Friday, April 11, 2014

மன்னிப்பு




தவறு செய்வது மனித இயல்பு. மன்னிப்பதோ தெய்வ குணம் என்பது முதுமொழி. இஸ்லாம் கற்றுத் தரும் போற்றுதலுக்குறிய சிறந்த பண்புகளுல் மன்னிக்கும் மனப்பான்மையும் ஒன்று. பலகீனமானவன், அவசரக்காரன்,அறியாமை நிறைந்தவன்  என்றெல்லாம் திருமறைக் குர்ஆன் மனிதனை அடையாளப் படுத்துகிறது.


எனவே மனிதன் எளிதில் உணர்ச்சிவசப்பட்டு,அவசரப்பட்டு தகாத செயல்களை செய்து விடுவான்.நபி மூஸா [அலை] அவர்களுடைய காலத்தில் பழிக்குப்பழி என்பது அனுமதிக்கப்பட்டிருந்தது.ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் காட்டு என்று கூறி வன்முறைக்கு மென்முறையே சரியான தீர்வு என ஈசா நபி [அலை] அவர்கள் உணர்த்தினார்கள்.

ஆனால் அகிலத்தின் அருட்கொடையான அண்ணல் நபி {ஸல்} அவர்கள்,வன்முறைக்கு எதிராக உரிய தண்டனை வழங்குவதற் குறிய முழு உரிமை இருந்த போதிலும் மன்னிப்பதே மேலானது என்பதை வலியுறுத்தியதோடு அவ்வாறு வாழ்ந்தும் காட்டினார்கள்.

ஒருவர் நபி [ஸல்] அவர்களிடம் வந்து யாரசூலல்லாஹ்! நான் எனது பணியாளனின் தவறை எத்தனை முறை மன்னிப்பது? எனக் கேட்டார்.அப்போது ஒரு நாளைக்கு எழுபது முறை மன்னிப்பை வழங்கு என்றார்கள் கண்மனி நாயகம் [ஸல்] அவர்கள்.

நபி [ஸல்] அவர்கள் மக்காவின் வெற்றியை தன் வசம் ஆக்கிக் கொண்ட நேரத்தில் மக்களைப் பார்த்து மக்களே! உங்களை வெற்றி கொண்ட நான் இப்போது உங்களுக்கு என்ன செய்யப் போகிறேன் என்பதை அறிவீர்களா? எனக்கேட்ட போது,மக்களின் உள்ளத்தில் அச்சம் குடிகொண்டது.

அண்ணலின் மன்னிப்பை எதிர் பார்த்து ஏங்கி நின்ற அம்மக்களில் நபியைத் துன்புறுத்தியவர்கள்,கல்லால் எறிந்தவர்கள்,எள்ளி நகையாடியவர்கள்,கௌரவத்தை சிதைக்க முயன்றவர்கள், அவர்களைப் பின்பற்றிய முஸ்லிம்களுக்கு எண்ணிலடங்கா துயரங்களைத் தந்தவர்கள்,மரணித்து விட்ட முஸ்லிம்களின் வெற்றுடலைக்கூட இழிவு படுத்தியவர்கள்,பெண்களைத் துன்புறுத்தியவர்கள் என பலரும் இருந்தனர்.

மனித குலமே வெட்கித் தலை குனியத்தகுந்த பாதகச்செயல் புரிந்த அம்மக்களை தூக்கு மேடைக்கு அனுப்பினாலும் ஏற்புடையது தான். 

ஆனால் உலக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத் தக்க உயர்ந்த வெற்றியைத் தனதாக்கிய அண்ணல் பெருமான் {ஸல்} அவர்கள் வெற்றி கண்ட எந்தத் தலைவனும் செய்திடாத, ஒப்பற்ற, அற்புத,வியக்கத்தகு செயலை நிறைவேற்றினார்கள்.

அந்த மக்கா வெற்றியின் போது நபியவர்களின் பேருள்ளத்தின் உயர்வினை,இரக்கத்தின் ஆழத்தை,பரிவின் சிறப்பை உலகம் கண்டது.மன்னிப்பை எதிர்நோக்கி நிற்கும் அம்மக்களின் பரிதாப நிலை அண்ணலாரின் பொன்னுள்ளத்தைத் தொட்டது.அவர்களின் கண்களை கண்ணீரில் நனைய வைத்தது.

உள்ளத்தில் பளிச்சிட்ட கடந்த கால நிகழ்வுகளை மறந்து, தோற்றவர்களை அடிமைகளாகவும்,பணயக் கைதிகளாகவும் வைத்துக்கொள்ளும் அன்றைய காலத்து மக்காவின் சட்டத்தை நிராகரித்து அனைவருக்கும் பொது மன்னிப்பை வழங்கி வரலாறு படைத்தார்கள்.

உலகம் கண்டிராத பகைவர்களும் வியந்து போற்றும் இதுபோன்ற அமைதியான வெற்றியை உலகம் கண்டதில்லை,இனி என்றும் காணப்போவதும் இல்லை.

அந்த உயரந்த பண்பை நம் அனைவர்களும் பெற்று சிறக்க அல்லாஹ் அருள் புரிவானாக!


        

No comments:

Post a Comment