Monday, March 7, 2022

பெற்றோர்

 


الحمد لله والصلوة والسلام علي رسول الله سيدنا محمد واله وصحبه اجمعين اما بعد قال الله تعالي في القران العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمة للعالمين

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் வல்லோன் அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.சாந்தியும் சமாதானமும் எங்கள் உயிரிலும் மேலான கண்மனி நாயகம் ரசூலுல்லாஹி ஸல் அவர்களின் மீதும் பரிசுத்தமான அவர்களின் குடும்பத்தார் மீது உன்னதமான அவர்களின் தோழர்கள் மீதும் உண்டாகட்டுமாக.


மாணவர்களின் பேச்சுத்திறனை வளர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த மன்றத்தில் பெற்றோர்களை மதிப்போம் என்ற தலைப்பில் பேசுவதற்காக நான் வந்திருக்கிறேன்.

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே இஸ்லாம் மனிதனுக்கு தேவையான, அவன் வாழ்வில் உயர்வதற்கு அவசியமான அத்தனை நற்பண்புகளையும் கற்றுத்தந்திருக்கிறது.அதிலே ஒன்று தான் பெற்றோர்களுக்கு உபகாரம் செய்வது.நாம் உலகத்திற்கு வருவதற்கு காரணமாக இருந்தவர்கள் பெற்றோர்கள்.நாம் பிறப்பதற்கும், நம்மை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்குவதற்கும் அவர்கள் கடும் கஷ்டங்கள் கொஞ்சமல்ல.ஏராளமான கஷ்டங்களையும் சிரமங்களையும் சந்திக்கிறார்கள்.

நாம் சாப்பிடுவதற்காக அவர்கள் சாப்பிடாமல் பட்டினி கிடக்கிறார்கள். நாம் தூங்குவதற்காக அவர்கள் தூங்காமல் இருக்கிறார்கள்.நாம் சந்தோஷமாக இருப்பதற்காக அவர்கள் கவலைப்படுகிறார்கள்.நாம் நிம்மதியாக இருப்பதற்காக அவர்கள் எல்லாத்தையும் தியாகம் செய்கிறார்கள்.சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் அவர்கள் அவர்களுக்காக வாழுகிறார்கள் என்று சொல்வதை விட நமக்காக வாழுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

நமக்காக இத்தனை பெரிய தியாகங்களை செய்கிற அந்த பெற்றோர் களிடத்தில் நாம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும், அவர்களுக்கு உபகாரம் செய்ய வேண்டும்,அவர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும்,அவர்களை மதிக்க வேண்டும்,அவர்களை நேசிக்க வேண்டும்,அவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்,மிக முக்கியமாக அவர்களுக்காக துஆ செய்ய வேண்டும்.இது தான் நாம் பெற்றோர்களுக்கு செய்யும் உபகாரம் என்று இஸ்லாம் கூறுகிறது.  

பெற்றோர்களின் அந்தஸ்தையும்,கண்ணியத்தையும் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமையையும் வேறு எந்த மதமும் சொல்லாத அளவுக்கு மிக மிக உயர்வாக இஸ்லாம் சொல்லியிருக்கிறது.

சொர்க்கம் தாயின் பாதங்களுக்கு கீழே உள்ளது.அல்லாஹ்வின் பொறுத்தம் தந்தையின் பொறுத்தத்தில் உள்ளது என்று கண்மனி நாயகம் ரசூலுல்லாஹி ஸல் அவர்கள் கூறினார்கள்.ஒரு மனிதர் என்ன தான் அமல்கள் செய்தாலும் அவர் சொர்க்கம் செல்ல வேண்டுமென்றால் தன் பெற்றோர்களை மதிக்க வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

அவர்களுக்கு உபகாரம் செய்வது,அவர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பது இதுவெல்லாம் இரண்டாவது விஷயம். அவர்களை அன்போடு பார்த்தாலே நன்மை கிடைத்து விடும். எவர் தன் பெற்றோரை அன்போடும் இரக்கத்தோடும் பார்க்கிறாரோ அவருக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு ஹஜ்ஜின் நன்மை கிடைக்கும் என்று நபி ஸல் அவர்கள் சொன்னார்கள்.அப்போது ஒரு ஸஹாபி ஒருவர் ஒரு நாளைக்கு நூறு முறை பார்த்தால் நூறு ஹஜ் செய்த நன்மை கிடைக்குமா என்று கேட்டார்கள்.அதற்கு நபி ஸல் அவர்கள் ஆம், அவருக்கு நூறு ஹஜ் செய்த நன்மை கிடைக்கும் என்று சொன்னார்கள். அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே ஒரு முறை பார்த்தாலே ஒரு ஹஜ்ஜின் நன்மை என்றால் அவர்களுக்கு உபகாரம் செய்தால் அவர்களுக்கு பணிவிடை செய்தால் அவர்களுக்கு கட்டுப்பட்டு நடந்தால் எத்தனை நன்மைகள் கிடைக்கும் என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

பெற்றோர்களுக்கு இஸ்லாம் கொடுத்திருக்கிற கண்ணியம் எந்தளவு இருக்கிறது என்றால் நாம் தொழுகையில் நிற்கும் போது அவர்கள் நம்மை கூப்பிட்டால் அப்போது கூட அவர்களுக்கு பதில் கூற வேண்டும்.

முந்தைய காலத்தில் ஜுரைஜ் என்ற மிகப்பெரிய வணக்கசாலி இருந்தார். ஒரு நாள் அவர் தொழுது கொண்டிருக்கும்போது அவரது தாயார் அவரை அழைத்தார். ஜுரைஜ் அதற்கு பதில் கூறாமல் தொழுது கொண்டிருந்தார். இரண்டாவதாக அழைத்த போதும் பதிலளிக்க வில்லை.

மூன்றாவதாக அழைத்தபோதும் அவர் பதிலளிக்க வில்லை.இதனால் அவருடைய தாய் அவர்மீது கோபப்பட்டு "விபச்சாரியின் முகத்தைப் பார்க்காத வரை நீ மரணிக்க மாட்டார் என்று சொல்லி விட்டார்.அந்த தாய் சொன்னதைப் போலவே அவருக்கு அந்த நிலை ஏற்பட்டது என்று ஹதீஸில் வந்திருக்கிறது. 

இன்றைக்கு நாம் நம் பெற்றோர்களை மதிக்காமல் அவர்களுக்கு கட்டுப்படாமல் அவர்களை உதாசினப்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் பெற்றோர்களுக்கு கட்டுப்படாமல் நடப்பது எவ்வளவு பெரிய குற்றம் என்பதையும் அதன் மூலம் எவ்வளவு பெரிய விபரீதம் ஏற்படும் என்பதையும் அவர்கள் சொல்லும் வார்த்தை உடனே பழித்து விடும் என்பதையும் இந்த நிகழ்வின் மூலம் நாம் விளங்கிக் கொள்கிறோம்.

எனவே பெற்றோர்களின் அந்தஸ்தை புரிந்து அவர்களை மதித்து வாழவும் அதன் மூலம் சுவனத்தை அடையும் அல்லாஹ் அருள் புரிவானாக. 


1 comment:

  1. ما شاء الله
    احسنت يا اخي العزيز
    بارك الله في علمك

    ReplyDelete