Thursday, December 19, 2013

தண்ணீர் தட்டுப்பாடு

     


அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்} அன்பு நேயர்களே!உலகில் மனிதனும், மற்ற ஜீவராசிகளும் ஜீவிக்கத் தேவையான,அவசியமான பொருள் தண்ணீராகும்.தண்ணீர் என்பது பூமியில் கிடைக்கும் மதிப்பு மிகுந்த சொத்துக்களில் ஒன்று. அகிலத்தின் எல்லா  வளங்களுக்கும் மூலம் நீர் தான்.
      
உலகின் பெரும் பகுதி நீர் என்பதை நாம் அறிவோம்.ஆனால் அதில்,நமது பயனுக்குக் கிடைப்பது மிகவும் குறைவு தான்.இன்று பல நாடுகள் தண்ணீர் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிப்பதற்குக் காரணம் இது தான்.தண்ணீர் உள்ள மக்களை நோக்கி தண்ணீர் இல்லாதவர்கள், எங்களுக்கும் தாருங்கள் என்று கேட்கத் துவங்கி, இறுதியில் அதுவே  போராட்டமாக வெடிப்பது உலகின் பல நாடுகளில் அரங்கேறி வரும் உண்மை.
               
இறந்து விட்ட என் தாயாருக்காக எதை தர்மம் செய்வது சிறப்பானது? என்று நாயகத் தோழர்களில் ஒருவர் கேட்ட போது, தண்ணீர் என நபி {ஸல்} அவர்கள் பதிலளித்தது, இன்று நிலவும் தண்ணீர் பற்றாக் குறையை அன்றே சுட்டிக் காட்டுவதைப் போல் அமைந்திருக்கிறது.
      
உலகின் பல நாடுகள் இயற்கையாகவே இப்போது தண்ணீர் பற்றாக் குறையால் தவித்துக் கொண்டிருக்கிறது.உலகில் உள்ள சுமார் 80 நாடுகளில் 40 சதவிகிதம் மக்கள்,தண்ணீர் கிடைக்காமல் அவதிப் படுகிறார்கள். இந்நிலை இப்படியே தொடர்ந்தால்,இன்னும் சில நூற்றாண்டுகளில் உலகமே பாலை வனமாக மாறிவிடும் என்று கூறப்படுகிறது. மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் அது தண்ணீருக்காகத் தான் இருக்கும் என சர்வதேசப் பார்வையாளர்கள் கணித்திருக்கிறார்கள்.

இவ்வளவு பெரிய விபரீத முடிவைத்தரும் தண்ணீர் பற்றாக் குறையை சமாளிக்க வழி தெரியாமல் உலகத்தின் பல நாடுகள் கை பிசைந்து நிற்கின்றன.ஆனால் இந்தப் பிரச்சனைக்கு ஒர் அழகிய தீர்வை இஸ்லாம் 1400 வருடங்களுக்கு முன்பே இவ்வையகத்தில் அறிமுகம் செய்து விட்டது.

தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க இஸ்லாம் கூறும் வழிமுறை, தண்ணீரை சிக்கனமாக செலவு செய்து,மிஞ்சிய தண்ணீரை பிறருக்கு தந்து உதவுவதாகும். இன்று நாம் தண்ணீரை சிக்கனமாக செலவு செய்வதும் இல்லை.பிறருக்கு தந்து உதவுவதும் இல்லை.

மூன்று பேரை இறைவன் மறுமையில் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான் என்று கூறிய நபியவர்கள்,அதில் ஒருவன்,மக்களின் பயணப் பாதையில் தேவைக்கு மிஞ்சிய தண்ணீரைப் பெற்றிருந்தும் வழிப் போக்கர்கள் அதை பயன் படுத்தி விடாமல் தடுத்துக் கொள்பவன் என்று கூறினார்கள்.

இறை வணக்கத்தின் வாசல் என்று கூறப்படும் ஒளு என்ற அங்கத் தூய்மையின் போது,மூன்று தடவைக்கு மேல் கழிவினால் அது வீண்விரயம் என்று கூறி கண்டிக்கிறது இஸ்லாம்.

தண்ணீரை அதிகமாக செலவழிக்கும் ஒருவரைப் பார்த்து, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்து என்று காருண்ய நபி அவர்கள் கூறிய போது, இதுவும் வீண்விரயமா? என்று கேட்டார் அந்தத் தோழர்.அப்பொழுது, பொங்கிப் பெருகும் நதிக்கரையில் அமர்ந்து ஒழு செய்தாலும் விரயம் கூடாது என்று கூறி,சிக்கனத்தை வலியுறுத்தி னார்கள் ஏந்தல் நபி {ஸல்} அவர்கள்.

எனவே ஏந்தல் நபியின் வாக்கிற்கிணங்கி,தண்ணீரை சிக்கனமாக செலவு செய்து,மிஞ்சியதை பிறருக்கு கொடுத்துப் பழகினால் நிச்சயம் இந்த உலகம் தண்ணீர் பஞ்சமில்லா வசந்த காலத்தை எட்டும். இறைவன் அல்லாஹுத்தஆலா, அந்நிலையை வெகு சீக்கிரம் எட்டச் செய்வானாக! ஆமீன்.


No comments:

Post a Comment