Monday, March 7, 2022

நபி ஒரு ஆசிரியர்

 


الحمد لله والصلوة والسلام علي رسول الله سيدنا محمد واله وصحبه اجمعين اما بعد قال الله تعالي في القران العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمة للعالمين

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் வல்லோன் அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.சாந்தியும் சமாதானமும் எங்கள் உயிரிலும் மேலான கண்மனி நாயகம் ரசூலுல்லாஹி ஸல் அவர்களின் மீதும் பரிசுத்தமான அவர்களின் குடும்பத்தார் மீது உன்னதமான அவர்களின் தோழர்கள் மீதும் உண்டாகட்டுமாக.


மாணவர்களின் பேச்சுத்திறனை வளர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த மன்றத்தில் நபி ஒரு ஆசிரியர் என்ற தலைப்பில் பேசுவதற்காக நான் வந்திருக்கிறேன்.

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே அல்லாஹ்வின் தூதர் அருமை நாயகம் ஸல் அவர்கள் உலகிற்கு தான் அனுப்பப்பட்ட நோக்கம் குறித்து, தான் உலகிற்கு வருகை புரிந்த காரணம் குறித்து பல சமயங்களில் பல்வேறு விதமாக சொல்லியிருக்கிறார்கள். ஈமானின் பக்கம் இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைப்பதற்காக நபியாக அனுப்பப்பட்டிருக்கிறேன் என்று சொன்னார்கள். உலகத்தில் அல்லாஹ்வின் படைப்பினங்களுக்கு ரஹ்மத்தாக அனுப்பப்பட் டிருக்கிறேன் என்று சொன்னார்கள். நற்குணங்கள் அனைத்தையும் பரிபூரணப்படுத்துவதற்காக அனுப்பப்பட்டிருக்கிறேன் என்று சொன்னார் கள். இப்படி தன் வருகை குறித்த பல காரணங்களை கூறுகின்ற அருமை நாயகம் ஸல் அவர்கள் ஒரு கட்டத்தில் இப்படி சொன்னார்கள் انما بعثت معلما நான் ஒரு ஆசிரியனாக சமூகத்திற்கு அனுப்பப்பட்டிருககிறேன் என்று சொன்னார்கள்.

அண்ணல் நபி (ஸல்) அவர்களை நல்ல குடும்பத்தலைவர் என்றும், ஆன்மீகத் தலைவர் என்றும், ஆட்சித் தலைவர் என்றும், வீரம் நிறைந்தவர் என்றும், படைத்தளபதி என்றும், நல்ல தோழர் என்றும், சமூக நல்லிணக்கம் பேணியவர் என்றும், சட்ட வல்லுநர் என்றும், தத்துவ அறிஞர் என்றும், இப்படி பல்வேறு பரிணாமங்களில் நாம் அவர்களை அறிந்து வைத்திருக்கிறோம்.இப்படி பல பரிநாமங்களில் நபி ஸல் அவர்கள் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும் தன்னை ஒரு ஆசிரியர் என்று அறிமுகப்படுத்தவும் தவற வில்லை.

அல்லாஹ்வும் தன் திருமறையின் பல இடங்களில் இந்தக் கருத்தை மையப்படுத்தி பேசுகிறான்.

هو الذي بعث في الاميين رسولا منهم 

இந்த வசனத்தில் அல்லாஹுத்தஆலா நபி (ஸல்) அவர்களின் 4 பணிகளை குறிப்பிடப்படுகிறான். அந்த நான்கு பணிகளுமே ஆசிரியர் பணியோடு தொடர்புடையதாகத்தான் இருக்கிறது.ஒருவர் குர்ஆனை ஓதிக்காட்டுவதாக இருந்தாலும் உள்ளத்தை பரிசுத்தப்படுத்தவதாக இருந்தாலும் வேதத்தை போதிப்பதாக இருந்தாலும் நுட்பங்களை நுண்ணறிவுகளை பயிற்றுவிப்பதாக இருந்தாலும் ஆசிரியராக இருக்க வேண்டும்.ஒரு ஆசிரியராக இருப்பவர் தான் இந்த நான்கு பணிகளையும் செய்வார்.ஒரு ஆசிரியரால் தான் இந்த நான்கு பணிகளையும் செய்ய முடியும். 

எனவே அல்லாஹ்வும் நபி ஸல் அவர்களின் நபித்துவ பணிகளில் மிக முக்கியமான பணியாக ஆசிரியர் பணி என்று தான் சுட்டிக் காட்டுகிறான். அறிஞர்கள் தான் நபிமார்களின் வாரிசுகள்'  என்ற வார்த்தையும் இதைத்தான் நமக்கு கோடிட்டுக்காட்டுகிறது.

சமூகத்தில் மார்க்கம் சார்ந்த கல்வியாக இருக்கட்டும் உலகம் சார்ந்த கல்வியாக இருக்கட்டும் அதைக் கற்றுத்தருகின்ற ஆசிரியர் பணி என்பது மகத்தான பணிகளில் ஒன்று. சமூகத்தில் எத்தனை பணிகள் இருந்தாலும், எத்தனை பொறுப்புகள் இருந்தாலும் ஆசிரியர் பணியைப் போன்று ஆசிரியருக்கு இருக்கிற பொறுப்பைப் போன்று வேறு எந்த பணியும் கிடையாது. பொறுப்பும் கிடையாது.

وعن سلمان قال : لا يزال الناس بخير ما بقي الأول حتى يتعلم الآخر ، فإذا هلك الأول قبل أن يتعلم الآخر هلك الناس

பிந்தியவர்கள் கற்றுக் கொள்ளும் வரை பிந்தியவர்கள் இருக்கும் காலமெலாம் மக்கள் நலவில் இருந்து கொண்டே இருப்பார்கள். மாறாக பிந்தியவர்கள் கற்றுக் கொள்வதற்கு முன்பு முந்தியவர்கள் அழிந்து விட்டால் மக்கள் அழிந்து போவார்கள் என்று ஸல்மான் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

எனவே மக்களை அழியாமல் காக்க வேண்டுமென்றால் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் உலகில் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.அந்த ஆசிரியர்களிடம் மாணவர்கள் கற்க வேண்டியதை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை இதன் மூலம் நாம் விளங்கிக கொள்ள முடியும். 

وقيل للإسكندر : إنك تعظم معلمك أكثر من تعظيمك لأبيك . فقال : لأن أبي سبب حياتي الفانية ، ومؤدبي سبب الحياة الباقية

ஒரு குடும்பாக இருந்தாலும் ஒரு சமூகமாக இருந்தாலும் ஒரு ஊராக இருந்தாலும் ஒரு நாடாக இருந்தாலும் அதை வழிநடத்திச் செல்ல தகுதியான தலைவர்கள் இருக்க வேண்டும்.தகுதியான தலைவர்களால் தான் ஒரு குடும்பத்தையோ ஒரு சமூகத்தையோ ஒரு ஊரையோ ஒரு நாட்டையோ சிறப்பான முறையில் வழிநடத்திச் செல்ல முடியும். தலைவர்கள் தங்கள் பொறுப்பை சரியான முறையில் செய்ய வில்லையென்றால் ஒரு குடும்பமோ ஒரு ஊரோ ஒரு நாடோ சீர்குலைந்து விடும்.வழிதவறிப் போய் விடும்.

ஆனால் இன்றைய இளைஞர்கள் தான் நாளைய தலைவர்கள். தலைவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டுமானால் இளைஞர்கள் நல்லவர்களாக உருவாக வேண்டும்.இளைஞர்களை நல்லவர்களாக உருவாக்கத் தவறி விட்டோம் என்றால் எதிர் காலத்தில் சிறந்த தலைவர்களை நாம் எதிர் பார்க்க முடியாது.அந்த நல்ல இளைஞர்களை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்குத்தான் இருக்கிறது. 

ஒரு ஆசிரியரால் தான் நல்ல இளைஞர்களையும் உருவாக்க முடியும். பிற்காலத்தில் நல்ல தலைவர்களையும் சமூகத்திற்குத் தர முடியும். 

அரிஸ்டாட்டில் உலகில் தலைசிறந்த கிரேக்க தத்துவஞானிகளில் ஒருவர். பல்துறை வல்லுநர்களில் ஒருவர். அவர் ஒரு தடவை தன் மாணவர்களுடன் ஆற்றின் கரைக்கு வந்தார். மாணவர்களை கரையில் நிற்க வைத்தவர், நான் சென்று ஆற்றில் ஏதாவது சுழல்கள் உள்ளதா என பார்த்து வருகிறேன் என்றார்.ஆனால் அவர் ஆற்றில் இறங்குவதற்கு முன்பு அவரின் ஒரு மாணவர் தண்ணீரில் நீந்தி செல்வதை கண்டார். மறுகரை வரை சென்று திரும்பிய மாணவர், குருவே சுழல்கள் இல்லை நாம் தைரியமாக ஆற்றைக் கடக்கலாம் என்றார். அப்போது அரிஸ்டாட்டில் உன்னை சுழல்கள் எடுத்து சென்றிருந்தால் என்னவாகி இருக்கும் என்றார். அதற்கு அந்த மாணவன், “இந்த அலெக்சாண்டர் போனால் ஆயிரம் அலக்சாண்டரை உருவாக்கு முடியும். ஆனால் உங்களைப் போன்ற ஒரு சிறந்த ஆசிரியரை  இழந்து விட்டால் இந்த சமூகம் பேரிழப்பை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று கூறினார்.

எனவே ஆசிரியர் பணி என்பது மகத்தான உயர்வான பணிகளில் ஒன்று.அதனால் அண்ணலம் பெருமானார் நபிகள் நாயகம் ஸல் அவர்களை ஒரு முஅல்லிமாக ‍ஒரு தலைசிறந்த ஆசிரியராக அல்லாஹ் உலகிற்கு அனுப்பி வைத்தான். நபி ஸல் அவர்களும் ஆசிரியர் என்ற தன் பணி செம்மையாக செய்து தன் காலத்தில் சிறந்த சமூகத்தையும் சிறந்த இளைஞர்களையும் உருவாக்கியதோடு மட்டமின்றி எதிர்காலத்தில் மிகச்சிறந்த தலைமுறையும் விட்டுச் சென்றார்கள்.எனவே நாம் ஆசிரியர்களை மதிப்போம்.அவர்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வோம்,பிற்காலத்தில் நாமும் நல்ல ஆசிரியர்களாக உருவாகுவோம்.


No comments:

Post a Comment