்று , நாங்கள் ஏழைகளுக்கு உணவளிக்காமல் இருந்தோம் என்பதாகும் என அல்லாஹ் 74 வது அத்தியாயத்தில் குறிப்பிடுகிறான்.

சத்தியத்தை முறித்தவன் அந்தக் குற்றத்திற்குப் பரிகாரமாக பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்,நோன்பை முறித்தவன் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்,மனைவியைத் தாயுடன் ஒப்பிட்டுப் பேசியவன் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்று ஏழைகளுக்கு உணவளிப்பதை ஒரு சில குற்றங்களுக்குப் பரிகாரமாக ஏற்படுத்தியிருப்பது, இஸ்லாம் அறம் செய்வதை எந்தளவு வலியுறுத்து கிறது என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும்.

இப்படி இஸ்லாம் பல இடங்களில் அறம் செய்வதின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாலும் அளவுக்கு அதிகமாக தர்மம் செய்து தானும் ஓட்டாண்டியாகி,தம் குழந்தைகளையும் ஏழைகளாக விட்டுச் சென்று பிறரிடம் கையேந்தும் நிலைக்கு கொண்டு வருவதையும் இஸ்லாம் விரும்ப வில்லை.

அதிகம் செல்வம் படைத்த நபித்தோழர்களில் ஒருவரான ஸஃது பின் அபீவக்காஸ் [ரலி] அவர்கள் தன் சொத்துக்கள் அனைத்தையும் தர்மம் செய்ய நபியிடம் அனுமதி கேட்ட போது, நபியவர்கள் மறுத்து விட்டார்கள். பாதியைத் தர்மம் செய்யலாமா? என்று வினவியபோது அதையும் மறுத்து விட்டு, மூன்றில் ஒரு பகுதியை தர்மம் செய்,மீதி இருப்பதை உன் மகளுக்குக் கொடு. நீர் உங்கள் வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதை விட அவர்களைச் செல்வந்தர்களாக விட்டுச் செல்வதே சிறந்தது என அறிவுறுத்தி னார்கள்.

ஏழ்மையே தம் பெருமை என வாழ்ந்த நபி [ஸல்] அவர்கள்,தன் உம்மத்துகள் ஏழ்மைக் கோலத்தில் நிற்கக் கூடாது என்றும் கருதியிருக் கிறார்கள்.


ஒரு பக்கம், நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் தேவை என்று வருபவர்களுக்கு தயங்காமல் தந்துதவும் வள்ளலாக,   ”இல்லை என்ற வார்த்தையை தன் அகராதியிலிருந்து துடைத்தெடுத்த கொடை சீலராகத் திகழ்ந்திருக்கிறார்கள். மறு பக்கம், கொடுத்துக் கொடுத்து ஒன்றும் இல்லாமல் ஆகி விடாதே! உன் குழந்தைகளை ஒன்றுமில்லாத ஏழைகளாக விட்டு விடாதே எனறு எச்சரித்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது, இஸ்லாம் நடுநிலையான மார்க்கம் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 

வல்ல இறைவன் அல்லாஹுத்தஆலா இஸ்லாத்தை முழுமையாக விளங்கிக் கொள்ள நம் எல்லோருக்கும் அருள்புரிவானாக. 

No comments:

Post a Comment