Friday, April 11, 2014

பொறுமை




அல்லாஹுத் தஆலா இந்த உலகை மனிதனுக்கு ஓர் சோதனைக் களமாக ஆக்கியிருக்கிறான். நாம் வாழும் இந்த வாழ்க்கைப் பயணம்  பல்வேறு இன்னல்களும்,இடறுகளும் நிறைந்த வாழ்க்கை. சிலசமயம் நாம் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் விடாது நம்மைப் பின்னிப் பிணைந்து
, நமது வாழ்க்கைப் பயணத்தில் இறுதி வரை நிழலாய் பின்தொடர்ந்து வருகின்றன. இவ்வாறான எதிர் மறையான சூழல்களிலிருந்து நம்மை விடுவிப்பது சிரமமாக அமைந்து விடுவதும் உண்டு.

இவ்வாறு வாழ்வில் துன்ப இருள் சூழும் போது பொறுமையுடனும் சகிப்புத்தன்மையுடனும் நடந்து கொள்வது மனித வாழ்வின் இன்றியமையாத ஒன்றாகவும்,முக்கிய வணக்க வழிபாட்டு அம்சமாகவும் இஸ்லாமிய வாழ்வியல் கோட்பாட்டு போதனைகள் எடுத்தோதுகின்றன.

வாழ்க்கையில் ஏற்படும் விரக்தி,ஏக்கம்,ஏமாற்றம்,திடீர் திருப்பங்கள் போன்றவற்றிலிருந்து ஒரு மனிதனுக்கு அரணாக அமைவது பொறுமை மட்டும் தான்.

பொறுமை என்பது பிரகாசமாகும் என்று மொழிந்தார்கள் அருமை நாயகம் {ஸல்} அவர்கள். நாம் பொறுமையை நமது வாழ்க்கையை வழி நடத்தி,உன்னத இலக்கை நோக்கி அழைத்துச் செல்லும் ஓர் ஒளி விளக்காக எண்ணினால், நமது வாழ்க்கையில் வெற்றி எனும் பிரகாசம் பளிச்சிடும். 

அவ்வாறில்லாமல் பொறுமையை இலங்கும் கலங்கரை விளக்காக எண்ணாது, பொறுமை இழந்தால் வாழ்க்கைப் பயணத்தில் தோல்வி என்ற இருளை சந்திக்க நேரிடும் என்ற பேருண்மையைத்தான் இந்த நபிமொழி நமக்கு உணர்த்துகிறது.

வாழ்வின் எல்லா விதமான கஷ்டங்களையும்,இழப்புகளையும், தோல்விகளையும் சகித்துப் பொறுமை கொள்ள நாம் கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்க்கை எனும் திறந்த பறந்த வெளியில் வலம் வரும் கருமை நிற மேகங்களைக் கண்டு கலங்கி விடாது பொறுமை கொள்ள வேண்டும். முக்கியமான கட்டங்களில் பொறுமை இழந்து நமது குழியை நாமே பறித்துக் கொள்ளக் கூடாது.

துன்பம் என்பது ஒரு நாளின் இரவைப் போன்றது. ஒவ்வொரு நாளும் பகல் தோன்றி இருள் மறைவதைப் போன்று, இப்போது ஏற்பட்ட துன்பங்கள் நிச்சயம் சில காலங்களுக்குப் பிறகு மறைந்து வாழ்வில் விடியல் தோன்றும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பொறுமை இறை நம்பிக்கையின் பாதி என்று கூறி இஸ்லாம் பொறுமையின் பெருமையை உலகிற்கு பறைசாட்டுகிறது.

நபி [ஸல்] அவர்களும் சந்தர்பங்கள் கிடைக்கும் பொழுது தன் அருமைத் தோழர்களுக்கு பொறுமையின் அருமையை உணர்த்தியிருக் கிறார்கள்.

நான் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன் எனக்காக அல்லாஹ்விடம் பிராத்தனை புரியுங்கள் என்று ஒரு இளம் பெண்மனி நபி [ஸல்] அவர்களிடம் வந்து முறையிட்டாள். நபியவர்கள் நினைத்திருந்தால் உடனே பிரார்த்தனை புரிந்திருக் கலாம். ஆனால் அந்தப் பெண்மனியிடம், நீ விரும்பினால் உனக்கு குணமடைய நான் பிரார்த்திருக்கிறேன்.அவ்வாறில்லாமல் நீ பொறுமையாக இருந்தால் உனக்கு சுவனம் கிட்டும் என்று கூறிய போது, யாரசூலல்லாஹ் நான் பொறுமையாக இருக்கிறேன் என்று அந்த பெண்மனி பதில் கூறினார்கள்.

அந்த உயர்ந்த பொறுமையை நம்மனைவருக்கும் அல்லாஹ் தந்தருள் புரிவானாக ஆமீன்.  


No comments:

Post a Comment