Monday, July 27, 2020

நம் ஆசைகள் எப்படி இருக்க வேண்டும்



உலகிலுள்ள எல்லா மனிதர்களுக்கும் ஆசைகளும் எதிர் பார்ப்புக்களும் உண்டு. ஆனால்  அவைகள் மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது. ஒரு நோயாளி ஆரோக்கியத்தை ஆசைப்படுவான். ஒரு ஏழை செல்வத்தை ஆசைப்படுவான்.ஒரு செல்வந்தன் செல்வாக்கை ஆசைப்படுவான். மக்களிடம் செல்வாக்கைப் பெற்ற ஒருவன் பதவிக்கும் அதிகாரத்திற்கும் ஆசைப்படுவான். இப்படி மனித உள்ளங்களில் இருக்கிற ஆசைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் பல வடிவங்கள் இருக்கிறது. பல தோற்றங்கள் இருக்கிறது.


குழந்தை,வாலிபம்,வயோதிகம் என வாழ்வின் எந்தப் பருவமும் ஆசைகளுக்கு விதிவிலக்கல்ல. குழந்தைகள் அவர்களது வயதுக்கேற்ப ஆசைப்படுகிறார்கள். வயோதிகர்களும் அவர்களின் சூழ்நிலைக்கேற்ப சில ஆசைகளை மனதில் வைத்திருக்கிறார்கள். வாலிபர்களின் உள்ளங்களில் குடியிருக்கும் ஆசைகளை சொல்ல வேண்டிய அவசியமில்லை.வானில் மிதக்க வேண்டும், வின்னுலகைத் தாண்டி பயணிக்க வேண்டும் என்று கூட ஆசைப்படுவான்.இளைஞர்களின் ஆசைகள் எல்லையற்றது.

சிலருடைய உள்ளத்தில் இருக்கும் ஆசைகளைப் பார்த்தால் ரொம்ப வினோதமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும். இங்கிலாந்து நாட்டில் ஒரு முதியோர் காப்பகம் ஒன்று உண்டு. சமீபத்தில் அங்கிருக்கும் அனைத்து முதியவர்களின் நிறைவேறா ஆசைகளையும் கனவுகளையும் நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று அந்த நிர்வாகம் ஆசைப்பட்டது.அந்த அடிப்படையில் ஒவ்வொருவரிடமும் உங்கள் ஆசை என்ன என்று கேட்டது.அதில் ஒரு 104 வயது மூதாட்டி தனக்கான ஆசையை குறிப்பிட்ட போது நிர்வாகம் அசந்து போனது. வியந்து போனது.அந்த மூதாட்டி நான் வாழ்நாளில் ஒரு முறையாவது ஜெயிலுக்கு செல்ல வேண்டும்.அந்த அனுபவம் எனக்கு கிடைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறாள். கடைசியில் காவலர்களை அழைத்து அந்த மூதாட்டியை கைது செய்து ஜீப்பில் ஏற்றி ஜெயிலுக்கு கொண்டு போய் ஒரு நாள் வைத்து விட்டு அழைத்து வந்திருக்கிறார்கள்.

நான் இங்கே சொல்ல வரும் செய்தி, மனிதர்களின் ஆசைகளுக்கு எல்லை இல்லை. அளவுகோல் இல்லை அதற்கு வயதும் இல்லை. மவ்த் வரைக்கும் ஆசைகள் இருக்கும்,இன்னும் சொல்ல வேண்டுமென்றால் மவ்துக்குப் பிறகு கூட ஆசைகள் இருக்கும்.

لمَّا قُتِلَ عبدُ اللَّهِ بنُ عمرو بنِ حرامٍ يومَ أُحُدٍ ، لقيَني رَسولُ اللَّهِ ، فقالَ : يا جابرُ ! ألا أخبرُكَ ما قالَ اللَّهُ لأبيكَ ؟ وقالَ يَحيى في حديثِهِ فقالَ : يا جابرُ ! ما لي أراكَ مُنكَسرًا ؟ قالَ : قلتُ : يا رسولَ اللَّهِ ! استُشْهِدَ أبي وترَكَ عيالًا ودَينًا . قالَ : أفلا أبشِّرُكَ بما لقيَ اللَّهُ بِهِ أباكَ ؟ قالَ : بلَى : يا رسولَ اللَّهِ ! قالَ : ما كلَّمَ اللَّهُ أحدًا قطُّ إلَّا من وراءِ حجابٍ ، وَكَلَّمَ أباكَ كِفاحًا ، فقالَ : يا عَبدي ! تَمنَّ عليَّ أُعْطِكَ ، قالَ : يا ربِّ ! تُحييني فأُقتَلُ فيكَ ثانيةً . فقالَ الرَّبُّ سبحانَهُ : إنَّهُ سبقَ منِّي أنَّهم إليها لا يُرجعونَ . قالَ : يا ربِّ ! فأبلِغْ مَن ورائي ، قالَ : فأنزلَ اللَّهُ تعالى : وَلاَ تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ
الراوي: جابر بن عبدالله المحدث: الألباني - المصدر: صحيح ابن ماجه - الصفحة أو الرقم: 158

ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரலி அவர்களைப் பார்த்து ஒரு நாள் நபி அவர்கள் ஏன் இப்படி மனமுடைந்து கவலையில் இருக்கிறீர் என்று கேட்டார்கள்.அதற்கவர்கள், என் தந்தை போர்க்களத்தில் ஷஹீதாகி விட்டார்கள்.குடும்பத்தைக் கவனிக்க வேண்டும். அவர்கள் விட்டுச் சென்ற கடனையும் நான் தான் அடைக்க வேண்டும். எனவே தான் பெரும் கவலையில் இருக்கிறேன் என்று ஜாபிர் ரலி அவர்கள் கூறினார்கள்.அப்போது நபி அவர்கள் உன் தந்தையிடம் அல்லாஹ் என்ன சொன்னான் என்று உனக்கு சொல்லட்டுமா ? என்று கேட்டார்கள். ஆம் என்று அவர்கள் சொன்ன போது என் அடியானே ! உன் ஆசை என்னவென்று சொல்.உன் ஆசையை நான் நிறைவேற்று கிறேன் என்று அல்லாஹ் கேட்டான். அதற்கு உன் தந்தை நான் இன்னொரு முறை உயிர் பெற்று மறுபடியும் ஷஹீதாக வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ், என் அளவில் வந்தவர்கள் திரும்பிச் செல்ல மாட்டார்கள் என்று கூறினான். அப்போது உன் தந்தை, அப்படியென்றால், இந்த செய்தியை உலகத்தில் உள்ளவர்களுக்கு தெரிவித்து விடு என்றார். அப்போது தான் அல்லாஹ்வுடைய பாதையில் ஷஹீதாக்கப் பட்டவர்களை மரணித்தவர்கள் என்று நீங்கள் எண்ணி விட வேண்டாம். அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள். அவர்களது இறைவனிடத்தில் உணவளிக்கப்படுகிறார்கள் என்ற வசனம் அருளப்பட்டது. (இப்னு மாஜா ; 158)   
  
மரணித்து இவ்வுலகை விட்டு பிரிந்து சென்ற பிறகும் ஒரு மனிதனின் ஆசைக்கு முற்றுப்புள்ளி ஏற்படுவதில்லை என்பதை இந்த வரலாறு சுட்டிக்காட்டுகிறது.

மனிதனுக்கு வயதானாலும் அவனிடம் இருக்கும் இரு ஆசைகளுக்கு மட்டும் வயதாகுவதில்லை என்று நபி ஸல் அவர்கள் சொன்னார்கள்.

يَهْرَمُ ابنُ آدَمَ وتَشِبُّ منه اثْنَتانِ: الحِرْصُ علَى المالِ، والْحِرْصُ علَى العُمُرِ.
ஆதமுடைய மகன் வயோதிகத்தை அடைந்து விடுகிறான்.ஆனால் அவனிடம் இரண்டு விஷயங்கள் மட்டும் இளமையாகவே இருக்கிறது. ஒன்று பொருளாசை, இன்னொன்று ஆயுளின் மீது ஆசை. (முஸ்லிம் ; 1047)

பொருளைப் பெருக்க வேண்டும் என்ற ஆசை.நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இல்லாமல் இருக்கிறது. எல்லாருக்கும் அந்த ஆசை உண்டு.சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோரும் பொருளை பெருக்குவதற்கு என்ன வழி என்பதைத்தான் ஒவ்வொரு நாளும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.என்றும் இளமையாக இருப்பதற்கு என்ன வழி என்பதைத்தான் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் இந்த இரு ஆசைகளுக்கு வயதாகுவதில்லை என்று கூறினார்கள்.

ஆசைகள் எல்லோருடைய உள்ளங்களையும் ஆட்கொண்டிருக்கிறது. அதற்கு வரையரையும் இல்லை, வயதும் இல்லை என்று புரிந்து கொண்ட அதே நேரத்தில், ஆசைப்படுவது குறித்து இஸ்லாத்தின் பார்வை என்ன? நம் ஆசைகள் எப்படி இருக்க வேண்டும்,எதை ஆசைப்பட வேண்டும் ? நம் ஆசைகளுக்கு இஸ்லாம் விதித்திருக்கிற வரையரை என்ன ? என்பதை நாம் உற்றுநோக்க வேண்டும்.

إذَا تَمَنَّى أَحَدُكُمْ، فَلْيَسْتَكْثِرْ، فَإِنَّمَا يَسْأَلُ رَبَّهُ
உங்களில் ஒருவர் ஆசைப்படுவதாக இருந்தாலும் அதிகம் ஆசைப்படட்டும். ஏனென்றால் அவர் தன் இறைவனிடம் கேட்கிறார். (இறைவன் நினைத்தால் எதையும் தருவான். இறைவனுக்கு எதுவும் தூரமானதல்ல) (ஸஹீஹுல் ஜாமிவு ;591)

தன்னிடம் உயரும் கரங்களை வெறும் கரங்களாக திருப்பி அனுப்புவதற்கு வெட்கப்படுபவன் அல்லாஹ்.எதைக் கேட்டாலும் கொடுப்பதற்கு தகுதியானவன் அல்லாஹ்.எதைக் கொடுத்தாலும் எத்தனை பேருக்கு கொடுத்தாலும் சற்றும் குறையாத விசாலமான கஜானாவை உடையவன் அல்லாஹ்.அதனால் அவனிடம் கேட்கும் போது விசாலமாக கேளுங்கள் என்று சொன்னார்கள்.நாம் அல்லாஹ்விடம் சொர்க்கத்தைக் கேட்போம்.ஆசைப்படுவோம். ஆனால் அந்த சொர்க்கத்தில் கூட உயர்வானதைக்கேட்க வேண்டும்.

إذا سألتُم اللهَ فاسألوه الفِردوسَ؛ فإنَّه وسطُ الجَنَّةِ وأعْلَى الجَنَّةِ، وفَوقَه عَرشُ الرَّحمنِ، ومِنه تَفجَّرُ أنهارُ الجَنَّةِ
நீங்கள் இறைவனிடத்தில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸைக் கேளுங்கள். அது சுவனத்தின் மத்தியப் பகுதியாகும். சுவனத்தில் உயர்ந்ததாகும். அதற்கு மேல் தான் அல்லாஹ்வின் அர்ஷ் இருக்கிறது. அங்கிருந்து தான் சுவனத்தின் நதிகள் பெருக்கெடுத்து ஓடுகிறது. (இப்னு ஹிப்பான் ; 4611 )

இஸ்லாம் ஆசைகளை ஊக்குவிக்கிறது.அந்த ஆசைகள் உயர்வானதாக இருக்க வேண்டும் என்று வழிகாட்டுகிறது.முதலில் எதையுமே ஆசைப்பட வேண்டும். ஆடையில்லா மனிதன் அரை மனிதன் என்று சொல்வதைப் போல ஆசையில்லா மனிதனும் அரை மனிதன் என்று சொல்ல முடியும். ஆசை இருந்தால் தான் எதையும் அடைந்து கொள்ள முடியும்.

قال عمر بن عبد العزيز الخليفة الراشد رضي الله عنه : إن لي نفساً تواقة لقد رأيتني وأنا بالمدينة غلام مع الغلمان ثم تاقت نفسي إلى العلم إلى العربية والشعر فأصبت منه حاجتي وما كنت أريد ثم تاقت إلى السلطان فاستعملت على المدينة ثم تاقت نفسي وأنا في السلطان إلى اللبس والعيش الطيب فما علمت أن أحداً من أهل بيتي ولا غيرهم كانوا في مثل ما كنت فيه ثم تاقت نفسي إلى الآخرة والعمل بالعدل فأنا أرجو أن أنال ما تاقت نفسي إليه من أمر آخرتي فلست بالذي أهلك آخرتي بدنياي سيرة عمر بن عبد العزيز
உமர் பின் அப்துல் அஜீஸ் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ; எனக்கு அதிகம் ஆசைப்படுகிற உள்ளம் உண்டு. ஆரம்பத்தில் சிறுவர்களில் ஒரு சிறுவனாக இருந்தேன். கல்வியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதை அடைந்து கொண்டேன். பின்பு அதிகாரத்தை ஆசைப்பட்டேன். அதைப் பெற்றுக் கொண்டேன். பின்பு உயர் தரமான ஆடைகள் அணிந்து அழகிய வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டேன். வேறு யாருக்கும் கிடைக்காத அழகான வாழ்க்கை எனக்கு கிடைத்தது. பின்பு என் உள்ளம் மறுமையை ஆசைப்பட்டது. இப்போது என் விருப்பமெல்லாம் மறுமை விஷயத்தில் என் உள்ளம் ஆசைப்படுவதை நான் அடைந்து கொள்ள வேண்டும் என்பது தான். (ஸீரத்து உமர் பின் அப்துல் அஜீஸ்)

ஆசைகள் இருக்க வேண்டும்.ஒரு விஷயத்தைப் பற்றிய ஆசை தான் அந்த விஷயத்தை அடைந்து கொள்வதற்கு நம்மைத் தூண்டுகின்றது. அதற்கான பாதைகளை நமக்கு அமைத்துத் தருகிறது. ஆனால் அந்த ஆசைகள் எப்படி இருக்க வேண்டும் என்பது தான் இங்கே யோசிக்க வேண்டிய செய்தி. நம் ஆசைகள் எப்படி இருக்க வேண்டுமென்றால் நன்மைக்குறியதாக இருக்க வேண்டும். மறுமையைச் சார்ந்ததாக இருக்க வேண்டும்.

عن عمر بن الخطاب ، أنه قال لأصحابه : تمنوا ، فقال رجل : أتمنى لو أن لي هذه الدار مملوءة ذهبا أنفقه في سبيل الله . ثم قال : تمنوا ، فقال رجل : أتمنى لو أنها مملوءة لؤلؤا وزبرجدا وجوهرا أنفقه في سبيل الله وأتصدق . ثم قال : تمنوا ، فقالوا : ما ندري يا أمير المؤمنين ، فقال عمر : أتمنى لو أن هذه الدار مملوءة رجالا مثل أبي عبيدة بن الجراح .  حلية الاولياء
ஒரு நாள் உமர் ரலி அவர்கள் தன் தோழர்களிடத்தில் உங்களது ஆசைகளைக் கூறுங்கள் என்றார்கள். ஒரு தோழர், இந்த வீடு முழுக்க தங்க கட்டிகள் இருக்க வேண்டும். அதை நான் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்ய வேண்டும் என்றார். பின்பு இன்னொரு தோழர், இந்த வீடு முழுக்க முத்து மரகதம் மாணிக்கம் இருக்க வேண்டும். அதை நான் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்ய வேண்டும் என்று கூறினார். அப்போது உமர் ரலி அவர்கள், அபூஉபைதாவைப் போன்ற மனிதர்கள் இந்த வீடு முழுக்க நிரம்பி இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் என்றார்கள். (ஹுல்யத்துல் அவ்லியா)

இது தான் உண்மையான ஆசை. ஒரு முஸ்லிமுக்கு இருக்க வேண்டிய ஆசை.நன்மைகளை செய்வதற்கு ஆசைப்பட வேண்டும். இறைவனிடத்தில் உயர் அந்தஸ்தைப் பெறுவதற்கு ஆசைப்பட வேண்டும். இறைவனின் பொறுத்தத்தைப் பெறுவதற்கு ஆசைப்பட வேண்டும்.

أن عبد الله بن مسعود كان يحدث ، قال : قمت من جوف الليل ، وأنا مع رسول الله صلى الله عليه وسلم في غزوة تبوك ، قال : فرأيت شعلة من نار في ناحية العسكر ، قال : فاتبعتها أنظر إليها ، فإذا رسول الله صلى الله عليه وسلم وأبو بكر وعمر ، وإذا عبد الله ذو البجادين المزني قد مات ، وإذا هم قد حفروا له ، ورسول الله صلى الله عليه وسلم في حفرته ، وأبو بكر وعمر يدليانه إليه ، وهو يقول : أدنيا إلي أخاكما ، فدلياه إليه ، فلما هيأه لشقه قال : اللهم إني أمسيت راضيا عنه ، فارض عنه . قال : يقول وعبد الله بن مسعود : يا ليتني كنت صاحب الحفرة  سيرة ابن هشام
அப்துல்லாஹ் பின் மஸ்வூத் ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; தபூக் போர்க்களத்தின் போது ஒரு இடத்தில் இரவு தங்கினோம். அப்போது இடையில் நான் விழித்துப் பார்த்தேன். தூரத்தில் ஒரு வெளிச்சம் தெரிந்தது. அங்கு சென்று பார்த்தேன். அப்துல்லாஹ் துல் பிஜாதைன் ரலி அவர்கள் மரணித்து விட்டார்கள். அவர்களை அடக்கம் செய்யும் பணியில் நபி அவர்களும் உமர் ரலி அபூபக்கர் ரலி அவர்களும் ஈடுபட்டிருந்தார்கள். நபி அவர்கள் குழிக்குள் இருந்தார்கள். உமர் ரலி அவர்களும் அபூபக்கர் ரலி அவர்களும் ஜனாஸாவை மேலிருந்து குழிக்குள் இறக்கினார்கள். குழிக்குள் வைத்து நபி அவர்கள், இவரை நான் பொருந்திக் கொண்டவனாக இருந்தேன். இறைவா நீயும் இவரைப் பொருந்திக் கொள் என்றார்கள். அந்நிகழ்வைக் கண்ட போது அங்கே மரணித்தவராக நான் இருந்திருக்க வேண்டுமே என்று ஆசைப்பட்டேன் என்று அப்துல்லாஹ் பின் மஸ்வூத் ரலி அவர்கள் கூறுகிறார்கள். (ஸீரத்து இப்னு ஹிஷாம்)

ஸஹாபாக்களின் ஒவ்வொரு ஆசையும் விசித்திரமானது. வினோதமானது. நம் சிந்தனைக்கு அப்பாற்பட்டது.இப்படியும் ஆசைப்பட முடியுமா என்று யோசிக்கத் தோன்றும். நபிக்காக தன் உயிரைக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். போர்க்களத்தில் கலந்து கொண்டு உயிரை விட வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.அந்த போர்க்களத்தில் கூட என் கைகள் தனியாக என் கால்கள் தனியாக என் கண்கள் தனியாக என் காதுகள் தனியாக அறுக்கப்பட வேண்டும். அவைகளெல்லாம் மறுமையில் எனக்கு சாட்சி சொல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.எல்லாவற்றுக்கும் மேலாக நபியோடு சுவனத்தில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.இப்படி அருமை ஸஹாபாக்கள் கொண்ட உயர்தரமான ஆசைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.இந்தமாதிரியான உயர்வான எண்ணங்களையும் ஆசைகளையும் நம் உள்ளங்களில் வளர்த்துக் கொள்ள வேண்டும். இஸ்லாமிய வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும். இஸ்லாமிய வளர்ச்சிக்காக என் பொருளாதாரம் செலழிக்கப்பட வேண்டும்.இஸ்லாமிய வளர்ச்சிக்காக என் முயற்சிகள் இருக்க வேண்டும்.என் வாழ்வில் ஒரு நபரையாவது இஸ்லாத்திற்கு கொண்டு வர வேண்டும்.இஸ்லாத்திற்காகவே என் உயிர் போக வேண்டும்.எனக்காக உயிரை விட்ட என் அடியானே! என்று இறைவன் என்னை அன்பொழுக அழைக்க வேண்டும்.மாநபி நபி அவர்களை கனவில் பார்க்க வேண்டும்.அவர்களோடு சுவனத்தில் இருக்க வேண்டும்.இப்படி உயர்வான ஆசைகளை நம் உள்ளத்தில் நிரப்ப வேண்டும்.வல்லோன் அல்லாஹ் அத்தகைய ஆசைகளை நமக்குத் தருவானாக. 


10 comments:

  1. மாஷா அல்லாஹ் அருமை 👌👌👍💐 புதுமையான ஆய்வு பாரகல்லாஹ்...

    ReplyDelete
  2. சுப்ஹானல்லாஹ் அதி அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் வாஹிதியாரே வாழ்த்துக்கள்
    فتبارك الله

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ் அருமை

    பாரகல்லாஹு லக

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ் பாரகல்லாஹ்

    இது போன்ற தரமான பதிவுகளை தருபவர்களை எந்நாளும் வாழ்த்திக் கொண்டே இருக்க வேண்டும் என என் மனம் ஆசைப்படுகிறது...

    بارك الله فيكم

    ReplyDelete
  5. உங்கள் ஆதரவுகளுக்கு மிக்க நன்றி. அல்ஹம்து லில்லாஹ்

    ReplyDelete
  6. மாஷாஅல்லாஹ் அருமையான பதிவு தங்கள் இல்மில் அல்லாஹ் பரக்கத் செய்வானாக ஆமீன்.

    ReplyDelete
  7. மாஷாஅல்லாஹ் அருமையான பதிவு தங்கள் இல்மில் அல்லாஹ் பரக்கத் செய்வானாக ஆமீன்.

    ReplyDelete