அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்} அன்பு நேயர்களே! நம்மைப் படைத்த இறைவன் நம்மீது அன்பு கொண்டு
நமக்காக அளித்த மிக அரிய பரிசு, நாம் வாழும் இந்த பூமி.
“அவன் தான் உங்களுக்குப் பூமியை {நீங்கள் வசிப்பதற்கு} வசதியாக ஆக்கி வைத்தான்.ஆகவே அதன் பல
கோணங்களிலும் செல்லுங்கள். அவன் {உங்களுக்கு} அளித்திருப்பவைகளைப்
புசித்துக் கொள்ளுங்கள்” என அல்குர்ஆன்
67-வது அத்தியாயத்தின் 15-வது வசனம் பேசுகிறது.
விண்ணையும்,மண்ணையும் அழகுறப் படைத்து
அனைத்து வசதிகளையும் அள்ளித் தெளித்து ஒழுங்குற மனிதன் வாழ அல்குர்ஆன் வழிவகை
செய்கிறது.அறிவுப் பசிக்குத் தீனியாக அமைவதே திருமறையின் வழிகாட்டுதல் என்பதை,
அல்முல்க் என்ற அத்தியாயத்தின் மேல் குறிப்பிட்ட வசனம் முன்மொழிகிறது.
வசதி என்பது மனிதனின் எண்ணத்தில்
மட்டுமின்றி உலகின் வண்ணத்திலும் பொதிந்துள்ளது.ஓரறிவு முதல் ஐந்தறிவு கொண்ட
அனைத்து உயிரினங்களையும் படைத்து, வரம்புக்குட்பட்டு இவைகளை அனுபவிக்க வேண்டுமென
இறைவன் ஆறறிவு கொண்ட நமக்கு உத்தரவிட்டுள்ளான்.
உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு பட்ட
தாவரங்களையும், உணவு வகைகளையும் நமக்காக அவன் படைத்துள்ளான்.இவைகளைப் பற்றி பல
கோணங்களில் தெரிந்து கொள்ள வேண்டும்,அவற்றைப் புசித்து மகிழ வேண்டும், அவனது
அளப்பெரிய அருட்கொடைகளைப் பற்றி ஆராய வேண்டும்,நமக்கு வழங்கப்பட்டுள்ள நுண்ணறிவுத்
திறனால் வசதிகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்,எல்லாம் பெற்று அனுபவித்து அவனுக்கு
நன்றி செலுத்த வேண்டும் என்பது வல்ல இறைவனின் விருப்பம்.
இஸ்லாத்தின் இறுதிக் கடமையான புனித ஹஜ்
பயணத்தில் இதை நாம் கண்கூடாகக் காணலாம்.அந்த மாபெரும் உலக நாட்டிற்கு, உலகத்தின்
பல கோணங்களிலிருந்தும் பலவகை கலாச்சாரங்களை மேற்கொள்ளும் மனிதர்கள் வந்து
சங்கமிக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும். பன்னாட்டு மக்களின் சங்கமிப்பிற்குத்
தோதுவாக பன்னாட்டுப் பழவகைகளும்,உண்டிகளும் அங்கே மண்டிக்கிடப்பது இறைவன் செய்த
மிகப்பெரும் ஏற்பாடு.
எந்த நாடுகளில் எந்தெந்த உணவுகள்
சிறந்தவையாகக் கருதப்படுமோ அந்த அத்தனையும் அங்கு வந்துக் குவிவதை நாம்
காணலாம். அவைகளைப் புசித்து இறையருளை சிந்தித்து சித்தமெல்லாம் பக்தியில்
கரைந்துருகும் வாய்ப்பு அங்கு தான் கிடைக்கும்.
ஓர் நாட்டின் வளர்ச்சியும்,உயர்வும் அந்த
நாட்டவர்கள் பிற நாட்டிற்குச் சென்று உலா வருவதில் தான் அடங்கியிருக்கிறது.
ஏனெனில் உலகின் மற்ற நாடுகளுக்குச் சென்று வர வாய்ப்பு கிட்டியவர்கள், அந்தந்தப்
பகுதியில் செய்யப்பட்டுள்ள வசதிகளைக் கண்டு பூரிப்படைந்து அவ்வசதிகளை தங்கள்
நாடுகளிலும் பெருக்கிக் கொள்ள ஆசைப் படுவார்கள் என்பது யதார்த்தம்.இந்த
உண்மையைத்தான் திருக்குர்ஆன் நமக்கு விளக்குகிறது.
தொழில் வளங்கள்,பயிர் வளங்கள்,அறிவியல்
கூறுகள்,வான்வெளி ஆய்வுகள் அனைத்தும் பல்கிப் பெருக வேண்டுமானால் பூமித்தாயின்
மடியில் தவழும் மனிதக்குழந்தைகள் பூமியின் பல கோணங்களுக்கும் சென்று ஆய்வு செய்வது
இன்றியமையாதது என்ற தத்துவத்தை மேலே குறிப்பிட்ட திருக்குர்ஆனின் வசனம் நமக்கு
வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
எனவே இறைவன் படைத்த இந்த உலகின் பல
திக்குகளுக்கும் சென்று அவன் அனுமதித்த வழியில் அதைக் கண்டு அனுபவித்து மகிழ்ந்து,
அவனுக்கு அதிகமதிகம் நன்றி செலுத்த வேண்டும்.
வல்ல இறைவன் நம்மனைவர்களையும் அவனுக்கு
நன்றி யுள்ளவர்களாக ஆக்கி அருள் புரிவானாக! ஆமீன்
No comments:
Post a Comment