Monday, March 7, 2022

பெருமை

 


الحمد لله والصلوة والسلام علي رسول الله سيدنا محمد واله وصحبه اجمعين اما بعد قال الله تعالي في القران العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ابي واستكبر وكان من الكافرين

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் வல்லோன் அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.சாந்தியும் சமாதானமும் எங்கள் உயிரிலும் மேலான கண்மனி நாயகம் ரசூலுல்லாஹி ஸல் அவர்களின் மீதும் பரிசுத்தமான அவர்களின் குடும்பத்தார் மீது உன்னதமான அவர்களின் தோழர்கள் மீதும் உண்டாகட்டுமாக.


மாணவர்களின் பேச்சுத்திறனை வளர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த மன்றத்தில் பெருமை வேண்டாம் என்ற தலைப்பில் பேசுவதற்காக நான் வந்திருக்கிறேன்.

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! பெருமை என்பது இன்றைக்கு மனிதர்களைப் பீடித்திருக்கும் மிகப்பெரிய வியாதி. கொஞ்சம் பணம் வந்து விட்டாலோ, ஒரு பதவி கிடைத்து அல்லது ஒரு பொறுப்பு கிடைத்து விட்டாலோ, ஒரு நல்ல வேலை கிடைத்து விட்டாலோ உடனே நமக்கு பெருமை வந்து விடுகிறது.நான் தான் பெரிய ஆளு, என்னை விட பெரிய ஆளு யாரும் கிடையாது என்று நம்மை நாமே உயர்வாக நினைக்க ஆரம்பித்து விடுவோம். நான் தான் சம்பாதிச்சேன். என் திறமையால தான் சம்பாதிச்சேன்", என் திறமையால தான் படிச்சேன் என்று எதற்கெடுத்தாலும் நான் " "நான் " என்று பேச ஆரம்பித்து விடுவோம். இது ரொம்ப ரொம்ப மோசமான குணம் என்று இஸ்லாம் சொல்கிறது.

என்றைக்குமே நம்மிடம் பெருமை மட்டும் வந்து விடக்கூடாது.பெருமை என்பதை அழிவை ஏற்படுத்தி விடும்.எல்லா விஷயங்களிலும் பணிவு இருக்க வேண்டும். பணிவு தான் மனிதனை உயர்த்தும் என்பதற்கு நபி ஸல் அவர்களின் மிஃராஜ் பயணம் சிறந்த உதாரணம்.நபியின் பணிவிற்கு கிடைத்த பரிசு தான் மிஃராஜ்.அதனால் தான் அல்லாஹ் அந்த வசனத்தில் நபிக்கு எத்தனையோ சிறப்புப பெயர்கள் இருக்கிற போது அதையெல்லாம் சொல்லாமல் “தன் அடியாரை” என்று பதிவு செய்திருக்கிறான்.பெருமை என்பது மனிதனை சீக்கிரம் அழிவில் கொண்டு போய் சேர்த்து விடும் என்பதற்கு இப்லீஸ் தான் உதாரணம்.நான் நெருப்பால் படைக்கப்பட்டவன். ஆதம் நபி மண்ணால் படைக்கப்பட்டவர்.எனவே நான் தான் உயர்ந்தவன். அவருக்கு ஸுஜூது செய்ய முடியாது என்று சொல்லி பெருமையடித்த காரணத்தினால் தான் அவன் அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றான். பெருமை என்றைக்குமே ஆபத்தைத் தான் தரும்.

ஒரு கதை ஒன்று சொல்வார்கள் ;

ஒரு கடலில் சின்ன அலை ஒன்று வந்தது. அதுக்கு பின்னால பெரிய அலை ஒன்றும் வந்தது.அந்த சின்ன அலை பெரிய அலையைப்பார்த்து பயந்து நடுங்கியது.அய்யோ பெரிய அலை வருகிறதே---- வந்தா நம்மை விழுங்கி விடுமே---- அப்டின்னு புலம்பியது.

சின்ன அலை தன்னைப்பாத்து பயந்து நடுங்குவதைப்பாத்தவுடன் பெரிய அலைக்கு கர்வம் வந்தது ஆ---நாம் தான் பெரிய ஆளுன்னு காலரை தூக்கி விட்டது.

 இதைப்பாத்து கடல் சிரித்தது.ஏன் என்னைப்பாத்து சிரிக்கிறாய் என்று பெரிய அலை கேட்டது.அப்ப கடல், பெரிய அலையைப்பாத்து   நீ யார் அப்டின்னு கேட்டது,அதுக்கு நான் தான் அலை பெரிய்ய---அலைன்னு பெரிய அலை சொல்லியது. அதைக் கேட்ட கடல் மீண்டும் சிரித்தது.

எதுக்காக திரும்பத் திரும்ப சிரிக்கிறன்னு பெரிய அலை கேட்டது.

அப்ப கடல்,  நானும் தண்ணீர் தான். நீயும் தண்ணீர் தான். சின்ன அலையும் தண்ணீர் தான்.நாம எல்லாருமே ஒரே இனம் தான். ஆனால்  நீயோ நான் தான் பெரியவன்னு காலர தூக்கி விடுற. ஆனா இன்னும் கொஞ்ச நேரத்தில் என்ன நடக்குன்னு பாரு என்று சொன்னது.

ஆனால் அந்த பெரிய அலை என்னை யார் என்ன செய்ய முடியும்  என்று கேட்டு கர்வத்தோட போய் அந்த சின்ன அலையை இரக்கமில்லாமல் விழுங்கியது.

சின்ன அலையை விழுங்கி வேகமா போய் ஒரு பெரிய பாறையில மோதி அந்த பெரிய அலையும் சுக்கு நூரா--- நொருங்கிப் போனது.  

நான் தான் பெரியவன் என்று  பெருமை கொள்வதால் ஏற்படும் விளைவை இந்த கதை நமக்கு தெளிவாக சுட்டிக் காட்டுகிறது.

உலகத்தில் பெருமையடித்தவர்களெல்லாம் கடைசியில் அழிந்து போனார்கள்.தன்னிடம் இருக்கும் செல்வத்தைக் கொண்டு காரூன் பெருமையடித்தான்.அதனால் அவன் அழிந்து போனான்.தங்களிடம் இருக்கும் உடல் பலத்தைக் கொண்டு ஆத் கூட்டம் பெருமையடித்தது. அதனால் அவர்கள் அழிந்து போனார்கள்.தன்னிடம் இருக்கும் ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு ஃபிர்அவ்ன் பெருமையடித்தான்.அதனால் அவனும் அழிந்து போனான்.

பெருமை என்பது அல்லாஹ்வின் பண்புகளில் ஒன்றாகும். பெருமையடிப்பதற்கு தகுதியானவன் அல்லாஹ் மட்டும் தான்.  அந்த பெருமை மனிதனுக்கு தகுதியானதல்ல. பெருமையடித்துத் திரிபவர்கள் அல்லாஹ்வோடு போட்டி போடுகிறார்கள்.அல்லாஹ்வோடு மோதுகிறார் கள் என்று அர்த்தம்.எனவே தான் பெருமையடிப்பவர்களை அல்லாஹ் வன்மையாக கண்டிக்கிறான். 

மறுமையில் மூன்று நபர்களிடம் அல்லாஹ் பேச மாட்டான்.அவர்களைப் பார்க்க மாட்டான்.அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான்.அவர் களுக்கு கடும் வேதனையும் உண்டு என்று கண்மனி நாயகம் ரசூலுல்லாஹி ஸல் அவர்கள் கூறினார்கள். 1, விபச்சாரம் செய்யும் முதியவர். 2, பொய் சொல்லும் அரசன். 3, பெருமையடிக்கும் ஏழை.

எனவே நாம் பெருமையை விட்டு பணிவை எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் அருள் புரிவானாக 


No comments:

Post a Comment