புனிதனம் நிறைந்த பாக்கியம் நிறைந்த அருள்
நிறைந்த ரமலான் மாதம் நம்மை நெருங்கி வருகிறது.இரண்டு மாதங்களுக்கு முன்பே அந்த
மாதம் கிடைக்க வேண்டும் என்று நபி ஸல் அவர்கள் துஆ செய்து, நம்மையும் துஆ செய்யும்
படி தூண்டிய மாதம் தான் ரமலான் மாதம்.
கிடைப்பதற்கரிய பொக்கிஷமான பாக்கியம் நிறைந்த
அந்த மாதத்தை இன்ஷா அல்லாஹ் இன்னும் ஒரு சில தினங்களில் அடைய இருக்கிறோம். அதிலுள்ள
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஏன் ஒவ்வொரு நொடியும் முக்கியமானவை, பொக்கிஷமானவை.ஒரு சுன்னத் தொழுதால் ஒரு
ஃபர்ளின் நன்மை கிடைக்கிறது. ஒரு ஃபர்ளு தொழுதால் 70 ஃபர்ளுகள் தொழுத நன்மை
கிடைக்கிறது என்று சொல்லப்பட்ட மிகச்சிறந்த மாதம். அந்த புனிதமான மாதத்தை சரியான
முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.அதிலுள்ள எந்த நேரத்தையும் எந்த வகையிலும்
வீணடித்து விடக்கூடாது.
முதலில் இந்த மாதத்தினுடைய சிறப்பை நாம் விளங்க
வேண்டும். பொதுவாக ஒரு
பொருளின் தரம் என்னன்னு தெரிந்தால் தான் அதன் மீது ஒரு மரியாதை வரும்,அதை சரியான
முறையில் பயன் படுத்த வேண்டும், வீணடித்து விடக் கூடாது என்ற எண்ணம் வரும்.
தங்கத்தின் மதிப்பை நாம் விளங்கி இருக்கிறோம். பணத்தின் மதிப்பை நாம் விளங்கி இருக்கிறோம். நிலத்தின் மதிப்பை நாம் விளங்கி இருக்கிறோம். அதனால்
தான் அந்த தங்கத்தின் மீதும் பணத்தின் மீதும் நிலத்தின் மீதும் நமக்கு மரியாதையும்
பற்றும் வருகிறது. மதிப்பை விளங்க வில்லையென்றால் அதன் மீது ஒரு பற்றும் ஏற்பட
வாய்ப்பில்லை.அதனால் முதலில் நாம் ரமலான் மாதத்தின் மதிப்பை விளங்க வேண்டும்.
என் உம்மத்துகள்
ரமலானில் உள்ள மகிமையை உண்மையாக விளங்கி விட்டால் வருடம் முழுக்க ரமலானாக இருக்க வேண்டும்
என்று ஆசைப் படுவார்கள் என்பது நபி ஸல் அவர்கள் சொன்ன வார்த்தை.
என் வாழ்க்கையில் எனக்கு பயனளிக்கும் ஒரு
அமலைக் கற்றுத் தாருங்கள் என்று அபூஉமாமா ரலி அவர்கள் நபி ஸல் அவர்களிடம் கேட்ட
போது நீங்கள் நோன்பை அவசியமாக்கிக் கொள்ளுங்கள். அந்த நோன்பைப் போன்று வேறு அமல்
இல்லை என்று நபிகள் நாயகம் ரசூலுல்லாஹி ஸல் அவர்கள் கூறினார்கள்.
மனிதன் செய்யக்கூடிய
எல்லா அமல்களுக்கும் பத்து முதல் 700 மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது.ஆனால்
நோன்பைத் தவிர, காரணம் நோன்பு வைப்பவர்களுக்கு எத்தனை கூலி கிடைக்கும் எவ்வளவு
கூலி கிடைக்கும் என்று நம்மைப் படைத்த அல்லாஹ்வைத்தவிர வேறு யாருக்கும்
தெரியாது.ஏனென்றால் நோன்பைப் பற்றி அல்லாஹ் சொல்லும் போது
وانا اجزي به மற்ற அமல்களுக்கெல்லாம் மலக்குகளின் மூலம் கூலியை எழுதுகிறேன், கொடுக்கிறான்.ஆனால்
நோன்புக்கு நானே கூலி கொடுக்கிறேன் என்று கூறுகிறான்.
அதுமட்டுமல்ல நோன்பு வைப்பதால் நமக்கு
கிடைக்கும் மிக மிக உயர்ந்த பாக்கியம் மிக மிக உயர்ந்த அந்தஸ்து என்னவென்றால் அந்த
நோன்பை கடமையாக்கிய அந்த அல்லாஹ்வை பார்க்கும் பாக்கியத்தை நாம் பெற முடியும்.
இறைவனை சந்திப்பது இறைவனை
பார்ப்பது என்பது சாதாரன விஷயமல்ல. உலகத்திலேயே ஈடு இணையற்ற இன்பம் அது தான்.அதற்கு
நிகராக வேறெந்த இன்பமும் உலகிலும் இல்லை,மறுமையிலும் இல்லை.
சொர்க்கத்தின்
இன்பங்களைப் பற்றி நமக்கெல்லாம் தெரியும். உலகத்தில் எந்தக் கண்ணும் பார்த்திடாத
எந்தக் காதும் கேட்டிடாத எந்த மனிதரும் சிந்தித்திடாத மிக உயர்ந்த இன்பங்கள் சொர்க்கத்தில்
இருக்கிறது என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
ஆனால் சொர்க்கவாசிகள் மட்டும்
அல்லாஹ்வைப் பார்த்து விட்டால் அந்த சொர்க்கத்திலுள்ள மற்ற அனைத்து இன்பங்களை யும்
மறந்து விடுவார்கள்.அந்தளவு அது மிகப்பெரிய பேரின்பமாக இருக்கும்.அல்லாஹ் அந்த
பாக்கியத்தை நம் அனைவருக்கும் தருவானாக.
மார்கத்தில் ஷஹாதத்
என்பது வீர மரணம் என்பது மிக உயர்ந்த அந்தஸ்து. அதற்கு கிடைக்கும் பாக்கியங்களும்
நன்மைகளும் அதிகம். ஆனால் ஒரு நோன்பாளி அதை விட சிறந்த நன்மைகளை பெற்று விடுவார்.
இரண்டு நபர்கள் ஒன்றாக
ஒரே நேரத்தில் இஸ்லாத்தை ஏற்றார்கள்.அதில் ஒருவர் ஷஹீதானார்.மற்றொருவர் ஒரு வருடம்
கழித்து இயற்கையாக மரணமானார். அவர்களைக் கனவில் கண்ட தல்ஹா ரலி அவர்கள்,அதில்
இயற்கையாக மரணமானவர் முதலில் சொர்க்கத்திற்கு போவதாக கண்டார்கள். நபியிடம் அதற்கான
விளக்கம் கேட்ட போது இவர் அவரை விட ஒரு ரமலானை அதிகமாக பெற்று அமல்
செய்திருக்கிறார்.எனவே அந்த இரண்டு பேருக்கும் மத்தியிலுள்ள வித்தியாசம் வானம்
பூமிக்கிடையில் உள்ள வித்தியாசம் என்றார்கள்.
இப்படி எண்ணற்ற
பாக்கியங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். வல்ல ரஹ்மான் அந்த அனைத்து
பாக்கியங்களையும் நமக்கும் நம் குடும்பத்திற்கு தருவானாக ஆமீன்.
No comments:
Post a Comment