Friday, April 11, 2014

சகோதரத்துவம்



இன்று நாம் அனைவரும் சகோதரர்களாக வாழ்ந்து கொண்டிருக் கிறோம். சகோதரத்துவம் என்பது மனிதனின் இயல்பான உணர்வு. அனைவரும் சகோதரர்கள் என்று கூறுவதின் மூலம் இஸ்லாம் உலகிற்கு சகோதரத்துவத்தை போதிக்கிறது.
இஸ்லாம் விதித்திருக்கும் வணக்க வழிபாடுகள் கூட சகோதரத்துவத்தைக் கட்டியெழுப்புவதாக அமைந்திருப்பதை நாம் காணலாம்.
இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றான தொழுகையை எடுத்துக் கொண்டால், அதனை கூட்டாக தொழுவதை  கடமை யாக்கியிருப்பதன் மூலம் இஸ்லாம் தொழுகையின் வழியே சகோதரத்துவத்தை போதிக்கிறது. காரணம், ஏழை - பணக்காரன், படித்தவன் – படிக்காதவன்,முதலாளி - தொழிலாளி என்ற பேதம் பாராது எதிரியாக இருந்தாலும் தோளோடு தோள் சேர்த்து, காலோடு கால் இணைத்து ஒரே அணியாக, ஒரே இலக்குடன் நின்று தொழுவதில் நிச்சயம் சகோதரத்துவ வாஞ்சைகள் வளர்க்கப்படும் என்பதில் ஐயமேதும் இருக்க முடியாது.
அதே போன்று இஸ்லாத்தின் இறுதி கடமையான ஹஜ் கடமையும் சர்வதேச சகோதரத்துவத்தை பிரதிபளிக்கக் கூடிய வணக்கமாகத் தான் அமைந்திருக்கின்றது. உலகில் பல நாடுகளைச் சேர்ந்த, பல மொழிகளைச் சேர்ந்த, பல கோத்திரங்களைச் சேர்ந்த, பல கலாச்சாரங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் அங்கே ஒன்று கூடுகிறார்கள். ஆனால் அங்கே மொழி வேறுபாடு இல்லை,நிற வேறுபாடு இல்லை,இன வேறுபாடு இல்லை,குல வேறுபாடு இல்லை.
எல்லோரும் ஒரே இடத்தில் சங்கமித்து, தங்களுக்குள் அறிமுகமாகிக் கொள்கின்றார்கள். ஹஜ் காலம் முடிந்த பிறகும் தமது உறவுகளைப் பேணிக் கொள்கிறார்கள், எனவே இந்த புனித ஹஜ் பயணத்தின் வழியாகவும் சர்வதேச சகோதரத்துவம் பேணப்படுவதை நாம் உணர முடியும்.
இதுமட்டுமல்லாது கைலாகு கொடுத்தல்,கட்டித் தழுவுதல்,ஒருவருக் கொருவர் ஸலாம் சொல்லிக் கொள்ளுதல் போன்ற செயற்பாடுகள் மூலம் நேரடியாகவே அன்பு பரிமாறப்படுகிற காரணத்தால் இவைகளிலும் சகோதரத்துவம் புரையோடியிருப்பதைக் காணலாம். 
பல நாட்கள்,பல வருடங்கள் ஏன் பல தலைமுறைகள் சண்டையிட்டு பிரிந்திருந்த சகோதரர்களை ஒன்று சேர்த்தது,பல குடும்பங்களில் இணைப்பை உருவாக்கியது,பல கோத்திரங்களுக்கு மத்தியில் சுமூகத்தை ஏற்படுத்தியது இதுவெல்லாம் நபி {ஸல்} அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு சென்றவுடன் அவர்கள் செய்த முக்கியமான காரியங்களில் ஒன்றாக அமைந்திருந்ததை வரலாறு நமக்கு நினைவுபடுத்தும்.
மறுமை நாளில் பரந்து விரிந்த வெட்ட வெளியில் சூரியன் தலைக்கு மேல் கொண்டு வந்து நிருத்தப்படும் வேளையில் ஏழு கூட்டத்தின ருக்கு மாத்திரம் அல்லாஹ்வுடைய நிழல் வழங்கப்படும். அதில் ஒரு கூட்டம், அல்லாஹ்வுக்காக நேசித்து அவனுக்காக தோழமை கொண்டு அவனது பாதையில் பிரிந்துபோன இரு சகோதரர்களாகும் என்று கூறினார்கள் கண்மனி நாயகம் {ஸல்} அவர்கள்.
அந்த உயர்ந்த சகோதரத்துவப் பண்போடு வாழ நம் அனைவருக்கும் அல்லாஹ் வழிவகை செய்வானாக! ஆமீன்.


No comments:

Post a Comment