அஸ்ஸலாமு
அலைக்கும் {வரஹ்}அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்
அல்லாஹ்வின் பெயர் கூறி ஆரம்பம் செய்கிறேன்.
அன்பு நிறைந்த அல்லாஹ்வின் நல்லடியார்களே ! நபிகள் நாயகம் {ஸல்} அவர்கள் தங்கள் வாழ்வில் செய்த மிக முக்கியமான
துஆக்களில் ஒன்று ; யா அல்லாஹ் என்னை
அதிகம் நன்றி செலுத்துபவனாக ஆக்கு என்பதாகும்.
நன்றி என்பது ஒரு முஸ்லிமிடம்
இருக்க வேண்டிய சிறந்த பண்புகளில் ஒன்று.நன்றி செலுத்தியதால் ஏற்றம் பெற்ற
வரலாறுகளும்,நன்றி மறந்ததினால் அழிந்து போன வரலாறுகளும் குர்ஆனில் நிறையவே
உண்டு.
இப்ராஹீம் நபியை தேர்வு செய்தோம் என்று சொல்லும் இடத்தில் அதற்கான காரணங்களை
கூறும்போது அவர்களின் சிறந்த பண்புகளில் ஒன்றாக நிஃமத்துகளுக்கு நன்றி
செலுத்துபவராகவும் இருந்தார் என்று நஹ்ல் அத்தியாயத்தில் அல்லாஹ்
குறிப்பிடுகிறான்.
அதேபோன்று நன்றி மறந்த பல சமுதாயங்களை
இறைவன் அழித்த வரலாறுகளையும் குர்ஆனில் அநேக இடங்களில் காணமுடியும்.இதன் மூலம்
நன்றி செலுத்துவதின் அவசியத்தை நாம் உணரலாம்.
ஆனால் நன்றி உணர்வு நமக்கு
வரவேண்டுமென்றால் முதலில் நாம் அல்லாஹ்வின் நிஃமத்துகளை விளங்க வேண்டும்.
அல்லாஹ் தன் அருள் பொருந்திய வேதத்தில் ;
நான் உங்களுக்கு செய்திருக்கிற
நிஃமத்துகளை நீங்கள் எண்ண ஆரம்பித்தால் உங்களால் எண்ணி முடிக்க முடியாது என்று
கூறுகிறான்.
நமக்கு ஏதாவது நோய் வந்துவிட்டால் படைத்த அல்லாஹ்வை திட்டுவதைத்தான்
வாடிக்கையாகக் கொண்டிருக்கிறோம்.ஆனால் நோயில் கூட அல்லாஹ்வின் நிஃமத்தை பார்ப்பது
தான் சிறந்த முஸ்லிமின் அடையாளம்.
எனக்கு வரும் ஒவ்வொரு நோயிலும் நான்கு
நிஃமத்துகளை உணருவேன் என்று கூறுகிறார்கள் இப்னு உமர் {ரலி}அவர்கள். 1,என்னை விட மோசமானவனைப் பார்த்து அவனை விட அல்லாஹ் நம்மை
ராஹத்தாக்கி இருக்கிறானே என்று அல்லாஹ்வுக்கு ஷுக்ர் செய்வேன்.
2,எந்த நோய்
வந்தாலும் பொருமையை மேற்கொள்வேன். எனவே அந்த பொருமையை கொடுத்த அல்லாஹ்வுக்கு ஷுக்ர்
செய்வேன். 3,எனக்கு எந்த நோய் வந்தாலும் அது என் தீனுக்கு எந்த பாதிப்பையும்
ஏற்படுத்தாது.அதற்காக அல்லாஹ்வுக்கு ஷுக்ர் செய்வேன்.
4,எந்த நோய் வந்தாலும் அதற்கான
நன்மையை அல்லாஹ்விடம் எதிர்பார்ப்பேன்.எனவே அந்த எண்ணத்தைக் கொடுத்த அல்லாஹ்வுக்கு
ஷுக்ர் செய்வேன் என்று கூறுகிறார்கள்.
இப்னு சம்மாக்
ரஹ் அவர்களை உபதேசம் செய்வதற்காக ஹாரூன் ரஷீது அவர்கள் தங்கள் அரசபைக்கு
அழைப்பார்கள்.அந்த இப்னு சம்மாகும் வருவார்கள்.அந்த நேரம் ஹாரூன் ரஷீது அவர்கள்
ஒரு சொம்பில் தண்ணீர் அருந்திக் கொண்டிருப்பார்கள்.அப்போது இப்னு சம்மாக் அவர்கள் : ஹாரூன் ரஷீதே இந்த தண்ணீர் உங்கள்
உடம்புக்குள் செல்ல மறுத்தால் அதற்காக நீங்கள் என்ன விலை கொடுப்பீர்கள்? என்று கேட்பார்கள்.அதற்காக என் ஆட்சியின்
பாதியை தருவேன் என்பார்கள்.சென்ற தண்ணீர் திரும்ப வர வில்லையென்றால் அதற்காக என்ன
விலை கொடுப்பீர்கள்? என்று கேட்டபோது
என் மீதி ஆட்சியையும் கொடுப்பேன் என்பார் ஹாரூன் ரஷீது அவர்கள். அப்படியானால் உங்கள் ஆட்சி இந்த சொம்பு தண்ணீரை
விட மிக கேவலமானது என்று இப்னு சம்மாக் அவர்கள் கூறுவார்கள்.
அன்பானவர்களே நாம் குடிக்கும்
தண்ணீரை வைத்தே அல்லாஹ்வின் நிஃமத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.எனவே நாம்
அல்லாஹ்வின் நிஃமத்துகளை புரிந்து கொள்வோம்,அவனுக்கு நன்றி செலுத்துவோம்.
யா அல்லாஹ் நீ செய்த
நிஃமத்துகளுக்கு நன்றி செலுத்தி வாழும் நன்மக்களாக எங்களை ஆக்கி அருட்புரிவாயாக
ஆமீன்.
No comments:
Post a Comment