Monday, March 7, 2022

குர்ஆன் ஓதுவது

 


الحمد لله والصلوة والسلام علي رسول الله سيدنا محمد واله وصحبه اجمعين اما بعد قال الله تعالي في القران العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمة للعالمين

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் வல்லோன் அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.சாந்தியும் சமாதானமும் எங்கள் உயிரிலும் மேலான கண்மனி நாயகம் ரசூலுல்லாஹி ஸல் அவர்களின் மீதும் பரிசுத்தமான அவர்களின் குடும்பத்தார் மீது உன்னதமான அவர்களின் தோழர்கள் மீதும் உண்டாகட்டுமாக.

மாணவர்களின் பேச்சுத்திறனை வளர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த மன்றத்தில் திருக்குர்ஆனின் சிறப்புகள் என்ற தலைப்பில் பேசுவதற்காக நான் வந்திருக்கிறேன்.

நம்மைப் படைத்த இறைவன் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு நபிமார்கள் மூலமாக ஒவ்வொரு வேதங்களை இறக்கினான், ஆனால் அந்த கூட்டத்தார்கள் அந்த வேதத்தை சரியாக பயன்படுத்தாமல் அதை மதிக்காமல் விட்டுவிட்டார்கள்.மட்டுமல்ல தங்கள் சொந்த கருத்துக்களை அதில் சேர்த்தார்கள்.தங்களுக்கு பிடிக்காத கருத்துக்களை அதிலிருந்து நீக்கினார்கள்.இப்படியே காலப்போக்கில் அழிந்து விட்டன. இறுதியாக அல்லாஹுத்தஆலா இறுதி நபியான கன்மனி நாயகம் ரஸூல் (ஸல்) அவர்களுக்கு  ஒரு வேதத்தை இறக்கினான் அது தான் இறுதி வேதமான அல்குர்ஆன் ஆகும். 

இந்த குர்ஆன் இறக்கப்பட்டு 1440 வருடங்கள் ஆகி விட்டது.ஆனால் இன்றும் அது பாதுகாக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது.இனி கியாமத் வரை அது பாதுகாக்கப்படும்.காரணம் என்னவென்றால் அதை இறக்கி வைத்த அல்லாஹ்வே அதை பாதுகாக்கும் பொறுப்பையும் எடுத்துக் கொண்டான்.

انا نحن نزلنا الذكر وانا له لحافظون

நிச்சயமாக நாம் தான்  இந்த வேதத்தை இறக்கினோம் ; நிச்சயமாக நாமே அதை பாதுகாக்கவும் செய்கிறோம் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே அதை நான் பாதுகாக்கிறேன் என்று அல்லாஹ் சொன்னாலும் அதை பாதுகாப்பதற்கு நம்மைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறான்.இந்த வகையில் நாம் அல்லாஹ் வுக்கு அதிகம் நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம். குர்ஆனை சரியான முறையில் பாதுகாக்க வேண்டும் என்றால் அதை அதிகமாக ஓத வேண்டும்,அதை அதிகமாக ஓத வேண்டும் என்றால் அதன் சிறப்புக்களை நாம் தெரிய வேண்டும்.

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே குர்ஆன் ஓதுவதற்கு எண்ணற்ற சிறப்புக்கள் இருக்கிறது.

உலகத்தில் நாம் யாரைப் பார்த்தும் பொறாமை படக்கூடாது.பொறாமை படுவதை அல்லாஹ்வும் சரி நபி ஸல் அவர்களும் சரி அதிகமாக கண்டித்திருக்கிறார்கள்.ஆனால் இரண்டு பேரைப் பார்த்து பொறாமை படுவது கூடும் என்று நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.

யாரின் மீதும் பொறாமை கொள்வது கூடாது. ஆனால் இரண்டு பேரின் மீது பொறாமை கொள்வது தவறில்லை.ஒருவருக்கு அல்லாஹ் திருக்குர்ஆனைக் கற்றுக் கொடுத்தான். அதனை அவர் இரவும்-பகலும் ஓதினார். இன்னொருவருக்கு அல்லாஹ் பொருளாதாரத்தை கொடுத்தான். அதன் மூலம் அவர் இரவு-பகலில் நல்ல வழியில் செலவு செய்தார். இந்த இரண்டு பேரின் மீது பொறாமை கொள்வது தவறில்லை என்று ஸல் அவர்கள் சொன்னார்கள்.

பொதுவாக நாம் நம்மை விட எல்லா வகையிலும் உயர்ந்த ஒருவரைப் பார்த்துத் தான் பொறாமைப்படுவோம். குர்ஆன் ஓதக்கூடியவரைப் பார்த்து பொறாமைப்படுவது கூடும் என்று நபி ஸல் அவர்கள் சொன்னார்கள் என்றால் குர்ஆன் ஓதுவதினால் நமக்கு கிடைக்கும் நன்மைகளையும் பாக்கியங்களையும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அந்தளவு எண்ணற்ற நன்மைகள் இருக்கிறது.

எவர் குர்ஆனிலிருந்து ஒரே ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ அதற்காக அவருக்கு பத்து நன்மைகள் கிடைக்கும். அலிஃப்-லாம்-மீம் என்று ஒருவர் சொன்னால் அவருக்கு 30 நன்மைகள் எழுதப்படும் என்பது ஒரு ஹதீஸின் கருத்து.

அது மட்டுமல்ல நண்பர்களே குர்ஆனைப் பொறுத்த வரை எல்லாமே நன்மை தான்.அதை தொட்டால் நன்மை,அதைப் பார்த்தால் நன்மை,அதை எழுதினால் நன்மை,அதை ஓதினால் நன்மை,அதை சிந்தித்தால் நன்மை, அதை பிறருக்கு கற்றுக் கொடுத்தால் நன்மை,அதன்படி அமல் செய்தால் நன்மை.இப்படி குர்ஆன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம் ஏராளம்.

ஆனால் இன்றைக்கு நாம் அந்த குர்ஆனை ஒழுங்காக ஓதுகிறோமா அதை கவனமாக ஓதுகிறோமா என்று நாம் அனைவரும் சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம்.

எனவே நமக்கு நன்மைகள் அள்ளித்தருகிற குர்ஆனை நாம் அதிகம் ஓத வேண்டும்.அதை மனனம் செய்ய வேண்டும்.அதை பாதுகாக்க வேண்டும்.அதன் படி அமல் செய்ய வேண்டும்.அல்லாஹ் அருள் புரிவானாக.


No comments:

Post a Comment