Thursday, November 8, 2018

சமூக சேவை நமக்குத் தேவை


الحمد لله والصلوة والسلام علي رسول الله سيدنا محمد واله وصحبه اجمعين اما بعد قال الله تعالي في القران العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
உலகத்தில் மனிதன் மனிதனாக வாழ்வதற்கும் மனிதப் புனிதனமாக மாறுவதற்கும் அல்லாஹுத்தஆலா நபிமார்களை உலகத்திற்கு அனுப்பி வைத்தான்.அந்த நபிமார்களில் முத்தாய்ப்பாக அந்த நபிமார்களுக் கெல்லாம் தலைவராக அண்ணல் நபி ஸல் அவர்களை அல்லாஹ் உலகத்திற்குத் தந்தான். அவர்களது வாழ்வின் அத்தனை விஷயங்களும் மனித சமூகத்திற்கு மிகச்சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது.

மனித வாழ்வில் மொத்தம் எத்தனை துறைகள் இருக்கிறதோ அந்த அத்தனை துறைகளிலும் தூய நபி ஸல் அவர்களின் முன்மாதிரி இடம் பெற்றிருக்கும். வாழ்க்கைப் புத்தகத்தின் எந்தப் பக்கத்தை புரட்டினாலும் அங்கே வள்ளல் நபி ஸல் அவர்களின் வழிகாட்டுதல் அடங்கியிருக்கும்.
அல்லாஹ்வை எந்த இடத்தில் வைக்க வேண்டும், மாநபி ஸல் அவர்களை எந்த இடத்தில் வைக்க வேண்டும்,மனிதர்களோடு எப்படி பழக வேண்டும், மற்ற படைப்புகளோடு எப்படி பழக வேண்டும்,குடும்பத்தை எப்படி கவனிக்க வேண்டும், சொந்தங்களை எப்படி அரவணைக்க வேண்டும், அண்டை வீட்டாரை எப்படி ஆதரிக்க வேண்டும், தனி மனித வாழ்கை,குடும்ப வாழ்கை, சமூக வாழ்க்கை, அரசியல், ஆண்மீகம், அறிவியல், விஞ்ஞானம், வியாபாரம்,விளையாட்டு என அத்தனைக்கும் வழிகாட்டுதலும் முன்மாதிரியும் சத்திய நபி ஸல் அவர்களில் சரித்திரத்தில் உண்டு.
அண்ணல் நபி ஸல் அவர்களின் வழிகாட்டுதலை ஒதுக்கி வைத்து விட்டு அந்த அண்ணல் நபி ஸல் அவர்களின் போதனைகளை புறம் தள்ளி விட்டு நாம் எந்தக் காரியத்தையும் செய்ய முடியாது. அப்படியே செய்தாலும் அதை நாம் முழுமை படுத்த முடியாது.அப்படியே ஒரு வேளை முழுமை படுத்தினாலும் அதில் நாம் எண்ணுகிற இலக்கை அடைய முடியாது.
மனித வாழ்வின் எல்லா சந்துகளிலும் நபி ஸல் அவர்கள் நுழைந்திருக்கிறார்கள். மனித வாழ்வின் எல்லா பாதைகளிலும் நபி ஸல் அவர்கள் பயணித்திருக்கிறார்கள்.மனித வாழ்வின் எல்லா மூளை முடுக்குகளிலும் நபி ஸல் அவர்கள் தடம் பதித்திருக்கிறார்கள்.
இன்றைக்கு உலகில் எந்தத் தலைவர்களாக இருக்கட்டும் எந்த இயக்கத்தைச் சார்ந்தவர்களாக இருக்கட்டும் சமூகத்தில் தன் பெயர் நிலைப்பதற்காகவும், சமூகத்தில் தனக்கொரு இடம் கிடைப்பதற்காகவும் அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ ஈடுபட நினைப்பது சமூக சேவைகளிலும் களப்பணியிலும் தான்.
ஆனால் இந்த சமூக சேவைகளில், மக்களுக்காக செய்யும் களப்பணிகளில் முன்னுதாரணமாகவும், அதில் முத்திரை பதிப்பவர் களாகவும் மட்டுமின்றி மற்ற தலைவர்களைப் போன்றும் மற்ற இயக்க வாதிகளைப் போன்றும் இல்லாமல் அதை தூய எண்ணத்தோடு செய்தவர்கள் அண்ணலம் பெருமானார் ஸல் அவர்கள் மட்டும் தான்.
நாயகம் ஸல் அவர்கள் செய்த சமூக சேவைகளும் களப்பணிகளும் என்றைக்கும் பெயருக்காகவோ,புகழுக்காகவோ, எதோ கடமைக்காகவோ இருந்ததே இல்லை. மாறாக எந்த நேரத்தில் எந்த சமூகத்திற்கு எந்த மனிதருக்கு எது தேவையோ, எது அவசியமோ அதில் கவனம் செலுத்தினார்கள்,
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் பல நேரங்களில் சமூக சேவைகள் செய்ய வேண்டும் என்றும் சமூகத்திற்காக பாடுபட வேண்டும் என்றும் தன் தோழர்களுக்கு உணர்த்தியிருக்கிறார்கள்.
ஒருவர் தன் சகோதரனை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக அவரின் தேவைகளை பூர்த்தி செய்தால் அவர் என்னை சந்தோஷப்படுத்தியவராக ஆவார்.எவர் என்னை சந்தோஷப் படுத்தி விட்டாரோ அவர் அல்லாஹ்வை சந்தோஷப்படுத்தியவராக ஆவார்.எவர் அல்லாஹ்வை சந்தோஷப்படுத்தி விட்டாரோ அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைக் கொடுத்து விடுவான் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
சொன்னதோடு மட்டுமின்றி இந்த சமூகத்திற்காக எண்ணற்ற சமூக சேவைகளையும் களப்பணிகளையும் செய்திருக்கிறார்கள்.
அண்ணலம் பெருமானார் ஸல் அவர்களை முதன் முதலாக வானவர் கோமான் ஜிப்ரயீல் அலை அவர்களைப் பார்த்து பெரும் திடுக்கத்திலும் அச்சத்திலும் வந்த போது அவர்களை அருகில் அமர வைத்து அரவணைத்து  அண்ணை கதீஜா ரலி அவர்கள் கூறிய வார்த்தை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கிறது.
والله لا يخزيك الله ابدا انك لتصل الرحم وتحمل الكل وتكسب المعدوم وتقري الضيف وتعين علي نوائب الحق
நீங்கள் உறவுகளை சேர்ந்து வாழுகிறீர்கள், சிரமங்களைத் தாங்கிக் கொள்கிறீர்கள், இல்லாதப்பட்டவர்களுக்காக நீங்கள் உழைக்கிறீர்கள், விருந்தாளிகளை உபசரிக்கிறீர்கள், பாதிக்கப் பட்டவர்களுக்கு நீங்கள் உதவி செய்கிறீர்கள்.எனவே அல்லாஹ் உங்களை நிச்சயம் இழிவுபடுத்த மாட்டான் என்று அவர்கள் சொன்னார்கள்.
அண்ணலம் பெருமானார் ஸல் அவர்கள் அன்றைக்கு எந்தளவு சமூக சேவைகளையும் களப்பணிகளையும் செய்தார்கள் என்பதை அன்னை கதீஜா நாயகி சொன்ன இந்த வார்த்தைகளின் மூலம் நாம் விளங்கிக் கொள்ளலாம்.
எனவே நாம் நம் வாழ்க்கையில் எல்லா விஷயங்களிலும் அண்ணல் நபி ஸல் அவர்களைப் பார்த்து அவர்களைப் பின்பற்றி நடப்பதைப் போன்று சமூக சேவைகளிலும் நாம் அவர்களைப் பின்பற்ற வேண்டும்.அவர்கள் எப்படி சமூக சேவைகள் செய்தார்களோ அதே போன்று நாமும் செய்ய வேண்டும்.அவர்கள் எப்படி சமூகத்திற்காக பாடுபட்டார்களோ அதே போன்று நாமும் பாடுபட வேண்டும்.வல்லோன் அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக என்று கூறி என் உரையை நிறைவு செய்கிறேன்.

No comments:

Post a Comment