Wednesday, December 18, 2013

ஃபஜ்ரின் மகிமை


அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]. அளவற்ற அருளாள் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயர் கூறி ஆரம்பம் செய்கிறேன்.

அன்பானவர்களே உலகத்தில் அல்லாஹ்வின் படைப்புக்கள் அனைத்திலும் ஏற்றத்தாழ்வுகள் உண்டு.அந்த ஏற்றத்
தாழ்வுகள்  தான்  படைப்புகளுக்கு மத்தியில் சமன் செய்கிறது.அல்லாஹ் தன் படைப்புகளுக் கிடையில் அமைத்த இந்த ஏற்றத்தாழ்வுகள் என்ற விதிக்கோட்பாட்டிலிருந்து எதுவும் தப்பாது.
வானவர்கள்,தூதர்கள்,நபித்தோழர்கள்,அவ்லியாக்கள் இவர்களில் எல்லோரும் அல்லாஹ்விடம் ஒரே அந்தஸ்தை பெற்றவர்களல்ல.
اللَّهُ يَصْطَفِي مِنَ الْمَلَائِكَةِ رُسُلاً وَمِنَ النَّاسِ إِنَّ اللَّهَ سَمِيعٌ بَصِيرٌ } [ الحج75 ] .
அல்லாஹ் வானவர்களிலிருந்தும் மனிதர்களிலிருந்தும் தூதர்களை அவனே தேர்வுசெய்கிறான் என்ற வசனம் மலக்குமார்களுக்கிடையிலும் பெரிய வித்தியாசங்கள் இருப்பதாக கூறுகிறது.

மலக்குமார்கள் அத்தனைபேரும் பரிசுத்தமானவர்கள் தான்,எனினும் ஹழ்ரத் ஜிப்ரயீல் அலை அவர்களுக்கு அல்லாஹ்விடம் இருக்கும் நெருக்கத்தை வேறு எவரும் பெறவில்லை என்பதை நாம் அறிந்துள்ளோம்.இறைவனால் தூதர்களாக அனுப்பப்பட்ட அத்தனை நபிமார்களும் பாவமன்னிப்பு பெற்றவர்கள்தான்,  எனினும் நபி ஸல் அவர்களின் அந்தஸ்தை வேறு எவரும் கனவில் கூட நினைத்துப் பார்க்க இயலாது என்பதை நாம் அறிவோம்.

இவ்வாறே ஐங்கால தொழுகைகளில் அதிகாலைத் தொழுகையான பஜ்ர் தொழுகைக்கு அல்லாஹ்விடம் இருக்கும் மரியாதையும் கண்ணியமும் வேறு எந்த தொழுகைக்கும் இல்லை,காரணம் வணக்கங்களில் நாம் ஏற்றுக்கொள்கிற சிரமங்கள் அளவுக்கு கூலி கிடைக்கும் என்பது அல்லாஹ்வின் நியதியாகும்.
அன்னை ஆயிஷா ரலி அவர்களை நோக்கி நபி ஸல் அவர்கள் கூறிய வார்த்தைகள் இங்கு சிந்திக்கத் தக்கதாகும்.

 ( إن لك من الأجر على قدر 

نصبك ونفقتك ) رواه الحاكم

உன் சிரமத்தின் அளவே உனக்கு கூலி கிடைக்கும்.
மற்ற தொழுகைகளை விட ஃபஜ்ர் தொழுகையில் இருக்கும் சிரமம் நம் எல்லோருக்கும் தெரியும்.எனவே அதன் பலன்களும் மிக அதிகமாகத்தான் இருக்கிறது.
   
அல்லாஹ் தன் திருமறையில்- நிச்சயமாக ஃபஜ்ரு தொழுகை சான்று கூறுவதாகயிருக்கிறது என்று கூறுகிறான்.
    
பஜ்ர் தொழுகையில் பகல் மலக்குகளும் இரவு மலக்குகளும் ஒன்று சேர்கின்றனர் என்ற நபிமொழியை அறிவித்த அபூஹுரைரா ரலி அவர்கள் இந்த வசனத்தைத் தான் மேற்கோள்காட்டினார்கள். 

பஜ்ர் தொழுதவர் அல்லாஹ்வின் பாதுகாப்பை பெற்றுவிட்டார் என்ற ஹதீஸை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஒரு பதினான்காம் இரவில் நாங்கள் நபி ஸல் அவர்களின் சபையில் அமர்ந்திருந்தோம். அப்போது நபி ஸல் அவர்கள் ; நீங்கள் இன்றைய இரவில் சந்திரனைப்பார்ப்பது போல நாளை மறுமையில் அல்லாஹ்வை பார்ப்பீர்கள்.அதற்கு நீங்கள் முடிந்தவரை பஜ்ர் மற்றும் அஸர் தொழுகைகளில் பேனுதலாக இருங்கள் என்று கூறினார்கள் என ஜரீர் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள். 

யா அல்லாஹ் அதிகாலையில் என் உம்மத்திற்கு பரக்கத் செய்வாயாக என்ற நபியின் துஆவும் இங்கு நினைவு கொள்ளத் தகுந்தது.

எனவே ஃபஜ்ர் தொழுவோம் அல்லாஹ்வின் அருளைப்பெறுவோம்.யா அல்லாஹ் அனுதினமும் அதிகாலை வேளையின் பரக்கத்துகளைப் பெற கிருபை செய்வாயாக ஆமீன்.






No comments:

Post a Comment