Thursday, December 19, 2013

எங்கே நிம்மதி?

    


அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்} அன்பு நேயர்களே! இன்றைக்கு நாம் எல்லா விஷயங்களிலும் முன்னேறி வருகிறோம்.கல்வி, பொருளா தாரம் என்று எல்லா விஷயங்களிலும் வளர்ச்சிக்கு மேல் வளர்ச்சியைப் பெற்று வருகிறோம். நினைத்ததை சாதித்து விடுகிறோம், இலட்சியங்களை அடைந்து கொள்கிறோம், ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டு வெற்றி காணுகிறோம்.

இப்படி எல்லா வாழ்வியல் வசந்தங்களையும் பெற்று அனுபவித்துக் கொண்டிருக்கிற நாம், நமது வாழ்வில் முக்கிய பொக்கிஷம் ஒன்றை தொலைத்து விட்டு,தொலைத்த இடம் தெரியாமல் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்.நிம்மதி என்பது தான், நாம் தொலைத்து விட்டு தேடி அலைந்து கொண்டிருக்கிற அந்த பொக்கிஷம். எல்லா வளமும் கிடைக்கப் பெற்றவர்களுக்கு கிடைக்காமல் போன ஒரே விஷயம் நிம்மதி.இன்று உலகில் அதைத் தேடாத மனிதர்களே கிடையாது.அதைத் தேடிப் பெற்றுக் கொண்டவர்களும் மிகக் குறைவுதான்.

இந்த நிம்மதி என்ற அரிய பொக்கிஷத்தை இஸ்லாம் , தன்னில் முழுமையாக நுழைந்தவனுக்கு வழங்குகிறது. அதாவது , இஸ்லாத் தின் அடிப்படை லாயிலாஹ இல்லல்லாஹ்என்ற வாங்கியத்தில் அடங்கி யுள்ளது. அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என்பது  அதன் வெளிப்பொருளாகும்.

நடந்தவை அனைத்தும் அல்லாஹ்வைக் கொண்டே நடந்தது, நடந்து கொண்டிருப்பவை அனைத்தும் அல்லாஹ்வைக் கொண்டே நடக்கிறது, இனி நடப்பவை அனைத்தும் அல்லாஹ்வைக் கொண்டே நடக்கும் என்பது அந்த ஸ்லோகத்தின் உட்பொருளாகும்.

இந்த ஸ்லோகம் தரும் உட்பொருளை ஒருவன் விளங்கிக் கொண்டால் அவன் நிச்சயம் எதற்கும் கவலை கொள்ள மாட்டான். எதற்கும் அஞ்ச மாட்டான்.  இப்படி நடந்து விட்டதே அப்படி நடந்து விட்டதே என்று மனிதன் புலம்புவது , அந்தப் பொருளை விளங்காமல், நடக்கிற அசம்பாவிதங்கள் அனைத்தையும் தன் மீதோ,பிறரின் மீதோ அவன் இணைத்துக் கொள்கிற காரணத்தினால் ஏற்பட்ட விளைவாகும்

இஸ்லாதில் முழுமையாக நுழைந்தவர்கள் அந்த ஸ்லோகத்தின் உட்கருத்தை விளங்கி, அதை மனதில் ஆளமாக பதிய வைத்துக் கொள்கிற காரணத்தினால் ,நடப்பவை அனைத்தையும் அல்லாஹ் விடத்தில் ஒப்படைத்து விட்டு நிம்மதியாக வாழுகிறார்கள்.

அல்லாஹ்வின் நேசத்தைப் பெற்றவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை,அவர்கள் கவலை கொள்ளவும் மாட்டார்கள் என்ற திருக்குர்ஆனின் வசனம் இவர்களைத்தான் சுட்டிக் காட்டுகிறது. நபித்தோழரான அபூபக்கர் [ரலி] அவர்கள் நோய்கண்ட போது மருத்துவரை அனுகலாமே என்று ஆலோசனை சொல்லப்பட்டது. அப்போது, இந்த நோயை அனுப்பியதே அந்த இறைவன் தானே அவன் பார்த்துக் கொள்வான் எனக்கூறினார்கள்.

இப்ராஹீம் நபியவர்கள் அந்த ஸ்லோகத்தின் கருத்தை புரிந்து கொண்டதினால், அவர்களை நம்ரூத் மன்னன் நெருப்புக் குண்டத்தில் போடத் தயாரான நேரத்தில், உங்களுக்கு ஏதும் உதவி வேண்டுமா? என்று வானவர்கள் அவர்களிடம் கேட்ட போது, என்னை இந்நிலைக்கு கொண்டு வந்தவன் இறைவன் தானே! அவனே பார்த்துக் கொள்வான் என்று அவர்களால் சொல்ல முடிந்தது.

எனவே இஸ்லாத்தின் அடிப்படையான அந்த ஸ்லோகத்தின் கருத்தை விளங்கி,நம் சுமைகளை இறைவனிடம் ஒப்படைப்போம், கவலைகளை மறந்து நிம்மதியாக வாழ்வோம்.    

  

No comments:

Post a Comment