Monday, March 7, 2022

மனத்தூய்மை

 


الحمد لله والصلوة والسلام علي رسول الله سيدنا محمد واله وصحبه اجمعين اما بعد قال الله تعالي في القران العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் வல்லோன் அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.சாந்தியும் சமாதானமும் எங்கள் உயிரிலும் மேலான கண்மனி நாயகம் ரசூலுல்லாஹி ஸல் அவர்களின் மீதும் பரிசுத்தமான அவர்களின் குடும்பத்தார் மீது உன்னதமான அவர்களின் தோழர்கள் மீதும் உண்டாகட்டுமாக.



மாணவர்களின் பேச்சுத்திறனை வளர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த மன்றத்தில் மனத்தூய்மை என்ற தலைப்பில் பேசுவதற்காக நான் வந்திருக்கிறேன்.

அன்பு நிறைந்த அல்லாஹ்வின் நல்லடியார்களே இன்று நம்மில் ஒவ்வொருவருக்கும் சுவனம் செல்ல வேண்டும் என்ற ஆசையும் தேட்டமும் இருக்கிறது. அந்த ஆசை இல்லாமல் உலகத்தில் யாரையும் பார்க்க முடியாது. நல்ல காரியங்களை செய்யக்கூடிய நல்ல மனிதராக இருந்தாலும் சரி, பாவங்களை செய்யக்கூடிய கெட்ட மனிதராக இருந்தாலும் தான் சுவனம் செல்ல வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். ஆனால்  ஒருவர் சுவனம் செல்ல வேண்டுமென்றால் அவர் ஈமான் கொள்ள வேண்டும்,நல்லமல்கள் செய்ய வேண்டும், அத்தோடு அந்த அமல்களில் மனத்தூய்மையும் இருக்க வேண்டும். அல்லாஹ்வின் ரஹ்மத் என்பது சுவனம் செல்வதற்கு மறைமுகமான காரணமாக இருந்தாலும் வெளிப்படையாக அவரிடம் இருக்க வேண்டியது இந்த மூன்றும் தான்.குறிப்பாக எல்லா காரியங்களிலும் மனத்தூய்மை இருக்க வேண்டும்.

அல்லாஹுத்தஆலா உலகத்திலே ஆரம்பமாக பூமியைப் படைத்தபோது அது இலேசாக ஆடியது, அசைந்தது.அதன் பிறகு உறுதியான மலைகளை அதன் மீது அமைத்த போது பூமி தன் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டு உறுதியானது. அதைப்பார்த்த மலக்குமார்கள்; இந்த மலை என்பது அல்லாஹ்வின் மிகப் பிரமாண்டமான படைப்பு.இந்த மலையைப் போன்று  சிறந்த,உறுதியான எந்த பொருளையும் அல்லாஹ் படைக்கவில்லை என்று கூறினார்கள். அதன் பிறகு அல்லாஹுத்தஆலா இரும்பைப் படைத்தான். அந்த இரும்பு மலையை உடைத்தது.அதைக் கண்ட மலக்குகள்: இந்த இரும்பு தான் சிறந்த படைப்பு.இதை விட சிறந்த,உறுதியான எந்தப் பொருளையும் அல்லாஹ் படைக்கவில்லை என்று கூறினார்கள்.பின்பு அல்லாஹ் நெருப்பைப் படைத்தான். அந்த நெருப்பு இரும்பை உறுக்கியது. அதைக்கண்டவுடன் இந்த நெருப்புதான் சிறந்தது.இதை விட சிறந்த,உறுதியான எந்தப் பொருளையும் அல்லாஹ் படைக்க வில்லை என்றார்கள்.அதன் பிறகு நீரைப் படைத்தான்.அந்த நீர் நெருப்பை அணைத்தது.அதைப்பார்த்த மலக்குகள்; நீர் தான் சிறந்தது.இதை விட சிறந்த ஒன்றை அல்லாஹ் படைக்கவில்லை என்றார்கள்.பிறகு அல்லாஹ் காற்றைப் படைத்தான்.அந்த காற்று நீரை தள்ளியது, புரட்டிப்போட்டது. அதையும் பார்த்தபோது மலக்குகள் குழம்பிப் போனார்கள்.இறைவா உனது படைப்பில் எது சிறந்தது என்று எங்களால் தீர்மானிக்க முடியவில்லை.

மலைதான் உயர்ந்தது என்று நினைத்தோம் ஆனால் இரும்பு அந்த மலையையே உடைத்து விட்டது.இரும்புதான் உயர்ந்தது என்று நினைத்தோம்.ஆனால் நெருப்பு அந்த இரும்பையே உறுக்கிவிட்டது.  நெருப்புதான் உயர்ந்தது என்று தீர்மானித்தோம்.ஆனால் நீர் அந்த நெருப்பையே ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டது.சரி நீர் தான் உயர்ந்தது என்று எண்ணினோம்.ஆனால் காற்று அந்த நீரையே புரட்டிவிட்டது. இறைவா உனது படைப்பின் கோலங்களை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த குழப்பத்திற்கு நீ தான் விடையளிக்க வேண்டும் என்று மலக்குகள் கேட்டார்கள், அப்போது அல்லாஹுத்தஆலா; வலக்கரம் செய்யக்கூடிய தர்மம் இடக்கரத்திற்குக் கூட தெரியாத அளவு மறைவாக, மனத்தூய்மையாக அமல் செய்யக்கூடிய மனிதனுடைய உள்ளத்தை விட சிறந்ததாக,உயர்வாக எதையும் நான் இந்த உலகில் படைக்கவில்லை என்று கூறினான்.

எனவே நமது உயர்வை தீர்மானிப்பதும்,நமது சிறப்பை முடிவு செய்வதும் நம்மிடம் இருக்கும் மனத்தூய்மைதான். எனவே எந்த காரியத்தை செய்தாலும் மனத்தூய்மையுடன் செய்ய வேண்டும்.அல்லாஹ்விற்காக மட்டும் செய்ய வேண்டும்.பெருமைக்காகவோ பிறருக்கு காட்டுவதற் காகவோ ஒரு காரியத்தை செய்தால் அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லை,

மறுமையில் போரில் கலந்து கொண்டு ஷஹீதானவர், ஆலிம், செல்வந்தர் இந்த மூன்று பேரையும் அல்லாஹ் விசாரிப்பான்.முதலாவது அந்த ஷஹீதைப் பார்த்து உலகத்தில் நீ என்ன அமல் செய்தாய் என்று கேட்பான். அதற்கவர் நான் போரில் கலந்து கொண்டு என் உயிரை தியாகம் செய்தேன் என்று கூறுவார்.அப்போது அல்லாஹ், உன்னை எல்லோரும் வீரன் என்று சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் செய்தாய்.உலகத்தில் அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது என்று சொல்லி அவரை நரகில் தள்ளுவான்.2 வது அந்த ஆலிமைப் பார்த்து உலகத்தில் நீ என்ன அமல் செய்தாய் என்று கேட்பான். அதற்கவர் நான் மார்க்கத்தைப் படித்து பிறருக்கு கற்றுக் கொடுத்தேன் என்று சொல்வார்.அப்போது அல்லாஹ், உன்னை எல்லோரும் ஆலிம் என்று சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் செய்தாய். உலகத்தில் அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது என்று சொல்லி அவரை நரகில் தள்ளுவான். 3வது அந்த செல்வந்தனை அழைத்து உலகத்தில் நீ என்ன அமல் செய்தாய் என்று கேட்பான். அதற்கவர் எனக்கு நீ செல்வத்தைக் கொடுத்திருந்தாய். அந்த செல்வத்தை நல்ல வழியில் செலவு செய்தேன் என்று சொல்வார். அப்போது அல்லாஹ், உன்னை எல்லோரும் கொடை வள்ளல் என்று சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் செய்தாய். உலகத்தில் அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது என்று சொல்லி அவரையும் நரகில் தள்ளி விடுவான் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

எனவே எல்லா காரியத்தையும் மனத்தூய்மையோடு செய்வோம். அல்லாஹ் அருள் புரிவானாக


No comments:

Post a Comment