Thursday, November 8, 2018

வாழ்கிறதே 1



அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்] அல்ஹம்து லில்லாஹ் ! அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா சய்யிதினா முஹம்மதின் வஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மஈன்.
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருநாமத்தால் என் உரையை ஆரம்பம் செய்கிறேன்.
மனித நேயம் காக்க வந்த, மா நபி (ஸல்) அவர்களின் வாரிசான நடுவர் அவர்களே,  சத்தியத்தை தயங்காமல் உரைக்க வந்திருக்கிற என் அணி வீரரே, மார்க்கத்தின் ஒளி விளக்கே ! வீரத்தின் விளை நிலமே, வான்மறை வழி நடக்கும் தங்கமே, அஞ்சா நெஞ்சம் கொண்ட இளம் சிங்கமே,அசத்தியத்தையும், உண்மைக்கு புறம்பான கருத்துக்களையும், மனித நேய மில்லாமல் பேச வந்திருக்கும் எதிரணி புல்லப்பூச்சிகளே,  


இன்றைய உலகில் மனித நேயம் வாழ்கிறதே! வாழ்கிறதே!வாழ்கிறதே! என்று நடுவர் அவர்கள்  கூறும் இறுதியான தீர்ப்பை காது குளிர கேட்க வந்திருக்கும் கேம்பல் வாழ் ஜமாத்தார்களே, தாய்மார்களே, சகோதர சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஸலாமை தெரிவித்துக் கொள்கிறேன், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பான நடுவர் அவர்களே இன்னைக்கு மனித நேயம் இருக்குதா இல்லை யான்னு கேட்டா, இருக்குதுன்னு சொல்றது தான் அறிவாளிங்க சொல்லக்கூடிய பதில்.இல்ல இல்லன்னு அறிவில்லாதவங்க தான் சொல்வாங்க. நடுவர் அவர்களே இப்ப உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே யார் அறிவாளி யார் முட்டாளுன்னு. ஆனா நீங்க மட்டும் இந்த புள்ள பூச்சிங்க சொல்ல கேட்டு அவங்க பக்கம் தீர்ப்பு கொடுத்தீங்கன்னா நீங்க யாருன்னு எங்க ஊருக்காரங்க தெரிஞ்சிக்குவாங்க பாத்துக்கோங்க. அதனால எங்க ஊர் மக்கள் உங்கள அறிவாளின்னு சொல்றதும்  இல்ல.... ன்ன்ன்ன்ன்னு சொல்றதும் உங்க கைல தான் இருக்குது, அதனால நீங்களே யோசிச்சி முடிவெடுங்க.
நான் விஷயத்துக்கு வர்ரேன். நடுவர் அவர்களே இந்த உலகத்துல மனுஷங்க  இருக்குற வரைக்கும் மனித நேயம் இருந்துகிட்டுதாங்க தான் இருக்கும். அந்த காலத்துல இருந்து இந்த நவீன காலம் வரைக்கும் மனிதநேயத்துக்கு எதிரா ஒரு சில சம்பவங்கள் நடந்தாலும் மனிதநேயம் இன்னும் வாழ்ந்துகிட்டு தான் இருக்குது.அழிந்து போவல.

உலகத்துல மனித நேயம் வாழ்ந்துகிட்டு தான் இருக்குதுங்குறதுக்கு ஏராளமான உதாரணங்கள என்னால சொல்ல முடியும். நடுவர் அவர்களே வரிசையா அடுக்குறேன். ஒன்னு வுடாம எல்லாத்தையும் note பன்னுங்க.
உங்க பக்கத்துல இருக்குற ரண்டு புள்ளப்பூச்சிங்களும் எதாவது ஒன்ன செஞ்சி உங்க கவனத்த திருப்ப நெனப்பாங்க.கொஞ்சம் உஷாரா இருந்து நான் சொல்ற பாயிண்ட NOTE பன்னுங்க OK……
 
2004 வது வருஷம் டிசம்பர் மாசம் 26 ம் தேதி நடந்த சுனாமியப் பத்தி நமக்கெல்லாம் தெரியும்.அந்த சுனாமியில பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜாதி, மதம், நிறம், மொழி, என்று எந்த பாகுபாடும் பாக்காம நம்ம சமுதாயம் உதவுச்சே அது மனித நேயம் இல்லயா ? குஜராத்துல கடுமையான பஞ்சம் ஏற்பட்ட நேரத்துல ஆடைகளையும், உணவுகளையும், பணத்தையும் கொடுத்து நம்ம சமுதாயம் உதவுச்சே அது மனிதநேயம் இல்லயா. அதுமட்டுமா ஊனமுற்றவங்களுக்கு பஸ்ஸுல தனி சீட் கொடுத்துருக்குறோமே இது  மனிதநேயம் இல்லயா
 
இலங்கை, பாலஸ்தீனம் போன்ற பகுதிகள்ள அப்பாவி பொதுமக்களும், குழந்தைங்களும் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட நேரத்துல முகம் தெரியாத  அவங்களுக்கு பாதுகாப்பு கிடைக்குனும்னு சொல்லி  நோன்புன்னு கூட பாக்காம வெயிலுன்னு கூட பாக்காம எல்லாரும் ஆர்ப்பாட்டம் செஞ்சாங்களே அநீதிக்கு எதிரா குரல் கொடுத்தாங்களே இது மனிதநேயம் இல்லயா.

அதுமட்டுமா இன்னைக்கு உயிருக்கு போராடுற எத்தனையோ நோயாளிங்களுக்கு சுகம் கிடைக்கனும்கிறதுக்காக நம்ம இளைஞர்கள் தங்களோட உடம்புல உள்ள ரத்தத்த கொடுத்து ரத்த தானம் செஞ்சு அவங்களோட உயிர காப்பாத்துறாங்களே இது மனித நேயம் இல்லயா 

ரேடியாவுல வேள செஞ்ச தென்கச்சி கோ சுவாமிநாதன் கூட தனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்த சொல்றாரு கேளுங்க. அதைக்கேட்ட பிறகும் இந்த புள்ளப் பூச்சிங்க எந்த மூஞ்ச வச்சிட்டு இங்க பேசப் போறாங்கன்னு பார்ப்போம். ஒரு நாள் EVENING நேரத்துல திருநெல்வேலி ஹைகிரவுண்ட் HOSPITAL ல இருந்து ஒரு போன் வந்துச்சி. வடமாநிலத்துல இருந்து வந்த சுற்றுலா பஸ்ஸும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தாகிடுச்சி. விபத்துல அடி பட்டவங்களுக்கு உடனே ரத்தம் வேணும். அதனால ரத்தம் கொடுக்க விருப்பமுள்ளவங்க  உடனே ஆஸ்பத்திரிக்கு வாங்கன்னு சொல்லி ரேடியாவுல அறிவிப்பு செய்யுங்க அப்டின்னு ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியோட பெரிய டாக்டர் சொன்னார். நாங்களும் உடனடியா ரேடியாவுல  அறிவிப்பு செஞ்சோம். சரியா இருபது நிமிஷந்தான் கழிஞ்சிருக்கும். மறுபடியும் ஹைகிரவுண்டி ஆஸ்பத்திரி பெரிய டாக்டர் போன் பன்னி தயவு செஞ்சி ரத்த தானம் செய்ய அடுத்து யாரும் ஆஸ்பத்திரிக்கு வரவேண்டாம்னு சொல்லுங்க.... இங்க எங்களால கூட்டத்த கட்டுப்படுத்த முடியல. அந்த அளவுக்கு ரத்த கொடுக்குறதுக்கு கூட்டம் அதிகமாயிடுச்சி அப்டின்னு சொன்னார்.

நடுவர் அவர்களே பாத்தீங்களா அடுத்தவங்களோட உயிர, அதுவும் யாருன்னே தெரியாத மக்களோட உயிர காப்பாத்துறதுக்கு நம்ம இளைஞர்கள் எவ்ளோ போட்டி போடுறாங்கன்னு.இத விட மனித நேயத்துக்கு வேற உதாரணம் தேவையா நடுவர் அவர்களே. 

அதுமட்டுமா நடுவர் அவர்களே மனித நேயம் இன்னும் வாழ்ந்துகிட்டு தான் இருக்குதுங்கிறதுக்கு எங்க ஊர் கேம்பலாபாத் மக்களே மிகப்பெரிய ஆதாரம். என்னன்னு கேக்குறீங்களா எங்க ஊர்ல யாராவது உடம்பு சரியில்லாம HOSPITAL ல சேர்த்திருந்தாங்கன்னா உடனே அந்த ஊட்டு காரங்க நம்ம ஊர் ஆலிம்ஸாட்ட வந்து சொல்வாங்க.நம்ம ஆலிம்ஸாவும் தொழுக முடிஞ்ச பிறகு அவங்க பேரச் சொல்லி துஆ செய்வாங்க.ஊர் மக்கள் எல்லாருமே துஆ செய்வாங்க. அவரு சுகமாகி அடுத்த நாளே ஊட்டுக்கு திரும்பிருவாரு. இப்படி எத்தன பேரு சுகமாகி வீடு திரும்பி இருக்காங்க தெரியுமா மனித நேயம் வாழ்ந்துகிட்டு தான் இருக்குதுங் குறதுக்கு இத விட வேற என்ன ஆதாரங்க வேணும்.

மனித நேயம் செத்துப்போச்சின்னு இந்த ரண்டு புள்ளப் பூச்சிங்களும் பேச வந்துட்டாங்களே இன்னைக்கி நம்ம சமுதாயத்துல பண வசதி உள்ளவங்க எத்தனையோ உதவிகள் செய்றாங்களே அதுலாம் இவங்க கண்ணுக்கு தெரியலியா
எத்தனையோ ஏழைக்குமர்கள  கர சேக்குறாங்க, எத்தனையோ பேர படிக்க வைக்கிறாங்க,எத்தனையோ குடும்பங்களுக்கு மறு வாழ்வு கொடுக்குறாங்க, எத்தனையோ மதரஸாக்களுக்கு பண உதவி செய்றாங்க.இதுலாம் மனித நேயம் இல்லாம மண்ணாங்கட்டி நேயமா

உலகத்துல மிகப்பெரிய பணக்காரர் பில்கேட்ஸ்.நமக்குலாம் தெரியும். அவர்ட்ட உங்களோட பெரிய ஆசை என்னன்னு கேட்டாங்க.அதுக்கு அவர் என்ன சொன்னாரு தெரியுமா  உலகத்துல மலேரியாவ ஒழிக்கனும், கல்விய சீரமச்சி எல்லா ஏழைங்களுக்கும் கல்வி கிடைக்க உதவி செய்யனும் அப்டின்னு சொன்னார். அது மட்டுமல்ல சீனாவச் சேர்ந்த 88 வயசு தொழில் அதிபர் ஒருவர் தன்னோட 12,000 கோடி சொத்தையும் அறக்கட்டளைக்கு உயில் எழுதி வைச்சிருக்காரு. இந்த மாதிரி செய்தியெல்லாம் பார்த்த பிறகும் மனிதநேயம் வீழ்ந்திடுச்சின்னு எப்படி இவங்க பேச வந்துட்டாங்கன்னு தெரியல.

ஏம்மா புள்ளப்பூச்சிங்களா உங்களுக்கு முதல்ல மனித நேயன்னா என்னன்னு தெரியுமா இல்ல சும்மா குடுட்டாம் போக்குல பேச வந்துட்டீங்களா. கருப்பு கண்ணாடி போட்டவனுக்கு உலகம் எவ்ளோ தான் வெளிச்சமா இருந்தாலும் அவனுக்கு மட்டு கருப்பா தான் தெரியும்.அந்த மாதிரி முதல்ல உங்க பார்வைய சரி பன்னுங்க அப்புறம் எல்லாம் நல்லதா தெரியும்.இல்லன்னா எல்லாம் தப்பா தான் தெரியும்.

நடுவர் அவர்களே நான் உங்களப் பார்த்து கேக்குறேன்.நீங்க பத்து வருஷம் மதரஸாவுல ஓதி இருக்கீங்க,பத்து வருஷம் மதரஸாவுல சாப்பிட்றிக்கீங்க,பத்து வருஷம் அங்க தங்கி இருக்கீங்க இதுக்குலாம் நீங்க எவ்ளோ ரூபா பீஸ் கட்டுனீங்க? எதுவும் இல்லயே.... எல்லாம் எங்க ஊர மாதிரி நல்ல மனசுல்ல பணக்காரங்க செய்ற உதவில தானே இன்னைக்கி பல மதரஸாக்கள் நடக்குது பல ஆலிம்ஸாக்கள் உருவாகுறாங்க.... இத மறுக்க முடியுமா, இல்ல....... இதுலாம் மனித நேயமில்லன்னு சொல்ல முடியுமா சொல்லுங்க நடுவர் அவர்களே

ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன். நடுவர் அவர்களே இதுலாம் கேட்டு ஆமா சாமி போட்ட பிறகும் எதிரணிக்கு மயங்கி ஒரு வேள நீங்க மட்டும் அவங்களுக்கு சாதகமா தீர்ப்பு கொடுத்தீங்க.... அப்புறம் நீங்க பத்து வருஷம் மதரஸாவுல சாப்புட்ட சாப்பாட்டுக்கு பதில் சொல்லி ஆகனும் பாத்துக்கோங்க. அப்டி ஒரு தர்மச் சங்கடமான சூழ்நில உங்களுக்கு வரக்கூடாதுன்னா பேசாம எங்க பக்கம் தீர்ப்பு கொடுங்க. இல்லன்னா எங்களுக்கு ஒன்னும் பிரச்சன இல்ல.நீங்க தான் மாட்டுவீங்க சிக்குவீங்க. பாத்துக்கோங்க.

எனவே இன்றைய உலகில் மனித நேயம் வாழ்கிறதே வாழ்கிறதே வாழ்கிறதே என்று நடுவர் அவர்கள் தீர்ப்பு கொடுப்பார்கள் என்ற உயர்ந்த மேலான உச்சகட்ட நம்பிக்கயில்  இங்கிருந்து விடைபெறுகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

No comments:

Post a Comment