Friday, April 11, 2014

பணிவு உச்சத்தைத் தரும்




இன்றைக்கு உலகிலே பலருக்கு நிறைய திறமை, நிறைய அறிவு இருந்தும் தங்கள் வாழ்வில் ஒவ்வொன்றையும் பல போராட்டங் கள்,பல முயற்சிகள், பல தடைக் கற்களைத் தாண்டியே பெற்றுக் கொள்வார்கள். ஆனால் அந்த அளவு திறமையும், புத்திசாலித் தனமும் இல்லாத ஒரு சிலர்
எளிதாக நல்ல வேலை,அந்தஸ்து, பதவி என உயர்ந்த நிலைக்குப் போய் விடுவார்கள். அவர்கள் விரும்பிய அனைத்தும் எளிதில் கிடைத்து விடும்.அவர்களுக்கு தொட்ட தெல்லாம் துலங்கும்.

இந்த இரு சாராரின் குணங்களை நாம் சற்று ஆராய்ந்தால் அவர்களுக்கிடைய நிலவும் இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ளலாம். வாழ்வில் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே செல்பவர்களை நாம் நோக்கினால் நிச்சயம் அவரிகளிடம் பணிவு, அடக்கம் மேலோங்கி இருப்பதைக் காண முடியும்.

மற்றவர்களைப் புண்படுத்தாத,பிறரை மதிக்கும்,பிறர் உணர்வை புரிந்து நடக்கும் பணிவு ஒருவரை உயர்ந்த அந்தஸ்துக்குக் கொண்டு போய் சேர்த்து விடும்

யாரிடம் பணிவும்,தன்னடக்கமும் இருக்கிறதோ அவர், யாரும் எட்டாத உயரத்தை மிக இலகுவாக எட்டிப் பிடித்து விடுவதை இந்த உலகம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

பெற்றோர் சொல் கேட்டு நடக்கும் பணிவுள்ள பிள்ளைகளுக்குத் தான் அதிகம் பாசம் கிடைக்கிறது.அவர்களின் தேவைகள் கேட்காமலேயே நிறைவேற்றப்படுகிறது.இதே பணிவு பள்ளியிலும் தொடர்ந்தால் ஆசிரியர்களிடமும் நல்ல அபிப்ராயத்தைப் பெற்றுத் தருகிறது.

பணிவு நல்ல நட்பைத் தருகிறது.எளிதில் வேலை கிடைக்க உதவுகிறது.அவர் கால் பதிக்கிற அத்தனைத் துறைகளிலும் போட்டிகள்,பொறாமைகள்,எதிர்ப்புகள் இல்லாத நிலையை உருவாக்குகிறது.

ஒருவன் பணிவு,தன்னடக்கம் போன்ற பண்புகளைக் கொண்டு எந்தளவு நான் என்ற அகந்தையை ஒழிப்பானோ அந்தளவு அவனுக்கு அல்லாஹ்விடமும்,சமூகத்திடமும் அங்கீகாரம் கிடைக்கும். 

நான்மறை கற்றவன் கல்வியாளன் அல்ல.தன்னுள் நான் மறைய கற்றுக் கொண்டவனே கல்வியாளன் என சான்றோர்கள் கூறுவார்கள்.  
ஒரு சில முந்தய நபிமார்களின் சிறப்புப் பெயர்களைக் குறிப்பிட்டு, இவ்வாறு ஒவ்வொரு நபிமார்களும் சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்படுவது போல உங்களை எந்தப் பெயர் கொண்டு அழைக்கப் படுவதை நீங்கள் விரும்புகிறீர்கள் என்று அண்ணல் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களிடம் அவர்களின் அருமைத் தோழர்கள் கேட்ட போது,அல்லாஹ்வின் அடிமை என்று அழைக்கப் படுவதையே நான் பெரிதும் விரும்புகிறேன் என்று அகிலம் போற்றுகின்ற சர்வதேசத் தலைவரான நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் கூறிய வார்த்தைகள் அவர்களின் பணிவின் உச்சத்தை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

பணிவும்,தன்னடக்கமும் வேரூன்றி இருந்த காரணத்தினால் தான் உலகில் யாரும் தொட முடியாத உயரத்தை அண்ணல் நபி [ஸல்] அவர்களால் தொட முடிந்தது.

அல்லாஹ்வுக்காக எவர் பணிந்து நடக்கிறாரோ அவரை அல்லாஹ் மென்மேலும் உயர்த்துகிறான் என்ற நபிமொழியின் யதார்த்தம் நமக்குப் புரிகிறதல்லவா?

அல்லாஹுத்தஆலா அந்த பணிவென்ற உயர்ந்த பண்பை நம் எல்லாருக்கும் தருவானாக!


No comments:

Post a Comment