Thursday, November 8, 2018

நாயகம் ஒரு அருட்கொடை



الحمد لله والصلوة والسلام علي رسول الله سيدنا محمد واله وصحبه اجمعين اما بعد قال الله تعالي في القران العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمة للعالمين
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கின்றேன்.நாயகம் ஒரு அருட்கொடை என்ற தலைப்பில் நான் பேச வந்திருக்கிறேன்.

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே நம்மைப் படைத்த அல்லாஹ் உலகத்திலே மூன்று விஷயங்களை உலகத்தார் அனைவருக்கும் பொதுவாக ஆக்கியிருக்கிறான்.அந்த மூன்று விஷயங்களும் உலகத்தில் இருக்கிற அத்தனை மக்களுக்கும் அத்தனை படைப்புக்களுக்கும் பொதுவானது.எனக்கு மட்டும் தான் என்றோ எங்களுக்கு மட்டும் தான் என்றோ யாரும் அதை சொந்தம் கொண்டாட முடியாது. அதிலே ஒன்று அல்லாஹ். அல்லாஹுத்தஆலா  அகிலத்தார் அனைவருக்கும் இறைவனாக இருக்கிறான்.இரண்டாவது உலகத்திருமறையான அல்குர்ஆன். அல்லாஹ் அண்ணல் நபி ஸல் அவர்களுக்கு அருளிய அல்குர்ஆன் அகிலத்தார் அனைவருக்கும் உபதேசமாக இருக்கிறது. மூன்றாவது நபி ஸல் அவர்கள்.கண்மனி நாயகம் முத்து முஹம்மது முஸ்தஃபா ஸல் அவர்கள் அகிலத்தார் அனைவருக்கும் அருட்கொடையாக இருக்கிறார்கள்.
அண்ணல் நபி ஸல் அவர்களின் அளவிலா அன்பைப் பற்றி அவர்களின் நிகரில்லா பாசத்தைப் பற்றி அவர்களின் முடிவில்லா கிருபையைப் பற்றி அவர்களின் கரை சேர்க்கும் கருணையைப் பற்றி பேசுவதற்கும் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் படிப்பதற்கும் எண்ணற்ற விஷயங்கள் குர்ஆனில் ஹதீஸிலும் நிரம்பி இருக்கிறது.
அண்ணல் நபியின் அன்பையும் பாசத்தையும் கிருபையையும் கருணையையும் ஒரு எல்லைக்குள் மட்டுப்படுத்த முடியாது.ஒரு வட்டத்திற்குள் வட்டப்படுத்த முடியாது.ஒரு காலத்திற்கு மட்டும் என்றோ ஒரு நேரத்திற்கு மட்டும் என்றோ ஒரு சமூகத்திற்கு மட்டும் என்றோ ஒரு இனத்திற்கு மட்டும் என்றோ அதை சுருக்கி விட முடியாது.
இவ்வளவு தான் என்று சொல்ல முடியாத அளவுக்கு விசாலமான அன்புக்கும் பாசத்திற்கும் கிருபைக்கும் கருணைக்கும் சொந்தக்காரர் அருமை நாயகம் ரசூலுல்லாஹி ஸல் அவர்கள்.
மனித சமூகமாக இருக்கட்டும்,மலக்குகளாக இருக்கட்டும்,ஜின் இனமாக இருக்கட்டும், முஸ்லிம்களாக இருக்கட்டும்,காஃபிர்களாக இருக்கட்டும் மிருகங்களாக இருக்கட்டும் பறவைகளாக இருக்கட்டும் புழு பூச்சிக்களாக இருக்கட்டும் உலகத்தில் அல்லாஹ்வின் படைப்பு என்று எதுவெல்லாம் இருக்கிறதோ அவை அனைத்திற்கும் அண்ணலம் பெருமானார் ஸல் அவர்கள்  ரஹ்மத்தாக இருக்கிறார்கள்.அருளாக இருக்கிறார்கள்.கிருபையாக இருக்கிறார்கள்.
மட்டுமல்ல இஸ்லாத்திற்கு எதிராக செயல்படக்கூடிய காஃபிர்களுக்கும் கூட  அண்ணல் நபி ஸல் அவர்கள் அருளாக இருக்கிறார்கள். அன்றைக்கு மக்கத்து குரைஷிகள் நபி ஸல் அவர்களுக்கு எத்தனையோ கஷ்டங்களையும் துன்பங்களையும் இடையூறுகளையும்  கொடுத்தார்கள். அவர்களை சொல்லால் அடித்தார்கள்,கல்லால் அடித்தார்கள், உடலைக் காயப்படுத்தி னார்கள்.உள்ளத்தைக் காயப்படுத்தினார்கள். பற்களை உடைத்தார் கள்.அவர்கள் செல்லும் பாதையில் முற்களையும் கற்களையும் புதைத்து வைத்தார்கள்.கொலை செய்ய முயற்சித்தார்கள். இறுதியில் ஊரை விட்டே துறத்தினார்கள்.
தன் ஹபீபான அண்ணலுக்கு இத்தனை துன்பங்களைத் தந்தால் அல்லாஹ்வால் தாங்கிக் கொள்ள முடியுமா? எனவே அல்லாஹ் வானவரை அனுப்பி அவர்களை அழித்து விடவா என்று கேட்டான். அப்போது கருணை நபி ஸல் அவர்கள் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா இவர்கள் ஈமான் கொள்ளா விட்டாலும் இவர்களுடைய சந்ததிகளாவது ஈமான் கொள்வார்கள் என்று சொன்னார்கள்.
அருமையானவர்களே நாம் இங்கே ஒன்றை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.நமக்கு ஒருவன் ஒரு துரோகம் செய்து விட்டால் அவனுக்கு மட்டுமில்லாமல் அவனுடைய சந்ததிகளுக்கும் சேர்த்து நாம் பத்வா செய்வோம்.ஆனால் நபி ஸல் அவர்கள் அந்த மக்கள் மட்டுமல்ல அவர்களுடைய சந்ததிகளின் நலவிலும் அக்கரை காட்டினார்கள் என்றால் இதுபோன்ற ஒரு அன்பையும் ஒரு பாசத்தையும் கருணையும் வேறு எங்காவது பார்க்க முடியுமா ?
உஹதுப் போர்க்களத்தில் மக்கத்து காஃபிர்கள் நபி ஸல் அவர்களுடைய பற்களை உடைத்தார்கள். அப்போது அவர்களுடைய புனிதமான மேனியிலிருந்து ரத்தம் வடிந்து கொண்டிருக்கிறது.அந்த கஷ்டமான நேரத்தில் அண்ணல் நபி ஸல் அவர்கள் சொன்ன வார்த்தை பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வார்த்தை.
அவர்கள் சொன்னார்கள்  اللهم اغفر لقومي فانهم لا يعلمون யா அல்லாஹ் என் சமூகத்தை மன்னித்து விடு.அவர்கள் அறியாமல் தவறு செய்கிறார்கள்.
தனக்கு எல்லையில்லா கஷ்டங்களையும் துன்பங்களையும் வேதனைகளையும் கொடுத்த அந்த மக்களுக்கும் துஆ செய்கிறார்கள் என்றால் நபிகள் நாயகம் ரசூலுல்லாஹி ஸல் அவர்கள் எவ்வளவு பெரிய கருணை உள்ளம் கொண்டவர்கள் என்பதை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. அகிலத்தாரின் அருட்கொடையான அண்ணல் நபி ஸல் அவர்களை நாம் நேசிப்போம் வாசிப்போம் சுவாசிப்போம் ஈருலகிலும் ஈடேற்றம் பெறுவோம் அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்.



No comments:

Post a Comment