الحمد لله والصلوة والسلام علي رسول الله سيدنا محمد واله وصحبه اجمعين اما بعد قال الله تعالي في القران العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله يأمركم ان تؤدوا الامانات الي اهلها
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் வல்லோன் அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.சாந்தியும் சமாதானமும் எங்கள் உயிரிலும் மேலான கண்மனி நாயகம் ரசூலுல்லாஹி ஸல் அவர்களின் மீதும் பரிசுத்தமான அவர்களின் குடும்பத்தார் மீது உன்னதமான அவர்களின் தோழர்கள் மீதும் உண்டாகட்டுமாக.
மாணவர்களின் பேச்சுத்திறனை வளர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த மன்றத்தில் அமானிதங்களைப் பேணுவோம் என்ற தலைப்பில் பேசுவதற்காக நான் வந்திருக்கிறேன்.
அன்பான அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் கூறுகிறான்.
ان الله يأمركم ان تؤدوا الامانات الي اهلها
அமானிதங்களை அதற்குரியவர்களிடம் ஒப்படைத்து விடுமாறு இறைவன் கட்டளையிடுகிறான்.
ஒருவர் நம்மை நம்பி ஒரு பொருளை நம்மிடம் ஒப்படைத்தால் அதைப் பாதுகாத்து உரியவரிடம் உரிய நேரத்தில் திருப்பி ஒப்படைப்பதற்குப் பெயர் தான் அமானிதம்.அது சின்ன பொருளாக இருந்தாலும் சரி பெரிய பொருளாக இருந்தாலும் சரி.
அமானிதத்தைப் பேணுவது என்பது இறைத் தூதர்களின் பண்பு.குறிப்பாக நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கடைபிடித்து தன் சமூகத்தையும் கடைபிடிக்கும் படி வலியுறுத்திய ஒரு பண்பு. நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் இஸ்லாமிய அழைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நேரத்தில் ரோம் நாட்டு மன்னர் ஹெர்குலிஸ், அபூசுஃப்யான் அவர்களை அழைத்து நபி (ஸல்) அவர்கள் உங்களிடம் எதை கட்டளையிடுகிறார்? என விசாரித்தார்.அப்போது அபூசுஃப்யான் அவர்கள், தொழும்படி ஏவுகிறார், உண்மையையும் நல்லொழுக்கத்தையும் கடைபிடிக்கும் படி ஏவுகிறார், வாக்குறுதியை நிறைவேற்றும் படி ஏவுகிறார், நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானிதப் பொருளைப் பாதுகாத்துத் திரும்ப ஒப்படைக்கும் படி ஏவுகிறார் என்று அபூசுஃப்யான் சொன்னார். அதைக்கேட்ட ரோம் நாட்டு மன்னர், அமானிதத்தைப் பேணுவது என்பது ஒரு இறைத்தூதரின பண்பு தான் என்று கூறினார்.
எனவே ஒருவர் உண்மையாளரா அல்லது பொய்யரா என்பதைக் கண்டுபிடிக்க சரியான அளவுகோல் அமானிதத்தைப் பேணுவது தான் என்பதை புரிந்து கொள்கிறோம்.ஒருவர் அமைனிதத்தைப் பேணுபவராக இருந்தால் அவர் உண்மையாளராகத்தான் இருக்கும்.
நபி (ஸல்) அவர்கள் அமானிதத்தைப் பேணுவதில் அதிக கவனம் செலுத்தி இருப்பதை அவர்களின் வரலாறு நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும்.
மதீனாவில் நான் அஸர் தொழுதேன். நபி [ஸல்] அவர்கள் தொழுகை முடிந்ததும் மக்களைத் தாண்டிக் கொண்டு தம் மனைவியரில் ஒருவரின் இல்லத்துக்கு வேகமாகச் சென்றார்கள்.அவர்களது வேகத்தைப் பார்த்து மக்கள் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். திரும்ப வந்த நபி (ஸல்) அவர்கள், ஜகாத் நிதியான வெள்ளிக் கட்டி ஒன்று என்னிடம் இருப்பது எனக்கு நினைவுக்கு வந்தது. அது என் கவனத்தைத் திருப்பி விடுவதை நான் விரும்பவில்லை. எனவே அதைப் பங்கீடு செய்யுமாறு கூறி விட்டு வந்தேன் என்று கூறினார்கள்.
நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஏதோ ஒரு விதத்தில் நமக்கே தெரியாமல் அமானிதங்களை ஏற்றவர்களாகத்தான் இருக்கிறோம். அல்லாஹ் நமக்கு வழங்கிய உடல் உறுப்புக்களும் செல்வங்களும் அமானிதம் தான். இவைகளை நற்காரியங்களில் பயன் பயன்படுத்து வதற்குத்தான் வழங்கியுள்ளான். தீய காரியங்களில் இவைகளை பயன்படுத்தினால் அமானிதங்களை பாழ் படுத்தியவர்களில் நாம் ஆகிவிடுவோம்.
கணவனை நம்பி வந்த மனைவியும் ஓர் அமானிதம். அவளுக்குரிய உரிமைகளை முறையாகக் கொடுப்பது அவன் மீது கடமை. வாடகைக்கு எடுக்கப்படும் அனைத்துப் பொருட்களும் அமானிதம் தான். அதை சேதப் படுத்தாமல் தன் பொருட்களைப் போல் பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும். இரவலாக வாங்கிய பொருளும் அமானிதம் தான். அதை வாங்கியதைப் போல திரும்ப ஒப்படைக்க வேண்டும். நம்மிடம் இருக்கிற ஒவ்வொரு பொறுப்பும் அமானிதம் தான். அந்தப் பொறுப்பை சரியான முறையில் நிறைவு செய்ய வேண்டும்.
அமானிதம் என்பது பொருளை மட்டும் குறிக்காது. நம்பிக்கையின் அடிப்படையில் நம்மிடம் கூறப்படும் இரகசியங்களும் ஓர் அமானிதம் தான். ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், இரகசியமாக ஏதோ சொன்னார்கள். அதைக் கேட்டு ஃபாத்திமா {ரலி} ரொம்ப அழுதார்கள். அவருடைய துக்கத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் மறுபடியும் அவரிடம் ஏதோ இரகசியம் ஒன்றை சொன்னார்கள். அப்போது அன்னை ஃபாத்திமா சிரித்தார்கள்.நபியின் அன்பு துணைவியரில் ஒருவரான ஆயிஷா [ரலி] அவர்கள் ஃபாத்திமா [ரலி] அவர்களை அழைத்து ”எங்களை விட்டு விட்டு உங்களிடம் மட்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதோ ரகசியம் ஒன்றைச் சொன்னார்களே அது என்ன எனக் கேட்டார்கள்.அதற்கு ஃபாத்திமா ரலி அவர்கள், ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ரகசியத்தை வெளியிட நான் விரும்பவில்லை” என்று கூறி விட்டார்கள்.
இப்படி அமானிதங்களின் பல வடிவங்களை இஸ்லாம் சொல்லி இருக்கிறது. அவைகளைப் பேணி வாழ அல்லாஹ் கிருபை செய்வானாக!
No comments:
Post a Comment