Thursday, August 20, 2020

ஹிஜ்ரி தொடக்கம்

 

                          

அல்லாஹ்வின் கிருபையால் ஹிஜ்ரி 1444 ஐ நிறைவு செய்து விட்டு 1445 ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக் கிறோம்.இஸ்லாமிய மாதங்களில் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தை அடைந் திருக்கிறோம்.இந்த முஹர்ரம் மாதம் அல்லாஹ்வினால் தேர்வு செய்யப்பட்ட மகத்தான மாதம்.பல்வேறு சிறப்புக் களையும் உயர்வுகளையும் தன்னகத்தே கொண்டிருக்கிற மாதம்.

منها اربعة حرم

12 மாதங்களில் நான்கு புனிதமான மாதங்கள் இருக்கிறது. (அல்குர்ஆன் : 9 ; 36)

வருடத்தின் 12 மாதங்களில் கண்ணியமான மாதங்கள் என்று அல்லாஹ்வாலும் அண்ணலம் பெருமானார் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட மாதங்களில் ஒன்று இந்த முஹர்ரம்.

فلا تظلموا فيهن انفسكم

அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே அநீதம் இழைத்துக் கொள்ளாதீர்கள். (அல்குர்ஆன் : 9 ; 36)

அந்த நான்கு மாதங்களில் உங்களுக்கு நீங்களே அநீதம் இழைத்துக் கொள்ள வேண்டாம்.அதில் பாவங்களில் ஈடுபட வேண்டாம்,போர் புரிய வேண்டாம் என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறி அதன் மகத்துவத்தை உணர்த்திய மாதங்களில் ஒன்று இந்த முஹர்ரம்.

உலகத்தில் ஒரு சில விஷயங்களை அல்லாஹ் தன் பெயரோடு இணைத்திருக்கிறான்.உலகத்தில் எல்லாம் அல்லாஹ்வின் படைப்பு. என்றாலும், ஒரு சில விஷயங்கள் மட்டுமே அல்லாஹ்வின் பெயரோடு இணைத்துப் பேசப்படுகிறது. அவ்வாறு எதையெல்லாம் அல்லாஹ்வோடு இணைத்துக் கூறப்படுகிறதோ அவைகள் மற்றவைகளை விட மிக உயர்ந்ததாக தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும்.புனிதம் நிறைந்த கஃபாவை அல்லாஹ், பைத்துல்லாஹ் – அல்லாஹ்வின் வீடு என்று கூறுகிறான்.எனவே உலகத்திலுள்ள எல்லா வீடுகளை விட கஃபதுல்லாஹ் ஆகச் சிறந்தது. நபி அவர்களை ரசூலுல்லாஹ் – அல்லாஹ்வின் தூதர் என்று கூறுகிறான்.எனவே உலகத்தில் இருக்கிற அத்தனை மனிதர்களை விட அத்தனை நபிமார்களை விட ஏன் அத்தனை ரசூல்மார்களை விட அவர்கள் ஆக உயர்ந்தவர்கள். உலகத்திருமறையான அல்குர்ஆன் ஷரீஃபை கலாமுல்லாஹ் – அல்லாஹ்வின் பேச்சு என்று கூறுகிறான்.எனவே உலகத்தில் பேசப்படுகின்ற அத்தனை பேச்சுக்களை விட குர்ஆனின் பேச்சு ஆக உயர்ந்தது.உலகத்தில் பயன்படுத்தப்படுகின்ற வார்த்தைகளில் குர்ஆனின் வார்த்தைகள் மிகவும் மேலானாது. ஸாலிஹ் அலை அவர்களின் ஒட்டகத்தை நாகத்துல்லாஹ் – அல்லாஹ்வின் ஒட்டகம்  என்று கூறுகிறான். எனவே உலகத்தில் அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட எல்லா ஒட்டகங்களை விட இந்த ஒட்டகம் தனித்துவம் பெற்றது. அந்த வகையில் 12 மாதங்களில் அல்லாஹ்வோடு அல்லாஹ்வின் பெயரோடு இணைத்து சொல்லப்படுகிற ஒரு மாதம் இந்த முஹர்ரம் மாதம் மட்டும் தான்.

أفضل الصيام بعد رمضان شهر الله المحرم،

ரமலானுக்குப் பிறகு நோன்பில் சிறந்தது சங்கையான அல்லாஹ்வின் மாதத்தில் வைக்கும் நோன்பாகும். (முஸ்லிம் ; 1163)

سأله رجلٌ فقال أَيُّ شهرٍ تأمرُنِي أن أصومَ بعد شهرِ رمضانَ قال له ما سَمِعْتُ أحدًا يسألُ عن هذا إلا رجلًا سَمِعْتُه يسألُ رسولَ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّم وأنَا قاعدٌ عنده فقال يا رسولَ اللهِ أَيُّ شهرٍ تأمُرُني أن أصومَ بعدَ شهرِ رمضانَ قال إن كنتَ صائمًا بعد شهرِ رمضانَ فصُمْ المُحَرَّمَ فإنه شهرُ اللهِ فيه يومٌ تاب اللهُ فيه على قومٍ ويتوبُ فيه على قومٍ آخَرِينَ

ரமலானுக்குப் பிறகு எந்த மாதத்தில் நோன்பு வைப்பதற்கு எனக்கு உத்தரவிடுவீர்கள் என்று ஒரு நபித்தோழர் கேட்ட போது ரமலானுக்குப் பிறகு நீ நோன்பு வைப்பதாக இருந்தால் முஹர்ரமில் நோன்பு வை. நிச்சயமாக அது அல்லாஹ்வின் மாதமாகும். அதில் ஒரு நாள் உண்டு. அந்த நாளில் தான் ஒரு சமூகத்தின் தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான்.மற்ற சமூகத்தின் தவ்பாவையும் ஏற்றுக் கொள்வான். (திர்மிதி ; 741)

 

நபி அவர்கள் காலம் வரை ஹிஜ்ரி இல்லை. இஸ்லாத்திற்கென்று வருடக்கணக்கு ஒன்றும் இல்லை.அதன் தேவையும் ஏற்பட வில்லை. ஆமுல் ஃபீல் - யானை ஆண்டு என்றும்  ஆமுல் ஹுஸ்ன் - கவலை ஆண்டு என்றும் அந்தந்த ஆண்டுகளில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளை மையப்படுத்தி ஆண்டுகளுக்கு பெயர் வைக்கப்பட்டது. நபி அவர்கள் உலகை விட்டு பிரிந்த பிறகு ஹிஜ்ரி 16 ஹள்ரத் உமர் ரலி அவர்களின் ஆட்சி காலத்தில் தான் பிரச்சனை  எழுகிறது. இஸ்லாமியர்களுக்கென்று ஒரு வருக்கணக்கு வேண்டும் என்ற தேவையும் ஏற்படுகிறது.

 

ஹள்ரத் உமர் ரலி அவர்கள் ஒரு குறிப்பில் ஷஃபான் என்று எழுதியிருந்தார்கள். பின்னால் அதை எடுத்துப் பார்க்கும் போது எந்த ஷஃபான். கடந்த வருட ஷஃபானா அல்லது இப்போது இருக்கிற இந்த வருடத்தின் ஷஃபானா என்று தெரியாமல் குழம்பினார்கள். மேலும் தேதி வருடக்குறிப்பு இல்லாமல் கடிதங்கள் வருகின்றது. அந்த கடிதங்களில் நீங்கள் எங்களுக்கு போடுகின்ற உத்தரவுகளை எப்படி நிறைவேற்றுவது ? என்று தெரிய வில்லை. எதை எப்போது செய்வது? எதை முன்னால் செயல்படுத்துவது எதை பின்னால் செயல்படுத்துவது என்று புரியாமல் குழம்புகிறோம் என்று உமர் ரலி அவர்களுக்கு புகார் வந்தது.குறிப்பாக அபூமூஸல் அஷ்அரி ரலி அவர்கள் 

يأتينا منك كتب ليس فيها تاريخ

 

உங்களிடமிருந்து எங்களுக்கு கடிதங்கள் வருகின்றது. ஆனால் தேதிக் குறிப்பு இல்லை என்று எழுதினார்கள்.அதன் பிறகு தான் இஸ்லாத்திற்கென்று ஒரு தேதிக்குறிப்பு வேண்டும் என்று அதன் அவசியத்தை உணர்ந்த அதன் விபரீதத்தை புரிந்த உமர் ரலி அவர்கள், தோழர்களை அழைத்து எதிலிருந்து இஸ்லாமிய வருடத்தை கணக்கிடுவது என்று ஆலோசனை செய்கிறார்கள்.

 

அதில் நான்கு கருத்து முன் வைக்கப்பட்டது. 1, நபியின் பிறப்பு. இதை உமர் ரலி அவர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை. காரணம் இதில் கிருத்துவர்களின் தழுவல் இருக்கிறது. கிருத்துவர்கள் ஈஸா அலை அவர்களின் பிறப்பை வைத்துத்தான் ஆண்டை கணக்கிடுகிறார்கள்.

 

இஸ்லாத்தைப் பொறுத்த வரை ஒரு முஸ்லிம் வாழ்க்கையானாலும் வணக்கமானாலும் பிற மதங்களுக்கு ஒப்பாக எந்தக் காரியத்தையும் செய்வதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை.அதை அங்கீகரிப்பதில்லை.

من تشبه بقوم فهو منهم

யார் ஒரு கூட்டத்திற்கு ஒப்பாக நடக்கிறாரோ அவர் அந்த கூட்டத்தைச் சார்ந்தவராகும். (அபூதாவூது ; 4031)

أنَّ رسولَ اللهِ صلَّى اللَّهُ عليْهِ وسلَّمَ لمَّا خرجَ إلى خيبرَ مرَّ بشجرةٍ للمُشرِكينَ يقالُ لَها ذاتُ أنواط يعلِّقونَ عليْها أسلحتَهم فقالوا يا رسولَ اللهِ اجعَل لنا ذاتَ أنواطٍ كما لَهم ذاتُ أنواطٍ فقالَ النَّبيُّ صلَّى اللَّهُ عليْهِ وسلَّمَ سبحانَ اللهِ هذا كما قالَ قومُ موسى اجْعَلْ لَنَا إِلَهًا كَمَا لَهُمْ آلِهَةٌ والَّذي نفسي بيدِهِ لترْكبُنَّ سنَّةَ مَن كانَ قبلَكم

 

நபி அவர்கள் ஹுனைன் போருக்காகப் போய்க்கொண்டிருந்த போது ஒரு மரத்தைக் கடந்து சென்றார்கள். காஃபிர்கள் ஒரு இலந்தை மரத்தைப் புனிதமாகக் கருதி வந்தனர். அதற்குத் தாது அன்வாத்என்பது பெயர். போருக்குப் போகும் போது இந்த மரத்தில் வாளைக் மாட்டி வைத்து விட்டு எடுத்துச் செல்வார்கள். (அப்படிச் செய்தால் போரில் வெற்றி கிடைக்குமென்பது அவர்களது நம்பிக்கை) ஸஹாபாக்கள்  நபி அவர்களிடம், “அவர்களுக்கு தாது அன்வாத்என்ற மரம் இருப்பது போல், எங்களுக்கும் ஒரு தாது அன்வாத்என்ற மரத்தை ஏற்படுத்துங்கள்!என்று கேட்டார்கள். இதைக் கேட்டதும் ஆச்சரியப்பட்டவர்களாக, “பனூ இஸ்ராயீலர்கள் மூஸா நபியிடம் மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பது போல் எமக்கும் ஒரு கடவுளை ஏற்படுத்துவீராக! (7:138) கேட்டது போல் நீங்களும் என்னிடம் கேட்கிறீர்களா? என்று கேட்டார்கள். (திர்மிதி 2180)

 

 أنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ قَدِمَ المَدِينَةَ فَوَجَدَ اليَهُودَ صِيَامًا، يَومَ عَاشُورَاءَ، فَقالَ لهمْ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ: ما هذا اليَوْمُ الذي تَصُومُونَهُ؟ فَقالوا: هذا يَوْمٌ عَظِيمٌ، أَنْجَى اللَّهُ فيه مُوسَى وَقَوْمَهُ، وَغَرَّقَ فِرْعَوْنَ وَقَوْمَهُ، فَصَامَهُ مُوسَى شُكْرًا، فَنَحْنُ نَصُومُهُ، فَقالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ: فَنَحْنُ أَحَقُّ وَأَوْلَى بمُوسَى مِنكُم فَصَامَهُ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ، وَأَمَرَ بصِيَامِهِ

 

நபி அவர்கள்  மதீனா வந்த போது யூதர்கள் ஒரு நாள் நோன்பு வைத்திருப் பதைப் பார்த்தார்கள். இது என்ன நாள் என்று கேட்டார்கள். இது ஒரு மகத்தான நாளாகும். அல்லாஹ் மூஸா நபிக்கு வெற்றியைக் கொடுத்து ஃபிர்அவ்னை மூழ்கடித்த தினமாகும். அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதற்காக இந்த நாளில் மூஸா நபி நோன்பு வைத்தார்கள். எனவே நாங்களும் நோன்பு நோற்கிறோம் என்று கூறினார்கள். உங்களை விட மூஸா நபியைக் கொண்டு அதிக உரிமையும் தகுதியும் உடையவர்கள் நாங்கள் தான் என்று கூறி அந்நாளில் நோன்பு வைத்து பிறரையும் நோன்பு வைக்கும்படி உத்தர விட்டார்கள். (முஸ்லிம் ; 1130)

 

 صُومُوا يومَ عاشوراءَ، و خالفُوا فيهَ اليهودَ، صومُوا قبلَه يومًا، و بعدَهُ يومًا

ஆஷுரா அன்று நோன்பு வைய்யுங்கள். யூதர்களுக்கு மாற்றம் செய்யும் விதமாக அதற்கு முந்தைய ஒரு நாளோ அல்லது அதற்கு அடுத்த ஒரு நாளோ சேர்த்து நோன்பு வைய்யுங்கள். (அல்ஜாமிவுஸ் ஸகீர் ; 5050)

 

எந்த விதத்திலும் ஒரு முஸ்லிம் மாற்றார்களோடு ஒப்பாக நடப்பதை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளாது. நபி அவர்கள் அதை அனுமதிக்க வில்லை. எனவே தான் ஹள்ரத் உமர் ரலி அவர்கள் நபியின் பிறப்பை வைத்து ஹிஜ்ரி கணக்கிடுவதை மறுத்து விட்டார்கள்.

 

2 வது முன் வைக்கப்பட்ட விஷயம் நபியின் இறப்பு. நபியின் மரணம்  சமூகத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு. மிகப்பெரிய கைசேதம்.எனவே வருடத்தின் முதல் நாளை சோகத்திற்குரிய ஒரு நாளாக சமூகம் ஆக்கி விடும் என்ற காரணத்தினால் இதையும் உமர் ரலி அவர்கள் மறுத்து விட்டார்கள். 3 வது நபி அவர்களுக்கு நபித்துவம் கிடைத்த அவர்களது 40 வது வயதிலிருந்து வருடத்தை கணக்கிடலாம் என்று கூறப்பட்டது.இது ஓரளவு பொருத்தமாக தெரிந்தாலும் அவர்களின் நபித்துவம் முழுமை பெற்றது.அந்த நபித்துவத்தின் நோக்கம் நிறைவு பெற்றது.அந்த நபித்துவத்திற்கு ஒரு அர்த்தம் கிடைத்து.அதில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது நபி அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்ற பிறகு தான். அதானால் ஹிஜ்ரத்தை வைத்தே ஆண்டை கணக்கிடலாம் என்ற முடிவுக்கு வந்தார்கள்.

 

நபியின் ஹிஜ்ரத் என்பது எல்லாரின் யோகோபித்த முடிவாகவும். ஹளரத் உமர் அவர்களின் விருப்பமாகவும் ஆகிவிட்ட காரணத்தினால் அந்த ஹிஜ்ரத்தை வைத்தே இஸ்லாமிய ஆண்டைக் கணக்கிடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இன்று வரை அது நடைமுறையில் இருந்து வருகிறது.

 

-    இந்த ஹிஜ்ரத் பயணம் முஸ்லிம்களாகிய நாம் ஈமானை ஏற்றிருக்கிற நாம் அண்ணல் நபி அவர்களை முன்னோடியாக, வாழ்வின் வழிகாட்டிய கொண்டிருக்கிற நாம் என்றைக்கும் நம் நினைவில் நிறுத்த வேண்டிய ஒரு நிகழ்வு.

 

-    இஸ்லாமிய வரலாற்றில் இடம்பெற்ற மிக முக்கியமான நிகழ்வு இந்த ஹிஜ்ரத்.


-    இஸ்லாமிய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு நிகழ்வு இந்த ஹிஜ்ரத்.

 

-    இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய நிகழ்வு இந்த ஹிஜ்ரத்

 

-    கஷ்டங்களும் சோதனைகளும் தியாகங்களும் நிறைந்த நிகழ்வு மட்டுமல்ல பல்வேறு சாதனைகளையும் வெற்றிகளையும் பதிவு செய்த நிகழ்வு இந்த ஹிஜ்ரத்.

 

-    நபி அவர்கள் நபித்துவத்தை ஏற்று இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைத்த அந்த நேரத்தில் இஸ்லாமிய வளர்ச்சிற்கு மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது இந்த ஹிஜ்ரத்.

 

-    ஈமானிய ஒளி தோன்றியது மக்காவில்.ஆனால் அது சுடர் விட ஆரம்பித்து பிரகாசமடைய காரணமாக அமைந்தது இந்த ஹிஜ்ரத்.

 

-    وقال ابن دحية: (إن في ذلك تنبيها على أنه يقوم مقامه في مبدأ الهجرة لان مقام آدم التهيئة والنشأة وعمارة الدنيا بأولاده، وكذا كان مقام المصطفى أول سنة من الهجرة مقام تنشئة الاسلام وتربية أهله واتخاذ الانصار لعمارة الارض كلها بهذا الدين الذي أظهره الله على الدين كله



-    மிஃராஜின் போது நபி அவர்கள் ஏழு வானத்தில் எட்டு நபிமார்களை சந்தித்தார்கள். அதில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு முன்னறிவிப்பு உண்டு.அதில் முதல் வானத்தில் ஆதம் நபியை சந்தித்ததில் பல முன்னறிவிப்புக்கள் உண்டு. அதில் ஒன்று ; ஆதம் நபி சுவனத்தை விட்டு வெளியேறிய காரணத்தினால் தான் மக்கள் பல்கிப் பெருகினார்கள்.அதுபோல நீங்கள் மக்காவை விட்டு வெளியேறி மதீனா சென்ற பிறகு தான் இஸ்லாம் பல்கிப் பெருகும் என்ற முன்னறிவிப்பாகும்.

 

-    يايها الناس  என்று அழைத்த அல்லாஹ் يايها الذين امنوا என்று அழைக்க ஆரம்பித்தது இந்த ஹிஜ்ரத்திற்குப் பிறகு தான்.

 

-    மிகச்சொர்பமாக இருந்த முஸ்லிம்கள் பல்கிப்பெருகி மிகப்பெரும் அரசியல் சாம்ராஜ்ஜியத்தை அமைக்கும் அளவு வளர்ச்சி ஏற்படக் காரணமாக இருந்தது இந்த ஹிஜ்ரத்.

 

அமெரிக்க வாஷிங்டன் ஆய்வுக்குழவினர் வெளியிட்ட அறிக்கை ;

இஸ்லாம் இதே வளர்ச்சியோடு பயணித்தால் இஸ்லாமியர்கள் இதே முன்னேற்றத்தோடு சென்றால் 2030 ல் உலக மக்கள் தொகையில் 25 % க்கும் அதிகமாக முஸ்லிம்கள் தான் இருப்பார்கள்.இந்த அசுர வளர்ச்சிற்கு இந்த விஸ்வரூப வளர்ச்சிற்கு வித்திட்டது இந்த ஹிஜ்ரத் தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதனால் தான் இன்று உலகில் நடைமுறையில் உள்ள பல்வேறு வருடப்பிறப்பு நிகழ்வுகளில் ஹிஜ்ரத்தைப்போல அழுத்தமான தாக்கத்தை தரக்கூடியது எதுவுமில்லை என வரலாற்று ஆய்வாளர்கள் வியந்து பேசுகிறார்கள்.

இப்படி பல்வேறு புரட்சிகளை பல்வேறு நல்ல பல விளைவுகளை ஏற்படுத்தித் தந்த அந்த ஹிஜ்ரத் இன்றைக்கு கொச்சைப்படுத்தப்படுகிறது.அல்லாஹ்வின் கட்டளைக்காக நபியின் அழைப்பிற்காக எல்லாவற்றையும் துறந்து ஹிஜ்ரத் செய்த முஹாஜிர்கள் இன்றைக்கு நாட்டை விட்டு ஓடியவர்கள்,உயிருக்கு பயந்து ஒளிந்து கொண்டவர்கள்,நாட்டை விட்டு துறத்தப்பட்டவர்கள் என்றெல்லாம் கொச்சைப்படுத்தப்படுகிறார்கள்.

முதலில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.இது அல்லாஹ்வின் ஏற்பாடு.அருமை ஸஹாபாக்கள் உயிருக்கு பயந்து ஓட வில்லை.அல்லாஹ்வின் கட்டளைக்காக ஓடினார்கள்.வெளிப்படையாக அவர்களை அந்த மக்கள் விரட்டியதைப் போன்று தெரிந்தாலும் அல்லாஹ் அவர்களை அழைத்துச் சென்றான்.

மட்டுமல்ல ஹிஜ்ரத் என்பது திடீரென்றோ அல்லது வேறு வழியில்லாமலோ அல்லது  யதார்த்தமாகவோ நடந்த பயணமல்ல.அல்லாஹ்வினால் திட்டமிடப்பட்டப பல சமயங்களில் பல சந்தர்ப்பங்களில் முன்னறிவிப்பு செய்யப்பட்ட பயணம்.

 

قال وتقة بن نوفل ليتني اكون حيا اذ يخرجك قومك

நபிக்கு வஹி வந்த ஆரம்பத்தில் வரகா என்ற வேதம் படித்த அறிஞர் உங்கள் சமூகம் உங்களை வெளியேற்றும் போது நான் உயிருடன் இருக்க வேண்டுமே என்று கூறினார். (புகாரி ; 3)

 

நபியின் ஹிஜ்ரத் பயணம் குறித்து முந்தைய வேதங்களில் சொல்லப்படும் அளவுக்கு அது அல்லாஹ்வினால் திட்டமிடப்பட்ட பயணம் என்பதை புரிய முடிகிறது.

 

எனவே இஸ்லாத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய இஸ்லாமியர்களின் கரங்களை ஓங்கச்செய்த இஸ்லாமியர்களை உலகம் முழுக்க காலூன்றச் செய்த வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஹிஜ்ரத் பயணத்தின் நிகழ்வுகளை நம் வாழ்வில் என்றைக்கும் அசைபோட்டுப் பார்க்க வேண்டும்.அந்த சரித்திர பயணம் ஏற்படுத்திய தாக்கங்களை நம் மனதில் உள்வாங்கிக் கொண்டு நம் வாழ்வை திருத்தி அமைத்துக் கொள்ள வேண்டும்.வல்ல ரஹ்மான் நமக்கு அருள் புரிவானாக


ஹிஜ்ரத் குறித்த வேறு பதிவுகளைப் பார்வையிட இங்கே தொடவும்

ஹிஜ்ரத் தரும் பாடம்

ஹிஜ்ரத் ஏன்


 

 

 

   


3 comments:

  1. வரகத் என்பதற்கு பதில் வத்தக்கத் என்று செய்யப்பட்டுள்ளது அருமையான கட்டுரை

    ReplyDelete
  2. بارك الله

    ReplyDelete
  3. பாரகல்லாஹு

    ReplyDelete