Sunday, November 30, 2014

உறவுகளை ஆதரிப்போம்!!!


இஸ்லாம் வலியுறுத்தும் வணக்க வழிபாடுகளில் குடும்ப உறவைப் பேணுவதும் மிக முக்கியமானதாகும். சமூக உருவாக்கம் எனும் இஸ்லாமிய இலட்சியத்தை அடைய குடும்ப உறவு சீர்படுதல் இன்றியமையாததாகும். இவ் வகையில் நல்ல சமூக மாற்றத்தை ஏற்படுத்த நல்ல குடும்ப உறவுகளை ஏற்படுத்த வேண்டும்.துரதிஷ்டவசமாக பலரிடம்  இன்றைய சமூக சூழலில் இரத்த உறவைப் பேணும் நிலை இரத்த உறவுகளை பாதுகாக்கும் நிலை குறைந்து கொண்டே வருவதைப் பார்க்கிறோம். எத்தனையோ தேவையில்லாத அவசியம் இல்லாத பல்வேறு விஷயங்களுக்காக நேரத்தையும், பணத்தையும் செலவிடத் தயாராகவுள்ள நம்மில் பலர் குடும்ப உறவுக்காக,சொந்த பந்தங்களுக்காக சில நிமிடங்களைக் கூட துறக்கத் முன்வருவதில்லை.

அல்லாஹ் தன் அருள்மறை வேதம் அல்குர்ஆனில்
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
யாரைக்கொண்டு உங்களில் ஒருவருக்கொருவர் தங்களது உரிமைகளை பெற்றுக்கொள்கிறீர்களோ அத்தகைய அல்லாஹ்வை பயந்து கொள்ளுங் கள்.உங்களின் இரத்த பந்தங்களை சேர்ந்து வாழுங்கள்.நிச்சயமாக அல்லாஹ் உங்களை கண்கானிப்பவனாக இருக்கிறான். [அல்குர்ஆன்:4 ; 1] என்று குறிப்பிடுகிறான்.
இன்றைக்கு சமுதாயத்தில்  பலர் தந்தை, தாய், சகோதரர், சகோதரி போன்ற உறவைகளைத் துறந்து, நட்பை இழந்து, சமுதாயத்தை மறந்து தனிமையாய் வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.இவ்வாறு இருப்பவர்களுக்கு தங்களது வாழ்க்கையில் ஒரு ஆதரவு கிடைக்காமல் பிரச்சனைகளின் போது உதவுவதற்கும் ஆலோசனை வழங்குவதற்கும் ஆளில்லாமல் பல்வேறு வகையான பிரச்சனைகளில் தங்களை ஆட்படுத்திக் கொண்டு வாழ்க்கை மீது வெறுப்படைந்து தவறான முடிவுகளை எடுத்துக் கொள்வது வாடிக்கையாகி விட்டது.தந்தை-பிள்ளை உறவு, சகோதரர்கள் உறவு, குடும்ப உறவு என்று உறவுகள் விரிந்து செல்கிறது. மரபணுத் தொடர்புடைய இவை அனைத்தும் தற்காலத்தில் நன்றாக இருக்கிறதா என்று கேட்டால் பெரும்பாலும் இல்லை என்பது தான் நமது பதிலாக இருக்கும். அப்படியே இருந்தாலும் அந்த உறவுகள் இப்போது பணத்துக்காகவும் பரஸ்பர தேவையின் அடிப்படையில் மட்டுமே செயல்பட்டு வருவது உண்மை. 
உறவுகளும், நட்புகளும் இன்பம் துன்பத்தில் பங்கெடுத்துக் கொள்வது அரிதாகி வருகிறது. முன்பெல்லாம் உறவுகளில் ஏதேனும் நல்ல காரியங்களோ கெட்ட காரியங்களோ நடந்தால் பயண தூரம் எவ்வளவு இருந்தாலும் அங்கு சென்று உறவுகளை நலம் விசாரித்த அல்லது அந்நிகழ்ச்சியில் பங்கெடுத்த காலமெல்லாம் மாறிப்போகி இப்போது சொந்த பந்தங்களில் நல்லதோ கெட்டதோ எது நடந்தாலும் வெறும் sms வழியாக தகவல்களை மட்டும் அனுப்பி விட்டு நாம் நமது வேளைகளை பார்க்க ஆரம்பித்து விடுகிறோம்.இது தொழில் நுட்ப புரட்சியின் விளைவுதான் என்பதை மறுப்பதற்கில்லை.  உறவினர்கள், நண்பர்கள் பேசிக் கொள்வதும் கூட சமீப காலமாக மிகவும் குறைந்து வருகிறது. இதனால், உறவுகளும்  நட்புகளும் வலுவிழந்து விடுவது மட்டுமல்ல அவைகள் நாளடைவில் தொலைந்தும் விடுவதற்கும் வாய்ப்பு உள்ளது.  தனி மரம் தோப்பாக முடியாது என்று கூறுவார்கள். மனிதனுக்கு உறவுகள் மிக மிக அவசியம். உற்றார், உறவினர்களின் தொடர்பு இல்லாமல் இனிமை பெறாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 
ஒருவன் தன் பெற்றோர், பிள்ளைகள், சகோதரர்கள் ஆகியோரிடம் எப்படி நடந்து கொள்வானோ அதுபோன்றே தனது இரத்த பந்தமுடையவர் களோடும் உறவினர்களோடும் நடந்து கொள்ள வேண்டும் என இஸ்லாம் பணிக்கிறது.இரத்த பந்தமுடையவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் சகோதர சமயத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் அனைவரையும் இஸ்லாம் உறவு விஷயத்தில் சமமாகவே பார்க்கிறது.உறவுகள் மாற்று மதத்தவர்களாக இருந்தாலும் அவர்களோடும் இணைந்து வாழ வேண்டும் அவர்களுக்கு நன்மையும் நல்லுபகாரமும் செய்ய வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது.
قَالَتْ
قَدِمَتْ عَلَيَّ أُمِّي وَهِيَ مُشْرِكَةٌ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاسْتَفْتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ وَهِيَ رَاغِبَةٌ أَفَأَصِلُ أُمِّي قَالَ نَعَمْ صِلِي أُمَّكِ
அஸ்மா(ரலி) அவர்கள் அவர்கள் கூறுகிறார்கள் ;  என தாயார் இணை வைப்பவராக இருக்கின்ற நிலையில் மக்காவிலிருந்து (மதீனாவுக்கு) வந்திருந்தார்கள். அப்போது இணை வைப்பவராக இருக்கிற என் தாயாரிடமும் நான் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமா? என்று நபி (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டேன்.அதற்கு  ஆம்! உன் தாயாரிடம் நல்ல முறையில் நடந்து கொள் என அண்ணல் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். புகாரி, முஸ்லிம்
பொதுவாக நமது வாழ்க்கையில் நட்பும் ஏனைய உறவுகளும், நாமாகத் தேர்ந்தெடுக்கும் விஷயங்கள்.ஆனால் இரத்த உறவு என்பது அல்லாஹ் வின் தேர்வாகும். இவர் தந்தை என்றும்  இவர் தாய் என்றும் இவர் மாமா என்றும் இவர் சகோதரர் என்றும் இவள் சகோதரி என்றும் அல்லாஹ் செய்த தேர்வாகும். அல்லாஹ் தேர்வு செய்த உறவுகளுக்கு முக்கியத் துவம் கொடுப்பது நமது மார்க்கக் கடமையாகும்.இரத்த உறவு என்பது அல்லாஹ்வின் தேர்வாக இருப்பதினால் அதை ஏற்று மதிப்பதன் மூலமாக நமக்கு அல்லாஹ்வுடன் தொடர்பு உண்டாகின்றது.இரத்த உறவைப்பேணுவது வெறும் சமூகக் கட்டமைப் பிற்காக மட்டும் அவசிய மான தல்ல. இஸ்லாமிய நோக்கில் இது ஈமானின் அம்சங்களில் ஒன்றாகும்.
وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَصِلْ رَحِمَهُ
யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும், ஈமான் கொள்கின்றாரோ அவர் குடும்ப உறவைச் சேர்ந்து நடக்கட்டும்என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி புகாரி, முஸ்லிம்
அல்லாஹ்வின் மீதும் மறுமையின் மீதும் ஒரு முஸ்லிம் கொண்டுள்ள ஈமானின் வெளிப்பாடுகளில் ஒன்றாகக் குடும்ப உறவைப் பேணி நடத்தலும் அமைந்துள்ளது.இரத்த உறவுகளுடன் இங்கிதமாகவும், இதமாகவும் நடந்து கொள்வதும் சுவனத்தில் நுழைவிக்கத்தக்க சிறந்த செயற்பாடாகப் போற்றப்படுகின்றது.
عَنْ أَبِي أَيُّوبَ قَالَ
جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ دُلَّنِي عَلَى عَمَلٍ أَعْمَلُهُ يُدْنِينِي مِنْ الْجَنَّةِ وَيُبَاعِدُنِي مِنْ النَّارِ قَالَ تَعْبُدُ اللَّهَ لَا تُشْرِكُ بِهِ شَيْئًا وَتُقِيمُ الصَّلَاةَ وَتُؤْتِي الزَّكَاةَ وَتَصِلُ ذَا رَحِمِكَ فَلَمَّا أَدْبَرَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْ تَمَسَّكَ بِمَا أُمِرَ بِهِ دَخَلَ الْجَنَّةَ

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! என்னைச் சுவனத்தின் அளவில் நெருக்கமாக்கி நரகத்தை விட்டும் தூரமாக்குகின்ற ஒரு காரியத்தை அறிவித்துத் தாருங்கள் என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள்,“நீ அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும். அவனுக்கு எதையும் இணைவைத்து விடாதே! தொழுகையை நிலை நிறுத்து, ஸகாத்தையும் கொடுத்து வா, குடும்ப உறவைப் பேணிக்கொள்என்றார்கள்.கேள்வி கேட்டவர் அங்கிருந்து சென்ற நபி ஸல் அவர்கள் தன் தோழர்களிடம் இவர் தனக்கு ஏவப்பட்டதைப் பற்றிப் பிடித்து சரியாக முறையாக செய்து வந்தால் அவர் நிச்சயம் சுவனம் நுழைவார் என்று கூறினார்கள். புகாரி, முஸ்லிம்
இரத்த உறவைப் பேணுவதால், மறுமைப் பேறுகள் மட்டுமன்றி இம்மையிலும் இனிய பயன்களுள்ளதாக இஸ்லாம் கூறுகின்றது.
مَنْ سَرَّهُ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ أَوْ يُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ فَلْيَصِلْ رَحِمَهُ
யார் தனக்கு அல்லாஹ் வழங்கும் ரிஸ்கில் விஸ்தீரணம் ஏற்படுவதையும்  நீண்ட ஆயுளையும் விரும்புகிறாரோ அவர் இரத்த உறவைப் பேணிக் கொள்ளட்டும் என ஈருலகத்தலைவர் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். [புகாரி, முஸ்லிம்]
ஆனால் இன்று உறவுகளின் அருமை விளங்காமல் உறவுகளுக்கு இஸ்லாம் வழங்கும் முக்கியத்துவம் புரியாமல் கடுகு போன்ற சின்ன சின்ன விஷயங்களுக்கும் அடித்துக் கொண்டு உறவுகளை முறித்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒன்றுமில்லாத காரியங்களுக்காகவும் அர்ப்ப பணத்திற்காகவும் காலம் காலமாக பல தலைமுறை தலை முறை யாக முகம் சுழித்துக் கொண்டும் பேசாமலும் இருந்து கொண்டிருக் கிறோம். உறவுகளை முறிக்காத வீடுகளே இல்லை என்கின்ற அளவிற்கு சொந்த பந்தங்களை முறித்து வாழ்வது இன்றைய நவீன காலத்து புதிய நடைமுறையாக மாறிப்போனது வேதனை தரும் செய்தி.ஒருவன் தன் சகோதரனிடம் கூட மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பதற்கு இஸ்லாம் அனுமதிக்க வில்லை.ஆனால் இன்று சொந்த உறவுகளிடம் கூட பல்லாண்டு காலமாக பேசாமல் இருப்பதை  வாடிக்கை யாக கொண்டிருக்கிற நாம் உண்மையில் சிந்திக்க கடமைப் பட்டிருக் கிறோம்.
لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ
உறவை முறித்து வாழ்பவன் சுவனம் புக மாட்டான் என்ற நபியின் எச்சரிக்கையை நாம் நம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
فَقَالَ أَلَا تَرْضَيْنَ أَنْ أَصِلَ مَنْ وَصَلَكِ وَأَقْطَعَ مَنْ قَطَعَكِ
அல்லாஹுதஆலா இரத்த உறவைப் பார்த்து யார் உன்னைச் சேர்ந்து நடக்கிறானோ நான் அவனை நான் சேர்ந்து கொள்வதும். யார் உறவைத் துண்டித்துக் கொள்கின்றானோ அவனுடன் நான் தொடர்பைத் துண்டித்து விடுவதும் உனக்கு திருப்தி அளிக்குமா என்று கேட்டான்.அதற்கு அந்த உறவு ஆம்  என்று கூறியது[புகாரி] என்ற அறிவிப்பின் மூலம் குடும்ப உறவைப் பேணுவது அல்லாஹ்வுடனான உறவைப் பேணுவதற்குச் சமமாக்கப்படுவதையும் நாம் காணலாம்.
உலகில் உறவை முறிப்பவர்கள் ஒரு பக்கம் என்றால் பெயருக்காகவும் நடிப்புக்காகவும் உறவோடு இணைந்து வாழ்பவர்கள் மறு பக்கம்.அவர்கள் சேர்ந்தால் நான் சேருவேன்.அவர்கள் கொடுத்தால் நான் கொடுப்பேன். அவர்கள் பேசினால் நான் பேசுவேன் என்று சொல்பவர்கள் நம்மில் நிறையவே உண்டு.ஆனால் அன்பானவர்களே உண்மையில் உறவை சேர்ந்து வாழ்வதின் இதுவல்ல.அவர்கள் நம்மை துண்டித்தாலும் நாம் சேர வேண்டும்.அவர்கள் தடுத்தாலும் நாம் கொடுக்க வேண்டும்.அவர்கள் பேச மறுத்தாலும் நாம் பேச வேண்டும்.உறவை சேர்ந்து வாழ்வதின் உண்மை யான அடையாளம் இது தான் என இஸ்லாம் கூறுகிறது.  

قَالَ لَيْسَ الْوَاصِلُ بِالْمُكَافِئِ وَلَكِنْ الْوَاصِلُ الَّذِي إِذَا قُطِعَتْ رَحِمُهُ وَصَلَهَا

 “தன்னுடன் இணைந்து இருப்போருடன் சேர்ந்து நடப்பவன் இரத்த உறவைப் பேணுபவனல்ல. உண்மையில் தன்னுடன் உறவைத் துண்டித்தாலும் உறவு பேணுவதே இரத்த உறவைச் சேர்ந்து நடப்பவனாவான்என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.புகாரி
ஒரு தோழர் நபி(ஸல்) அவர்களிடம் இவ்வாறு முறையிட்டார். எனக்கு சில உறவினர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் ஒட்டி நடந்தால் அவர்கள் வெட்டிச் செல்கின்றனர். நான் அவர்களுக்கு நன்மை செய்கின்றேன். அவர்களோ எனக்குத் தீமை செய்கின்றனர். நான் அவர்களுடன் கருணையுடன் நடந்து கொள்கின்றேன். அவர்கள் என்னுடன் கடுமையாக நடந்து கொள்கின்றனர் என்றார். அதற்கு நபியவாகள், நீ கூறுவது போல் நீ நடந்து கொண்டால் அல்லாஹ்விடமிருந்து ஒரு உதவியாளர் உனக்கு நியமிக்கப்பட்டிருப்பார்என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.முஸ்லிம்

எனவே, முடிந்தவரை அனைவரையும் நாம் அணுசரித்து, விட்டுக்கொடுத்து இணங்கிச் செல்ல முயல வேண்டும்.இரத்த பந்தங்களை சேர்ந்து ஆதரித்து வாழ வேண்டும்.அவர்களில் பெரியவர்களைக் கண்ணியப் படுத்தவேண்டும். சிறியவர்களிடம் அன்பு காட்ட வேண்டும். அவர்கள் நோயுற்றால் அவர்களை நலம் விசாரிக்க வேண்டும். அவர்கள் கஷ்டப்படும் போது அவர்களை ஆதரிக்க வேண்டும். அவர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால் ஆறுதல் சொல்ல வேண்டும். அவர்கள் உறவை முறித்தாலும் அவர்களுடன் இணைந்து வாழ வேண்டும். அவர்கள் கடினமாக நடந்து கொண்டாலும் அவன் அவர்களிடம் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும். இவையெல்லாம் உறவுகளோடு நாம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்.இவைகளை மனதில் கொண்டு உறவுகளை சேர்ந்து வாழ்ந்து மேலான அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெருவதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்.

No comments:

Post a Comment