Wednesday, March 12, 2014

மனித நேயம்



அகிலத்திலே அரசியல் வாதி உண்டு,மேல் ஜாதிக்காரன் உண்டு,கீழ் ஜாதிக்காரன் உண்டு,கறுப்பன் உண்டு,வெள்ளையன் உண்டு ஆனால் மனிதன் இல்லை. மனிதனே இல்லாத போது நேயம் எங்கே இருக்கப் போகிறது? சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்.


இன்று மனித நேயம், எழுதுவதற்கும்,பேசுவதற்கும் உள்ள விவாதப் பொருளாக மட்டும் காட்சி தருவதை பார்த்துக் கொண்டு இருக்கிறோம். உலகில் மனித நேயத்திற்கு வித்திட்டது இஸ்லாம். இறை நம்பிக்கை கொண்டவன் நேயத்தின் இருப்பிடம்,நேயம் இல்லாதவரிடம் எந்த புண்ணியமும் இல்லை என்றார்கள் கண்மனி நாயகம் [ஸல்] அவர்கள்.

மத சார்பற்ற,மொழி சார்பற்ற,சார்ந்துள்ள இன சார்பற்ற மனித நேயத்தை இவ்வுலகிற்கு இஸ்லாம் அடையாளம் காட்டியுள்ளது. ஒரு சமயம் மக்காவில் மழை பொய்த்து, வறட்சி நிலவியதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். அவ்வேளை அவர்களின் தலைவர் அபூஸுஃப்யான், நபிகள் நாயகம் [ஸல்] அவர்களிடம் வந்து, நீங்கள் தான் அல்லாஹ்வை வழிபட வேண்டும்,உறவினர்களை சேர்ந்து வாழ வேண்டும் என போதிக்கிறீர்கள். இங்கே உங்கள் மக்கள் பஞ்சத்தால் அழிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரியுங்கள் என்று கேட்ட போது,  சற்றும் யோசிக்காமல் உடன் நபி [ஸல்] அவர்கள் அல்லாஹ்விடம் கரம் ஏந்தினார்கள். மழை பொழிந்து மக்கள் செழிப்படைந்தார்கள்.

தனக்கும்,தன்னுடன் இருப்பவர்களுக்கும் சொல்லெனாத் துன்பங்களைக் கொடுத்து, இறுதியில் ஊரை விட்டே விரட்டி, மகா பாதகச் செயல் புரிந்த அம்மக்களின் மீதும் கரிசனம் கொண்டு, அவர்களின் பஞ்சம் நீங்க பிரார்த்தனை புரிந்த நபியின் மனித நேயத்தை இங்கே பார்க்க முடிகிறது.

யா அல்லாஹ் எனக்கும் முஹம்மதுக்கும் மட்டும் கிருபை செய் எங்களுடன் வேறு யாருக்கும் இறக்கம் காட்டாதே என்று பிரார்த்தனை புரிந்து கொண்டே ஒரு கிராமவாசி பள்ளிவாசலுக்கு நுழைவதைப் பார்த்த நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள், விசாலமான இறையருளை இப்படி சுருக்கி விட்டீரே என்று கூறினார்கள். சிறிது நேரத்தில் அந்த கிராமவாசி பள்ளியின் ஒரு மூளையில் சிறுநீர் கழிக்கத் தொடங்கினார்.அதைப் பார்த்த நபித்தோழர்கள் அவரை விரட்ட முற்பட்டனர்.ஆனால் நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள், அவரை விட்டு விடுங்கள்.அந்த இடத்தை சுத்தம் செய்யுங்கள். நீங்கள் லேசாக நடந்து கொள்பவர்களாகத்தான் அனுப்பப் பட்டுள்ளீர்கள்.கஷ்டப் படுத்துபவர்களாக அல்ல என்று கூறினார்கள்.

சிறுநீர் கழித்துக் கொண்டிருப்பவரை இடையில் நிறுத்தினால் அது அவரது உடல் நலத்திற்குக் கேடாக அமைந்து விடும் என்பதை உணர்ந்து, பள்ளியை அசுத்தம் செய்த அந்த மனிதரின் மீதும் அக்கறை காட்டிய நபிகள் நாயகம் [ஸல்] அவர்களின் இச்செயலைக் காணும் போது, இஸ்லாமிய மனித நேயம் தொலை நோக்குப் பார்வை கொண்டது, விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

தொழிலாளரின் வியர்வை உலரும் முன் அவன் கூலியை கொடுத்து விடு, 

அநீதி செய்தவனுக்கும் உதவி செய்,

உணவு தானியங்களை பதுக்கி வைத்து செயற்கை பஞ்சத்தை ஏற்படுத்தாதே,

அண்டை வீட்டுக்காரன் பசித்திருக்க நீ மட்டும் புசிக்காதே, 

நீ சமைக்கும் குழம்பில் கொஞ்சம் தண்ணீரை அதிகப்படுத்தி அண்டை வீட்டவனுக்கும் வழங்கு,

உழைப்பில் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை ஏழைகளுக்கும் ஒதுக்கு, 

ஒரு பெண்மனி அதிகம் தொழுதாலும்,நோன்பு வைத்தாலும்,தர்மம் செய்தாலும்  தன் அண்டை வீட்டாருக்கு நாவினால் தொந்தரவு கொடுப்பவளாக இருந்தால் அவள் நரகம் செல்வாள் என்பது 

இதுவெல்லாம் அண்ணல் நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் இவ்வுலகிற்குச் சொன்ன மனித நேய மாமொழிகள்.
இஸ்லாம் காட்டித்தந்த மனித நேயத்தை நாம் வளர்த்துக் கொள்வோம். மனிதப்புனிதர்களாக மாறுவோம்.அல்லாஹ் அருள் புரிவானாக!  


No comments:

Post a Comment